பத்திரிகை அறிக்கை

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஓர் வானூர்தி நான்கு தடவை சிறுரக துப்பாக்கியால் சூடு வாங்கியும் பத்திரமாக தரையிறக்கப்பட்ட செய்தி உலக நாடுகள் அனைத்திலும் வாழும் நியாயமாக சிந்திக்கும் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியாகும். குழந்தை தீயுடன் விளையாட ஆரம்பித்துள்ள இவ்வேளை நாடு சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இத்தாலிய நாட்டு உதவி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி மார்க்கிரேட்டா போனிவேர் மயிரிழையில் உயிர் தப்பினார் என்பதற்காக மட்டுமல்ல இதன் பிரதிபலிப்பு கற்பனைகெட்டாததாக அமையும் என்பதற்காகவுமே. விடுதலைப் புலிகளின் தலைவரும் இச் சம்பவத்தை தனக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் கொள்ள வேண்டும்.

யுத்தத்துக்கு மாத்திரமன்றி வானூர்திகளை வேறு பல தேவைகளுக்கும் நமது நாட்டில் பாவிக்கப்படுகிறது. இயற்கை அனர்த்தங்களாகிய புயல், வெள்ளம் பேரலை போன்றவற்றால் ஏற்படும் அழிவுகளை கணக்கீடு செய்ய, வெளிவரஇயலாது அகப்பட்டுக்கொண்டவர்களை, ஆபத்திலுள்ளவர்களை மீட்டெடுப்பதோடு, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சர்வதேச விமான நிலையம் போக வர, வன்னியில் இருந்து கிழக்கே தம் போராளிகளின் ஈமக் கிரியைகளில் விடுதலைப் புலிகள் கலந்துகொள்ள, அதி முக்கியமாக காயமடைந்த அவர்களது போராளிகளை கொழும்புக்கு கொண்டு வரவும, வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தனைத் தேவைகளை அவர்கள் நன்கு அறிந்திருந்தும் இப்படி செய்கிறார்கள் என்றால் விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் இல்லை என்றே கொள்ள வேண்டும். இந்நிலை தொடருமானால் நிலைமை மேலும் மோசமடையும். நாட்டின் நிலைமை விரைவாக சீரழிந்து வருவதால் தாமதமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையை சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும்.

எமது அயல்நாடான இந்தியா இந்த சம்பவத்தை லேசாக கருதிவிட முடியாது. தம் விடயத்தில் நான் தலையிடுகிறேன் என தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தாது போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படக்கூடிய வகையில் அவர்கள் எதையும் அரசிடம் வற்புறுத்திக் கேட்கக்கூடாது எனக்கூறுவேன். நாட்டின் நிலைமை பற்றி பிற தலைவர்களுடன் கலந்தாலோசியாது சர்வாதிகார ஆட்சி நடத்தும் விடுதலைப் புலிகள் கூறுவதை மட்டும் நம்பி, தம்மிடம் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டி அரசை அடிபணிய வைக்கக் கூடாது. 44 பயணிகளுடன் புலிகள் விமானத்தை முன்பு சுட்டு வீழ்த்தியதையும் அவர்கள் அறிவார்கள்.

அதேவேளை சில கொள்கை வேறுபாடுகள் இருப்பின் அவற்றில் விட்டுக் கொடுத்து நம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக, விரைவில் இந்திய விஜயமொன்றை மேற்கொள்ள இருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு, பச்சைக்கொடி காட்ட வேண்டும். அப்போது இந்திய முறையிலான அதிகாரப் பகிர்வை தாம் ஏற்பதாக இந்திய தலைவர்களுக்கு அவர் கூற முடியும். அப்படியான நிலை ஏற்பட்டால் தமிழ் நாட்டுத் தலைவர்கள் இந்திய அரசின் செயல்பாடுகளில் அவசியமின்றி தலையிட மாட்டார்கள்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி