பாணம படுகொலை காட்டுமிராண்டித்தனமானது

பாணம படுகொலை காட்டுமிராண்டித்தனமானது கண்டிக்கப்பட வேண்டியது

பொத்துவில் பிரதேசத்தின் பாணம என்ற கிராமத்தில் பத்து இஸ்லாமிய பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன். பாதிக்கப்பட்ட அத்தனைபேரும் எதுவித அரசியல் நோக்கம் கொண்டிராத அப்பாவி தொழிலாளிகளே. வேலைக்கு போகாது, பாடசாலையில் இருக்க வேண்டிய இவர்களில் அனேகர் சிறுவர்கள். ஆகையால் அவர்கள் ஏழைக் குடும்பத்தவர்கள் என்பதும், அன்றாடம் உழைத்து குடும்பங்களை பராமரிப்பவர்களும் என்பது புலனாகிறது. இத்தகையோரின் ஆதரவின்றி அவர்களின் குடும்பங்கள் எத்தகைய பரிதாப நிலையை எதிர்நோக்க வேண்டும் என்று இக் கொலையாளிகள் சிந்திப்பது கிடையாது.

வெலிகந்தையில் படுகொலை செய்யப்பட்ட இதேபோன்ற 12 தொழிலாளர்கள், அல்லது திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்கள், அல்லது மணல் அள்ளிக் கொண்டிருந்த மருதங்கடவெலவில் ஆறு தொழிலாளிகள், அல்லது அதேபோன்று அண்மைக்காலத்தில் நடைபெற்ற கொலைகள் எதிலும் பார்க்க இக் கொலைகள் கொடூரத்தன்மை குறைந்ததல்ல. யோக்கியமற்ற சிலரால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கலாச்சாரத்துக்கு அமைய இந்த அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அப்பாவிகள் கொலை செய்யப்பட்ட முறை எம் இனத்தைச் சேர்ந்த இலங்கையினராகிய நாம் வெட்கி தலைகுனிய வேண்டும். வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளரால் மட்டுமல்ல உள்ளுர் எதிரிகளிடமிருந்தும் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரச படைகளுக்கு உண்டு. ஒருவரை கொல்கின்ற அதிகாரம் இன்னொருவருக்கு இல்லை. தொழில் ரீதியாக ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டியவர்களை தவிர வேறு எவரேனும் தம்மிடமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதிகாரமற்று ஆயுதங்கள் வைத்திருப்போரை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வராதவர்களையும் மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நடைபெறும் கொலைகளுக்கு ஒரு குழு இன்னொரு குழுவை இலகுவாக குற்றம் சாட்டலாம். அரச படைகள் இச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றன என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அரச படைகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு நாட்டுக்கும், மக்களுக்கும் அபகீர்த்தியை

ஏற்படுத்தக்கூடாது. அரச நற்பெயரையும் தம் நற்பெயரையும் இவர்கள் காப்பாற்ற வேண்டிய கடமைப்பாடு இவர்களுக்கு உண்டு. கொலையாளிகள் நிறைந்த நாட்டில் இருந்து வருகிறோம் என நாம் வெளியுலகுக்கு காட்டிக்கொள்ள முடியாது. அரசை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரச படைகள் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய கடமையாகும். உண்மையில் அவர்கள் அதற்குரியவர்களோடு தம்முன் குற்றம் புரிகின்றவகள் இருப்பின் தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் அவர்களை வெளிகாட்ட வேண்டும்.

அண்மைகாலம் வரைக்கும் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் நிலவிவந்த நல்லுறவை பாராட்டி வந்துள்ளேன். அவர்களுடைய நெருங்கிய சகாக்கள் ஈவிரக்கமின்றி கிளேமோர் கண்ணிவெடி, கைக்குண்டு தாக்குதலில் பலர் இறந்துள்ளனர். அத்தகைய சம்பவங்களில் பல அப்பாவி மக்களும் கொல்லப்படுவதையும் படுகாயமடைவதையும் அரச படைகள் அறிவர். தமது இறந்த சகாக்களுக்காக அனுதாபப்படும் அவர்கள் அப்பாவி மக்கள் மீதும் அனுதாபம் காட்டி அவர்களை பாதுகாக்க வேண்டும். பொது மக்களுக்கு எதிராக செயல்படும் அரச படைகளை அடையாளம் கண்டு மேலதிகாரிகளிடம் முறையிட்டு கடும் தண்டனை விதிக்கப்பட்டால் அது ஏனையோருக்கு ஒரு பாடமாக அமையும்.

அரச படைகளுக்கு எதிராக நான் குற்றம் சாட்டவில்லை. நான் வேண்டுவதெல்லாம் அரசபடைகள் எதுவித சந்தேகத்துக்கிடமின்றி அரசாங்கத்துக்கு சங்கடம் விளைவிக்காது இன, மத வேறுபாடின்றி நல்லாட்சியும், பாதுகாப்பும் பொதுமக்களுக்குக் கொடுக்க வேண்டிய அரசுக்கு அபகீர்த்தி ஏற்படாது செயற்பட வேண்டும். எமது நாடு மிருக வதையையே பொறுத்துக்கொள்ளாத நாடு. நாம் எம் மக்களுக்கு கொடூரம் விளைவிக்கலாமா?

துன்புறும் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தையும், கொல்லப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி