மும்பாயின் படுகொலைகள்

மும்பாயின் படுகொலைகள்

நூற்றுக்கு மேற்பட்டவர்களை பலி கொண்டும் 350 க்கு மேற்பட்டோரை படுகாயமடைய செய்தும் சிலரை கண் பார்வை, கால் கை அல்லது இரண்டையும் இழக்க வைத்து பலரை வாழ்நாள் முழுவதும் உணர்வற்ற ஊனமுற்றவர்களாக்கி அதில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள, மனசாட்சியற்ற, கோழைத்தனமானவர்களின் திகிலூட்டும் செயலை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க வன்மையாக கண்டிக்கிறது. இவ்வுலகில் இத்தகைய சம்பவம் தனக்கோ தன் குடும்பத்திலுள்ள வேறு எவருக்குமோ ஏற்படுவதை ஒருவரும் விரும்பமாட்டார்கள். பயங்கரவாதம் தற்போது உலகளாவிய ரீதியில் தொந்தரவாக மாறி வருவதால் அது முற்று முழுதாக உலகிலிருந்து அழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தாம் அடைய முடியாத ஒன்றை அடையவென வெறித்தனமாக எல்லா நேரமும் இரத்த வெறி பிடித்து அலையும் ஓர் சிறு குழுவினருக்கு, முழு உலகுமே பணயக் கைதிகளாக வாழ முடியாது. பயங்கரவாதத்தின் கசப்பான தன்மையை ருசித்துப் பார்க்காத சிலர் இக் கூட்டத்தினரை பெரிய சாதனை வீரர்களாக மதித்து அவர்களை பெருமளவில் பாராட்டி அவர்களுக்கு பெரும் ஆதரவு வழங்குகின்றனர். வேடிக்கை என்ன வெனில் அவர்கள் தம் மனைவி மக்களை உலகின் ஏதோவொரு மூலையில் பத்திரமாக அமர்த்திவிட்டு நண்பர்களால் வைக்கப்படும் குண்டுகள் தம்மை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையில் மிக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.

இந்தியாவிலும், இலங்கையிலும் நாம் இத்தகைய உபத்திரவங்களை நம் நாட்டின் ஏதோவொரு பகுதியில் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் மும்பாயில் நடந்தது போன்ற சம்பவங்கள் நம் நாட்டிலும் பல தடவை நடந்துள்ளன. ஆனால் அவை வேறு நோக்கங்களுக்காகவே. அது எதற்காக நடந்தாலும் பயங்கரவாதத்தை நாம் கண்டிக்க வேண்டும். எமக்கு ஓர் அழிவு ஏற்படும் வரை நாம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நாம் இந்தியரோ, இலங்கையரோ, எந்த மதமோ, இனமோ என்ற பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எந்த இலக்கை அடைய பயங்கரவாதத்தை கையான்டாலும் அச் செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும். ஒருவர் எவ்வளவு நெருங்கியவராக இருப்பினும் பயங்கரவாதத்தில் யார் ஈடுபடுவதாக அறிந்தாலும் அதிகாரிகள் அவர்களை பிடிப்பதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக உறுதி பூண வேண்டுமேயன்றி அதை மூடி மறைக்க கூடாது. நாம் எமது எதிர்கால சந்ததியை காப்பாற்ற வேண்டுமானால் முதல் படியாக சகல நாடுகளும் ஒன்றிணைந்து எது விதமான கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் பங்கு கொள்ளாதவாறு சட்டம் இயக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் பயங்கரவாதத்தின் முதல் பாடத்தை அங்கேதான் பெறுகின்றார்கள்.

தமிழர் விடுதலைக் கூட்டணி இக் கொடிய சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் உற்றார் உறவினர்களுக்கும், இந்திய அரசுக்கும், மக்களுக்கு; தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ