புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு வேண்டுகோள்

Justify Fullபுலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு வேண்டுகோள்

கடந்த சில ஆண்டுகளாக பல பின்னடைவுகள் ஏற்பட்ட போதும் இனப்பிரச்சினை தீர்வுக்கு தற்போது உறுதியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொருத்தமானதும், அவசியமானதுமென நான் கருதும் சில விடயங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன் வைக்கிறேன்.

காலத்துக்குக் காலம் இந்திய அரசுகள் பிரிவினையை தாம் எதிர்ப்பதாகவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு ஏற்பட வேண்டும் எனக் கூறி வந்துள்ளன. இந் நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டில் பிரிவினைக்கோஷம் புத்துயிர் பெறக்கூடாது என்பதற்காகவே. ஒஸ்லோ, டோக்கியோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கை அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச சமூகம் பிரிவினையை எதிர்ப்பதோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளது.

தனி சிங்களச் சட்டம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 1956ம் ஆண்டு தொடக்கம் 50 வருடங்களாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நாடு பல தோல்விகளை தழுவியுள்ளது. பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், மாவட்ட அபிவிருத்திசபைச் சட்டம், இறுதியா மாகாணசபை ஆகிய அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தன. வடகிழக்கு மாகாணசபை அரச ஊழியர்களால் நிருவகிக்கப்பட்ட போதும் சகல அரச அதிகாரிகளும் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே செயற்படுகின்றனர். 2004 ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கூட விடுதலைப் புலிகளின் கண்காணிப்பிலேயே நடைபெற்றது. சில தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து வடகிழக்கில் மீண்டும் தேர்தலை நடத்த சிபாரிசு செய்துள்ளன. வட கிழக்கில் ஜனநாயகம் அற்றுபோன நிலையிலும் தெற்கே ஜனநாயகம் சிறப்பாக வளர்ந்துள்ளது. நாட்டை மாறி மாறி ஆண்டுவந்த ஐ.தே.க யும், ஸ்ரீ.ல.சு.க யும் இனப்பிரச்சினையின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதற்தடவையாக சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண இணக்கம் தெரிவித்துள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சமஷ்டி தீர்வை முன்வைத்து போட்டியிட்ட ஐ.தே.க வேட்பாளர் 49.7 வீத வாக்குகளை பெற்றுள்ளார். அத்தோடு ஸ்ரீ.ல.சு.க கடந்த வருடாந்த மாநாட்டில் சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண வேண்டுமென ஓர் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இத் தீர்மானத்துக்கு மாறாக ஸ்ரீ.ல.சு.க யின் ஜனாதிபதி வேட்பாளர் ஜே.வி.பியுடன் இத் தீர்மானத்துக்கு மாறான உடன்பாட்டை செய்து கொண்டார். எது எப்படியிருப்பினும் ஸ்ரீ.ல.சு.க அங்கத்தவர்கள், இடதுசாரியினரும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஆதரிக்கின்றனர். ஜே.வி.பி கூட மக்கள் ஓர் குறிப்பிட்ட தீர்வை ஏற்கும் பட்சத்தில் தாம் அதை எதிர்க்கப் போவதில்லை என அடிக்கடி கூறி வந்துள்ளனர். விடுதலைப் புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவார்களேயானால் அனைத்து கட்சிகளும் சமஷ்டி தீர்வுக்கு ஆதரவு வழங்குவர்.

நாடு சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன். பல அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பல்வேறு ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் இதுபற்றி நான் பேசியுள்ளேன். எவரிடமிருந்தும் எதுவித எதிர்ப்பும் வரவில்லை.

ஜே.வி.பி யினருக்கும், மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும் பல உயிரிழப்புக்கள், சொத்தழிவுகள், பல்வேறு துன்பங்கள் ஆகியவற்றை அனுபவித்ததன் பின் தமிழ் மக்கள் 50 ஆண்டுகாலமாக தீர்வு காண முடியாத ஒற்றையாட்சியின் கீழ் எதுவித தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உறுதியாக கூறியுள்ளேன். ஒரேயொரு மாற்றாக இந்தியா முறையிலானதொரு அரசியல் தீர்வு எமக்கு இரு காரணங்களுக்காக ஏற்புடையதாக இருக்கும். இந்திய அரசியல் சட்டம் சமஷ்டி என்றோ ஒற்றையாட்சி என்றோ கூறவில்லை. மற்றைய காரணம் நாட்டின் நிலைமை பற்றி சரியாக புரிந்து கொள்ளாத தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கின்ற சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு திருப்தியளிக்கின்ற என்பதாலேயே.

இந்திய முறையிலான தமது மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களிலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை இலங்கை மாநிலங்களுக்கு வழங்குமாறு அவர்கள் கேட்க முடியாதபடியால் இம்முறை அவர்களுக்கு திருப்தியளிக்கும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி