தீர்வுக்கு ஒரு இறுதி வேண்டுகோள்.
எனது பதில் தாமதமாகியமைக்கு வருந்துகிறேன். நாளுக்குநாள் முன்பு என்றும் இல்லாத வகையில் விடுதலைப் புலிகளின் கொடூர செயல்கள் அதிகரித்து வருவதனால் நான் குழப்பமடைந்துள்ளேன். ஆகவே எனது இவ் வேண்டுகோள் சில சமயம் இறுதி வேண்டுகோளாகவும் அமையலாம் என கருதி இனப்பிரச்சினைத் தீர்வில் உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றியமைக்குமாறு வேண்டுகிறேன். எமது பிரச்சினைக்கு ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய உங்களிடம்தான் தீர்வு உண்டு என நான் முழுமையாக நம்புகிறேன்.
இந்த குழப்பமான 50 வருட காலத்தில் வாழ்ந்தவன் என்ற முறையிலும் பல கசப்பான சம்பவங்களை, நேரடியாக கண்டு, அனுபவி;த்து அவை எனது ஞாபகத்தில் இருக்கின்ற போதிலும் அவை பற்றி இங்கு கூற நான் விரும்பவில்லை. ஆனால் வடகீழ் மாகாணங்களைச் சேர்ந்த ஒரு தமிழரோ, இஸ்லாமியரோ ஒற்றை ஆட்சிக்குக் கீழ் தீர்வை ஏற்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தமிழர்கள் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை கைவிடவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் தயாராக உள்ளனர். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் சமாதான சூழலுக்காக ஏங்கி நிற்கின்றனர். நம் நாடு ஓர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தயாராக இருப்பதோடு அதற்குப் பதிலாக இந்திய ஆட்சிமுறை போன்றதொரு தீர்வை ஏற்கத் தயாராக உள்ளனர். பல சந்தர்ப்பங்கள் எம்மை தேடிவந்தும் ஓர் தீர்வை காண தவறிவிட்டோம் என்று நமது எதிர்கால சந்ததி எம்மை திட்டுவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.
ஏழை மூதூர் விவசாயிகளுக்கு விடுதலைப் புலிகள் செய்தது மனிதாபிமானமற்ற ஓர் கொடிய செயலாகும். மிக அத்தியாவசியமான நேரத்தில் அவர்களுடைய பயிர்களுக்கு நீர் வழங்காது பெரும் நஷ்டவாளிகளாக ஒருபுறமிருக்க இடம் பெயர்ந்தவர்கள் தமது குழந்தைகள், முதியோர், நோயாளிகள், ஊனமுற்றவர்களாகிவர்களுடன் பட்ட துன்பம் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகும். உண்ண உணவும் பருக நீருமின்றி பலர் உடுத்த உடையுடன் தமது அத்தனை சொத்துக்களையும் விட்டு விட்டு உணவும், உறைவிடமும் தேடி பல மைல்கள் கால் நடையாக நடந்து சென்றனர். 30,000, 40,000 மக்களுக்கு அவர்களது உடனடித் தேவைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்துக்குக்கூட இலகுவான ஒரு விடயமல்ல. யார் செய்த தவறால் நெருங்கிய உறவுகளை இழந்தனர் என்று எமக்குத் தெரியாது. சுதந்திர போராட்ட வீரர்கள் எனக் கூறிக்கொண்டு சில மூளையற்றவர்களின் தவறால் அவர்கள் தமது சொத்துக்கள் அத்தனையையும் இழந்துள்ளனர். எமது மக்களுக்கு இத்தகைய பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்த விடுதலைப் புலிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை.
எத்தகைய அனுதாபமும்காட்டாத, ஆயுதம் தாங்கிய ஒரு பயங்கரவாத கும்பலினுடைய சவாலை மக்களாகிய நாம் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு புலிகளால் விடப்படும் ஓர் சமிக்ஞையாகும். விடுதலைப் புலிகளினுடைய அடக்குமுறைக்கு உட்பட்டு வாழும் தமிழ் மக்களை தெற்கே வாழும் சிங்கள, இஸ்லாமிய, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவிக்க வேண்டிய காலம் இது. சுதந்திரமாக வாழக்கூடிய பகுதிகளில் சுதந்திரமாக வாழும் மக்களுக்கு இதுவே கதி என்றால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளால் ஆளப்படுகின்ற மக்களின் கதி என்னவென இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.
இக் கட்டத்தில் எம்மில் எவரேனும் அரசியல் தத்துவம் பற்றி பேசாது, நாம் ஒருவரையொருவர் குற்றம் குறை கூறாது நாம் எல்லோரும் ஒருமித்து ஒரே குரலில் விடுதலைப் புலிகளை படு மோசமான பயங்கரவாத அமைப்பு என கண்டித்து எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண ஒருமித்து செயல்பட வேண்டும். எமது சொல்லாலோ, செயலாலோ விடுதலைப் புலிகளை பலமடைய செய்யக் கூடாது. அதற்குப் பதிலாக அவர்களை பலயீனப்படுத்த வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன் வைப்பதின் மூலமே முடியும். ஜனதா விமுக்தி பெரமுன தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் இருந்து மாறி யுத்த முனையிலும், கிளேமோர் கண்ணிவெடி, கைக்குண்டு, ஈவிரக்கமற்று வெட்டியும் சி;த்திரவதை செய்தும் கொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்காக தமிழ் சிங்கள், இஸ்லாம் மக்களின் உறவினர்கள் மீது அனுதாபம் கொண்டேனும் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒரு தனிநபர் பிரபாகரனின் சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமென போராடும் தைரியமுள்ளவர் என என்னை நீங்கள் வர்ணிப்பது தவறாகும். நான் சிங்கள, இஸ்லாமிய மக்களுக்காக என்றும் குரல்கொடுக்க தவறியதில்லை.அவ்வாறு நான் செயற்படுவதற்கு எமது நாட்டிலும் அங்கு வாழும் மக்கள் மீது கொண்டிருக்கும் பற்றே காரணம் தவிர எனக்குள்ள வீரமோ தைரியமோ அல்ல. இந்த நிலைப்பாட்டை நான் எடுத்துள்ளமையால் என் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை நான் உணரவில்லை.
தேசிய பிரச்சினையில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஜனதா விமுக்தி பெரமுனவும் வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும் இரு பகுதியினரினதும் இலக்கு ஒன்றே யாகும். இலங்கையில் வாழும் சகலருக்கும் முழு ஜனநாயக உரிமையோடு கூடிய சமத்துவம் என்ற கொள்கைக்கு ஒத்த கருத்துடைய அனைவரினதும் ஆதரவு உண்டு. எனது நிலைப்பாட்டிற்கு மாறான நிலைப்பாட்டை எடுக்கும் ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது ஓர் கட்சியையோ நான் குற்றம் காண துணியமாட்டேன். எமது இலக்கு ஒன்றாக இருப்பதால் எமது மக்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் அவல நிலையை போக்கி நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் இலகுவாக தீர்வு காணும் வழியை பற்றியே சிந்திக்கிறேன். அவர்கள்தான் பிரச்சினையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் அநேகர்தான் சொத்து சுகம் அத்தனையையும் இழந்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் அகதி முகாம்களில் வாழ்கின்றார்கள். வடக்கில் எம்முடன் பல தலைமுறைகளாக சகோதரர்கள் போல் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் சகல சொத்துக்களையும் துறந்து 500 ரூபா பணத்துடன் மட்டும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் புறப்பட்டு செல்வதற்கு ஒருநாள் அவகாசம் கூட கொடுக்கப்படவில்லை. குழந்தைகளின் காதணிகள் கூட பிடுங்கி எடுக்கப்பட்டன. அநேகர் தமது வீடு வாசல்களை, சம்பாத்தியங்களை இழந்தனர். அநேகர் யுத்த முனையில் தமது பிள்ளைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் பட்டினி நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். பெருந்தொகையான அவர்களின் பிள்ளைகள் போதிய உணவின்றி கஷ்டப்பட்டனர். அவர்கள் தமது கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றையும் இழந்தனர். எல்லாவற்றுக்கு மேலாக தாம் பேணி காத்து வந்த ஜனநாயக, அடிப்படை மனித உரிமைகளை இழந்தனர். இன்று மூதூர் முஸ்லீம்களை விடுதலைப் புலிகள் என்ன செய்ய நினைக்கின்றார்கள் என்பதை ஊகித்து அறிய மாட்டீர்களா?
சிங்களவர்களும் ஏனைய சமூகத்தவர்களும் யுத்த முனையிலும் தற்கொலை குண்டுதாரிகள் மூலமும், கிளேமோர் கண்ணிவெடிகள் மூலமும், கைக்குண்டு, குண்டு வெடிப்புக்களாலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. இரு பக்கத்திலும் பல விதவைகளும், அநாதைகளும் உருவாக்கப்பட்டனர். இதைத் தவிர தென்னிலங்கை மக்கள் தமது விவசாயத்திலும், கடற் தொழிலிலும் ஈடுபட்டனர். பிள்ளைகள் பாடசாலைக்கு ஒழுங்காகச் சென்றனர்., புகையிரதம், பஸ் சேவைகள் ஆகியன ஒழுங்காக நடைபெற்றன. அவர்களுடைய கலாச்சாரம் நாகரீகம் மாசுபடாது காப்பாற்றப்பட்டன. வேறு குறைகள் இன்றி வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றனர். அவர்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளில் யாரும் தலையிட துணியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனநாயகம் தளைத்து நிற்கிறது. வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழரோ, இஸ்லாமியரோ கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு பகிரங்க கூட்டத்தைக் கூட்டி அரசையோ, வேறு எவரையேனும் திட்டித் தீர்க்க முடியும். ஆனால் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசமான யாழ்ப்பாண பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு மாறாக ஒரு வார்த்தை தன்னும் கூறுகின்ற தைரியம் அவர்களுக்கு இல்லை. இந் நிலைப்பாட்டை நீங்கள் அறிவீர்களோ எனக்குத் தெரியாது. வடக்கு கிழக்கில் 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரின் கல்வித் தகமைகளை கூட்டிப் பார்ப்பின் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ரட்ண ஜீவன் ஹ_ல் அவர்களின் கல்வித் தராதரத்திற்கு ஒரு பகுதியையேனும் எட்டிப்பிடிக்க முடியாது. விடுதலைப் புலிகளின் வற்புறுத்தலினாலேயே அவருடைய நியமனத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு ஆங்கிலம் தெரிந்த ஒருவரை திரு. பிராகரன் அவர்களால் அனுப்ப முடியவில்லையே என்று அவரின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் குறைப்பட்டுக் கொண்டதை நீங்கள் அறிய வில்லையா? இதுதான் இன்றைய வடக்கு கிழக்கு தமிழரின் நிலை. தமிழ் மக்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் தென்னிலங்கையில் வாழ்கின்றார்கள் என்ற உங்களுடைய கூற்று பிழையான கருத்தைத் தருகிறது. எவரையும் சமமாக பார்க்கும் நான் இது பற்றி கருத்துகூற விரும்பவில்லை. அதேபோன்று வடகிழக்கு தமிழ் மக்கள் ஏனைய மாகாணங்களிலும், பிற நாடுகளிலும் வாழ்கின்றார்கள் என்ற கூற்றும் பொருத்தமான உதாரணங்கள் அல்ல. இவையெல்லாம் தற்காலிகமாக செய்யப்பட்ட ஒழுங்குகளே அன்றி நிரந்தரமானவையல்ல. ஆரம்பத்தில் அரச படைகளுக்கு பயந்தும் பிற்காலத்தில் விடுதலைப் புலிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு பயந்தும்; தான் நம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர். ஆனால் பழைய தலைமுறையினர் தம்சொந்த இடத்திற்கு திரும்பி வரவே விரும்புகின்றனர். தன் பிறந்த நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாம் பிறந்த இடத்தையும் நேசிக்கின்றனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் கூட தமது மண்ணுக்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றனர். எனது இறுதி மூச்சை நான் பிறந்த மண்ணில் விடவே விரும்புகிறேன். வட மாகாண இஸ்லாமியர்கள் தமது சொந்த இடத்துக்கே செல்ல விரும்புகின்றனர். இல்லாவிட்டால் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல கஷ்டத்தின் மத்தியில் பத்து ஆண்டுகளுக்கு மேல் அகதி முகாம்களில் ஜீவிப்பார்களா?
உங்களுடைய நிலைப்பாட்டைப் பற்றி ஆதரவாகவும், மாறாகவும் பல கருத்துக்களைக் கூறலாம். ஆனால் அதுவல்ல எமது பிரச்சினை. உங்களுடைய “முன்மாதிரியான அரசு” எப்போது அமையும். சில சமயம் 10 ஆண்டுகள் அல்லது 50 ஆண்டுகள்கூட ஆகலாம.; அந்த இடைவெளியில் வடகிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். மிக மோசமான விடயம் என்னவெனில் இச் சந்தர்பத்தில் வடகிழக்கு மாகாணத்தைப் பிரிப்பதற்கு அடிப்படை உரிமைமீறல் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். இதுதான் இன்று இந்நாடு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையா? வட மாகாண தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் தனியரசுக்குள் தள்ளிவிட உத்தேசமா? உங்களின் இந்நடவடிக்கை விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் ஒரு செயலாகும்.
எம் மக்கள் தம் தொழில்களை மறந்து இயந்திர வாழ்க்கையை கடைபிடிக்கின்றனர். விடுதலைப் புலிகள் சொல்வதையே செய்து கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு தெம்பூட்ட வேண்டியப பல்கலைகழக மாணவர்கள் விடுதலைப் புலிகளின் முகவர்களாக செயற்பட்டு மக்களை துன்புறுத்துகின்றனர். மணல் தாராளமாகப் பெறக்கூடிய அம்பன்குடத்தனைப் பகுதியில் சொந்த பிழைப்புக்காக ஒரு பல்கலைகழக மாணவன் உழவு இயந்திரப் பெட்டியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவேளை புலிகளால் சுடப்பட்டு உழவு இயந்திரத்துடன் சேர்த்து தீயூட்டப்பட்டும் பல்கலைகழக மாணவர்கள் எவரேனும் எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. இம் மிருகத்தனமான கொலையை கண்டிக்கவில்லை. அந்த ஏழை குடும்பம் ஓர் உழைப்பாளியையும் வாகனத்தையும் இழந்ததுதான் மிச்சம். இந்த மணல் அள்ளும் ஏகபோக உரிமையை சட்ட விரோதமாக புலிகளே அனுபவித்து வருகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் இராணுவத்தை எதிர்க்க தூண்டப்படுகின்றனர். அவர்கள் மீது கற்களை வீச பழக்கப்படுகின்றனர். கிளோர் கண்ணிவெடித் தாக்குதலை பொது மக்களே செய்வதாக புலிகள் பொய்யாக குற்றம் சுமத்துகின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் மாணவர்கள் புலிக்கொடியை ஏற்றவைக்கப்படுகின்றனர். இவையெல்லாம் பாரதூரமான செயல்களாக உங்களுக்கு படவில்லையா? உங்களுடைய முன்மாதிரியான அரசை நான் வரவேற்கின்றேன். அது எப்போது எமக்கு கிடைக்கும்? நீங்கள் உங்களது இலக்கை அடையும் வரை தமிழ், முஸ்லீம் மக்கள் விடுதலைப் புலிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு வாழ வேண்டுமா? மக்கள் தமது பிள்ளைகளை புலிகளுக்கு பலி கொடுக்க வேண்டுமா?தமிழ் முஸ்லீம் மக்கள் உங்கள் “முன்மாதிரி அரசு” உருவாக்கப்படும் வரை இத்தகைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டுமா? ஏழை சிங்களப் பெற்றோரினுடைய பிள்ளைகள் தினமும் 2-10 பேர்வரை இராணுவம், கடற்படை, பொலிசார் மீது இலக்கு வைத்து தாக்கப்படும் கிளேமோர் கண்ணிவெடிக்கு பலியாக வேண்டுமா? இவர்களுடன் அப்பாவி பொது மக்களும் கொல்லப்படுகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். இத்தகைய அப்பாவி மக்களின் கொலைகள் பற்றி யாரும் எதுவித ஆட்சேபனையும் தெரிவிப்பதில்லை. தினமும் பரவலாக எட்டுக்கு மேற்பட்ட கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல்கள் நடப்பதும் பொது மக்கள் பலர் கொல்லப்படுவதும் வழக்கமாகி விட்டது.
ஆரம்பகாலத்தில் சமஷ்டி முறையையும் பிரிவினையையும் நான் எதிர்த்தேன். 1970ம் ஆண்டு கிளிநொச்சித் தொகுதியில் சமஷ்டி கட்சி வேட்பாளரை தோற்கடித்தே பாராளுமன்றம் சென்றேன். 1972ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போதே நாம் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினோம். அக்கட்டத்திலும் நாம் பிரிவினையை ஆதரிக்கவில்லை. 1976ம் ஆண்டு மூளாய் மாநாட்டில் தனியரசு உருவாக்குவதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தும் கூட எமக்கு ஏற்புடையதாகிய ஓர் மாற்றுத் திட்டத்தை அரசு முன்வைத்தால் அதை எமது மக்களுக்கு சிபாரிசு செய்வதாக எமது தலைவர்கள் கூறியிருந்தார்கள். இது எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் மாவட்ட அபிவிருத்தி சபையைக் கூட ஏற்று செயற்பட்டோம். அன்றைய அரசு அதன் பெயரை மாவட்ட சபை என மாற்றுவதற்குக் கூட மறுத்துவிட்டது.
பண்டா-செல்வா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து டட்லி - செல்வா ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபையும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதே கதி மாகாணசபைகளுக்கும் ஏற்பட்டது. இத்தனை தோல்விகளின் பின்புதான் அரசு பிரச்சினை தீர்க்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு அற்றுப் போய்விட்டது. அதைத் தொடர்ந்து நடந்தவை இந்த நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. எமது பிரச்சினை தீவிரவாதிகளால் கையேற்கப்பட்டது. புலிகள் ஏனைய குழுக்களை ஒவ்வொன்றாக அழித்து தம்மையும் பலயீனப்படுத்தாமல் இருந்திருப்பின் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். மிதவாதிகளையும் அவ்வாறே அழித்து ஒரு சிலரையே விட்டு வைத்தனர். அவர்களில் பலரை இன்று தமது பாராளுமன்ற பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் விட்டுவைத்த கூட்டணியினரில் என்னை மட்டும் அவர்களால் பாராளுமன்ற பதவி கொடுத்து தங்கள் பிரதிநிதியாக அமர்த்தமுடியவில்லை. மரணத்தை என்னால் எவ்வளவு காலம்தான் ஏமாற்ற முடியும் என எண்ணுகிறீர்கள்? எனது இக்கடிதம் உங்கள் கைக்கு கிடைப்பதற்கு முன்பே சில சமயம் நான் சக்கையாக்கப்பட்டுவிடலாம். நாளுக்கு நாள் விரக்தியின் மத்தியில் வாழும் எமது மக்களுக்கு அமைதியை பெற்றுக் கொடுப்பதற்காக நான் என் உயிரையே அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன் என உறுதியளிக்கிறேன். உங்களால் உங்கள் அங்கத்தவர்களுடைய நிலைப்பாட்டை மாற்றி அநேக மக்களுக்கு ஏற்புடையதானதொரு தீர்வை ஏற்க வைக்க முடியாதா? உங்களுடைய “முன்மாதிரியான அரசை” நான் வரவேற்பதாக மீண்டும் வலியுறுத்துகின்றேன். புலிகளின் கொலைகள், ஆட்கடத்தல், சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல், சித்திரவதை செய்தல், துன்புறுத்தல், ஆகியவற்றை குறிப்பிட்டவொரு தினத்துக்குள் உங்களால் நிறுத்த முடியுமா? தமக்கு எதிரானவர்களுக்கு எதிராக புலிகளால் உலகளாவிய ரீதியாக செய்யப்படும் பொய் பிரச்சாரங்களை நிறுத்த முடியுமா? கண்டபடி கடற்படையினர், பொலிசார், இராணுத்தினர் புலிகளால் கொல்லப்படுவதை உங்களால் எப்போது நிறுத்த முடியம் என கூற முடியுமா? இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களுக்கு என்ன நடந்தது. அத்தோடு பராமி குலத்துங்கா தற்போது எங்கே என்று தெரியாதா? சுருங்கக் கூறின் பொது மக்கள் இத்தகைய துன்பங்களை இன்னும் எவ்வளவு காலத்துக்கு பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவீர்களா? இத்தகைய துன்ப சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?
இன்றைய நிலைமை நீடிக்குமாக இருந்தால் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு ஏற்படும் மீளப்பெற முடியாத இழப்புக்கள் ஈடு செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும் என நான் உறுதியாக நம்புகிறேன். மாவிலாறு சம்பவம் சிங்கள விவசாயிகளையும் எதிர்காலத்தில் புலிகள் விட்டு வைக்கமாட்டார்கள் என்பது வெளிப்படை.
எமது பிரச்சினைக்கு தீர்வு உங்கள் கையில்தான் இருப்பதாக நீங்கள் ஒத்துக் கொள்வதால் உங்களுடைய தீர்மானத்தை மத்தியகுழுவிலோ, மாநாட்டிலோ மீள பரீசிலிக்கும்படி மிக பணி;வாக கேட்டுக்கொள்கிறேன். நான் இது சம்பந்தமாக உங்களுடன் பேச விரும்புகிறேன். எனக்கொரு சந்தர்ப்பம் தருவீர்களானால் உங்களுடைய அரசியல் குழுவுடனோ அல்லது மத்திய குழுவுடனோ எனது தீர்வுத்திட்டம் பற்றி கலந்தாலோசிக்க விரும்புகிறேன். அநேக அரசியல் கட்சிகள் பொது மக்கள், பொது ஸ்தாபனங்கள், பல்வேறு மதத் தலைவர்கள் ஆகியோருக்கு ஏற்புடையதாக தோன்றும் எனது தீர்வுத்திட்டத்தை நிராகரித்து சரித்திர முக்கியத்துவமான தவறை செய்ய வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது சம்பந்தமாக அஸ்கிரிய பீடாதிபதி அதி வணக்கத்துக்குரிய உடுகம சிறீபுத்தரஹித்த மல்வத்த பீடாதிபதி அதி வணக்கத்துக்குரிய திபுத்துவாவே சுமங்கள மகாநாயக்கர்களையும் சந்தித்து பேசியுள்ளேன். நாட்டுப் பிரிவினையை தடுத்து எத்தகைய தீர்வையும் அவர்கள் ஏற்கத் தயாராக உள்ளனர். நாட்டுப் பிரிவினையை மட்டுமே எவரும் விரும்பவில்லை.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களை சுதந்திரமாக செயற்பட வைப்பின் ஒற்றையாட்சி முறையோ அன்றி சமஷ்டி முறையோ என விபரிக்கப்படாத இந்திய அரசியலமைப்பு முறையிலான ஓர் தீர்வு திட்டத்தை உருவாக்கி சர்வதேச சமூகத்தின் சிபாரிசுடன் புலிகளை ஏற்க வைக்கக்கூடிய அழுத்தத்தை கொடுக்க முடியும். சர்வதேச சமூகம் ஒரு சிறுபான்மை இனத்தவர்களின் நியாயமான கோரிக்கைக்கான போராட்டத்தை முறியடிக்க காரணமாக இருந்ததாக பெயர் எடுக்க விரும்பாது அரசாங்கம் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு ஏற்புடையதாகிய நியாயமான ஓர் தீர்வை ஒருதலைபட்சமாகவேனும் முன்வைப்பதையே விரும்பும். ஆகவேதான் புலிகளை தடைசெய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் ஏனைய சில நாடுகளிலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தம்மீது விதிக்கப்பட்ட தடையை மீறி கண்டனக்கூட்டங்கள் பலவற்றை அண்மையில் நடத்தியபோது சம்பந்தப்பட்ட அரசுகள் பாராமுகமாக இருந்தன.
உங்களுடைய உயர்ந்த லட்சியத்துக்கும் உங்களுக்கும் பெரும் மதிப்பளித்து மிகவும் திட்டவட்டமாக நான் கூறக்கூடியது என்னவெனில் தமிழ் மக்களும் அநேகமாக முஸ்லீம் மக்களும் 50 ஆண்டு காலமாக தீர்வு காணமுடியாத ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் முன் வைக்கப்படும் தீர்வை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புலிகள் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டாலும் கூட ஒற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வை ஏற்குமாறு தமிழ் மக்களை வற்புறுத்தவோ அல்லது இணங்க வைக்கவோ ஒருபோதும் முடியாது என்பது உறுதி.
எமது பிரச்சனைத் தீர்வுக்கு இந்திய மாதிரியான அரசியலமைப்பை வற்புறுத்திக் கேட்க நான் எவராலும் வாங்கப்பட்டவனோ அல்லது ஏவலாளியாகவோ செயற்படவில்லை. நான் அவ்வாறு சிந்திப்பதற்கு எவராலும் ஏற்கக்கூடிய சில நல்ல காரணங்கள் உண்டு. கடந்த 2 வருட காலத்தில் அனேகரை ஏற்க வைத்துள்ளேன். நியாயமாக சிந்திப்பவர்களுக்கு நான் கூறுவதில் அர்த்தம் உண்டு எனத் தோன்றும்.
முதலாவதாக, உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் இந்துக்களே கூடுதலாக வாழ்கின்றனர். உள்ளுரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஏற்படும் நெருக்குவாரம் இருப்பதோடு, சில அயல்நாடுகளோடு கசப்புணர்வு இருந்தும் அந்நாட்டின் தலைவர் ஒரு இஸ்லாமியர். அனைத்து இந்திய மக்களாலும் நேசிக்கப்படுவதோடு, பெரிதாக மதிக்கப்படுபவர்.
இரண்டாவதாக, இரண்டு சதவீத சனத்தொகையைக் கொண்ட சீக்கியமக்களில் ஒருவர் பிரதம அமைச்சராக செயல்படுகின்ற டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள். இந்தியாவில் மிகவும் நேசிக்கப்பட்டு பெரும் மதிப்போடும் திகழ்பவர்.
மூன்றாவதாக, ஆளும் கட்சியாகிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியாக இருந்தும், பிரதமர் பதவியையே ஏற்க மறுத்த, பெருமைக்குரிய, நாட்டுமக்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.
இலங்கையர்களாகிய நாங்கள் இந்த 3 பெரும் பதவிகளுக்கு 3 பெரியார்களை தெரிவுசெய்த இந்திய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு.
எமது மொழிகள், மதங்கள், கலாச்சாரம் முதலிய அத்தனையும் இந்திய நாட்டிலிருந்து பெறப்பட்டவையே. அத்துடன் எமது மூதாதையர்களும் இந்தியர்களே! எமது பழைய அரசியல் சாசனத்தை பிரித்தானிய (வெஸ்ட் மினிஸ்டர்) முறையில் ஏற்றுக்கொண்ட நாங்கள் இந்திய மாதிரியான ஒரு அரசியல் சாசனத்தை ஏற்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் சமஷ்டி, ஒற்றையாட்சி ஆகிய பதங்களை எதிர்ப்பவர்களுக்கு சமஷ்டி முறையோ, ஒற்றையாட்சி முறையோ அல்லாத இந்திய அரசியலமைப்பு திருப்தியளிக்க வேண்டும்.
ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி அமுல்படுத்த நாம் எவரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் ஈழத்துக்கு ஆதரவு கொடுக்கும் சில சிறிய அரசியல் கட்சிகள் இருப்பதால் தமிழ்நாட்டவரின் ஆதங்கத்தை முற்று முழுதாக நிராகரிக்க முடியாது.
இந்திய மாதிரி என்றதும் தாம் அனுபவிக்கின்ற அதிகாரங்களிலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை இலங்கை மாநிலங்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரும் உரிமையை தமிழ் நாட்டுச் சிறு கட்சிகளும் இழந்து விடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் பிரிவினை ஏற்படுவதை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டாது என்ற உத்தரவாதம் இருப்பதோடு ஐக்கிய இலங்கைக்குள்ளே தீர்வு காணப்பட வேண்டும் என்று தொடர்ந்து இந்தியா கூறிவருவதால் விடுதலைப் புலிகளோ அன்றி வேறு தீவிர குழுக்களோ இந்திய மாதிரியான முறையை ஏற்க மறுக்க முடியாது.
நீங்கள் அனைவரும் இந்த விடயத்தை மிக அக்கறையோடு பரிசீலிப்பின் நான் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன்.
தீர்வுக்கான எனது ஆலோசனையை உங்கள் கட்சி ஏற்கும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுவதோடு, தனியாருக்கும், நாட்டுக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு நஷ்டங்கள் தவிர்க்கப்பட்டு விரைவில் சமாதானத்தைக் கொண்டுவர முடியும். எனது ஆலோசனைகள் உண்மையான, விசுவாசமான நோக்கம் கொண்டவை. இதை ஏற்பதோ, மறுப்பதோ உங்கள் கைகளில்தான் உண்டு.
நன்றி
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.