வன்னியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு விடுதலைப்புலிகளே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

வன்னியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு விடுதலைப்புலிகளே முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு கி.சிவனேசன் அவரது கார் சாரதி திரு.மகேஸ்வரராசா ஆகியோரின் மிருகத் தனமான கொலையை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கும், அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய மரணம் எனது ஜென்ம விரோதிக்கும் ஏற்படக் கூடாதென பிரார்த்திப்பவன் நான். வன்முறை மரணங்களை நான் எப்போதும் கண்டித்து வந்துள்ளேன். இத்தகைய கொலைகளுக்கு நான் மறைமுக ஆதரவு வழங்குவதுமில்லை. மகிழ்ச்சி அடைவதும் இல்லை.

வியாழன் மாலை நடந்த இத்துரதிஸ்டவசமான சம்பவத்தை மறுநாள் காலை பொறுப்பற்றமுறையில் அச்சு ஊடகத்தின் ஒரு பகுதியினர் ஊடுருவித் தாக்கும் அரச படைகளின் கிளைமோர் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்மூடித்தனமாக அதே குற்றச்சாட்டை அரசு மீது சுமத்தியுள்ளனர்.

நான் யாருக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரையும் முட்டாள்களாக்கக் கூடாது. நீண்டகாலமாக அப்படிச்செய்து வரும் கூட்டமைப்பு தொடர்ந்து அவ்வாறு செய்யவும் கூடாது. சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அமர்வில் கலந்து விட்டு 6 ஆம் திகதி வியாழன் காலை வன்னியில் உள்ள மல்லாவிக்கு மாங்குளம் ஊடாக செல்லமுயற்சிக்கும் போது ஏ-9 பாதையில் மாங்குளத்திற்கு முன் இரண்டு கட்டைக்குள் கொழும்பிலிருந்து 190 மைல்களுக்கப்பால் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த 190 கட்டைகளில் 170 கட்டை பிரதான வீதி அரச கட்டுபாட்டுப் பிரதேசத்திலேயே உள்ளமையால் இராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ளது. 170 கட்டை நீள சாலை அரச கட்டுபாட்டில் உள்ளபோது ஊடுருவித் தாக்கும் படை விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசத்துக்குள் 20 கட்டை ஊடுருவி கண்ணி வெடியை தாட்டதாக கூறுவது புத்திசாலித்தனமான கூற்றல்ல. இத்தகைய சில்லறைத்தனமான கூற்றுக்களே தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப்புலிகளும் மதிப்பை இழக்கக் காரணமாயிருந்தன.

விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பிரதேசத்துக்குள் வாழும் அப்பாவி மக்களில் நான் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். கிளிநொச்சி தொகுதி பூராவும் ,முல்லைத்தீவுத் தொகுதியின் ஒரு பகுதியும் என்னால் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பகுதிகளாகும். விடுதலைப்புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் முழுப்பூசனிக்காயை ஒருதட்டில் புதைக்க முயல்கின்றனர். விடுதலைப்புலிகள் தம் கதையை சர்வதேச சமூகத்தை நம்பவைக்க முயற்சிப்பதும் , கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் கனகராயன் குளத்தில் புதைக்கப்பட்ட கிளைமோர் குண்டு விடுதலைப்புலிகளின் தலைவர்கள் யாருக்கோ இலக்கு வைக்கப்பட்டதாகும் . யாருக்கு இலக்கு வைக்கபட்டதோ நாம் அறியவராது. ஆனால் நிச்சயமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலக்கு வைக்கப்படவில்லை.

படையினரின் ஊடுருவித் தாக்கும் பிரிவு தான் இதைச்செய்தது என்று எடுத்துக் கொண்டால் விடுதலைப்புலிகளோ பாராளுமன்ற உறுப்பினர்களோ விடுதலைப்புலிகளின் கடும் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் பாதுகாப்பாக இனி வாழமுடியாதென்பதே உண்மை. விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு வளையம் முற்று முழுதாக உடைந்து அவர்களின் பாதுகாப்பு அவர்களின் பிரதேசத்திலேயே கேள்விக்குறியாகிவிட்டது. அவர்களுக்குள்ள ஒரே ஒரு வழி 2-3 கிழமை பயிற்சியுடன் போர்முனைக்கனுப்பி சாகடிக்கும் பலாத்காரமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஏழைப்பெற்றோரின் பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்றக் கூடிய வகையில் கண்ணியமாகச் சரண் அடைவதே.

திரு சிவனேசன் கொலையைக் கண்டித்து முழு உலகமும் கண்ணீர் வடிக்கிறது. நானும் அவ்வாறே. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பைப்போல் முதலைக் கண்ணீர் அல்ல. அனேகர் கூறுவது போல் அவர்கள் சுதந்திரமாகவும, நியாயமாகவும் நடந்த ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்படாது விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்டு , இயங்காதிருக்கின்ற அரசியல் கட்சியாகிய தமிழரசுக் கட்சி மூலம் பாராளுமன்றம் சென்று இன்று புலிகளின் பிரதிநிதிகளாகச் செயற்படுகின்றனர். நியமன தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு வேட்பாளர் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்களில் ஒருவரும் அக்கொலைகளுக்காக விடுதலைப்புலிகளை கண்டிக்கவில்லை. இவர்களுடன் இருந்த கிங்ஸ்லி இராசநாயகம் என்ற ஓர் பாராளுமன்ற உறுப்பினரை இவர்களில் ஒருவர் பாராளுமன்றத்திற்கு பலாத்காரமாக அழைத்துச் சென்று பதவியை இராஜினாமாச் செய்ய வைத்து சில நாட்களுக்குள் அவரை விடுதலைப்புலிகள் கொலை செய்த போதும் அனைவரும் மௌனம் காத்தனர். விடுதலைப்புலிகள் இராணுவத்தினருக்கு குறிபார்த்து வைக்கும் கிளைமோர் குண்டுகள், கண்ணிவெடிகள் போன்றவற்றில் இராணுவத்தைவிட தினமும் சில அப்பாவிகள் பலியாகிறார்கள். இவர்களுக்காக யாரும் கண்ணீர் விடுவதில்லை. விடுதலைப்புலிகளால் அப்பாவிகள் கொல்லப்படுவதை யாரும் கண்டிப்பதுமில்லை. நேற்றைய தினம் கூட தென்னிலங்கையில் ஒரு போர்வீரர் கண்ணி வெடி மூலம் இறந்து சிலர் காயமுற்றுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்பும் கூட பாராளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ் ஊடகங்களோ இதைக் கண்டிக்கவில்லை.

இனிமேலேனும் இவ்வாறான கிளைமோர் தாக்குதல்களை நிறுத்துமாறு விடுதலைப்புலிகளை பணிவாக வேண்டுகிறேன். விடுதலைப்புலித் தலைவர் இவ்வாறு இறப்பவர்களை “மாமனிதர்” பட்டம் கொடுத்து கௌரவிப்பது வெறும் கேலிக் கூத்தாகும். இவை உறவினர்களுக்கு திருப்தி அளிக்காது. ஏன் எனில் இழந்த உயிர்களை அது மீட்டுத் தராது.

பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது கடந்த 14-11-2007 இல் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தனதுரையில் “புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு தமிழ் கூட்டமைப்பு வேறென நினைப்பது முட்டாள் தனம்” என்று கூறியுள்ளார். இக்கூற்றை தாம் ஏற்கின்றனரா என கூட்டமைப்பு பா.உ க்கள் உலகிற்கு, குறிப்பாக நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் கூறவேண்டும். இக் கூற்றை ஏற்பதோ மறுப்பதோ இச்சந்தாப்பத்தில் மக்கள் தமது தீர்ப்புக்களை வழங்க பொருத்தமானதும் அவசியமானதுமாகும்.

அவசியம் ஏற்பட்டால் ஒருதலைபட்சமாகவேனும் விடுதலைப்புலிகள் யுத்தத்தை நிறுத்தி அரசுடன் பேசுவதற்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை.


வி ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி