10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவசியமா?

04.06.2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

அன்புடையீர்,

10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவசியமா?

நலன்புரி முகாம்களில் வாழும் 10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை வழங்க அரசு எடுத்த தீர்மானம் எனக்கு பெரும் குழப்பத்தை தருகின்றது. இலங்கை மக்கள் சிங்கள, தமிழ், இஸ்லாமியர் என்ற வேறுபாடின்றி, நலன்புரி முகாமிற்குள்ளிருந்தாலும் சரி வெளியிலிருந்தாலும் சரி பெற்றோர் இத்திட்டத்தினை விரும்பி வரவேற்க மாட்டார்கள். ஒருவர் எல்லா நேரமும் பிழையாக இருக்க முடியாது. எல்லா நேரமும் சரியாகவும் இருக்க முடியாது. நான் கூறுவது தங்களுக்கு திருப்தியளிக்காவிட்டாலும் எனக்குள்ள குறுகிய அறிவைக்கொண்டு பார்க்கின்றபோதும், இச்செயற்பாடு எதிர்பார்த்த பலனை அளிக்காது, அனர்த்தத்தை உண்டுபண்ணும் என நம்புகின்ற படியால் இத்திட்டத்தினை கைவிடுமாறு, அதிகாரிகளுக்கு பணிக்கும்படி மிகவும் பணிவாக வேண்டுகின்றேன். அதற்குப்பதிலாக அது நன்மை தரும் என தாங்கள் கருதினால் நாடு பூராகவும் உள்ள 10 வயதடைந்த பிள்ளைகளுக்கும் இத்திட்டத்தை விஸ்தரிக்கலாம். தாங்கள் சமூகத்தில் தனித்த ஒரு குழுவைச்சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை பிள்ளைகளுக்கு கொடுக்காது, முகாமில் உள்ளும் புறமும் உள்ள அனைவரும் சமமானவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியவாறும், ஒரு தாழ்வு மனப்பான்மையை அவர்களின் இள மனதிற்குள் புகவிடாது இந்த வயது எல்லையை 16 வயதிற்கு உயர்த்தலாம். ஏற்கனவே தாம் பிச்சையெடுத்து உண்பதாக ஒரு கசப்பான உணர்வால் அவர்களது உள்ளம் புண்பட்டுள்ளது. புணர்வாழ்வு முகாமில் வாழ்கின்ற பிள்ளைகள் மிகுந்த அனுதாபத்தோடு கவனிக்கவேண்டியவர்களேயன்றி, அவர்களை விரோத மனப்பான்மையுடன் பார்க்கக்கூடாது.

பல ஆண்டுகளாக பயத்துடனும், பீதியுடனும் வாழ்ந்த தாய்மாரின், வயிற்றில் கருவாக உருவான நேரத்திலிருந்து, இன்றுவரை பயத்துடனும் பீதியுடனும் வாழ்கின்றார்கள் என்பதனை, தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். யுத்தத்தின் கடைசிப்பகுதியில் நிலைமை மாறாமல் நாளுக்கு நாள் கூடி போரானது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்தக்காலத்தில் இவர்கள் அனுபவித்த பயங்கரம் அவர்கள் வாழ்வில் என்றும் சந்தித்திராதது. கொழும்பு காலிமுகத்திடலுக்கு அண்மையில் வாழ்ந்த மக்கள் இச்சிறுவர்களது அனுபவத்தில் ஒரு மிகச்சிறு பகுதியை, அண்மையில் விமானப்படை ஒத்திகை நடைபெற்ற வேளையில் அனுபவித்தனர். ஆனால் ஒரு வித்தியாசம் இங்கே குண்டு விழவில்லை.

இந்த நிலைமை இவர்கள் விரும்பிப்பெற்றதல்ல. இவர்கள் மீது திணிக்கப்பட்டது. மிகப்பணிவாக நான் தங்களை வேண்டுவது இப்பிள்ளைகளை வாழ்நாள் பூராகவும் நினைக்கக்கூடியதாக புலிகள் என முத்திரை குத்தவேண்டாம். இச்செயலானது விடுதலைப்புலிகள் சிறுவர்களை படைக்குப் பிடித்துச்சென்று, சயனைட்டு குப்பிகளை கழுத்தில் கட்டிவிட்டசெயலுக்கு ஒப்பானதாகும்.

ஜனாதிபதி அவர்களே என்னுடைய வேண்டுகோளை மிக ஆழமாக பரிசீலித்து, இவர்களை நிரந்தரமாக புலிகள் என முத்திரை குத்தாதிருக்க சகல நடவடிக்கைகளையும் எடுக்கவும். விடுதலைப்புலிகளை தமிழ்ப்புலிகள் என்று வர்ணிப்பது தவறானது மட்டுமல்ல, சிங்கள தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு பங்கமானதும் கூட, அவர்கள் தங்களை விடுதலைப்புலிகள் என்றே அழைத்துவந்தனர். தமிழ் புலிகள் என்று அல்ல, எனவே இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத்தராது. மேலும் தமிழ் மக்களின் உள்ளத்தை கவர்ந்தெடுக்க வேண்டுமென்ற தங்களின் அபிலாசைக்கு என்றுமே உதவாது. அதிகாரிகள், தயவுசெய்து அனாதரவான பிள்ளைகளை தேடிக்கண்டுபிடித்து, அவர்களின் பெற்றோரிடம் கையளிக்க உதவவேண்டும். இப்போது கடைசியாக எனக்குவந்த தகவலின்படி, இறந்துபோன தாயின் முலையில் ஒரு குழந்தை தனக்குத்தானே பாலூட்டிய சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் இதுமட்டுமல்ல.

முக்கிய குறிப்பு : சிறு குழந்தைகளிடம் கைவிரல் அடையாளம் பெறுவது கொடூரமான செயல் என்றே கருதுகிறேன்.

நன்றி,


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ