வன்னிவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்

16-02-2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

வன்னிவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டு வாழும் அப்பாவி மக்கள் மத்தியில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் திடீரென உயர்ந்துள்ளமையை மிக அக்கறையுடனும் மிகுந்த துன்பத்துடனும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இராணுவம் வன்னிக்குள் புகுந்ததில் இருந்து, இன்று ஏற்பட்டுள்ள நிலை மிக அதிகப்படியாக உயர்ந்துள்ளது. நான் இரு சமூகங்களுக்கிடையில் எதுவித பேதமும் காணாதவன் என்பதை தாங்கள் அறிவீர்கள் ஒரு தமிழராக இருந்தாலும் ஓரு சிங்களவராக இருந்தாலும், ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவர்களின் உயிர் மிகப் பெறுமதியானவையாகும். இன்றுள்ள யுத்த நிலைமையில் இராணுவம் பதிலடி கொடாது தொடர்ந்து தாக்கத்தை சகிக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் தம் தாய் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மாறாக விடுதலைப் புலிகளோ ஏறக்குறைய யுத்தத்தில் தோன்றுப்போன நிலையிலும் ஆணவம் கொண்ட தமது தலைவனின் பணிப்பின் பேரில் போராடுகின்றனர். தாம் பலாத்காரமாக தம் பாதுகாப்புக்காக பிடித்து வைத்துள்ள பொதுமக்களின் பாதுகாப்புப் பற்றி யோசிக்காது எதுவித கேள்வியும் கேட்காது போராடி மடிவதே அவர்களின் கடமையாகும்.

ஆனால் ஜனாதிபதி அவர்களே எப்படியும் தங்களின் அரசுக்கு அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டிய புனிதமான கடப்பாடு உண்டு. விடுதலைப் புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசத்தினையும் மக்களின் பெரும் பகுதியினரையும் மீட்டெடுத்த பெருமை இராணுவத்தினருக்கு உண்டு. இராணுவத்தில் இதுவரை காலமும் பல தோழர்களை பலிகொடுத்து சம்பாதித்த நற்பெயருக்கு பல அப்பாவி மக்களின் இழப்பால் களங்கம் ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை மாற்றம் பற்றி நான் நன்கறிவேன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் பெருமளவில் குறுகியுள்ளமையால் ஏற்பட்ட இடநெருக்கம் பெருமளவாக பாதிப்புக்கள் ஏற்பட காரணமாக இருக்கலாம். யுத்தத்தை விரைவில் முடிக்க வேண்டுமென இராணுவத்தினரின் அளவுக்கு மீறிய உற்சாகம் நிச்சயமாக ஒரு காரணமாக இருக்காது.

அக்டோபர் 24ம் தேதிக்கும் நவம்பர் 09ம் தேதிக்கும் இடைப்பட்ட இருவார யுத்தத்தில் எட்டு பொது மக்கள் இறந்தும் ஒன்பது பேர் காயப்பட்டும் உள்ளனர். ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் 288 பேர் இறந்தும் 766 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை 55 பேர் இறந்தும் 109 பேர் காயப்பட்டும் உள்ளனர். இது ஓர் அதிர்ச்சி தரும் விடயம் மட்டுமல்ல. தாக்கப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வருபவர்களையும் நன்றாக பராமரிக்கும் இராணுவத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது பாரதூரமான விடயமாகும் பல ஆண்டுகளாக பல்வேறு துன்பத்தை அனுபவித்து குறிப்பாக கடந்த சில மாதங்களாக செல் அடிக்கும், பீரங்கி தாக்குதலுக்கும் பயந்து வாழும் மக்களின் நம்பிக்கையை பெற இத்தகைய படுகொலைகளை நிறுத்த வேண்டும்.

இராணுவம் இனி விமானத் தாக்குதலைகளை உடனடியாக நிறுத்தி பீரங்கித் தாக்குதல் செல் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும். அகப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை எஞ்சியுள்ள பகுதிகளை பிடிப்பதைப் பொறுத்திருக்கலாம். ஆனால் இராணுவ நடவடிக்கை தொடரலாம்.

விடுதலைப் புலிகள் தமது பிரச்சாரத்துக்கு பெரிதாக பாவித்த குற்றச்சாட்டாகிய இன ஒழிப்பை மறுத்துரைத்தவன் நான் என்பதை தாங்கள் அறிவீர்கள்

நன்றி

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ