காட்டுமிராண்டிகளிடமிருந்து அப்பாவிகளை காப்பாற்ற வேண்டும்
பிலியந்தல பேரூந்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டும் 60 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைய செய்த சம்பவத்தை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். இரத்த வெறிபிடித்த விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான செயற்பாடு இது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இத்தகைய காட்டுமிராண்டிகளுடனா? அரசு பேச்சுவார்ததை நடத்த வேண்டுமென சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகிறது? விடுதலைப் புலிகளுக்குப் பயந்து தம் பூர்வீக இருப்பிடங்களைவிட்டு ஓடிவந்து தென்னிலங்கையில் சிங்கள, இஸ்லாமிய மக்கள் மத்தியில் நிம்மதியாக வாழும், நாட்டில் உள்ள தமிழ் மக்களில் பாதிப்பேருக்கு மேற்பட்டவர்களை என்ன செய்ய எண்ணியுள்ளீர்கள் என சர்வதேச சமூகத்திடம் மிக்க ஆர்வமாக கேள்வியினை கேட்க விரும்புகின்றேன். மேலும் கிழக்கு மாகாணத்தில் அவர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அவர்களுக்கு பயந்து நாட்டைவிட்டு ஓடிப்போய், அமைதி நாட்டில் ஏற்பட்டவுடன் திரும்பிவர எண்ணும் தமிழ் மக்களையும் என்ன செய்ய எண்ணியுள்ளீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் வாழும் மக்கள் விருப்பம் என்னவென அறிய இதுவரை யாரும் முயற்சித்தார்களா?
விடுதலைப் புலிகள் அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கள போர் வீரர்களின் உயிரற்ற சடலங்களை தினமும் விடுதலைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்து பெருமைப்படுகின்றனர். அதேபோல் தமது போராளிகளின் சடலங்கள் கையளிக்கப்படும் போது மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்கின்றனர். போர் வீரன் தன் நாட்டைக் காப்பதற்காக போராடுகின்றான். விடுதலைப் புலிகளின் போராளிகளோ, நன்றாக மூளை சலவை செய்யப்பட்டு தம் தலைவரின் வரட்டுக் கௌரவத்தை காப்பதில் போராடி மரணிக்கின்றனர். ஆனால் அப்பாவிப் பொது மக்கள் ஏன் அநியாயமாக மரணிக்க வேண்டும். இது நாட்டில் ஓர் இனக்கலவரத்தை உருவாக்க உதவுமேயன்றி போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு உதவும்? தம் மத்தியிலுள்ள குழப்பக்காரரை எவ்வாறு அடக்க வேண்டுமென சிங்கள பாமர மக்கள் அறிந்துள்ளனர். இனவாதத்தை பரப்புவர்களையும், இன துவேஷத்தை விதைப்பவர்களையும் அப்படி எதுவும் நடைபெற விடாது தடுத்து வைத்துள்ளனர். இன்று பாமர மக்களே கற்றறிருந்த சிலருக்கு போதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது துரதிஷ்டமே. இந்த விடயத்தில் அரசின் செயல்பாட்டை பாராட்ட வேண்டும்.
நான் எவருக்கும் எடுபிடியாக செயற்படுபவன் அல்ல. நான் விரும்புவதெல்லாம் நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதோடு நாட்டு மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதே. துர்அதிர்ஷ்டவசமாக மக்களுக்கு வேண்டியது புலிகளிடமிருந்து பாதுகாப்பே. நாட்டு மக்களை நிரந்தர பயத்துடனும் பீதியுடனும் வாழ வைத்துள்ள இத்தகைய படுகொலைகளை கண்டிக்க தயங்குகின்றவர்கள் இவ்வாறு பலியாகும் மக்களின் இடத்தில் தம்மை வைத்துப் பார்த்து அவர்களின் உறவுகள் படும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். இச் சம்பவம் நடப்பதற்கு இரண்டரை மணித்தியாலயங்களுக்கு முன்பு பொது மக்களால் கொடுக்கப்பட்ட தகவலைத் தொடர்து 11 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டொன்றை பொலிசார் கைப்பற்றி பெரும் அசம்பாவத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றினர். அதேபோல் நமக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு கொடுத்துதவ வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். இத் துயர சம்பவத்தில் பாதிப்புக்குள்ளானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். விடுதலைப் புலிகள் தமது மிருக்கத்தனமான செயல்களை உடன் கைவிட வேண்டும்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ