கொலைகளை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு செல்லவும்

25-10-2007
திரு. வே.பிரபாகரன்
தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள்
கிளிநொச்சி

அன்புள்ள பிரபாகரன்,

கொலைகளை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு செல்லவும்

கடந்த திங்கட்கிழமை அனுராதபுரத்தில் உம்மால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த சம்பவம் யாரும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு நிகழ்ச்சியல்ல. நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொருவரும் உமது கொடூரமான இச் செயலுக்கு உம்மை திட்டத்தான் செய்வார்கள். இருப்பினும் மனைவி மக்களுடன் பாதுகாப்பாக வாழ்கின்ற ஒரு சிலர் உமது செயலை மிகைப்படுத்தி பாராட்டும் தெரிவிப்பர். உமக்கு பாராட்டு தெரிவிக்குமளவுக்கு உமது செயல் தகுதியானதல்ல. இந்த நடவடிக்கையில் 35 உயிர்கள் பலிகொள்ளப்படுவதற்கு காரணமாய் இருந்திருக்கிறீர். அவற்றில் 14 பேர் ஏழை சிங்கள குடும்பங்களில் இருந்து பிழைப்புக்காக விமானப்படையில் சேர்ந்துள்ளனர். மிகுதி 21 பேரும் உம்மால் கரும்புலிகளின் தற்கொலை படைக்கு பலாத்காரமாக இணைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாவர். அவர்கள் கூட தத்தம் குடும்பங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். பத்திரிகைகளில் உம்மை நடுவில் வைத்து எடுக்கப்பட்ட 22 பேரடங்கிய போட்டோவில் உள்ள 22 பேரும் இறந்திருந்தால் உம்மை உண்மையான வீரனென பாராட்டியிருப்பேன். ஆனால் உம்முடன் படத்தில் தோன்றும் 21 ஏழைப்பெற்றோரின் பிள்ளைகளை பலியெடுத்தது வருத்தத்திற்குரியதாகும் .

உமக்கு பொருந்தக்கூடிய ஒரு பொருத்தமான தமிழ் பழமொழி “காது கேளாத ஒருவரின் காதில் சங்கு ஊதுவது” போலாகும்.

நான் எவ்வளவு புத்திமதி கூறினாலும் நீர் அதை செவிமடுப்பதில்லை. தமிழ் ஈழம் அடைய முடியாததென்றும் அப்படி அடைந்து விட்டால் கூட ஒரு நாள்தன்னும் அதை காப்பாற்ற முடியாது என்றும் உமக்கு தெரியும். சர்வதேச சமூகமும் அதை ஒருபோதும் ஆதரிக்காது. அப்படியிருந்தும் ஒருபோதும் அடைய முடியாததும், கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அடைய முடியவில்லை என அறிந்திருந்தும் பல மனித உயிர்களை பலியிடுவதில் என்ன பயனை அடைய போகின்றீர். 70-80 ஆயிரம் உயிர்கள் இழக்கக் காரணமாக இருந்து பல்லாயிரக்கணக்கான விதவைகள், அநாதைகள் ஊனமுற்றோரை உருவாக்கவும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்து அழிவுக்கும் காரணமாக இருந்த நீர், இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துள்ளீர். கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாக இழந்து விட்டீர். வட பகுதியையும் நீர் இழப்பது உறுதி.

ஆனால் சில காலம் செல்லலாம். தமிழீழம் அடைவதற்கல்ல. உமது சுய கௌரவத்தை பாதுகாப்பதற்கான அம் முயற்சியில் வட பகுதியில் வாழும் தமிழினத்தை முற்றாக அழித்து விடுவீர். தமிழ் சமுதாயமோ அல்லது சர்வதேச சமூகமோ உமது இத்தகைய வழிமுறைகளை பாராட்டப் போவதுமில்லை, அங்கீகரிக்கப் போவதுமில்லை. தயவு செய்து எனது ஆலோசனைகளை தீவிரமாக பரிசீலிக்கவும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இந்திய முறையிலான அல்லது நீர் விரும்பும் ஏதோவொரு வகையான ஒரு நியாயமான தீர்வுத் திட்டம் ஏற்படுவதற்கு உடனடியாக உடன்படவும். நாம் காணும் தீர்வு தவணை முறையில் அமையாமல் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வழிவகுக்காது ஒரு நிரந்தர தீர்வாக அமைய வேண்டும். மதி கெட்ட இத்தகைய செயல்களில் ஈடுபட முடியுமாக இருந்தால் கணக்கற்ற முறையில் தினமும் நடைபெறும் கொலைகள், ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு ஏன் முடியவில்லை. அண்மையில் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்க சமாஜ தலைவர் வெட்டிக் கொலை செய்யபட்டது நீர் அறிந்ததே. அத்தகையவொரு ஆட்கடத்தல், கொலை சம்பவத்தை காட்டிக்கொடுத்து எத்தகையவொரு குற்றச் செயல்களிலும் உங்களுக்கு சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துக் காட்டவும்.

தயவு செய்து ஒரு விடயத்தை உணரவும். நான் எந்தக் கொலையையும் கண்டிக்க தவறவில்லை என்பதோடு எக் காரணம் கொண்டும் கொலைகளை மறைக்க உதவுபவனும் அல்ல. எந்தவிதமான கொலைகளாக இருந்தாலும் அவற்றை நீர் நிறுத்தும் மறுகணமே ஏனைய கொலைச் சம்பவங்கள் தானாகவே நின்றுவிடும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ