நாட்டை காப்பாற்ற சகல அரசியற் கட்சி தலைவர்களும் விழிப்படைய வேண்டுமென அழைப்பு
விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்குதல் 22 அப்பாவி மக்களின் உயிரை எடுத்து 60க்கு மேற்பட்டோர் படுகாயமடைய செய்தமையை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. ஒரு வாரத்திற்குள் ஏற்பட்ட 3வது பெரிய சம்பவமும் ஒருமாதாத்திற்குள் ஏற்பட்ட 6 வது சம்பவமுமாகும். இச்சம்பவங்களில் மொத்தம் 112 பேர் பலியாகி 348 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படியான இன்னும் எத்தனை சம்பவங்கள் நடக்கும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். தம்மிடமிருந்து தமிழ் மக்கள் விடுதலையடைய வேண்டும் என்ற நிலையை உணராது தமிழீழத்தின் விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் ஒரு வெறிபிடித்த குழுவினரின் செயலே இதுவாகும். இம் மிருகங்கள் தாங்காளாக அடங்காவிட்டால் பிறராலேனும் அடக்கப்பட வேண்டியவை. அரச படைகளிடம் உள்ள பெரும் சக்தி மிக்க ஆயுத பலத்தாலும் இத்தகைய கொடூர செயல்களை கட்டுப்படுத்த முடியாது. இவர்களுடைய போர்முறை சம்பிரதாயமானதாக இல்லாமல் கோழைத்தனமான கெரில்லா முறை கையாளப்படுகின்றது. இந் நாட்டு மக்களை விடுதலைப்புலிகளின் கொடூரத்திலிருந்து பாதுகாக்கக் கூடியது சர்வதேச சமூகம் மட்டுமே. ஆனால் அதற்குரிய வழிவகைகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியா உட்பட சர்வதேச சமூகம் எதுவும் செய்ய முடியாது அமைதியாக இருந்து நடப்பதை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது. விடுதலைப்புலிகளுக்கு பயந்து அரசாங்கம் செயற்பட வேண்டியதில்லை சர்வதேச சமூகம் துணிந்து தலையிட்டு இத்தகைய மிருகத்தனமான செயல்களை நிறுத்த வேண்டும் என விடுதலைப்புலிகளுக்கு கூறவேண்டுமானால் ஒரு நியாயமான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கத்தை கேட்டிருந்தேன்.
எமது நாட்டின் துரதிஸ்டம் என்னவெனில் தமிழரின் விடுதலைக்காக அரசாங்கத்தை எதிர்த்துப் போரிடுகின்றோம் என்று கூறும் ஒருசாராருக்கும் இவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுகின்றோம் என்றும் தேசப்;பற்றாளர்கள் என்றும் கூறுகின்ற கடும்போக்குடைய தேசியவாதிகளுக்கும் இடையில் அகப்பட்டமையே.
தேசப்பற்று என்றால் நாட்டை மட்டும் நேசிப்பதல்ல நாட்டையும் அந்நாட்டில் வாழும் மக்களையும் நேசிப்பதே தேசப்பற்றாகும் என்பதை இவர்கள் உணரவில்லை. சுர்வதேச சமூகத்தால் சுட்டிக்காட்டப்படுகின்ற பிழைகளை ஏற்க மறுத்து சர்வதேச சமூகத்தின் மீது கடும் சினம்கொள்பவர்கள் இருக்கின்றபோது சர்வதேச சமூகத்தை நாம் எவ்வாறு குறை கூற முடியும்? அத்தகைய சந்தர்ப்பங்களில் இஷ்டம்போல அறிக்கை விடுவதை தவிர்த்து அப்பணியை அரசிடம் விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல்வேறு நாடுகளுடன் எமக்குள்ள நல்லுறவை காப்பாற்ற முடியும். இது வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் பொருத்தமானதாகும். சும்பந்தப்படாதவர்கள் இத்தகைய சினத்தை ஊட்டுவதாலேயே சர்வதேச சமூகம் சிலவேளைகளில் அமைதியாக இருப்பதற்கு காரணமாகும். விடுதலைப்புலிகளின் நடமாட்டங்களையும் செயற்பாடுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டும் பல நாடுகள் இருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கை அனேகருக்கு எரிச்சலை உண்டுபண்ணக் கூடிய ஒன்று என்பதை அனைவரும் அறிவர். விடுதலைப்புலிகளின் அதிகாரத்தை மீறி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழ் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை எதிர்ப்பதை இக்கடும்போக்கு கொண்ட தேசியவாதிகள் பாராட்டக்கடமைப்பட்டவர்கள். ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்கக்கூடிய ஓரு நியாயமான தீர்வு தமக்கு திருப்தியை தரும் என அத்தலைவர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர். ஆனால் அரசியல் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் எதிர்காலத்தில் நினைத்தபடி நீக்கக்கூடிய ஒற்றையாட்சியை அவர்கள் விரும்பவில்லை. சோல்பரி அரசியல் சட்டத்திற்கு ஏற்பட்ட கதி புதிய அரசியற் சட்டத்திற்கு ஏற்படக்கூடாது என்று விரும்புகின்றனர். புதிய அரசியல் சாசனம் எதிர்காலத்தில் கிளர்ச்சி ஏற்பட இடமளிக்காத வகையில்; நிரந்தரமானதும், இறுதியானதுமான தீர்வாக அமைவதோடு நாட்டில் வாழும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இலங்கையர் என அடையாளப்படுத்தக் கூடியதாகவும் அமைய வேண்டும். சமாதானத்துடனும் அமையுதியுடனும் சகல உரிமைகளையும் சமமாக அனுபவிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் வேண்டும். மேற்கொண்டு உயிரழிவு உடமையழிவு இல்லாமல் சமாதானத்தை கொண்டுவருவதற்கு இதுவே சிறந்த வழியாகும். நாம் எவ்வளவோ இழந்துவிட்டோம் இனி இழப்பதற்கு எம்மிடம் எதுவுமில்லை.
தீவிர போக்குடைய தேசியவாதிகள் இன்னுமோர் முக்கிய விடயத்தை கவனத்தில எடுக்க தவறிவிட்டனர். நாட்டு மக்கள் அனைவரும் பௌத்த சமயத்தை அரச மதமாக ஏற்றுக்கொண்டிருப்பது தீவிர நிலைப்பாடு கொண்டவர்களின் போக்கை மாற்றுவதற்கு ஊக்குவிப்பாக இருத்தல் வேண்டும். ஆகவே கடும்போக்காளர்கள் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்து சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை அங்கீகரித்து சிறுபான்மை மக்கள் சம உரிமையுடன் வாழ உரிய நிலைப்பட்டை எடுக்க வேண்டும்.
நாட்டுமக்கள் அனைவரும் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலிக்க வேண்டிய அளவிற்கு இனப்பிர்சசினை மோசமடைந்துள்ளது. சிறுபான்மை மக்களும் சர்வதேச சமூகத்தினரும் ஏற்கக் கூடிய நியாயமான தீர்வை சகல அரசியற் கட்சிகளும் ஏனைய குழுக்களும் முன்வைக்க வேண்டும். அப்படியானால் தான் சர்வதேச சமூகம் வன்முறையை கைவிட்டு தமது சிபார்சை ஏற்கும் படி விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அவசியம் ஏற்படின் அவர்கள் விடுதலைப் புலிகள் மீது பல்வேறு தடைகளை அமுல்படுத்தி தத்தமது நாட்டில் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நிதிசேகரிப்பதையும், ஆயுத கொள்வனவையும் தடுக்க முடியும். அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒஸ்லோ பிரகடனத்திற்கமைய அல்லது சமஷ்டி ஒற்றையாட்சி என்ற வார்த்தைகள் கசப்பானதாயிருந்தால் அதற்குப் பதிலாக இந்திய முறையிலான தீர்வுக்கு ஒப்புதலளிக்க வேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமாகிய மாட்சிமைதாங்கிய மஹிந்த ராஜபக்ஸ அவர்களையும் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சிதலைவருமாகிய கௌரவ ரணில் விக்கிரமசிங்கா அவர்களையும் தாமதிக்காது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உடன் முன்முயற்சி எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சமூகத்தினருடைய பங்களிப்பை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக தப்பான வியாக்கியானமளிக்கப்படக் கூடாது. இவ்விரு தலைவர்களும் எடுக்கின்ற முயற்சியால் வரக்கூடிய தீர்வை சர்வதேச சமூகம் தமக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் நியாயமான தீர்;வென சிறுபான்மையினருக்கு சிபார்சு செய்வேண்டும் என கோருகின்றேன்.
தினம் தினம் இவாறு இறக்கும் அப்பாவி மக்களில் அனேகரின் உழைப்பிலேயே அவர்களின் ஏழைக்குடும்பங்கள் தங்கிவாழ்கின்றன. யுத்தத்தை முடித்து சமாதானத்தை கொண்டுவந்து எமது மக்கள் பய பீதியின்றி இஸ்டம்போல் நடமாடக்கூடிய நிலையை உருவாக்கவேண்டிய புனித கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்படும் ஆத்திரமூட்டும் சம்பவங்கள் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிங்கள மக்கள் கையாண்ட பெரும் பொறுமையை நன்றியோடு பாராட்டுகின்றேன். விடுதலைப்புலிகள் தமது ஈனச்செயல்களை அண்மையில் கூட்டியிருப்பதன் உள்நோக்கம் அனைவருக்கும் விளங்கும். சிங்கள மக்களை எத்தகைய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து பொறுமையை கடைப்பிடிக்குமாறு வேண்டுகின்றேன். புயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை அதிகாரிகளுக்கு காட்டிக்கொடுக்க வேண்டிய பொறுப்பு சிங்கள தமிழ முஸ்லிம் ஆகிய ஒவ்வொருவருக்கும் .உண்டு.
பல்வேறு ஆத்திரமூட்டும் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலும் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்கள் எவ்வாறு பொறுமையை கடைப்பிடிக்கின்றனர் என்பதை மட்டக்களப்பில் வாழும் தமிழ் இஸ்ஸாமிய சகோதரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மட்டக்களப்பு வாழ் மக்களை சமாதானமாகவும் அமைதியாகவும் பயபீதியின்றி நடமாடவும் அனுமதிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி