ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு

26.10.2005
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களின் வேண்டுகோள்

இந் நாட்டினதும் அதில் வாழும் பல்வேறு இன மக்களினதும் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் ஓர் மிக முக்கியமான தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பில் பேசுவதற்கு பாராளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ முறையான யாரும் இல்லாத இச்சந்தர்ப்பத்தில் அம் மக்கள் சார்பில் பேச வேண்டிய தார்மீக கடமை எனக்குண்டு. வடக்கு கிழக்கு மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் சுயமாக இயங்குவதற்கு தகுதியற்று விடுதலைப் புலிகளின் பினாமிகளாகச் செயற்படுகின்றனர். ஏனையோர் துப்பாக்கியின் பயம் காரணமாக அமைதியாக இருக்கின்றனர்.

வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் 2002 ம் ஆண்டு மார்கழி 5ம் திகதி நடைபெற்ற தேர்தலே நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்ற கடைசித் தேர்தலாகும். அத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தெரிவான ஒன்பது உறுப்பினர்களில் 36,000 மேலாக வாக்குகளைப் பெற்று முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவன் நான் என்பதால் எம் மக்கள் சார்பில் பேசும் உரிமை யாராலும் பிரச்சினைக்குட்படுத்தக்கூடியதல்ல.

இனப் பிரச்சினையை தேர்தல் பிரச்சாரத்துக்குட்படுத்த வேண்டாமென இதற்கு முதல் இரு முக்கிய ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களையும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை உள்ளுர் பத்திரிகைகளும் பிரசுரித்திருந்தன. அப்பிரச்சினை மிக அவசரமானதும் முக்கியமானதும் மட்டுமன்றி மிக உணர்வூட்டக்கூடியதுமான பிரச்சினையானதால் அது தனிமைப்படுத்தி பேச வேண்டிய பிரச்சினையாகும். தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் போது இப் பிரச்சினை முடிந்து போன இனவாதத்தை தூண்டக்கூடிய ஒன்றாக மாறலாம் எனவும் எச்சரித்திருந்தேன். தம்மை ஆதரிக்கும் கட்சிகளுடன் ஆலோசித்து இனப்பிரச்சினை தீர்வில் ஓர் பொது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்பே எடுத்து தேர்தல் முடிந்தபின் வெற்றி பெற்றவர் ஏனையோரின் ஒத்துழைப்பைப் பெற்று தீர்வை நோக்கி முன்னெடுக்க வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் கேட்டிருந்தேன்.

இத்திட்டத்தில் நன்மையாதெனில் இவ் ஆலோசனையை ஏற்று போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கூட்டாக பெறும் வாக்குகளை மக்கள் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தும் மக்கள் ஆணையாக கொள்ளலாம். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நான் வைத்திருக்கும் தீர்வானது பல்வேறு அரசியற் கட்சி தலைவர்களுடனும், வணக்கத்துக்குரிய மகாநாயக்கா தேரர்களுடனும, மூத்த அரசியல் தலைவர்களுடனும், பல்வேறு சமய தலைவர்களுடனும் பேசியுள்ளேன். என் நிலைப்பாட்டை அதி வணக்கத்துக்குரிய ஆண்டகைகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.

இன்று வாழும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களுள் நானும் ஒருவன் என்ற முறையில் இப்பிரச்சினை சம்பந்தமாக பேசும் அதிகாரமுடையவனாவேன். 1956ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்புதான் நம் பிரச்சினை சூடு பிடித்தது. இப் பிரச்சினையை பண்டா-செல்வா ஒப்பந்தம் மூலம் அன்றே தீர்த்திருக்க முடியும். அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பின் டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தீர்த்திருக்க முடியும்.

இரு ஒப்பந்தங்களும் குழப்பப்பட்டன. இதற்கு நான் எந்தக் கட்சியையும் குறைகூறவில்லை. ஆனால் உண்மை எதுவெனில் இப் பிரச்சினைக்கு தேர்தல் முடிந்தபின் தீர்வு காண்பதென்பது யாராலும் முடியாத காரியமாகும். பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் , 1996 இல் முன் வைக்கப்பட்ட அரசியல் சாசன நகல் முதலியவைகளுக்கு என்ன நடந்தது என்ற சரித்திரத்தை நன்கு அறிந்தவன் என்பதால் எதுவித தயக்கமின்றி இவ்வ்pரு பிரதான வேட்பாளர்களும் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக அறிவித்துள்ள வாக்குறுதிகள் என்றும் நிறைவேற்ற முடியாதென அடித்துக் கூற முடியும்.

எமது இனப்பிரச்சினைத் தீர்விற்கு சமஷ்டி முறையே சிறந்தது என நாடு பூராகவும் பேசப்படுவதும், இத்தீர்வை தேர்தல் மூலம் மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளமையும் உற்சாகத்தை தருகின்றன. இத் தீவின் சரித்திரத்தில் ஒரு பிரதான அரசியற் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தேர்தலின் பின் சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறியுள்ளது. அதே நிலைப்பாட்டை சுதந்திரக்கட்சியும் எடுத்துள்ளது. இடதுசாரி கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்விற்கு சமஷ்டி முறையே சிறந்தது என ஏற்கனவே தீர்மானித்து விட்டன. சமஷ்டி முறை பற்றி ஜே.வி.பி உடன் நான் பல தடவை பேசியுள்ளேன். புலிகள் பிரிவினை கோரிக்கையை கைவிடும் பட்சத்தில் தாம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம் எனக் கூறியுள்ளனர். ஜாதிக ஹெல உருமயவுடன் நடத்தப்பட்ட பல சந்திப்புக்களில் இந்திய முறை போன்ற அதிகாரப் பரவல் சம்பந்தமாக பேசிக் கொண்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த இரு ஆண்டு காலமாக பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் இனப்பிரச்சினை தீர்விற்கு சமஷ்டி முறையே சிறந்தது எனப் பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்துரையாடல்களும், பயிற்சி வகுப்புக்களும் நடாத்தி வருகின்றன. பிரதம அமைச்சராவதற்கு முன்பே ளு.று.சு.னு பண்டாரநாயக்கா அவர்கள் நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினையை முன் கூட்டியே உணர்ந்து சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்த வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார். காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா கூட எமது பிரச்சினைத் தீர்விற்கு சமஷ்டி முறையை சிபாரிசு செய்திருந்தார். துரதிஷ்டவசமாக காலம் கடந்து, இளைப்பாரிய பின்பே இக்கருத்தை வெளியிட்டார். சமஷ்டி ஆட்சி முறையில் மிகப் பெரும் அனுபவம் பெற்று இருந்த கனடா நாட்டின் ஒன்றாரியோ பிரதமர் பொப் றே (டீழடி சுயந) கூட இனப்பிரச்சினைத் தீர்விற்கு சமஷ்டி முறையே சிறந்தது என பல தடவைகள் கூறியுள்ளார். பெயர் குறிப்பிடாமல் கூறின் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் அவ்வாறே கூறியுள்ளனர். பல்வேறு தலைவர்கள் சமயப் பெரியார்கள் காட்டிய உற்சாகமே இனப்பிரச்சினை தீர்விற்கு சமஷ்டி முறையே சிறந்தது என என்னை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது.

சமஷ்டி முறை நாட்டுப் பிரிவினைக்கு வழிகோலும் என்ற கருத்து ஆதாரமற்றதாகும். முதலாவதாக தனியரசு அமைப்பது என்பது நிறைவேறக்கூடியதல்ல. இரண்டாவதாக சர்வதேச சமூகம் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே எதுவித தீர்வும் ஏற்பட வேண்டும் என்றும், பிரிவினையை ஆதரிக்கப் போவதில்லை எனவும் பல தடவை வெளிப்படையாகக் கூறியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாட்டில் இத்தகைய ஓர் பிரச்சினை ஏற்பட்ட போது இந்திய அரசு வெற்றிகரமாக அப்பிரச்சினையை தீர்த்தது. இப்போது எவரேனும் பிரிவினையை பற்றி பேசுவதில்லை. இன்று சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் திருப்தியோடு வாழ்ந்து வருகின்றனர்.

சமஷ்டி முறையால் நாடு பிளவுபடும் என்ற பயம் கொள்வோர் இந்தியாவின் நிலைப்பாட்டில் திருப்தி அடைந்து அதை ஓர் உத்தரவாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பயம் ஏற்படின் இந்திய ஆட்சி முறைக்கு ஒத்த அதிகார பரவல் வழங்குவதை மாற்றுத் திட்டமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வேறு புதிய திட்டங்களிலும் பார்க்க அத்தகைய திட்டம் எமது மக்களுக்கு ஏற்புடையதாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பிரயாணம் செய்யும் ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் இந்திய ஆட்சி முறையை நேரடியாக கண்டும் வருகின்றனர்.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு, அயல் நாடாகிய இந்தியாவாகும். அவர்களிடம் நாம் கற்க வேண்டிய விடயங்கள் உண்டு. மிகப்பெரிய அளவிலான இந்துக்களை கொண்ட நாடு ஒரு இஸ்லாமிய விஞ்ஞானியை ஜனாதிபதியாக நியமித்து பெருமை கொள்கின்றது. அந் நாட்டின் இரண்டு வீத மக்களை கொண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பெரிதும் மதிப்போடு இருக்கும் பிரதம மந்திரியாவார். தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் ஆகிய நாம் கூட இந்தியாவில் இருந்து வந்தவர்களே. எமது மொழிகள் கலாச்சாரம் பிரதான இரண்டு சமயங்களும் இந்தியாவை சேர்ந்தவை.

இந்திய முறைப்படியான அதிகார பகிர்வின் மூலம் எமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு மிரட்டல்கள், அவமதிப்புக்களுக்கு மத்தியில் ஆதரவு தேடி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகின்றேன். இலங்கைக்கு உள்ளேயோ அன்றி வெளிநாட்டிலோ கடந்த இரண்டு ஆண்டு காலமாக எனது பிரேரணையை எவரும் எதிர்க்கவில்லை. இவ் ஆலோசனை சகல தமிழ், முஸ்லீம் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் பெரும்பான்மையான சிங்கள மக்களும் இவ் ஆலோசனைக்கு ஆதரவு கொடுப்பின் பிரச்சினைகுத் தீர்வு அதிக தூரத்தில் இல்லை. நான் ஒரு இந்திய முகவராக செயற்பட வில்லை. எம் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க போகிறோம் என்பது பற்றி இந்தியா அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

வட கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் சிங்கள மக்களே இந்த யுத்தத்தினால் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். இவர்களே நிரந்தர பயத்துடனும், பீதியுடனும், வாழ்கின்றனர். முறையற்ற கைதுகள், தடுத்து வைத்தல், பணம் பறித்தல், ஆட் கடத்தல்கள், சித்திரவதை, மிரட்டல், காணாமல் போதல், யுத்தத்திற்கு சிறுவர்களை சேர்த்தல் போன்றவை எதுவித தடையுமின்றி நடைபெற்று வருகின்றது. 20 ஆயிரத்துக்கும், 30 ஆயிரத்துக்கும் இடைப்பட்டவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்த ஏழை கிராமபுற சிங்கள , இஸ்லாமிய மக்களின் பிள்ளைகள் யுத்த முனையில் கொல்லப்பட்டமை உண்மையில் வேதனைக்குரியதும் ஈடு செய்ய முடியாத இழப்புமாகும். சில நிர்வாக சீர்கேடு காரணமாக அப்பாவி தமிழர்கள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். அதN;தாடு 18000 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் யுத்த முனையில் உயிரை பலி கொடுத்துள்ளனர். அவர்களில் அனேகர் கட்டாயத்தின் நிமிர்த்தம் சேர்க்கப்பட்ட சிறுவர்கள. எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். 60, 70 ஆயிரம் அப்பாவி பொது மக்களின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யுத்தத்திற்கு காரணமானவர்களே. பல ஆயிரக்கணக்கான விதவைகள், அநாதைகள் ஊனமுற்றோர் உருவாக்கப்பட்டுமுள்ளனர். இரத்த வெறி பிடித்தவர்களும், தம் கைகளை இரத்தத்தில் தோய்த்து எடுக்க விரும்புகிறவர்கள் மட்மே அன்றி மற்றவர்கள் யுத்தத்தை விரும்ப மாட்டார்கள். . ஒரு நாட்டுப் பற்றாளன் தமிழரோ, இஸ்லாமியரோ, சிங்களவரோ, எவரேனும் ஒருவர் அநாவசியமாக இறப்பதை விரும்ப மாட்டான்.

நாட்டில் வாழும் மூன்று பிரதான இனங்களை சுனாமி ஒன்று சேர்த்து வைத்தது இன, மத வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக ஆபத்தில் சிக்கியவரை காப்பாற்றியுள்ளனர். சிங்கள பெண்கள் உணவுப் பொட்டலங்களை தலையிலும், தோளிலும் சுமந்து சென்று வேறு இனத்தை சேர்ந்த அகதிகளுக்கு ஊணவூட்டியமையை அறிந்தும் இருக்கின்றோம். இச் செயல் எமது நாட்டின் பெருமை மிக்க பாரம்பரியமாகும். ஒரு சிங்களவரோ, தமிழரோ, முஸ்லீமோ இன்னொருவரின் வீழ்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைய மாட்டார். நாம் பௌத்தர்களாக, இந்துக்களாக ,இஸ்லாமியர்களாக இருந்த போதும் அம் மதங்கள் எல்லாம் ஒன்றையே போதிக்கின்றன. ஒரு சிலரைத் தவிர தமிழ், சிங்கள இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போல் வாழ விரும்புகின்றனர். வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் துன்பங்களை பலரும் அறிந்துள்ளனர். ஒவ்வொரு சிங்களவரும் தமிழர்களை மீட்டெடுக்க வேண்டிய கடமைப்பாடு தமக்கு உண்டா இல்லையா என்பதை தம்மைத்தானே கேட்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தம் நேசக்கரத்தை நீட்டி நல்லுறவை வளர்ப்பதன் மூலமே இதை சாதிக்க முடியும்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் சகோதரர்களுடைய

சுருக்கமாக இங்கே கூறப்பட்டுள்ள உள்ளத்தைத் தொடும் சோக சம்பவங்கள் நிச்சயமாக ஜே.வி.பி, ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சி உறுப்பினர்களின் உள்ளத்தை தொடும் என்று நான் நினைக்கின்றேன். பல சுற்றுப் பேச்சுவார்த்தை என்னோடு நடத்திய இவ்விரு கட்சிகளின் தலைமைகள் இனப்பிரச்சினை சம்பந்தமாக தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சி முறையை ஏற்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். இப்போதும் இவர்கள் இதற்கு சம்மதிக்காவிட்டால் இதற்கு மாற்றாக இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த அதிகாரப்பகிர்வை கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்ஃ உண்மையான யுத்த அகதிகளாகிய சிறுபான்மையினருக்கு நியாயமானதொரு தீர்வை முன்வைக்காது திருப்திபடுத்துவது கஷ்டமாக இருக்கும். எல்லோரும் ஒத்தபடி ஓர் நல்ல தீர்வை எடுப்பின் அதை விடுதலைப் புலிகளின் பரிசீலனைக்கு முன்வைத்து அவர்கள் விரும்பின் ஏதாவது மாற்றங்கள் எவையென் அறிந்து கொள்ளலாம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என யாரும் உண்மையில் விரும்பினால் சமஷ்டி ஆட்சி முறையை ஏற்று அல்லது இந்திய அரசியல் சாசனத்தின் அதிகாரப்பகிர்வை ஏற்று போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் ஓர் கனவான்கள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அக்டோபர் 2ம் திகதி இவ்விரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது போல் இப்பிரச்சினை தேர்தல் பிரச்சாரத்தில் உட்படுத்தாமல் ஒரு பொதுத் தீர்வாக இருவரும் முன் வைத்து போட்டியிட்டால் இவ்விருவரும் பெறும் வாக்குகள் மூலம் இத் தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த மக்களின் அங்கீகாரம் கிடைத்ததாக கருதலாம். எதிர்கட்சித் தலைவர் தேர்தல் முடிந்தபின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பேசி இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறுவதும், பிரதம அமைச்சர் தேர்தலின் பின் மூன்று மாதத்துக்குள் விடுதலைப் புலிகளின் தலைவருடன் பேசி தீர்ப்பதாக கூறுவதும் பகல் கனவே அன்றி என்றும் நடக்கக்கூடிய காரியமல்ல. புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் திரும்ப வரவேண்டிய நிலை ஏற்படும். திரும்பத் திரும்ப தேர்தல் காலத்தில் இப்படி நடப்பது வழமையாகி விட்டது.

என்றும் அடைய முடியாத தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு இந்திய அமைப்பை ஒத்த அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளை கேட்டுக்கொள்கிறேன். சமாதானம் வந்து எமது வீட்டுக் கதவை தட்டுகிறது. சமாதானத்தை வீட்டுக்குள் எடுப்பதா விரட்டியடிப்பதா எனத் தீர்மானிக்க வேண்டியது விடுதலைப் புலிகளே.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்தமிழர் விடுதலைக் கூட்டணி