தோழர் சோமவன்ச அமரசிங்க,
தோழர் ரில்வின் சில்வா,
தோழர் விமல் வீரவன்ச.
அன்பான தோழர்களே!
இனப்பிரச்சினைக்கான தீர்வு ஜே.வி.பியின் கைகளிலேயே உண்டு
ஜெனீவா பேச்சுவார்த்தை ஆரம்பிக்கின்றவேளை தங்களால் விடப்பட்ட அறிக்கையினை மாறுபட்ட உணர்வுடன் படித்தேன். வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளால் சட்ட விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை பற்றி தங்கள் கருத்தை துணிச்சலாக தெரிவித்தமை மகிழ்ச்சியை தந்த போதிலும், தங்களால் கூறப்பட்ட சில கருத்துக்கள் ஏமாற்றத்தை தந்தது. வடக்கு கிழக்கை சேர்ந்த மக்களே இந்த யுத்தத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நீங்கள் கூறுவது மகிழ்ச்சியை தருகிறது. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெருந்தொகையான தமிழர்கள் தம் பகுதிகளை விட்டு வெளியேறி இலங்கையின் வேறு பகுதிகளிலும், பிற நாடுகளிலும் குடியேறியுள்ளனர். இப் பெருந்தொகையான மக்களின் வெளியேற்றத்துக்கு அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் போன்றவற்றில் தலையிடுவதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். நாட்டின் வேறு பகுதிகளில் குடியேறியவர்கள் அமைதியாக வேறு இன மக்களின் மத்தியில் அவர்களின் அன்பு. ஆதரவை பெற்று வாழ்கிறார்கள். இச் செயல் இந் நாட்டு மக்கள் வகுப்புவாதத்தை உதறிதள்ளிவிட்டு படிப்படியாக ஒன்றுபடுகின்றார்கள் என்பதை காட்டுகின்றது.
பெருமளவு தமிழ் மக்களும் புத்திஜீவிகளும் நாட்டைவிட்டு வெளியேறியமையால் இந்த நாட்டில் பற்றும், அமைதி திரும்ப வேண்டும் என்ற விருப்பமும் கொண்ட மக்கள், எதற்காக இவ்வாறு வெளியேறினார்கள் என்ற காரணத்தை கண்டுபிடித்து அவற்றை அகற்ற இவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களின் தரத்தையும் வாதத்திறமையையும் பார்க்கின்றபோது இத்தகைய தேவைக்கு அவசியம் ஏற்படுகிறது. இன்று தமிழ் சமூகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு காலத்தில் கல்வியறிவுள்ள கல்விமான்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள் சட்டத்தரணிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற பலரைக் கொண்ட சமூகம் தமிழ் சமூகம். அத்தகையவர்களில் அநேகர் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியவர்கள் சிலர். இன்னும் சிலர் பிறநாட்டுக்கு சென்றுவிட்டனர். எஞ்சியோர் விடுதலைப் புலிகள் மீதுள்ள பயத்தினால் வாய்திறக்க அஞ்சுகின்றனர்.
ஜெனீவா மாநாடு சகல தடைகளையும் நீக்கி சகல மக்களும் சகல உரிமைகளுடனும் ஒற்றுமையாகவும் வாழ வழிவகுக்கும் என்று கற்பனையில் கூட நினைக்கக்கூடாது. ஏனெனில் இலங்கை வான்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு வருவதற்கு முன்பு தாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை சரியான முறையில் அமுல் படுத்துவதை பற்றி மட்டுமே பேசுவோம் என்று திரு சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நோர்டிக்(ஸ்கண்டிநேவிய) நாடுகளைச் சேர்ந்த இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் 3000 இற்கு மேற்பட்ட போர்நிறுத்த மீறல்களை விடுதலை புலிகள் செய்துள்ளனர் என்பதை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அண்மையில வான்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களும் விடுதலைப் புலிகள்தான் என இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
கட்சி பேதமின்றி சகல அரசியல் கட்சிகளும், மக்களும் ஒன்றுபட்டு விடுதலைப் புலிகளின் இரும்புப்பிடியில் அகப்பட்டு தவிக்கும் தமிழ் மக்களை விடுவிக்க உதவ வேண்டும். ஒரு இனம் ஏனைய இனத்தவர்களுக்கு உரிமைகளை வழங்குகின்றார்கள் என்றில்லாமல் சகல இன மக்களும் அதிகாரத்தை பகிர்ந்து இன, மத, வேறுபாடின்றி சகல உரிமைகளுடனும் வாழ்கின்றார்கள் என்று தோன்ற வேண்டும்.
வடக்கே சிங்கள, முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட நிலைபற்றி நான் வெட்கமடைகின்றேன். புலிகளால் சிங்கள, முஸ்லீம் மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்காதது வெட்கப்பட வேண்டிய விடயம். இவர்கள் விரும்பாததை மக்கள் செய்யமாட்டார்கள் என்ற காரணத்தால் இப் பொறுப்பு விடுதலை புலிகளினுடையதே. நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொருவரை விரட்டுகின்ற உரிமை யாருக்கும் இல்லை. ஜனநாயக உரிமைகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களின் பரிதாபநிலை தங்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் என திடமாக நம்புகிறேன். எந்தப் பெற்றோரும் பிள்ளைகள் பிரிவதை அனுமதிக்கமாட்டார்கள் ஆனால் விடுதலைப் புலிகள் யுத்த களத்தில் 18,000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை பலிகொடுத்ததோடு ஆயிரக்கணக்கான மாற்று இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களை தாம் கொன்று குவித்ததைப் பற்றி ஒரு சொல்லேனும் கூறுவதில்லை. போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் 1700க்கு மேற்பட்ட அப்பாவி சிறுவர்களையும், சுனாமி அகதிகளையும் கடத்திச் சென்று அவர்களின் உரிமைகளை பறித்து பீரங்கிகளுக்கு இரையாக்கக்கூடிய வகையில் சிறுவர்களை படையில் சேர்த்துள்ளனர். அதைவிட வயது வந்தவர்கள் 600 பேரை கடத்தி அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. தலைவர்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் கட்டாய ஆட்சேர்ப்பில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரிய விடயமாகும். இந்த நடவடிக்கைகளுக்கு மாற்று வழியோ வேறு முடிவோ இல்லையா என்று பலராலும் பல இடத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகள் ஆகும். அதற்கு எனது விடை துர்ப்பாக்கியவாதிகளான தமிழ், முஸ்லீம் மக்கள் மீது ஜே.வி.பி காட்டும் அனுதாபத்திலேயே உண்டு. உங்களுக்கு எமது மக்களுடைய துன்பங்கள் நுணுக்கமாக தெரிந்திருப்பினும் நான் சிலவற்றை கூறுகிறேன்
வடக்கு கிழக்கின் சில பகுதிகளை புலிகள் பிடித்தமையால் தமிழ் மக்களுடைய துன்பம் ஆரம்பிக்கவில்லை. 1970 களில் யாழ் நகர முன்னாள் மேயர் திரு அல்பிரட் துயைப்பாவின் படுகொலையோடு கொலைகள் ஆரம்பித்தன. அரச படைகளின் முன்யோசனையற்ற நிர்வாக கட்டளைகள் மூலம் பல தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். அதன்பின் இரு பக்கத்திலும் கொலைகள் மலிந்திருந்தன. அவற்றுள் அநேகமானவை பதிலடி நடவடிக்கையாகும். கிளைமோர் தாக்குதல் மூலம் 1983 ஜூலை மாதம் 13 இராணுவத்தினரின் மரணத்துடன் பெரும் வகுப்பு கலவரம் ஆரம்பித்தது. வரலாறு காணாத படு மோசமான இவ் இனக்கலவரத்தை “கறுப்பு ஜூலை” என வர்ணிக்கப்படுவதுண்டு. இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, அவர்களுடைய பல கோடி பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டன. இந்த ஜூலை - ஆகஸ்ட் கலவரத்துக்கு பின்பே பாராளுமன்ற காலத்தை நீடிக்க எடுக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பை ஆட்சேபித்து 17 த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் பதவி துறந்தோம். அதைத் தொடர்ந்து போராளிகள் தமிழர்களின் தலைமையை எடுத்துக் கொண்டனர். தம்மை மேம்படுத்தும் நோக்கோடு புலிகள் மாற்று இயக்க உறுப்பினர்களை கொலை செய்யாது இருந்திருப்பின் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால் அதன் பின் வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இரத்த ஆறு ஓடியது. இளைஞர்களும், யுவதிகளும் கொல்லப்பட்டனர். மாற்று இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என கொல்லப்பட்டனர். கொளரவமான மனிதர்கள் மின்சார கம்பங்களில் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். குடும்பங்கள் அழிக்கப்பட்டன. வீடுகள் அழிக்கப்பட்டன. விதவைகளும், அநாதைகளும் ஆயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் ஆதரவற்றவர்கள். பெருந்தொகையான தமிழர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தனர். அநேகர் பிற நாடுகளுக்கு தப்பியோடினர். ரயில்வே தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள், கற்கள் என்பன அகற்றப்பட்டு பதுங்குகுழிகள் அமைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன. மின்சார கம்பிகள் கழற்றப்பட்டு குண்டுகளுக்கு உபயோகிக்கவும், மின்சார கம்பங்கள் பதுங்குகுழிகள் அமைக்கவும் உபயோகப்படுத்தப்பட்டன. நகரங்கள் யாருமற்ற நிலையில் அகோரமாக காட்சியளித்தன. மக்கள் தமது உடமைகள் அத்தனையையும் இழந்தனர். நகைகள், புத்தகங்கள், ஆயுட்கால சேமிப்புக்கள், தளபாடங்கள் முதலியவற்றை இழந்தனர். வீடுகள் உடைக்கப்பட்டு, ஜன்னல்கள், கதவுகள், கூரைகள் அகற்றப்பட்டன. சில பகுதிகள் பாழடைந்த நகரம் போல் காட்சியளித்தன. மக்கள் பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ்கின்றார்கள். இரவோடு இரவாக ஓட்டாண்டி ஆனார்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் தம் சொத்துகள் அனைத்தையும் கைவிட்டு 500 ரூபாவோடு இடம் பெயர்;ந்து எதுவித வசதியோ, அந்தரங்க வாழ்க்கை வாழ வசதியோயின்றி பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இத்தனை துன்பங்களும் ஒரு பகுதியினரால் மட்டும் ஏற்பட்டதல்ல. கோழியா, முட்டையா முதல் வந்தது என்ற நிலைதான். இராணுவததினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் ஒரு சிறு அளவே.
ஆனால் புலிகள் தம் கொலைகளை பெருமைப்படுத்தவதாகவும், ஏனைய கொலைகளை துரோகச் செயல் எனவும் கண்டித்து வந்தனர். வடக்கே வாழ்ந்த தமிழ் முஸ்லீம் மக்கள் இழந்த சொத்துக்களின் பெறுமதி பல கோடி பெறுமதியானவை. உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி உயிர்களின் இழப்பு 60-70 ஆயிரம் வரை. ஆனால் கணக்கிடப்படாத கொலைகளையும் உள்ளடக்கின் கொலைகளின் எண்ணிக்கை மிகக் கூடுதலானதாகும்.
உங்களிடம் ஒரு சிறு கேள்வி மட்டும் கேட்க விரும்புகிறேன். 50 வருடங்களாக தீர்வு தராத ஒற்றையாட்சியின் கீழ் தீர்வை காணுங்கள் என்று கேட்பதற்காகவா 23 ஆண்டுகள் தமிழ் மக்கள் இத்தனை துன்பங்களை அனுபவித்தனர். தமிழர்கள் ஒருபோதும் ஒற்றையாட்சியின் கீழ் பிரச்சினை தீர்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந் நிலைப்பாடு நியாயமானதே. அவர்கள் தனி நாட்டுக் கொள்கைக்கு பதிலாக சமஷ்டி முறையை ஏற்கத் தயாராக உள்ளனர். சமஷ்டி என்ற சொல் சில சிங்கள மக்களுக்கும், ஒற்றையாட்சி என்ற சொல் சில தமிழ் மக்களுக்கும் ஏற்புடையதாக இல்லாவிடின் சமஷ்டியும். ஒற்றையாட்சியும் இல்லாத இந்திய முறையிலான தீர்வுக்கு நாம் எல்லோரும் ஒன்றுபடுவோமாக. இந்தியர்கள் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோட்பாட்டில் அமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தைப் பற்றி பெருமை கொள்கிறார்கள். இது அநேக இலங்கையருக்கும் ஏற்புடையதாக இருக்கும். உங்களுடைய நாட்டின் நன்மை கருதியும் நாட்டின் ஒற்றுமைக்காகவும், புலிகளின் அடிமைத்தனத்தில் இருந்து தமிழ், முஸ்லீம் மக்களை விடுவிப்பதற்காகவும் உங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்படி மிக பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எனது ஆலோசனையை ஏற்றுக் கொள்வீர்களாக இருந்தால் முழு உலகும் உங்களை தேசப்பற்றுள்ளவர்கள் என புகழும். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை ஏற்க மறுக்கும் பட்சத்தில் மக்களை புலிகளிடம் விரட்டி அடிப்பதற்கு சமமானதாகும். நான் இன்று பாராளுமன்றத்தில் இல்லை என்பதற்கு என்ன காரணம் என்பது உலகமறியும். ஆகவே என்னுடைய ஆலோசனைகளை புறக்கணிக்காதீர்கள். அப்படி செய்வீர்களானால் நீங்களும் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொள்வதற்கு ஒத்ததாகும். நாட்டுக்கு அமைதி திரும்பும்வேளை நான் உயிருடன் இருப்பேனா தெரியாது. ஆனால் எனது ஆலோசனையை ஏற்பின் பிரச்சினைக்கான தீர்வு அதிக தூரத்தில் இல்லை. சமாதானம் எமது கதவை தட்டுகிறது அதை உள்ளுக்குள் எடுப்பதா அன்றி வெளியே விட்டு பூட்டுவதா என்று நான் அடிக்கடி கூறுவது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
மாறுபட்ட உணர்வோடு நான் உங்கள் அறிக்கையை படித்தேன் எனக் கூறியதற்குக் காரணம், உங்களின் பல கருத்துக்களுடன் உடன்பாடு இருந்தும் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்தது என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஜனாதிபதிக்கு கிடைத்த 50.3 வீத வாக்குகள் ஒற்றையாட்சிக்கு கிடைத்த வாக்குகளாக கணித்தாலும்கூட வடக்கு கிழக்கு பகுதியில் 3-4 இலட்சம் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாது புலிகள் தடுத்தமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மறுபக்கம் ஐ.தே.க சமஷ்டி ஆட்சி முறையை தீர்வாக முன்வைப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறி வந்தது. இடதுசாரிகள் தேர்தல் காலத்தில் ஒற்றையாட்சி முறையை ஏற்பதாக மக்கள் கருத கூடாது எனவும் கூறிவந்தன. ஜாதிக ஹெல உருமய எதிர்காலத்தில் இந்திய முறையை ஏற்கக்கூடியதாக இருக்குமென கூறிவந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது வருடாந்த மாநாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி முறையை முன்வைப்பதாக தீர்மானம் மேற்கொண்டது. இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கிய தேர்தலில் முதல் தடவையாக இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி முறை முன்வைக்கப்பட்டது. சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரமாண்டமான ஆணை ஜனாதிபதி அவர்களுக்கு கிடைத்தது. பின்வரும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு இந்திய ஆட்சி முறைப்படி தீர்வு காண எனது ஆலோசனைக்கு சம்மதிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களின் பரிதாப நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
2. 50 ஆண்டு காலமாக ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காண்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளமையால் இப் பிரச்சினை இன்னும் 50 ஆண்டுகளுக்கு நீடிக்கும்
3. ஜே.வி.பி சம்மதித்தால் ஒரு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியும்.
4. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள சர்வதேச சமூகம் தனிநாட்டுக் கொள்கையை ஆதரிக்காது.
5. இந்திய அரசு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதை ஆதரிப்பதோடு பிரிவினையை எதிர்க்கும்.
6. இவ் ஆலோசனையை ஏற்கும்படி புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருப்பதோடு இன்னும் பல நன்மைகளுக்கும் இடமுண்டு.
நான் எதுவித ஒளிவு மறைவின்றி இனப்பிரச்சினை, அதோடு சம்பந்தப்பட்ட வேறு பிரச்சினைகள் பற்றி உங்களுடன் பேசி வந்திருக்கின்றேன். எனது அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாது போனால் அல்லது உங்களை பாதிப்பதாக கருதினால் என்னை மன்னிக்கவும். ஆனால் நான் இல்லாத காலத்தில் எனது ஆலோசனைகளுக்கு செவிமடுக்க தவறியமைக்கு நீங்களும், புலிகளை கண்மூடித்தனமாக பயத்தினாலும், சுயநலன்களுக்காகவும் ஆதரிக்கின்றவர்கள் உட்பட இந் நாட்டில் உள்ள அனைவரும் வருத்தப்படுவீர்கள். இனவாதிகள் என்று தமிழ் ஊடகங்கள் உங்களை வர்ணித்தபோது அதை மறுத்துரைத்தவன் நானே. இன்னும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளேன். நீங்கள் வகுப்புவாதிகள் இல்லை என்பதை உங்களின் அறிக்கை உங்களை குற்றமற்றவர்கள் என்பதை வெளிக்காட்டியுள்ளது. தமிழ் ஊடகங்கள் என்னைப்பற்றி எப்படி கூறினாலும் நான் கவலைப்பட போவதில்லை. எனது இறுதி மூச்சு இருக்கும் வரை எமது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை எந்த அவமதிப்போ அல்லது சங்கடமோ ஏற்பட்டாலும் நான் செய்தே தீருவேன்.
மூளை சலவை செய்யப்பட்டு புலிகளால் வகுப்புவாத விஷம் ஏற்றப்பட்டு ஒரு புதிய தலைமுறை தமிழர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. காலம் கடக்க முன்பு இப் பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்றப்பட்ட வகுப்புவாத விஷம் தனிக்கப்பட்டு இந்த அப்பாவி பிள்ளைகள் எனது காலத்திலேயே மீட்டெடுக்கப்பட வேண்டும். உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் அரசியல் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கக்கூடிய தகுதியும் அனுபவமும் எனக்குண்டு என நினைக்கின்றேன். நான் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்ந்து சிங்கள, தமிழ், முஸ்லீம் மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்றிருக்கின்றேன். சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆசிரியர்களால் கல்வி போதிக்கப்பட்டு சிங்கள, தமிழ் மாணவர்களுக்கு ஆசிரியராக கல்வி போதித்திருக்கிறேன். ஆகவே இச் சமூகங்கள் பற்றி நன்கு அறிவேன்.
அரசியலில் உங்களின் அனுபவத்திலும் பார்க்க கூடுதலான அனுபவம் பெற்றவன் நான். எனது 73 வருட காலத்தில் 50 ஆண்டுகள் அரசியலுக்கும் சமூக சேவைகளுக்கும் செலவிடப்பட்டது. இன்னும் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் முதிர்ந்த தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதியும் ஆவேன். இலங்கையில் நடைபெற்ற 14 பாராளுமன்ற தேர்தல்களில் 1960 ஆண்டு தொடக்கம் 11இல் போட்டியிட்டதோடு, 1970ம் ஆண்டுக்குப் பின் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளேன். இந் நாட்டு பிரதம மந்திரிகளில் முதல் மூவரை தவிர்த்து ஏனையவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்துள்ளேன். எல்லாவற்றிற்கு மேலாக இந் நாட்டின் சகல அரசியல் கட்சிகளின முன்னணி தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் சமகாலத்தில் இருந்ததோடு இந்நாட்டு ஜனாதிபதிகள் அனைவருடனும் நன்றாக பழகியுள்ளேன். இரு பெரும் தமிழ் தலைவர்களாகிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம், தமிழரசு கட்சி ஸ்தாபகரும் பின்பு த.வி.கூ யை ஸ்தாபித்தவருமான திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கியூ.சி ஆகியோருடன் மிக நெருக்கமாக பழகி இருக்கின்றேன். அத்தோடு த.வி.கூ யின் ஸ்தாபகர்களில் ஒருவனும் ஆவேன். பாராளுமன்றத்தில் முதல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினராகவும் பின்பு த.வி.கூ உறுப்பினராகவும் அங்கம் வகித்திருக்கின்றேன். நான் முதல் தடவையாக 1959ம் ஆண்டு கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டபோது தோழர் சோமவன்சவை தவிர நீங்கள் யாரும் பிறந்திருக்க மாட்டீர்கள். அரசியலில் எனக்குள்ள நீண்டகால அனுபவம் உயர்மட்ட கண்ணியமிக்க அரசியல் தலைவர்களோடு இருந்த தொடர்பு உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமையுமே அன்றி ஒரு போதும் பாதகமாக அமையாது. ஆகவே என்னுடைய ஆலோசனையை பெறுவதில் நீங்கள் தயக்கம் காட்டத்தேவையில்லை
நீங்கள் ஒரு சந்தர்ப்பம் தந்தால் உங்கள் அரசியல் குழுவுடனும், மத்திய குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாட ஆவலாக உள்ளேன்.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
த.வி.கூ