தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது.

13-02-2020

மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு

ஜனாதிபதி அவர்களே!

தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது.

இவ்வேளையில் பொருத்தமான சில விடயங்களை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். குறிப்பிட்ட ஒரு துறை மட்டுமன்றி மானிடத்தை பாதிக்கும் பல்வேறு துறைகளிலும் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சிறுபான்மையினரும் ஓரளவிற்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் மட்டும் முறையான பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கவில்லை. அதுபற்றி தற்போதைக்கு விமர்சிக்க விரும்பவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பல ஆண்டு காலமாக ஒன்றாக குவிந்துள்ளன. சண்டித்தனம், அச்சுறுத்தல், மோசடி,பெருமளவில் ஆள் மாறாட்டம் ஆகியவை 1989 தொடக்கம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தலைதூக்கி நின்றமையால் மக்கள் தம் இஷ்டப்படி தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியவில்லை. பாராளுமன்றத்தில் மட்டுமன்றி பல்வேறு ஜனநாயக அமைப்புக்களுக்கும் கடந்த 20,30 ஆண்டுகளாக துப்பாக்கி பயமே பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியிருந்தது.

அரசு ஜனநாயகத்தை வடக்கு கிழக்கின் பல்வேறு மட்டத்திலும் மீண்டும் இயங்க வைக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல செய்வதற்கு முன்பே செயற்பட வேண்டும். ஆயுதங்களை வைத்திருப்பதற்கு சட்டப்படி அதிகாரங்கள் பெறாதவர்களிடமிருந்து ஆயுதங்கள் முற்றுமுழுதாக களையப்பட வேண்டும். அப்படியானால்தான் வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும் அர்த்தமுள்ளதாக மக்களால் நம்பப்படும். வடக்கு கிழக்கு மக்கள் ஒரு புது யுகத்திற்கு ஜனநாயக அடிப்படை மனிதாபினமான உரிமைகள் மீளப்பெற்று வாழும் வாய்ப்பு ஏற்படும். அந்த நிலைமையில்தான் தாம் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நிலைமையை அனுபவிக்க கூடியதாக இருக்கும் மூன்று தசாப்தகாலங்களின் பின் அவர்களுக்கு நிம்மதியை கொடுப்பதோடு வடக்கு கிழக்கில் அரசு இழந்த நாணயத்தை மீளப்பெற முடியும்.

தாங்கள் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முறைப்படி செயற்படாத குழுக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ