பத்திரிக்கைச்செய்தி

த.வி.கூ தலைவர் வீ. ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்-பத்மநாபா பொதுச்செயலாளர் தி. ஸ்ரீதரன் ஆகியோரின் இந்திய விஜயம் பற்றிய அறிக்கை

வன்முறை அதிகரிப்பு, இடப்பெயர்வுகள் மக்கள் படும் பல்வேறு துன்பங்கள் ஆகியவை வடக்கு கிழக்கு நிலைமையை படு மோசமடைய செய்துள்ளமையால் நாட்டு நிலைமை பற்றி இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட உயர் மட்ட அதிகாரிகளையும் சந்தி;த்து விளக்குவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நானும், புளொட் இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. த. சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-பத்மநாபா இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. தி. ஸ்ரீதரன் அவர்களும் அண்மையில் புதுடில்லி சென்று வந்தோம்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியாவிற்கு பிரதான பங்கு உண்டென்றும், இந்தியாவின் ஆலோசனையும், வழிநடத்தலுமின்றி தீர்வு ஏற்படாதென நாம் பூரணமாக நம்புகிறோம். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையிலும் இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள நாடு என்பதாலும் அவ்வாறு செயற்பட இந்தியாவுக்குக் கடமைப்பாடு உண்டு என்பதனாலேயே நாம் புதுடில்லி சென்றோம்.

அதிகாரப் பகிர்வு தொடக்கம் அதிகரித்துவரும் வன்முறை வரை பல்வேறு விடயங்கள் பற்றி பேசியிருந்தோம். நாம் எமது மக்களையும் ,எமது நாட்டையும் மிகவும் நேசிப்பதால் எமது நாட்டில் நடப்பவற்றை பாரபட்சமின்றி எடுத்துக்கூறி இந்தியா எவ்வகையில் எமக்கு உதவலாம் என்பதனையும் தெரிவித்தோம். தற்போது ஏற்பட்டுள்ள ஆயுத மோதல்களால் மூதூர், சம்பூர், ஈச்சிலம்பற்று உள்ளிட்ட பல கிராமங்களில் வாழும் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை விரிவாக விளக்கினோம். விடுதலைப் புலிகள் முன்யோசனையின்றி பொது மக்களுக்கான குடிநீரையும், அறுவடைக்கு நெருங்கிய நிலையில் உள்ள பெருமளவிலான நெற்பயிர்களுக்கு நீர் செல்வதை தடுக்கும் நோக்கோடும் சுலூஸ் கதவை மூடியதன் விளைவே மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு இராணுவத்தை தூண்டியது என அரசு கூறுகிறது. இச்செயலால் மூவின மக்களாகிய தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தோம்.

இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்கள் காரணமாக பல உயிரிழப்புக்களும், பலர்படுகாயங்களுக்குள்ளானதையும், சொத்தழிவுகள் ஏற்பட்;டதையும் பாரிய மக்கள் இடம்பெயர்வு நிகழ்ந்ததையும் மக்கள் சிதைந்து கிடந்த தங்கள் வீடுகளுக்கு திரும்ப காலதாமதம் ஏற்பட்;டதோடு போதிய உணவு, உறைவிடம், சுகாதார வசதிகள் ஆகியவையின்றி இன்றும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தோம்.

திருகோணமலையில் இருந்து தமிழ் நாட்டுக்கு தமிழ் அகதிகள் பெருமளவு செல்வதற்கு காரணமாக இருந்த சம்பவங்களை பாகுபாடின்றி விளக்கினோம். புதுவருடத்திற்கு முன்தினம் திருகோணமலை பொதுச்சந்தையில் வெடிக்க வைக்கப்பட்ட குண்டில் சில தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டமை, ஐந்து தமிழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களும், வங்கி ஊழியர் விக்னேஸ்வரன் கொல்லப்பட்டமை, கோமரங்கடவெலவில் ஆறு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டமையும், வெலிகந்தையில் 12 கட்டிட தொழிலாளர்கள் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் வெட்டிக் கொல்லப்பட்டமையும், வருடப் பிறப்புக்கு முதல் நாள் குண்டுவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரத்தில் தமிழர் கடைகள் 60, முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றும் எரிக்கப்பட்டு சில அப்பாவி தமிழர்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டமையும் ஆகிய சம்பவங்ளே திருமலை மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது. தமது உயிருக்கு உத்தரவாதம் தேடியும், தம் பிள்ளைகளை பலாத்காரமாக புலிகள் இணைத்துக் கொள்வதை தடுப்பதற்கும் , அவர்களுடைய கல்வியை தொடர்வதற்குமாகவே அவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர் என்பதையும் கூறியுள்ளோம்.

தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களிலும் உள்ள அகதிகளின் நலனுக்காக உழைக்கும் தந்தை செல்வநாயகம் அவர்களின் புதல்வராகிய எஸ்.சி. சந்திரகாசன் அவர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள பிள்ளைகள் எவருக்கும் பாடசாலை அனுமதி மறுக்கப்பட கூடாதெனவும், எந்தச் சிறுவனும் தெருவில் நிற்கக் கூடாதெனவும் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார் எனக் கூறியமை எமக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

வடக்கை பொறுத்தவரையில் ஏ9 பாதை மூடப்பட்டுள்ளமையால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தொடர்ந்தும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பும்படி அரசை வற்புறுத்தி வருகிறோம் எனவும் கூறியுள்ளோம். அத்துடன் இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்களை கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக ஏற்றுமதி செய்யக்கூடிய வழிவகைகள் பற்றி ஆராயுமாறும் கேட்டுக்கொண்டோம்.

முக்கியமாக பல்வேறு சந்திப்புக்களிலும் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக பேசி சிலர் கூறுவது போல் அல்லாமல் இனப்பிரச்சினை தொடங்கி 50 ஆண்டுகளில் முதற் தடவையாக மாறி மாறி ஆட்சிபீடம் ஏறும் பிரதான கட்சிகள் சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இசைந்துள்ளதையும், ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க கட்சி வேட்பாளர் சமஷ்டி தீர்வை முன்வைத்து போட்டியிட்டதையும், ஸ்ரீ.ல.சு.க சமஷ்டி அடிப்படையிலான தீர்வை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நடைபெற்ற தனது கட்சி மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியதையும் எடுத்துரைத்தோம். சிலர் சமஷ்டி முறையை எதிர்ப்பதாலும், இன்னும் சிலர் ஒற்றையாட்சி முறையை எதிர்ப்பதாலும் இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே பொருத்தமானதென எமது கூற்றை பெருமளவு மக்கள் ஏற்கின்றார்கள் என்பதையும், வேறு எத்தகைய தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதனையும் கூறியுள்ளோம். இலங்கை சம்பவங்கள் பற்றிய செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு தமிழ் நாட்டில் வெளியிடப்படுவதையும் சுட்டிக்காட்டி, வற்புறுத்தி கொண்டு செல்லப்பட்ட அநாதைகள் விடுதியில் இறந்த அப்பாவிகள் 55 பேரில் 51 பேர் ஒரே வயதொத்த மேல் வகுப்பில் படிக்கின்ற பாடசாலை மாணவிகள். ஏனையவர் ஊழியர்கள். அநாதை விடுதியில் கல்வி பயில்கின்ற மாணவிகள் அல்ல என்பதையும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அடிமைகள் போல் வாழ்பவர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

சுனாமி ஏற்பட்டபோது எம் மக்களுக்கு இந்திய அரசு பெருமளவில் உதவியதையும், அவ்வேளையில் தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கு கொடுக்கப்படும் ஆதரவுக்கும், அனுசரணைக்கும் குறிப்பாக தமிழக அரசுக்கும் நன்றி கூறி திரும்பினோம்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ