முகவுரை
தனது தேர்தல் தோல்வியினால் ஏமாற்றமடைந்திருக்கும் வாக்காளர்களுக்கு திருப்தியளிக்கக்கூடிய நியாயபூர்வமான காரணங்களை கண்டுபிடிக்க அங்கலாய்க்கும் ஓர் வேட்பாளரின் உள்ளக் குமுறல் அல்ல, தனது நாட்டுக்கும் அதில் வாழும் மக்களுக்கும் அரை நூற்றாண்டுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு மனிதனின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதே இது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்;டமைப்பு வேட்பாளர்களும் சில அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஆகியவற்றை சேர்ந்த வேட்பாளர்களும் செய்த பொய்யானதும், குரோதமானதுமான பிரச்சாரத்தினால் வாக்காளர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தப்பட்ட தவறான அபிப்பிராயங்களை நீக்கும் விபரக் குறிப்பாகவே இது வெளிவருகிறது. சில ஆசனங்களை எடுப்பதற்காக அல்லது வேறு கட்சியிலும் பார்க்க கூடுதலான ஆசனங்கள் எடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை சுயநலத்துடனும், புத்திசாதுரியமற்ற முறையிலும் செயற்படாது, புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் செயற்பட்டிருந்தால் இன்று நிலைமை முற்று முழுதும் வேறாக அமைந்திருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழு அக்கறையும் என்னை தோற்கடிப்பதிலேயே இருக்க முழுப்பிரச்சாரத்தோடு வெட்கப்படக்கூடிய வகையில் பணத்தையும், மதுவையும் தாராளமாக வழங்கி தாம் நினைத்ததை திருப்தியாக சாதித்தனர். எனது 50 வருட அரசியல் வாழ்வில் நான் எதிர்கொண்ட 15 இற்கு மேற்பட்டஉள்ளுர் பாராளுமன்ற தேர்தல்கள் எதிலும் பணமோ, பானமோ தலைகாட்டவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தோற்கடிக்கவென பெரும் தொகை பணத்தை என்னிடம் அரசு தந்து பிரச்சாரத்துக்கு செலவிட வைத்ததாக அதன் வேட்பாளர்கள் வெட்கமின்றி கூறி கண்ணியமற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இது சம்பந்தமாக துண்டு பிரசுரங்களும் விநியோகித்திருந்தனர். அரசு சார்பில் போட்டியிட்டவர்களுக்கு அசாதாரணமாக பலவித உதவிகளை செய்தமை பற்றி அறிந்திருந்தும் பொது மக்களால் இதுபற்றி விளங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களில் அநேகர் புதுமுகங்கள். அநேகர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தும் பல்வேறு பின்னணியை கொண்டவர்களாக இருந்ததோடு பண பலம் கொண்டவர்களாகவும் இருந்தனர். ஆனால் என்னுடன் பல ஆண்டுகள் சகபாடியாகவும், நான் தலைமை தாங்கும் கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக திரு. சம்பந்தன் அவர்கள் என் நேர்மை பற்றியும், நாணயம் பற்றியும் நன்கு அறிவார். ஆனாலும் அவர் என் பக்கம் பேசமாட்டார். ஏனெனில் அவரும் திரு.அ. விநாயகமூர்த்தி அவர்களுமே நான் ஆனையிறவு முகாமை அரச படைகளிடம் மீள் அளிக்க உதவுமாறு புலிகளிடம் கோழ் சொன்னவர்களாவர். இவர்களிடம் பெற்றுக்கொண்டதை வைத்தே விடுதலைப் புலிகள் பல ஆண்டுகளாக தமது ஊடகங்கள் மூலமும், தமது கட்டுப்பாட்டிலிருந்த பல்வேறு நாட்டு ஊடகங்கள் மூலமும் எனக்கு எதிரான விஷமத்தனமான பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. புலம் பெயர் தமிழ் மக்களையும் எனக்கு விரோதமாக செயற்பட வைத்து சரியான முறையில் மூளை சலவை செய்யப்பட்ட தமிழ் மக்கள் இன்றும் நான் துரோக செயலில் ஈடுபட்டதாகவே நம்புகின்றனர். மறக்கவும் தயாராக இல்லை. விடுதலைப் புலிகளுடன் அவர்களின் பினாமிகளாகவும் செயற்பட்ட கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகள் என்னை வேட்டையாட தீவிரமாக அலையும் போது கொஞ்சம் புத்திமதிகளை சொல்லியிருக்கலாம். 2004ம் ஆண்டு தோதலின் போது இத்துடன் சேர்த்து நான் இந்தியாவில் சேலைக் கடையும், வெள்ளவத்தையில் மதுவகை வி;ற்கும் கடையை நடத்துவதாகவும் நான் தேர்தலில் இருந்து வாபஸ் ஆகிவிட்டேன் என்றும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில் எந்தவொரு நாட்டிலும் ஓர் பாதையோர கடைகூட இல்லை.
இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் வாழும் போது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் அவசியமா? என்ற கேள்வி எழுவது நியாயமே. ஆனால் மிகவும் அவமதிக்கப்பட்டு, மனம் நொந்திருக்கும் போது என் பெயருக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்க வேண்டிய கடமை எனக்கு உண்டல்லவா. ஏனக்கு உதவ சில பத்திரிகைகள் விரும்புவதில்லை. எனக்கு வேறு வழியின்றி நான் இதனை சிறு புத்தக வடிவில் பிரசுரிக்க விரும்புகின்றேன். ஓர் பத்திரிகை எவரேனும் ஒருவரை புகழ்வதையோ தலைமை பதவிக்கு உயர்;த்துவதையோ நான் ஆட்சேபிக்கவில்லை. அனால் திட்டமிட்டு பழிவாங்கும் செயற்பாடுகள் வரவேற்கதக்கதல்ல. அது பத்திரிகா தர்மமும் அல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு ஓர் புனிதமான கடமை உண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்குள் மூன்று வௌ;வேறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் செயற்பட்டு வந்திருக்கின்றன. முதலாவது எனது தலைமையிலும். 2வது திரு. சம்பந்தன் தலைமையில் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான சு.ப. தமிழ்ச்செல்வனால் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி), விடுதலைப் புலிகள். இவர்கள் இணைந்திருக்கும் புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றோ விடுதலைப் புலிகள், அ.இ.த.கா, டெலோ வின் ஒரு பகுதி ஆகியவை வெளியேற்றப்பட்ட பின் தெரிவாகி இருக்கின்ற 14 பேரில் 5 பேர் மட்டுமே தமிழரசு கட்சியையும் இருவர் டெலோ வையும், இருவர் ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஷ் அணி) ஐ தவிர எஞ்சியுள்ள ஏழு பேர் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்பதையும் எப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்டனர் என்பதையும் இவர்களை உள்ளடக்கிய மூன்றாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் ஏமாற்றமடைந்திருக்கும் மக்கள் கேட்கின்றனர்.
வீ. ஆனந்தசங்கரி 57ஃ48 ஸ்டான்லி வீதி
தலைவர்- த.வி.கூ யாழ்ப்பாணம்
10-05-2010
“தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வடக்கு கிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என்று”, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா.சம்பந்தனின் பகிரங்க வேண்டுகோள் எனக்கு ஆச்சரியத்தை தராது போனாலும் நல்லதோர் நகைச்சுவையாகவே தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பு இவ் ஆர்வத்தை காட்டியிருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும். அவரிலும் சிரேஷ்ட அரசியல்வாதி நான். தேர்தலுக்கு முன்பு பத்து அம்சங்கள் கொண்ட பிரேரணையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செயற்படலாமெனவும் புதிய பிரேரணைகள் இருப்பின் சேர்க்கலாம் என்றும் இருப்பவையை திருத்தலாம் எனவும் என்னால் விடப்பட்ட கோரிக்கையை பொருட்படுத்தாது, என்னையும் எமது கட்சியையும் இல்லாததும் பொல்லாததுமான பல குற்றச்சாட்டுக்களை கூறி மக்களை குழப்பமடையச் செய்து வழமைபோல் தேர்தலில் தம் வெற்றியையே மையமாக கொண்டு இயங்கிவிட்டு, இன்று ஒற்றுமையைப் பற்றி பேசுவது வேடிக்கையே. திரு. இரா.சம்பந்தன் அவர்கள் தலைமை தாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற நிலைப்பாட்டுடன் விடுதலைப் புலிகளிடம் நியமனம் பெற்றே வரலாறு காணாத மோசடி மூலம் 22 உறுப்பினர்களை வென்றெடுத்து தமிழ் மக்களின் அழிவுக்கு வழிகோலியது. நியமனம் வழங்கியதே மறைந்த விடுதலைப்புலித் தலைவர் திரு. சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களே. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு திரு. பிரபாகரன் உட்பட பல முன்னணி தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இறந்தபின் உடனே தமது பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நானும் பாராட்டி திரு. இரா சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றிருப்பேன். இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் இறந்தமைக்கு தார்மீக பொறுப்பேற்று தம் பதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துறந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ தமக்கு ஆறு ஆண்டுகள் நிலைத்திருந்த பதவியை தந்த விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரனும் அவர்களின் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் இறந்தமைக்கு அனுதாபம் தெரிவித்து ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. அவர்கள் கொல்லப்பட்ட முறையை எதுவிதத்திலும் கண்டிக்கவும் இல்லை. அதற்கு மாறாக மறுநாளே தம் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தம் அணியில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை தூக்கி வீசிவிட்டு முன்பு எதுவித கட்சிப்பணிகளிலும் ஈடுபடாத புதிய தலைவர்களை உருவாக்கி அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என நாமம் சூட்டி தேர்தலில் போட்டியிட வைத்தனர். தமக்கு பெரும் வெற்றி கிட்டியதாகவும் மக்கள் தம்மை ஏகபிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து விட்டனர் என்று கூறிக்கொண்டும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டும் மற்றவர்களுக்கு ஒன்று சேர வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்தது பற்றியோ இன்று அந்த கூட்டில் அங்கம் வகிப்பவர்கள் யார் என்பது பற்றியோ, பாராளுமன்ற உறுப்பினர்களாக எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவானார்கள் என்பது பற்றியோ தெரிவிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.
2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட 284026 வாக்குகளில் 90 வீதம் அதாவது 257329 வாக்குகள் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்தேறிய பொதுத் தேர்தலில் கிடைத்தது 43.85 வீதம் மட்டுமே. அதாவது 65119 வாக்குகள். மொத்தமாக உள்ள வாக்களார்களின் எண்ணிக்கை 721359 ஆகும். இதில் வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள் 18 வீதத்தினர் மட்டுமே என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் வெறும் 9 வீதமே இந் நிலையில் தமக்கு தமிழ் மக்கள் ஆணை தந்துள்ளார்கள் என்று திரு. இரா சம்பந்தன் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். ஜனாதிபதி தேர்தலில் திரு. சரத்பொன்சேகாவிற்கு கிடைத்த வாக்குகள் தம் கோரிக்கைக்கு அமையவே கிடைத்ததென அவர் கூறியதை நான் மறுத்திருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கூற்று உண்மையானால் அவருக்கு கிடைத்த 113877 வாக்குகள் மூன்று மாதத்தில் எவ்வாறு குறைந்து 65119 ஆகியது?
தேர்தலின் போது அரசு சார்பு வேட்பாளர்கள் என்னுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மறைத்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை அரசின் எடுபிடியாக எடுத்துக்காட்டி பெரும் தொகை பணத்தை என்னிடம் அரசு தந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை தோற்கடிக்க ஏவிவட்டதாக பிரச்சாரம் செய்தார்கள் நா கூசாமல் பொய்யையும் புரட்டுகளையும் அவிட்டு விட்டனர். என்னைப்பற்றிய எதுவித செய்தியையும் பிரசுரிக்காது சில பத்திரிகைகள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்துள்ளதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பற்றிய உண்மைகள் பலவற்றை மூடிமறைத்து எந்தளவில் பிரச்சாரம் செய்ய முடியுமோ அதற்கு பல மடங்கு மேலாக பிரமாதப்படுத்தி பிரச்சாரம் செய்து பத்திரிகை தர்மத்தையே ஊடகவியலாளர் சிலர் கொலை செய்தனர். திரு. சம்பந்தன் பத்திரிகைகளை பாராட்டி தம் வெற்றிக்காக உழைத்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது ஒன்றே போதும் நான் கூறுவதில் நியாயம் உண்டு என்பதை நிரூபிக்க. ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இதையே செய்து எம் மக்களின் பேரழிவுக்கு காரணமாக பத்திரிகைகள் சில இருந்ததும் அல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அவரவர் கடமையை கூட செய்ய விடாது அவர்களையும் கெடுத்தனர். நடந்தேறிய அக்கிரமங்களை, அடாவடித்தனங்களைகூட கண்டிக்காது அவற்றை பாராட்டி புகழ்ந்தனர். அத்தகைய பெரும் பிரச்சாரத்துக்கு மத்தியில் எனது கண்டனங்கள் ,ஆலோசனைகள் புத்திமதிகள் மற்றும் பலன்மிக்க கருத்துக்கள் எதுவும் எடுபடவில்லை. எனது விளக்கங்கள் அத்தனையும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. எனக்கு துரோகி பட்டம் சூட்டவே பெரு முயற்சி செய்து வெற்றியும் கண்டனர். 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபட்டு வரும் மிக முதிர்ந்த தமிழ் அரசியல்வாதியாகிய என்னை மக்கள் மத்தியில் அரசின் ஏவலாளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பத்திரிகைகளின் உதவியுடன் சித்தரித்து மக்களை ஏமாற்றி நம்ப வைத்துள்ளனர். என்மீதுள்ள கோபத்தில் வஞ்சம் தீர்க்க சில பத்திரிகைகளின் நடவடிக்கையானது அப்பாவி மக்களுக்கே பாதகமாக முடிந்தது மட்டுமல்ல விடுதலைப் புலிகளினதும் தமிழினத்தினதும் அழிவுக்கே வழிகோலியது. பத்திரிகைகள் எதுவும் என்மீது சீற்றம் கொள்வதில் எதுவித நியாயமும் இல்லை. என்னை அர்ப்பணித்து 50 ஆண்டுகாலமாக நான் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன்.
நான் தமிழுக்கு செய்த துரோகம் என்ன? மக்களுக்கு நான் செய்த குற்றம்தான் என்ன? எம் மக்களின் நிலையை கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இருந்து கற்பனையில் விமர்சிக்காமல் வன்னிப் பகுதி மக்களை நேரில் சென்று பார்த்திருக்க வேண்டும். கால் இல்லை, கை இல்லை, கண் இல்லை, கணவன் இல்லை,மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை, பெற்ற தாய் இல்லை, வளர்த்த தந்தை இல்லை, அண்ணன் இல்லை, தம்பி இல்லை,அக்கா இல்லை, தங்கை இல்லை, மாமா இல்லை,மாமி இல்லை இப்படி எத்தனை இல்லை என்று கடுகளவேனும் சிந்தித்தார்களா நம் மக்கள். எல்லாம் உண்டு என்று கூறுபவர்கள் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டவர்கள். நாம் எதை இழந்தோம் கவலைப்பட என்று கேட்பவர்களும் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை தாமே கேட்க வேண்டும். தாம் கடந்த ஆறு ஆண்டுகள் நடந்துகொண்ட முறை சரிதானா என்று? வன்னி மக்களின் இன்றைய அவல நிலைக்கு அவர்கள் பொறுப்பில்லையா? அவர்கள் எதை பறிகொடுத்தனர் கவலைப்பட. தேசியம், சுயநிர்ணயம் போன்ற மூல மந்திரங்கள் இருக்கும் வரை அவர்களை யாரும் ஏதும் செய்ய முடியாது. நம் மக்கள் தம் அடையாளத்தை இழந்து இனப்பெருக்கம் குறைந்து ஆயிரக்கணக்கில் வெளிநாடு சென்றும் மீண்டும் ஒருமுறையல்ல பல முறை உயிரிழப்பு நேர்ந்தாலும் கூட கடைசி தமிழன் இருக்கும் வரை இத் தாரக மந்திரம் வேலை செய்யும். ஆனால் மக்கள் படும் துன்பத்தை வெளிகாட்ட வேண்டிய கடமை எவருக்கும் உண்டு. அவருக்கு இவருக்கு பயந்து வாய் மூடி மௌனமாக வாழ என்னால் முடியவில்லை. கடமையை செய்தேன். பட்டம் பதவிகளை ஏற்க மறுத்து கடமையை செய்த ஒருவன் எப்படி துரோகியாக முடியும்? விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் சிலவற்றை ஏகமனதாக அனைவரும் ஒரு தடவையேனும் கண்டித்திருந்தால் அவர்கள் திருந்தியிருப்பர். எதையேனும் சாதித்தும் இருப்பர். மக்களின் பரிதாப நிலைகண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் கண்டனம் தெரிவித்த நான் எப்படி துரோகியாக முடியும்?
விடுதலைப் புலிகளுக்கு நான் கூறிவந்த ஆலோசகைளையும் கண்டனங்களையும் அவர்கள் கவனத்துக்கு எடுத்திருந்தால் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவற்றை விடுதலைப் புலிகளை எடுக்க வற்புறுத்தியிருந்தால் பல்லாயிரக்கணக்கான எம் பிள்ளைகளின் உயிர்கள் எம் மக்களின் மதிப்பிட முடியாத சொத்துக்கள் அத்தனையையும் காப்பாற்றியிருக்க முடியும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறு மன்றாடி கேட்டிருந்தேன். எம்மவரில் என்னைத் தவிர வேறு யார் கேட்டார்கள்? எந்த ஸ்தாபனம் கேட்டது?. ஆனால் துரோகி பட்டமே எனக்குக் கிடைத்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சுகமாக பல்வேறு வசதிகளுடன் வாழும் நம்மவர்கள் சரி அவர்களில் சிலர் நடாத்திய பத்திரிகைகள் சரி எவ்வளவு கீழ்த்தரமாக என்னை விமர்சித்திருந்தன என்பதை கூட நான் பொறுத்திருந்தேன். ஏன்? எங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் எனது தொகுதியாகிய கிளிநொச்சி அயல் மாவட்டங்களாகிய முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களே. அவர்களுக்காகவாவது பேச வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. அவர்களுக்காக நான் மௌனமாக அழுதேன். நான் அவர்களுடன் நீண்டகாலம் வாழ்ந்தவன். அவர்களில் பலர் இன்று இல்லை. மனம் வெதும்பி இறந்தவர்களும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.என்னால் அவர்களுக்காக செய்யக்கூடியதாக இருந்தது ஒன்றே ஒன்றுதான் வன்னி மக்களின் துயர்துடைக்க எழுதினேன் வெளிநாட்டு அரச தலைவர்கள்,இந்தியதலைவர்கள் கலைஞர். மு.கருணாநிதி, செல்வி ஜெயலலிதா உட்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், தூதுவர்கள், ஐ.நா சபை செயலாளர், ஜனாதிபதி, சமய பெரியார்கள், மகாநாயக்கர்கள், கத்தோலிக்க ஆண்டகைகள், நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், நாட்டு மக்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. மனச்சாட்சி உள்ள எவரும் என் கடிதங்களை பாராட்டியிருக்க முடியுமே அன்றி குற்றம் காண முடியாது. மிகக் கவனமெடுத்து எழுதப்பட்டவை. யாரையும் நோகடிக்கும் நோக்கம் கடுகளவும் இருக்கவில்லை. இன்றுவரை ஒரு நபர் தன்னும் என் கடிதங்களில் குற்றம் காணவில்லை. அவ்வப்போது என் செய்திகளை இருட்டடிப்பு செய்த பத்திரிகைகள் அல்லது அவைமூலம் யாரும் அப்பணியை செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?.
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல செயல்கள் பெரும் இனக்கலவரத்தை தூண்டுமளவுக்கு பாரதூரமானவை. அவற்றின் உள்நோக்கமும் அதுவே. அச் சந்தர்பங்களிலெல்லாம் இனவெறி ஏற்படாது சாந்தப்படுத்தியது பெருமளவில் எனது அறி;க்கைகளும், கடிதங்களுமே என பலர் கூறக் கேட்டிருக்கின்றேன். 1983ம் ஆண்டு 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டபோது நாடே பற்றி எரிந்தது. நடந்த கொடூரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற எத்தனையோ கொடூர சம்பவங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை கற்பனைபண்ணி பார்க்க முடியாது. இதை தவிர்க்க உதவியதில் யார் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி எனக்கு பெரும் பங்குண்டு. தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக கொழும்பில் வாழும் புத்திஜீவிகள்தானும் இக் கருத்தை மக்களுக்கு எடுத்துக்கூற தவறியமை தூரதிஷ்டமே.
இதற்கு ஆதாரமாக பல சம்பவங்களில் ஒன்றை கூற விரும்புகின்றேன். வெளிநாட்டு தூதரக நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மிகக் கௌரவமான தமிழ் பெண்மணியொருவர் ஏன் இவ்வாறான கடிதங்களை எழுதுகிறீர்கள் என்று என்னை கேட்டபோது அதற்கு நான் நேரடியாக பதில் கூறாமல் உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரப்பிள்ளைகள் கொழும்பிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கின்றனரா எனத் திருப்பிக் கேட்டேன். என் கேள்வி கொழும்பில் கல்விகற்கும் தமிழ் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்புடையது என்ற அர்த்தத்தை புரிந்துகொண்ட அந்த அம்மணி அதன்பின் பல தடவை அவருடனான சந்திப்பின் போது “உங்கள் கடிதங்கள் ஒவ்வொன்றையும் தவறாது ஒழுங்காக வாசிக்கிறேன். அவை அர்த்தம் உள்ளவை” என்று புன்னகையுடன் தெரிவிப்பார். என் எழுத்துக்களை படிப்பவர்கள் அதற்குள் மறைந்திருக்கும் நல்ல கருத்துக்களை புரிந்துகொள்வதில்லை. இதுதான் பிரச்சினையே? புத்திஜீவிகளுக்கேனும் புரிந்திருக்க வேண்டுமே ஏன் புரியவில்லை?
நான் ஓர் காந்தி பக்தன். 1948ம் ஆண்டு அன்னார் படுகொலை செய்யப்பட்ட நாள் எனக்கு ஞாபகமிருக்கிறது ஜனவரி 30, யாரோ ரேடியோ செய்தி கேட்டு வந்து என் தந்தைக்கு கூறினார். மறுநாள் அன்னாருக்காக அனுதாபக் கூட்டம் எனது தந்தையாராலேயே ஒழுங்கு செய்யப்பட்டது. அன்றுதொட்டு என் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டேன். முடிந்தவரை அகிம்சாவாதியாகவே வாழ்ந்தேன். யாரையும் நான் என்றும் இம்சிக்கவில்லை. பொய், களவு, உருட்டு புரட்டல் எதுவும் என்னிடம் நெருங்கவில்லை. மதுவை நான் தொட்டதில்லை. அத்தகைய நான் வன்முறையை வெறுத்தேன் அகிம்சையை வளர்த்தேன். என்னுடன் பழகியவர்கள் என்னை நன்கறிவர். இயக்கங்கள் எதிலும் ஈடுபட்டவன் அல்ல. ஆயுதம் தாங்கிய பல்வேறு இயக்கங்கள் அர்த்தமற்ற கொலைகளை செய்யும் போதெல்லாம் வேதனையில் துடித்தேன். விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது அமைதி வந்துவிட்டதென முழுக்க முழுக்க நம்பினேன். ஆயுதத்தை கைவிட்ட பிரபாகரன் இனி ஆயுதத்தை தொடார் என ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தேன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தவேளை திரு பிரகாரனும் ஒரு நாள் திரு யாசீர் அரபாத் போன்று உலகை சுற்றி வரும் காலம் வருமென்று கூறியிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு அரசு பிரபாகரனை கைது செய்து சிறையிட அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென தமது சட்டசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றியிருந்தது. அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதாவுக்கு ஓர் கடிதம் எழுதியிருந்தேன். திரு. பிரபாகரனின் அழைப்பை ஏற்று அனைவரும் 2002ம் ஆண்டு கிளிநொச்சிக்கு அன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ அனைவரும் சென்றிருந்தோம். எனது நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளார் என்பது பற்றி திரு. பிரபாகரனை சந்தித்த போது புலனாகியது. பாராளுமன்த்தில் எனக்கும் வேறு உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைகூட குறிப்பிட்டு பேசினார். அதன் பின்பு ஒரு தடவை திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாம் சொல்வதைத்தான் பா.உ க்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டபோது அதற்கு தகுந்த பதில் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ் இனத்தின் நன்மை கருதி அவர் நாகாக்க வேண்டுமென எச்சரித்ததை குறிப்பிட்டு திரு. ரவிராஜ் பாராளுமன்ற குழுகூட்டத்தில் “சங்கரி அண்ணனால்தான் நாம் இன்று தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது” என்றார்.
விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக நாம் ஏற்க வேண்டும் என்ற யோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டம் ஓன்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் திரு. அ.விநாயகமூர்த்தியும் இன்று மேல் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி திரு.குமரகுருபரனும் ஏற்க வேண்டுமென கோர அதை திரு. இரா சம்பந்தன் உட்பட அனைவரும் எதிர்த்ததால் அந்த யோசனை கைவிடப்பட்டது. தேசிய பட்டியலில் முதலாவதாக திரு. மு.சிவசிதம்பரம் இடம்பெற வேண்டுமென நான் பிடிவாதமாக இருந்தேன். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அதை விரும்பவில்லை என்று நான் அறிந்திருந்தேன். ஆனால் திரு. மு.சிவசிதம்பரம் அவர்களின் உடல் நிலை ஆறு மாதத்துக்கு மட்டும் தான் நீடிக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. 2001ம் ஆண்டு தேர்தலுக்கு நியமன தினம் குறிப்பிடப்பட்து. வழமைபோல் நம்மில் ஒருவர் சில சதி வேலைகளில் ஈடுபட முற்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த யாழ் மாநகரசபைத் தேர்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டபோது சில கட்சி ஆதரவாளர்கள் மறுத்து விட்டனர். பின்பு இலகுவான வாய்ப்பு ஏற்படுவதைக் கண்டு நீயோ நானோ என பலர் முன்வந்தனர். இவர்களில் இருவர் தம்மை தம் அனுமதியின்றி த.வி.;கூ. செயற்குழுவில் சேர்த்துவிட்டோம் என்று என்மீது கடும் கோபம் கொண்டனர். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தலில் இவர்களில் ஒருவர் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர். மற்றவர் தேசியபட்டியலில் இடம்பெற்றவர். மிகவும் கஷ்டமான ஓர் நிலைமையை சதி வேலைகளில் ஈடுபட்ட அதே நபர் எனக்கு ஏற்படுத்தினார். ஒருவரோடு மோதவிட்டு அதனால் ஏற்படும் இலாபத்தை தான் பெற்றுக் கொள்வதில் அவர் திறமைசாலி. அவர் ஏற்படுத்திய ஓர் குழப்பத்தால் பெரும் சிக்கலில் கட்சி சிக்கிக் கொண்டது. திரு.ச.அரவிந்தன், திரு. ந.ரவிராஜ் ஆகியோர் 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட இளம் வேட்பாளர்களாவர். அதேபோல முதியவர் ஒருவர் நீண்டகாலமாக தமிழரசு கட்சி பின் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளில் முக்கிய இடம் வகுத்தவர். இம் மூவரும் வேறு கட்சிகளின் மூலம் தேர்வான இருவர் எடுத்த வாக்குகளிலும் பார்க்க கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தனர். 2001ம் ஆண்டும் இடம் பெற்ற தேர்தலில் அந்நபரின் முதற் கோரிக்கை திரு.அரவிந்தனை நியமிக்காது வேறு தாம் தரும் ஓர் பேர்வழியை நியமிக்க வேண்டும் என்பதாகும். ஓர் இளைஞனை அவர் குடும்பத்தவரின் விருப்புக்கு மாறாக அச்சம் காரணமாக எவரும் போட்டியிட முன்வராத நிலையில், 2000 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வைத்தேன் இப்போது அவரை எப்படி நிறுத்த முடியும் என்றதும் அப்படியானால் திரு ரவிராஜை நீக்குங்கள் என்றதற்கு நான் அவருக்கு கொடுத்த பதில், “விரலை வெட்ட வேண்டாமென நான் கூறும் போது கையையே வெட்டுங்கள் என கேட்கின்றீர்களே” என்றேன். இறுதியாக தொல்லை தாங்காமல் திரு.முத்துலிங்கம் அவர்களை நியமன பட்டியிலிலிருந்து நீக்கியபோது அவரின் ஆதரவாளர்கள், இளைஞர் கூட்டம் மிக கோபமடைந்தது. அந்த நேரம் எனக்குத் தோன்றிய திடீர் யோசனைக்கமைய திருவாளர்கள் இரா.சம்பந்தன், திரு. வடிவேற்கரசன் மற்றும் திரு. ஜெயபாலசிங்கம் போன்றவர்களுடன் ஆலோசித்து அவர்களும் கொடுத்த உத்தரவாதத்தின் பேரால் திரு முத்துலிங்கம் அவர்களின் பெயர் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டது.
2001ம் தேர்தல் முடிவுகளுடன் ஆரம்பிக்கின்றன, எங்கெங்கோ உருவாகிய சதி திட்டங்களின் அமுலாக்கம், வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தெரிவாகினோம். இந்தியாவிலிருந்து வருகைதந்த தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை புதிதாக ஓர் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்து அவரை பாராளுமன்றத்துக்கு நானே அழைத்துச் சென்றேன். முறைப்படி பாராளுமன்ற குழுத் தலைவராக சம்பிரதாயப்படி வர வேண்டியவர் அவரே. அவரின் உடல்நிலை சரியில்லையெனில் அப் பதவிக்கு வந்திருக்க வேண்டியவர் நானே. இப் பதவி அங்கத்தவர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் பதவியில்லை. புதிய உறுப்பினர்கள் தம்மை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வேளை திடீரென மட்டுநகர் பா.உ காலஞ்சென்ற திரு.ஜோசப் பரராஜசிங்கம், திரு. இரா.சம்பந்தனை குழுத்தலைவராக பிரேரித்தபோது கண்ணியமான முறையில் அப் பிரேரணையை திரு சம்பந்தன் அவர்கள் நிராகரித்திருக்க வேண்டும். அவர் அதை செய்யவில்லை. நானும் பெருந்தன்மையாக மௌனமாக இருந்து விட்டேன். பின்பு நான் அறிந்தேன் திரு,திருமதி ஜோசப் பரராஜசிங்கமும், திரு.இரா.சம்பந்தனும் திரு.எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையிலும் ஏனையவர்களை அவரவர் இல்லங்களிலும் போய் சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர் என்று. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் மூவரும் இனந்தெரியாத தம் வஞ்சத்தை என்மீது தீர்த்துக் கொண்டனர். இதேபோன்ற ஓர் சந்தர்ப்பத்தில் திரு. அ.அமிர்தலிங்கத்துக்கு எதிரான ஒரு சதித்திட்டத்தில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களின் பெயர் பிரேரிக்கப்பட இருவரும் ஒரே அளவு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் திரு. மு.சிவசிதம்பரம் தானே திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களை பிரேரித்து பெருமையை சம்பாதித்துக் கொண்டார். இத்துடன் முதலாவது சதித்திட்டம் நிறைவேறியது.
ஏறக்குறைய ஆறு மாதங்களாக உறுப்பினராக இருந்த திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் காலமாகியதும் திரு. இரா.சம்பந்தன் கட்சி கொடுத்த வாக்குறுதிபடியும், அதிலும் மேலாக தான் செயலாளர் நாயகம் என்ற தோரணையிலும் திரு.முத்துலிங்கம் அவர்களை தேசிய பட்டியலில் போட்டு தன் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்க வேண்டும். அதற்கு மாறாக திரு. சிவசிதம்பரம் அவர்களின் பூதவுடல் எரிந்து கொண்டிருக்கையிலேயே திரு. ஜோசப் பரராஜசிங்கத்துடன் கிளிநொச்சிக்கு விரைந்து சென்ற திரு. சம்பந்தன், திரு. சு.ப. தமிழ்ச் செல்வன் அவர்களை சந்தித்து வந்தபின் அவர் கேட்டுக்கொண்டார் எனக்கூறி தனது தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட திரு. துரைரட்ணசிங்கத்தை தேசிய பட்டியலில் தன் இஷ்டப்படி சேர்த்துக் கொண்டார். கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்ட செயலாளர் நாயகம் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நாம் செய்யவில்லை. ஒற்றுமையை பேணும்பொருட்டு பொறுத்துக் கொண்டோம். அது கட்சி அவருக்கு கொடுத்த மன்னிப்பு இந்த நாடகத்தில் பங்கேற்ற திருவாளர்கள் இரா.சம்பந்தன், திரு சிவாஜிலிங்கம், திரு.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன் திரு.செல்வராஜ், திரு துரைரட்ணசிங்கம், திரு. சிவசக்தி ஆனந்தன், திரு. விநோதாரலிங்கம் ஆகியோர் சான்று பகர்வர். இரண்டாவது சதி நாடகமும் இத்துடன் நிறைவேறியது.
அடுத்ததாக திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் இறந்ததும் அவருடைய இடத்துக்கு நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக ஏகமனதாக தெரிவானேன். விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக நான் ஏற்கவில்லை. ஏனெனில் அவர்களை அப்படி யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் கசப்படைந்த ஒரு சிலர் என்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற தயாரானபோது போதிய ஆதரவின்மையால் மௌனமாகிவிட்டனர். ஆனாலும் திருவாளர்கள் அல்போன்ஸ்மேரி, ஆவரங்கால் சின்னத்துரை உட்பட சிலர் நம்பிக்கைத் தீர்மானமொன்று நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியும் தலைமை தாங்கிய நான் ஆர்வம் காட்டாததால் அவர்களின் முயற்சி நிறைவேறாமல் போனது. இதில் மிக்க வேடிக்கை என்னவெனில் 1993ம் ஆண்டு செயலாளர்நாயகமாக தெரிவான திரு.இரா.சம்பந்தன் கடைசிவரை பொதுச்சபையையும் கூட்டவில்லை.. மகாநாட்டையும் கூட்டவில்லை. அவருடன் தெரிவான செயற்குழு உறுப்பினரில் பாதிக்குமேல் இறந்தும், வெளிநாடும் சென்று விட்டனர்.
அடுத்து சில மாதங்கள் ஓடி மறைந்தன மட்டக்களப்பு, திருகோணமலை கிளைகள் இயங்காமலே பல வருடங்கள் இருந்தன. அவை இரண்டின் உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளால் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் எனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றவே தயாராக வந்தனர். அதற்கு அவர்களால் கொடுக்கப்பட்ட காரணம் ஒன்று கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டது. இரண்டு புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை திரும்பவும் அரசிடம் கொடுக்க வேண்டுமென நான் யப்பானிய விஷேட தூதர் திரு.ஆகாஷிடம் கேட்டதாக. இவ் இரண்டு காரணங்களும் முற்றிலும் பொய்யானவை. இவற்றை சத்தியம் செய்வதன் மூலம் திரு. அ. விநாயகமூர்த்தியோ அன்றி திரு. சம்பந்தனோ இன்றும் நிரூபிக்க முடியும்.
இச் சம்பவத்தின் உண்மை யாதெனில் ஒரு தடவை த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திரு. ஆகாஷியை சந்திக்கச் சென்றோம். பேசிக்கொண்டிருக்கையில் திரு. விநாயகமூர்த்தி திரு ஆகாஷிடம் “ஐயா அரசிடம் 1991ம் ஆண்டு இராணுவம் நிலைகொண்டிருந்த இடத்துக்கு வாபஸ் வாங்க சொல்லுங்கள் என்றார்”. அதைகேட்ட நான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். இக் கோரிக்கையின் விளைவு விடுதலைப் புலிகள் ஆனையிறவு முகாமை அரசிடம் திரும்ப ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப்படுவர் என உணர்ந்த நான் திரு.விநாயகமூர்த்தியிடம் அப்படியானால் ஆனையிறவை கேட்பார்கள். கொடுப்பீரா? என்று கேட்டேன். இம்முயற்சி இப் பெரும் தலைவர்கள் இருவரும் என்னை விடுதலைப் புலிகளுடன் முரண்பட வைக்க எடுத்த சதிமுயற்சியே அன்றி வேறொன்றுமில்லை. தலைமைப் பதவியில் பொய் புரட்டு மூலம் நிலைத்து நிற்க விரும்பும் இவர்களிடம் மக்களின் எதிர்காலத்தை நம்பி ஒப்படைக்கலாமா? என்று தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்களே.
இதோடு சம்பந்தப்பட்ட பல முக்கியமான விடயங்களில் ஒன்றை குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். திரு.இரா.சம்பந்தன் ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு கூறினார் “சங்கரி நானும் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக ஏற்கவில்லை. ஆனால் அதை நான் சொல்லவில்லை. நீர் என்ன அநியாயாத்துக்கு அப்படி சொல்கிறீர் என்று. அதற்கு எனது பதில் நானும் கூறாவிட்டால் அப்போ யார் இதை கூறுவார்கள் என்றேன். விடுதலைப்புலிகள் என்மீது வெறுப்படைய செய்ய திட்டமிட்ட இச்சதியும் வெற்றிகரமாக முடிந்தது. ஒளிவு மறைவின்றி உண்மையை பேசியமையால் நான் துரோகியா?
1986ம் ஆண்டு ஓர் சந்தர்ப்பத்தில் இந்திய அரசின் ஏற்பாட்டில் பதவி துறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தியாவில் தங்கியிருந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த வந்தபோது இரு சாராருக்குமிடையிலான பேச்சுவார்த்தை பல நாட்கள் நடந்தன. ஒருவேளை தவறாமல் தினமும் ஒவ்வொரு சந்திப்பிலும் கலந்து கொண்டவன் நான். பேச்சுவார்;த்தையில் கலந்துகொள்ளாவிட்டாலும் கூட என் பங்களிப்பு பற்றி திரு.இரா.சம்பந்தன் குறிப்பிட்டமை அவசியமற்றதும், விஷமத்தனமானதுமாகும். 06.02.2008 தேதி தனது பாராளுமன்ற உரையில் இச்சம்பவம் பற்றி குறிப்பிடுகையில் அரசு பக்கத்தால் கலந்து கொண்டோர் பெயர்களை கூறிவிட்டு த.வி.கூ சார்பில் கலந்து கொண்டவர்கள் திருவாளர்கள் அ. அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம், வெ. யோகேஸ்வரன் இடைக்கிடை திரு.ஆனந்தசங்கரி நான் என விஷமத்தனமாக கூறி ஒழுங்காக பங்கு கொண்ட என்னை “இடைக்கிடை” கலந்து கொண்டதாக குறிப்பிட்டு ஒரு அணிக்கு தலைமை தாங்கும் தகுதி தனக்கில்லை என வெளிப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் தான் எப்படி நடந்து கொண்டார் பின்பு அப் பேச்சுவார்த்தைக்கு என்ன நடந்தது என்ற சுவையான நிகழ்வை அவரிடம் கேட்டறிந்து கொள்ளலாம். மற்றவர்களை மட்டம்தட்டி தன்னை மிகைப்படுத்தி பேசுவது திரு.இரா.சம்பந்தனுடன் கூடப்பிறந்த குணமாகும்.
திரு.இரா.சம்பந்தன் அவர்கள் தற்போது தலைமை தாங்குவது திரு.சேனாதிராசா அவர்களால் முறைதவறி புத்துயிரளிக்கப்பட்ட தமிழரசு கட்சியே அன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல. ஸ்தாபகராகிய தந்தை செல்வாவின் கட்டளைக்கு விரோதமாகவும் கட்சி முக்கியஸ்தர்களின் அனுசரணை இன்றியும் அப் பெயரை துஷ்பிரயோகம் செய்து மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என திரு சம்பந்தன் குழுவினர் நினைத்தால் அது வெறும் பகற் கனவாகும். தன் சிந்தனையிலேயே தெளிவில்லாமல் திரு. சம்பந்தன் செயற்படுகின்றார். அதற்கு சில பத்திரிகைகள் அவருக்கு முண்டு கொடுக்கின்றன. அவை பத்திரிகா தர்மத்தை மீறி செயற்படுவதால் நான் எதையும் இழந்து விடவில்லையென கூறமாட்டேன் ஏனெனில் 2004, 2010ல் நடந்த தேர்தல்களில் பத்திரிகைளின் அநீதியான பிரச்சாரத்தினால் தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது தான் உண்மை. தம் புனிதமான கடமையை உணராது செயற்படும் பத்திரிகை மக்களுக்கு செய்வது பெரிய துரோகமாகும். பத்திரிகைகள் தம் இஷ்டம்போல் பத்திரிகை தர்மத்தை மீறி சிலரை தூக்கி வைப்பதும் சிலரை போட்டு மிதிப்பதும் மக்களுக்கு செய்யும் பெரும் அநீதியாகும். தலைவர்களை தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கே. அரசுக்கும் இல்லை. பத்திரிகைகளுக்கும் இல்லை. பத்திரிகைகள் நடுநிலை வகிப்பதே உத்தமமான செயலாகும். தம் சுயநல போக்கால் கண்ணியமான தலைவர்களை உருவாகாது தடுப்பதும்,அழிப்பதும் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமே. அவர்களின் முதற்கடமை மக்களின் நலன் பேணுவதே.
சகிப்புத் தன்மையையும் அகிம்சையையும் முன்னெடுக்க ஐ.நாவின் கிளை ஸ்தாபனமாகிய யுனெஸ்கோ ஸ்தாபனம் மகாத்மா காந்தியின் 125வது பிறந்த தினத்தில் மதன்ஜித் சிங் என்பவரின் பேரால் உருவாக்கப்பட்ட விருது 2006ம் ஆண்டு நவம்பர் 16 இல் எனக்கு பாரிஸ் நகரில் 1000 மக்களுக்கு மேல் பிரசன்னமாயிருந்த சபையில் ஒரு கோடி ரூபா காசோலையோடு விருதும் வழங்கப்பட்டது. இது நம் நாட்டுக்கும் குறிப்பாக எம் இனத்துக்கும் கிடைத்த பெருமையாகும். அந்த விருது பலமக்கள் முன் பிரான்ஸ் நகரில் பெற்ற என்னை என் தாய்நாட்டில் 20 தமிழர்கள்தன்னும் கூடி வாழ்த்த முடியவில்லை. அவ்விருதுகூட நான் செல்வாக்கை பாவித்து பெற்றதாக சொந்த நாட்டில் பேராசிரியராக இருந்த ஒருவர் ஒரு பத்திரிகையில் விமர்சித்திருந்தார். இக் கண்டனம் காந்திஜீ அவர்களையே அவமதிக்கும் செயலென அந்த பேராசிரியருக்கும் அப் பத்திரிகை நிறுவனத்துக்கும் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 நபர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்த மிக கண்ணியமிக்க ஒரு குழுவினரால் ஐவர் தெரிவு செய்யப்பட்டு பின் அதில் நான் தெரிவுசெய்யப்பட்டு எனக்கு வழங்கப்பட்ட விருதாகும். விருது கிடைக்கும்வரை இது பற்றிய செய்தி எதுவும் எனக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விருது கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டேன் என்பதற்காக வழங்கப்படவில்லை. நாட்டில் நடைபெறும் அடாவடித்தனங்கள், கொலைகள், போன்ற வன்முறைகளை எனது உயிருக்கு ஏற்பட்டிருந்த ஆபத்துக்கு அஞ்சாமல் கண்டித்தமைக்கு கிடைத்த விருதாகும். எனது உயிருக்கு எத்தகைய அச்சுறுத்தல் இருந்ததென்பதை அனைவரும் அறிவர்.
அதுமட்டுமல்ல 2004ம் ஆண்டு தேர்தலை யாழப்பாணத்தில் யார் நடத்தினார்கள்? எப்படி நடத்தினார்கள்? என்பதை உலகறியும். என் சொந்த வாக்கையே நான் போடமுடியவில்லை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு 90 வீத ஆதரவை பெற்றமை பெரும் மோசடி மூலம் என்பதை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பகிரங்கப்படுத்தி இருந்தனர். அதுபற்றி விமர்சிக்காமல் ஏதோவொரு நாடு பல கோடி ரூபா எனது தேர்தலுக்கு செலவு செய்தும் நான் படுதோல்வி அடைந்ததாகவும் ஒரு பத்திரிகை எழுதியது. நான் கேட்டு வெற்றி பெற்ற பல தேர்தல்களுக்கு ஒரு சதமேனும் பணம் செலவிட்டதில்லை. மக்களே அவற்றை கவனித்துக் கொண்டனர். இப்போது கூட தேவைக்கு மேல் நான் செலவு செய்வதில்லை. இத்தகைய வேதனை தரும் திட்டமிட்ட செயல்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் தளம்பாத அரசியல் செய்த என்னை வன்முறையால் ஓர் இயக்கம் தோற்கடித்தமை நாட்டைப்பொறுத்தவரை ஓர் துன்பமான செயலாகும். இவ்வாறான செயல்கள் அத்தனையையும் எவ்வாறுதான் ஒரு சாதாரண மனிதனால் தாங்கிக்கொள்ள முடியும்?.
தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பற்றி விமர்சிக்கும் எவரும் தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்டு அவர் காலத்திலேயே அவராலேயே செயலிழக்கப்பட்ட கட்சி தமிழரசுக்கட்சி எவ்வாறு புத்துயிர் பெற்றது? யாரால் ஏன் புத்துயிர் கொடுக்கப்பட்டதென இன்றுவரை யாராலும் கேட்கப்படவில்லை. தந்தை செல்வா, தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், அமரர்கள் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகியோரின் பூதவுடல்கள் உதயசூரியன் கொடியினால்தான் போர்த்து எடுக்கப்பட்டன. அப்படியிருந்தும் தமிழரசுக்கட்சி நல்ல நோக்குடன் மீள் இயங்க வைக்கப்படவில்லை என்பதை நியாயமாக செயற்படும் தந்தை செல்வாவில் நல்ல மதிப்பு வைத்திருக்கும் எவரும் ஏற்றுக்கொள்வர். எதற்கெடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் குற்றம் சுமத்துவது என் மீதே. பல்வேறு குற்றங்கள் புரிந்த மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களாக கணிக்கப்படும்போது ஒரு குற்றமும் செய்யாத நான் மட்டும் துரோகியா. தந்தை செல்வா உருவாக்கிய கட்சிதான் அவர் அனைவரையும் ஒற்றுமையாக்க உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தந்தை செல்வாவில் உண்மையான விசுவாசமுள்ளவர்கள் ஆதரிக்க வேண்டியது தமிழர் விடுதலைக் கூட்டணியே அன்றி தமிழரசுக்கட்சியல்ல. ஒரு தனிநபர் தன் நலனை மட்டும் கருதி தமிழரசுக்கட்சிக்கு புத்துயிர் கொடுத்ததால் மற்றும் சிலர் ஒதுங்க இடமின்றி தமிழரசுக்கட்சியின் சின்னமாகிய வீட்டுக்காக மட்டுமே அதனுடன் இணைந்து கொண்டனர். நானும் ஒருவனாக இருந்து தந்தையினால் உருவாக்கப்பட்ட கட்சியை பல இலட்சம் ரூபா செலவில் கட்டிக்காத்து வருகின்றேன். யுனெஸ்கோ நிறுவனத்தினால் வழங்கப்பட்ட விருது மூலம் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை இதற்காகவே செலவிட்டேன். என் கடைசி காலத்திலும் ஓர் இலட்சியத்துக்காகவே அன்றி சுயநலன் கருதி இதை செய்யவில்லை. தலைவர் அமிர் கொலை செய்யப்பட்டதும் அவர் வகித்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை திரு சேனாதிராஜாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? அவர்தான் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் வாரிசா? அன்று அப்பதவியினை திரு. இரா சம்பந்தன் உட்பட பலரும் விரும்பினர்.
77 வயதுவரை ஒருவராலும் அவமதிக்கப்படாதவன் இன்று சில சுயநலமிகளின் சுயநல சதியாலும் பொய் பிரச்சாரங்களினாலும் பெரும் வேதனை அடைந்துள்ளேன். அம்பாறை, மட்டக்களப்பு மக்கள் என்னை பற்றிய உண்மைகளை அறிந்திராமையால்தான் புதிதாக உருவாக்கப்பட்ட தலைவர்கள், சில வேட்பாளர்கள் உட்பட அரசு என்னிடம் பெருந்தொகை பணத்தைக் கொடுத்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் அள்ளி இறைத்ததாக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். ஆண்டவன் அவர்களின் அறியாமையை மன்னிக்கட்டும். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை தம்பிமார்க்கு ஒன்று சொல்வேன் உணர்ந்து கொள்ளட்டும். பொய்யும், புரட்டும் என்னவென்று எனக்குத் தெரியாது. பசித்தாலும் புல்லுத் தின்னாத புலிபோன்ற ஒருவன் நான். அம்பாறை செயற்குழு உறுப்பினர் சிலருக்கு அன்றொருநாள் நான் ஓர் வாக்குறுதியை கொடுத்து அதை நிறைவேற்றிய என் செயலை அன்று கண்ட திரு. இரா சம்பந்தன், திரு. ஜோசப் பரராஜசிங்கம், திரு.செல்வராசா, திரு. துரைரட்ணசிங்கம் ஆகியோரே ஆச்சரியம் அடைந்தனர். திரு. மாவை சேனாதிராசாவை இரண்டாவது தடவையாக தேசிய பட்டியலில் இணைத்து மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களை கவனிக்குமாறு அனுப்பி வைத்த கட்சியின் தலைமை பதவியை வகிக்க சகல விதத்திலும் தகுதியானவன் என்பதை நிரூபித்த கட்சியின் தலைவன் நான். இந்த உண்மைகள் புத்திஜீவிகள், பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்களுக்கும் தெரியாமல் போனது வேதனையே. உரிமையுடன் நான் எடுத்திருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஒரே நபருக்கு இரண்டாவது தடவையாக கிடைக்கச் செய்தமைகூட என் துரோகச் செயலா?
இன்று கூட காலம் கடந்துவிடவில்லை. நான் செய்த குற்றங்களை தமிழரசுக் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து நம் மக்களை கூறுபோட்டவர்கள் பட்டியலிட்டு காட்டட்டும். எவரேனும் விசாரித்து தீர்ப்பு வழங்கட்டும். திரு. சம்பந்தன் போன்றோருக்கு மனசாட்சி இருந்தால் இப்படியொரு ஒழுங்கை செய்திருக்க வேண்டும். நான் குற்றவாளியாக காணப்பட்டால் கட்சியை விட்டு விலக பின்னிற்கமாட்டேன். அதை விடுத்து இழந்த சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கி அப்பாவி மக்களை குழப்பியடித்து பெரும் சாதனை புரிந்ததாக உலகுக்கு காட்ட வேண்டாம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் வெறும்
9 வீதம் மட்டுமே அன்றி அது மக்கள் கொடுத்த ஆணையல்ல. சில பத்திரிகைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்க முன்வரலாம். அவர்களை நான் மன்றாட்டமாக வேண்டுவது தயவு செய்து என்மீதுள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்து அப்பாவி மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தம் தலைவர்களை தமிழ் மக்கள் சுயமாக தேர்ந்தெடுக்க வழிவிடுங்கள். அதுவே மனித நீதியும் பத்திரிகை தர்மமும் ஆகும். அரசும் இதையே பின்பற்ற வேண்டும்.
சுயமாக சிந்திக்காமலும் மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை உதாசீனம் செய்தும், விடுதலைப் புலிகள் கூறும் எல்லாவற்றிற்கும் ஆமாம் சாமி போட்டமையால். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தார்மீக கடமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துவிட்டது என்பது மட்டுமல்ல. மீண்டும் தேசியம் சுயநிர்ணய உரிமை போன்ற சுலோகங்களுடன் தேர்தலில் போட்டியிட்டது மக்களுக்கு செய்த பெரும் துரோகமாகும். வன்னி மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு இழப்புக்கள் சொல்லில் அடங்கா. கிளிநொச்சி பறிபோனவுடன் விடுதலைப்புலிகளை கேட்டேன், தயவு செய்து ஓர் உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினைக்குத் தீர்வு காணுங்களென்று. அரசை மன்றாடி கேட்டேன், அரசு யுத்தத்தை வென்று விட்டது இனி தொடரும் போரில் ஒரு அப்பாவி உயிர்தன்னும் வீணாக அழிக்கப்படக்கூடாதென்று. தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கேட்டேன் உலகநாடுகளும் அவற்றிலுள்ள பல்வேறு அமைப்புக்களும் மனித கேடயமாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுமாறு கேட்டுள்ளனர். அதேபோல் விடுதலைப்புலிகளை கேளுங்கள் அல்லது உங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என்று. யாரும் என் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை. அதன் விளைவு என்னவாயிற்று? இவர்கள் தம் பதவிகளை இராஜினாமா செய்வதாகவேனும் கூறி விடுதலைப்புலிகளை மிரட்டி இதை சாதித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பத்திரிகைகளேனும் இவர்களை கேட்கவில்லை. கேட்ட நான்தான் துரோகியா? இவர்கள் இதை செய்திருந்தால் வன்னி மக்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் அவர்களின் சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
யுத்தத்தின் கடைசி கட்டத்தில் போரை இந்தியத் தேர்தல் முடிவு வரும்வரை சிலகாலம் நீடிக்கவென பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெறாத போராளி சிறுவர்கள் பலிகொடுக்கப் பட்டனர். காயப்பட்ட போராளிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். சரணடைந்து இன்று அரச பாதுகாப்பில் இருப்பவர்கள் மத்தியிலுள்ள 11000 இற்கு மேற்பட்ட போராளிகளில் ஒரு கால் துண்டிக்கப்பட்டவர்கள் 686 பேரும் இரு கால்களையும் இழந்தவர்கள் 05 பேரும், ஒரு கை இல்லாதவர்கள் 367 பேரும், இரு கைகளும் இல்லாதவர்கள் 17 பேரும், கண் பார்வை இழந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் என பலர் முகாமில் இருப்பின் இப்படியான நிலையில் உயிரிழந்தவர்கள் எத்தனை ஆயிரமாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கிழக்கு மாகாண போரில் 22000 இளைஞர்களும், யுவதிகளும், வன்னியின் இறுதிப் போரில் எத்தனை ஆயிரம் இளைஞர்களும், யுவதிகளும்? பலிகொள்ளப்பட்டார்கள்? நம் மக்கள் இந்நிலையில் வாடி வதங்கும் போது பாராளுமன்ற பதவி அவசியமா? என்னைப் பொறுத்தவரையில் நான் 17 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறேன். நம் நாட்டு பெரும் அரசியல் தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளேன். வயதும் 77ஐ தாண்டி விட்டது. இத்தேர்தலில் நான் வெல்ல வேண்டுமென ஆசைப்படவில்லை என்றும், ஓர் கடமையாக உணர்ந்தே போட்டியிடுகின்றேன் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக சத்தியம்கூட பண்ணியுள்ளேன். 1994ம் ஆண்டு ஓர் கட்சிக்கு 09 ஸ்தானங்கள் கொடுத்த நீங்கள் 2004ம் ஆண்டு 22 ஆசனங்களை த.தே.கூ. கொடுத்தீர்கள். எனது கட்சிக்கு ஒருசந்தர்ப்பம் 6 மாத காலத்துக்கேனும் தந்து பாருங்கள் என்று வருந்தி கேட்டேன். நீங்கள் ஒரு ஆசனமும் கொடுக்காது என்னை ஒதுக்கி விட்டீர்கள்.
நான் ஒற்றுமைக்கு மாறானவன் அல்ல. 2001ம் ஆண்டு ஒரு சில தமிழ்ப் பெரியார்களின் வேண்டுதலுக்கு அமைய தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் அமைக்கப்பட்டு அவ் வருடம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை என்மீது எதுவித காரணமும் இன்றி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஒற்றுமையை சிதைத்த திருவாளர்கள் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோருக்கு இந்த ஒற்றுமை ஞானம் அப்போ எங்கே போய் மறைந்தது. இத்தகைய செயற்பாடுகளினால் ஏற்கனவே ஒன்றுபட்டிருந்த தமிழ் இனத்திற்குள் வேற்றுமையை வளர்த்த அதே தலைவர்கள் இன்று மீண்டும் ஒற்றுமை பற்றிப் பேசுவது விந்தையே. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தாம் செய்ய வேண்டிய கடமையை செய்யாது ஆறு ஆண்டுகளை வீணடித்து விட்டு மக்கள் மத்தியில் எந்த முகத்துடன் வருகிறார்கள் என்று பார்த்தால் 09 வீதம் மக்கள்தான் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். மீதிப்பேர் ஏன் வாக்களிக்கவில்லை? இதற்கு அவர்கள் தரும் பதில்தான் என்ன? எல்லா கட்சிகளையும் ஒன்றிணைக்கவே தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை செயலிழக்க செய்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார். தமிழரசு கட்சி ஏன் புத்துயிர் பெற்றது என மக்கள் அறிய விரும்புகின்றனர்.
என் சேவையை தர முன்வந்தேன். மக்கள் ஆணை தரவில்லை என்பதிலும் பார்க்க நம் மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டு வறுமையையும், படும் கஷ்டங்களையும் தீர்ப்பதாக உறுதியளித்து பணமும் பொருளும் கொடுத்து மக்களை வாங்கிவிட்டார்கள். என் தோல்வி எனக்கு ஏற்பட்ட தோல்வியல்ல. மக்களின் ஏழ்மைதான் விலைபோனது. சொல்லொணா துன்பத்தை அனுபவிக்கும் எம் மக்களுக்காக மௌனமாக அழுவதே அன்றி எனக்கு வேறு வழி தெரியவில்லை. அன்றும் நம் மக்களை அழிவுக்கு கொண்டு சென்றுவிட்டு மீண்டும் அதே நிலைமைக்கு கொண்டு செல்வது அப்பாவி மக்களுக்கு செய்யப்படும் படுபாதகச் செயலாகும். என்னைப்பற்றி எவராலும் என்ன சொல்ல முடியும். அரச பணத்தை வாங்கி இறைக்கிறார் என்ற பொய்யை மட்டும்தான் திரும்பத் திரும்ப கூற முடியும். ஆனால் இது பணத்துக்காகவும் பதவிக்காகவும் விலைபோகும் ஜீவன் அல்ல என்ற நிலைப்பாடு இன்றல்ல என் உயிர் உள்ளவரை நீடிக்கும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களால் 08-04-2010 இல் நடந்தேறிய பொதுத்தேர்தல் சம்பந்தமான அறிக்கை

வீ. ஆனந்தசங்கரி 57ஃ48, ஸ்டான்லி வீதி
தலைவர்- த.வி.கூ யாழ்ப்பாணம்
10-05-2010