எனது அன்புக்குரிய சமதானத்தை விரும்பும் தேசாபிமானங்கொண்ட இலங்கை குடிமக்களே,

25.06.2007

எனது அன்புக்குரிய சமதானத்தை விரும்பும் தேசாபிமானங்கொண்ட இலங்கை குடிமக்களே,

நான் என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை என நினைக்கின்றேன். 74 வயதுடைய நான் 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபாடுகொண்டுள்ளேன். எனது நாட்டையும் அதன் மக்களையும் மிகவும் நேசிப்பதோடு இலங்கைக்கு சமாதானத்தை கொண்டுவர தீவிரமாக உழைத்து வருகின்றேன். பொறுமையையும் அஹிம்சையையும் முன்னெடுப்பதற்காக யுனெஸ்கோவின் 2006 ஆம் ஆண்டுக்கான மதன்ஜித் சிங் விருது எனக்கே கிடைத்தது. கடந்த 4 ஆண்டு காலமாக எமது நாட்டுக்கு சமாதானத்தை மீளக் கொண்டுவர சிறந்த வழி எது என மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். அம்முயற்சியில் பல்வேறு ஸ்தாபனங்கள் பல்வேறு அரசுத் தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், மாட்சிமை தங்கிய இலங்கை ஜனாதிபதி, பல்வேறு சமயப் பெரியார்கள் ஆகியோரோடும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பல பிரமுகர்களுடனும் பேசியும் அவர்களுக்கு எழுதியும் உள்ளேன். இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு குறித்து மிகவும் உபயோகமான நீண்ட பேச்சுவார்த்தைகளை பல்வேறு அரசியற் கட்சித் தலைவர்களுடன் நடாத்தியுமுள்ளேன். எனது முயற்சியில் முழு வெற்றி காணாமையால் வேறும் பலரை உள்வாங்கி நியாயமான ஓர் தீர்வை படித்து, தெளிவுபெற்று, அரசியல் இலாபம் தேடாது, ஆதரிக்குமாறு வேண்டுகின்றேன்.

முன்பு சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கை சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலாயர்கள், பறங்கியர்கள் மற்றும் பிற சமூகத்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டாது ஒருவரை ஒருவர் நேசித்தும், மதித்தும், சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்ந்தனர். இன்று எமது நாட்டில் நடக்கின்ற கொடூர செயல்களை கண்டும் கேட்டும் வரும் இளம் தலைமுறையினர் எனது கூற்றை நம்பமாட்டார்கள். உண்மையில் நாங்கள் எமது நாட்டை பற்றி பெருமைகொண்டிருந்தோம். எங்களுக்குள்ளே விரோதமோ பொறாமையோ இருக்கவில்லை. அண்மைக்காலமாக பல்வேறு சமூகங்களுக்கிடையில் வெறுப்பையும் வேற்றுமையையும் வளர்க்கின்ற புதிய போக்கை அவதானித்த நாம் கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோம், இழந்த பெருமையை எப்படி மீளப்பெற வேண்டும் என்பது பற்றி இன்றைய தலைமுறைக்கு கூறவேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு என்பதை உணர்ந்தேன். எந்த நாட்டில் அமைதியாக வாழ்ந்தோமோ அங்கே தினமும் மரணங்களும், அழிவுகளும் இடம்பெறுகின்றன. ஒருநாள் தவறாது அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் தலையில்லா முண்டங்கள், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சடலங்கள் வீதி ஓரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் சில வேளைகளில் அழுகிய நிலையிலும் காண்கின்றோம். ஓரே நேரத்தில் 100 பேருக்கு மேல் இறந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. கொல்லப்படுபவர்களில் ஆண்கள், பெண்கள், பால் குடிகள் உட்பட சிறுவர்களும் அடங்குகின்றனர். நிரந்தர பயத்துடனும் பீதியுடனுமே மக்கள் வாழ்கின்றார்கள். எந்த விலை கொடுத்தேனும் முதலாவதாக சமாதானத்தை அடைவதையே விரும்புகின்றனர். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் குழப்பப்படா திருந்திருந்தால் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களும் பல கோடானுகோடி பெறுமதியான சொத்துக்களும் இழக்கப்படாது காப்பாற்றியிருக்க முடியும். சில அரசியல் தலைவர்களின் முரட்டுப் பிடிவாதமே இத்தனை இழப்புக்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. இந்த கொலைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? அதற்குரிய விடையை இளைய தலைமுறையினர் கூறட்டும்.

எம்மில் சிலர் எங்களுக்களிக்கப்பட்டுள்ள பாதுகாப்புடன் மிக பாதுகாப்பாக இருக்கின்றோம். ஆனால், ஒரு சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பில்லை. அவனே வீதி ஓரத்தில் இறந்து கிடக்கிறான். அவனே தன் மனைவி மக்களை பாதுகாக்க வேண்டியவனாக இருக்கின்றான் ஆகவே நாம் அவனைப்பற்றித்தான் கவலைப்பட வேண்டும். எம்மத்தியில் ஆயிரம் பேரை பலி கொடுத்துக் கூட தனக்கு புகழ் தேடக் கூடிய விடுதலைப் புலித் தலைவர் இருக்கின்றார். எனது இரு கடிதங்களில் ஒன்று வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எழுதியது, மற்றையது இந் நாட்டு மக்களுக்கு எழுதிய இக்கடிதமாகும். அனைவரும் அவற்றை படித்து தாமே ஒரு தீர்மானம் எடுக்கக் கூடிய வகையில் இவ்விரு கடிதங்களும் ஒன்றாக பிரசுரிக்கப்படுகின்றன. எமக்கு சமாதானம் வேண்டுமாயின் அதற்கான தீர்வு என் கடிதங்களிலேயே உண்டு. திரு பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அவர் எவ்வாறு தமிழ் சமுதாயத்தை குட்டிச்சுவராக்கியதுடன் ஒவ்வொருவருக்கும் துன்பத்தையே தேடித்தந்தார் என்பதும் படிப்படியாக அவர் எவ்வாறு தமிழ் சமூகத்தை அடிமைப்படுத்தினார் என்ற விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. நியாயமாகச் சிந்திக்கும் தமிழர் அல்லாத ஒருவர் பிரபாகரனுக்கு எழுதப்பட்ட கடிதத்தை படிப்பாரேயானால் தமிழ் சமூகம் படுகின்ற துன்பத்தை அறிந்து கண்ணீர் விடுவதோடு அவர்களை மீட்டெடுத்து அவர்களுடன் சமமாக, சமாதானமாக வாழவே விரும்புவார். லங்கா மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அதற்குத் தயாராக உள்ளோமா?

நாட்டபிமானம் கொண்ட மக்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இனப்பிரச்சினை எப்போ எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டதென்றும் ஒரு தீர்வு காணப்படாது 50 ஆண்டுகள் இழுபட்டதையும் விபரிக்கின்றது. நியாயமாக சிந்திக்கக் கூடிய எவரும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளுக்கு பரிகாரமாக தாமதமின்றி ஒரு தீர்வை காணவே விரும்புவர்.

நான்கு பௌத்த பீடாதிபதிகளாகிய அஸ்கிரிய பீடாதிபதி வண. உடுகம சிறி ரத்தினபால மகாநாயக்க, மல்வத்த பீடாதிபதி வண. சிறி சித்தார்த்த மகாநாயக்க, ராமான்ஜ பீடாதிபதி வண. வேவல்தெனிய மேதாலங்கார மகாநாயக்க, அமரபுர பீடாதிபதி வண. தேவுன்தெனிய ஞானாசார மகாநாயக்க ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவருடைய அரசும் நாட்டில் உள்ள குழப்பநிலைக்கு தீர்வு கண்டு சகல சமூகத்தினரும், மதத்தினரும், பிரிவினரும் இணைந்து சமாதானமாக வாழ முடியும்” எனத் தெரிவித்துள்ளனர். அத்தோடு, “இம் முயற்சி நாட்டின் அபிவிருத்திக்கும், நல்லாட்சிக்கும் வழிவிடும்”, என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “சில கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதை நியாயமாக சிந்;திக்கின்ற நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, தமக்கிடையேயுள்ள குறுகிய பேதங்களையும், குறுகிய இலாபம் தேடுவதையும் கைவிட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண அரசுக்கு பூரண ஆதரவு கொடுக்க வேண்டும்”, என்றும் கேட்டுக்கொண்டனர்.

மகாநாயக்கர்களுடைய கூட்டறிக்கை பெரும் உற்சாகத்தை அளிக்கின்றது. இந்தநாட்டில் இடம்பெறும் யுத்தத்தால் விதைவைகளான, அங்கவீனர்களான, அனாதைகளானவர்களின் பரிதாப நிலை பற்றி நீங்கள் கடுமையாக சிந்திப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். பொறுப்பற்ற சிலரால் கைகால்களை, கண்பார்வையை இழந்தும் 70 ஆயித்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தும், சகல சொத்துக்களையும் இழந்தும் உள்ள மக்கள் மீது அனுதாபம் காட்டுவீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகவே எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து தம் முழு சக்தியையும் உபயோகித்து மீண்டும் ஒரு போராட்டத்தை எதிர்கால சந்ததியினர் தொடராத வகையில், சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதான, நின்று நிலைக்கக் கூடிய, ஒரு இறுதித் தீர்வை காண உதவுவீர்கள் என்று நம்புகின்றேன்.

நான் சிங்கள தமிழ் இஸ்லாமிய மக்களுடன் நீண்டகாலம் வாழ்ந்து, சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்களுடன் ஒன்றாக கல்வி பயின்று, மேலும் சிங்கள முஸ்லிம் தமிழ் ஆசிரியர்களால் கல்வி போதிக்கப்பட்டு சிங்கள தமிழ் மாணவர்களுக்கு கல்வியும் போதித்தவன். ஆகவே, எதுவித பிரச்சினையுமின்றி நாம் எல்லோரும் சமாதானமாக வாழ முடியும் என்று திடமாக நம்புகின்றேன். எனது இவ்விரு கடிதங்களையும் ஒவ்வொருவரும் படித்து உண்மையை அறிய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். எனக்குத் தெரிந்த, எதையும் மிகைப்படுத்தாது, உண்மையான விடயங்களையே குறிப்பிட்டு மிக அவதானமாக எழுதப்பட்ட கடிதங்கள் அவை.
நீண்ட காலமாக இருந்து வரும் எமது இனப்பிரச்சினை அரை நூற்றாண்டை தாண்டிவிட்டது. நாம் எமது பிரச்சினைக்கு தீர்வு காணமுயற்சிக்கின்றோமா அல்லது மேலும் மேலும் சிக்கலை உருவாக்குகின்றோமா? என்ற கேள்வி பலர் மத்தியில், குறிப்பாக சர்வதேச சமூகத்தின்; மத்தியில் எழுப்பப்படுகின்றது. இன்று எம்மத்தியில் பல திறமையான பல்வேறு, தற்கால அரசியல் சாசனங்கள் பற்றி அறிந்துள்ள, நம்நாட்டுக்கு பொருந்தக் கூடிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் திறைமைசாலிகள் நம் மத்தியில் உள்ளனர். அவர்களுக்கு உதவ பல புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் உள்ளனர். ஆனால், இவர்களால் எவ்வளவு தூரம் எமக்கு உதவ முடியும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும். சட்ட வல்லுனர்களையும் அனுபவம் வாய்ந்த அரசியல் யாப்பு சட்டத்தரணிகளையும் கொண்ட நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட, சிறுபான்மையினருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு திட்ட நகல் ஒன்று தயாரிக்கப்பட்டது. அது சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு ஏற்புடையதாயிருந்தும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு காரணத்தால் எதிர்பாராத வகையில் நிராகரிக்கப்பட்டது. அந்நகலை ஏற்கும்படி வேண்டப்பட்டிருந்தால் நிலைமை முற்றுமுழுதாக மாறியிருக்கும். ஆனால், வேறு தலையீடுகள் இருந்தால் அத்தீர்வு பயனற்றதாகிவிடும். ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் ஏற்பது போல கண்ணியமான கௌரவம் மிக்கவர்கள் மீது நாம் பூரண நம்பிக்கை வைத்து அவர்களுடைய தீர்வு திட்டத்தை ஏற்க பழகிக் கொள்ள வேண்டும். நாட்டின் நலனே அவர்களது சிந்தனையில் முதலிடம் வகிக்கின்றது. நாம் சோல்பரி அரசியல் சாசனத்தை ஏற்கவில்லையா? நிபுணர்களுடைய அறிக்கையை பரிசீலிகும் வாய்பு கூட எமக்கு கொடுக்கப்படாதது துரதிஸ்டமானதே. இந்த குழு எதற்காக உருவாக்கப்பட்டது? அவ்வாறு உருவாக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பரிசீலிக்க முடியாவிட்டால் அந்தக் குழு எதற்காக அமைக்கப்பட்டது என்பதே எனது கேள்வியாகும்.

நாம் இழந்த இன்னொரு சந்தர்ப்பம் இதுவரைகாலமும் முன்வைக்கப்பட்ட தீர்வுகளில் மிகச்சிறந்த தீர்வாக கணிக்கப்பட்ட, 1995 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வாகும். பலர் அதை ஏற்றுக்கொண்டனர். அத்தீர்வு ஏற்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தால் பெறுமதி மிக்க பெருந்தொகையான சொத்துக்கள் 10 - 12 ஆண்டுகால யுத்தத்திற்கு செலவிடப்பட்ட பொருந்தொகை பணம், யுத்தமுனையில் இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிகள் அத்தனையையும் காப்பாற்றியிருக்க முடியும். இன்று விதவைகளாக வாழும் பெண்கள் தமது கணவன்மாருடனம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடனும் சந்தோசமாக வாழ்ந்திருப்பர். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட உயிர்சேதம் பொருட்சேதத்திற்கு யார் பொறுப்பாளி?

ஆகவே, இன்று தேவைப்படுவது ஒரு நிபுணர் குழுவே. பிரச்சனை உருவாகிய காலத்தில் இருந்த பிரச்சனைகளை அன்றைய சிறுபான்மை மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப ஓர் தீர்வை முன்வைக்க வேண்டும். பிரச்சினை ஆரம்பித்து 50 ஆண்டு காலமாகியும் அந்த நேரத்தில் இருந்த குறைபாடுகள் தீர்க்கப்படவில்லை, தீர்வுக்கு ஏற்ப நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று இந்த பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவர்களி;ல் அனேகர் அன்றிருந்த பிரச்சினைபற்றி முழுக்க அறியாதவர்களே. உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணாது பல்வேறு புதிய ஆலோசனைகளை வழங்கி தமது திறமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்றனர்.

புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்க, ஒரு நிபுணரை நாடு இப்போது தேடவில்லை. எமக்கு வேண்டியது புதிதாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளோடு 50 வருடமாக மாற்றப்படாதிருந்த ஒரு பயங்கர நோயை குணப்படு;;த்த ஒரு விசேட வைத்தியரே! 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் உருவாக்கப்பட்ட நேரத்தில் தீர்வு காண சிலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமையால் மேலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஏற்படும் தாமதத்தை நியாயப்படுத்த முடியாது. 1957 ஜுலை 27 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட பன்டா செல்வா ஒப்பந்தம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைந்தது. ஆனால் சிலரை திருப்திப்படுத்துவதற்காக துரதிஸ்டவசமாக அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. எட்டு ஆண்டுகளின் பின் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, 4 ஆண்டுகள் தமிழரசுக் கட்சியின் உதவியோடு ஆட்சிபுரிந்தும், தீர்வு ஏற்படுத்தாது, ஒப்பந்தம் 1969 ம் ஆண்டு கிழித்தெறியப்பட்டது. பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்களில் வழங்கப்பட்டிருந்த சில ஏற்பாடுகள் பொருத்தமாகவும், முக்கியமானவையாகவும் இருப்பதால் அவற்றில் சில பகுதிகள் புதிய பிரேரணைகளை முன்வைத்து குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுடைய நன்மை கருதி கீழே தரப்படுகின்றது

எமக்கு தேவைப்படுவது 1957 ஆம் ஆண்டு இருந்த பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வே. இரு பிரதான அரசியல் கட்சிகளும் தமிழ் பேசும் மக்களின் காலை வாரிவிட்டு நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை எவ்வாறு ஏற்படுத்தினர் என்பதையும் அதனாலேயே 70 ஆயிரம் பேரின் உயிர்களையும், பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் நாடு இழந்தது என்பதையும் இளந்தலைமுறையினர் அறியவேண்டும். எமது நாடு இழந்த கௌரவத்தை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து மீளப்பெற வேண்டும். ஏனென்றால் விடுதலைப் புலிகளின் பொய் பிரசாரங்களால் நிலமை மேலும் மோசமடைந்தது. அவர்கள் எவ்வளவு தூரம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பது இதற்கு சான்று பகர்கின்றது.
பண்டா செல்வா ஒப்பந்தம்

ய) பகுதி 10: கலந்துரையாடலின் பின் உருவாக்கப்பட இருகின்ற சட்டம் தமிழ் மொழியை இலங்கை தேசிய சிறுபான்மையினரின் மொழியாக அங்கீகரிப்பது என்றும் பிரதமரால் குறிப்பிடப்பட்டது. 4 விடயங்களில், தனிச்சிங்களச் சட்டத்திற்கு பாதகம் ஏற்படாத வகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழையே நிர்வாக மொழியாக உள்ளடக்க வேண்டும் என்றும், வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசாத சிறுபான்மையினருக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் ஓப்புக்கொள்ளப்பட்டது.
டி) 1. உருவாக்கப்பட இருக்கும் சட்டத்தின் அட்டவணையில் பிரதேசங்கள் எவையென விளக்கப்பட வேண்டும.;
2. வடமாகாணம் ஒரு தனிப்பிரதேசமாக அமைய வேண்டும் என்றும் கிழக்கு மாகாணம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்களாக பிரிக்கப்படவேண்டும்.
3. சட்டத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்கள் மாகாண எல்லையை கடந்து இணையலாம். அத்தோடு ஒரு பிரதேசம் பிரிக்கப்படுமாயிருந்தால் பாராளுமன்ற அங்கீகாரம் வேண்டும். மேலும் விசேட காரணங்களுக்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்கள் இணையலாம்.

டட்லி செல்வா ஒப்பந்தம் - மார்ச் 24, 1965


1. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் வட கிழக்கு மாகாணத்தில் தமிழ்; நிர்வாக மொழியாக்கவும் பதிவேடுகளை பேணுவதற்கான மொழியாக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமி;ழ் பேசும் மக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அரசுடன் தமிழ் மொழி மூலம் கருமமாற்றலாம் என சேனநாயக்கா அவர்கள் விளக்கினார்.
2. தமது கொள்கை நீதிமன்ற மொழிச் சட்டத்தை மாற்றி வடகிழக்கு மாகாண நீதிமன்றங்கள் தமிழில் செயற்படவும் பதிவேடுகள் தமிழில் பதிவு செய்யவும் மாற்றம் செய்வதாக கூறினார்.
3. மாவட்ட சபைகள் அமைப்பதாகவும் இரு தலைவர்களும் சம்மதித்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் அமைக்கப்படும் சபைகளுக்கு, தேசிய நலன் கருதி அரசு வழிநடத்தலாம் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. .

நாட்டின் தேசியப் பிரச்சினைகளை ஒரு தேசபக்தனாக இருந்தே நோக்குகின்றேன். நான் இலங்கையன் என்று கூறுவதில் பெருமையடைகின்றேன். மறு பிறப்பில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு சமூகத்தில் ஒருவர் பிறப்பது தற்செயலாக நடக்கும் சம்பவம் என ஒத்துக்கொள்வர். அண்மையில் ஒரு சிங்கள பெற்றோருக்கு பிறந்த ஒரு மாணவன் திடீரென தமிழ் பேச ஆரம்பித்து தான் முற்பிறப்பில் தமிழராக இருந்ததாக கூறினார். பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகள் இக்கடிதத்தில் கூறப்படுவதன் நோக்கம் அதிகாரப் பகிர்வு, அதிகாரஅலகு, பிரதேசங்களின் இணைப்பு போன்றவை புதியவிடயம் அல்ல என்பதை நாட்டுக்கு தெரியவைக்கவே. அவை பிரபல தலைவர்களாகிய அமரர்கள் எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்கா போன்றோரால் முன்வைக்கப்பட்ட 40 – 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். 13 வது திருத்தம் நவம்பர் 14 1987 உதயமாகிய சட்டமாகும்.

திரு பண்டாரநாயக்கா அவர்களுடைய பிரேரணை, பிரதேசங்கள் மாகாண எல்லைகளை தாண்டி வேறு பிரதேசங்கள் இணைவதற்கும், கிழக்கு மாகாணத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்களாக பிரிப்பதற்கும் வழிவகுத்தது. இதில் வேடிக்கை என்னவெனில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும், சமஸ்டி முறையே இலங்கைக்கு சிறந்தது என்று கூறியவரும் அவரே. நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் அவ்வாறு கூறியிருந்தார். இத்தகைய சில முன்மொழிவுகள் சிலருக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் எல்லோருக்கும் அல்ல. இந்த விடயங்களை அறிந்துள்ளவர்கள் மற்றவர்களை குழப்பாதிருப்பதே சிறந்ததாகும். அதுவே அவர்கள் மறைந்த பண்டாரநாயக்கா போன்ற தலைவர்களுக்கு கொடுக்கக் கூடிய கௌரவமுமாகும்

பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றை நிறைவேற்றாது மாறி மாறி ஆட்சிபீடமேறிய அரசியல் கட்சிகள் தமிழ் பேசும் சிறுபான்மையினரை புறக்கணித்துவிட்டன என்பதை ஒருவரும் உணராதிருக்க முடியாது. இவ்வொப்பந்தங்கள் இரு பிரதமர்களால் செய்யப்பட்டவை. திரு செல்வநாயகம் அவர்களோடு இவ்வொப்பந்தத்தை செய்துகொண்ட இக்கனவான்கள் சில காலம் உயிரிழக்காதிருந்திருந்தால் தாம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றியிருப்பார்கள். 1970 ம் ஆண்டு 2ஃ3 அதிகப்படி வாக்குகளோடு ஆட்சியை கைப்பற்றிய மக்கள் கூட்டணி 72 ஆம் ஆண்டு ஒரு குடியரசு அரசியல் சாசனத்தை உருவாக்கி சிறுபான்மையினரின் நிலைமையை மேலும் மோசமடையச்செய்தது. சோல்பரி சாசனத்தில் இருந்த மேற்சபை, பிறிவி; கவுன்சில் மேன்முறையீடு, பிரிவு 29 - போன்ற சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகள் புதிய அரசியல் சாசனத்தில் இடம்பெறவில்லை. எனது அபிப்பிராயப்படி இந்த ஒரு சந்தர்ப்பத்தில் பிரித்தானிய அரசு தலையிட்டிருந்தால், ஓரளவிற்கு அத் தலையீட்டை நியாயப்படுத்தியிருக்க முடியும். ஏனெனில் சோல்பரி அரசியல் சாசனம் அமுல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட வேளை, அவர்களை பாதுகாக்கின்ற தார்மீக உரிமை அவர்களுக்கிருந்தது. தமிழ் பேசும் மக்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்திருப்பின் அதை பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து என்றாயினும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கலாம். தமிழ் பேசும் மக்கள் சிங்கள மக்களோடு இணைந்து ஒன்றுபட்ட இலங்கையில் வாழ விரும்பினார்கள் என்பதை சிங்கள மக்கள் பாராட்டவேண்டும். அவர்கள் நாட்டுப் பிரிவினையிலோ, ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களால் முன்வைக்கப்ட்ட சிறுபான்மையினருக்கு 50 வீத பிரதிநிதித்துவத்திலோ அக்கறை காட்டவில்லை. கடந்தகால அரசுகள் புத்திசாலித்தனமாக நடந்திருந்தால் நாடு இந்த நிலைமைக்கு வந்திருக்காது என்பது மட்டுமல்ல திரு பிரபாகரனும், எல்.ரி.ரி.ஈ யும் அனாமதேயங்களாக ஆகியிருப்பார்கள்.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆணைபெற்று 4ஃ5 ஆசனங்களோடு 1977 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர்களுடைய இராஜிநாமா கடிதங்களை கையில் வைத்திருந்தும், இனப்பிரச்சனை தீர்வுக்கு மாவட்ட அபிவிருத்தி சபைகளையே வழங்க முன்வந்தார். அபிவிருத்தி என்ற சொல்லை கைவிட்டு மாவட்ட சபை என்று அழைக்கக் கூட அவர் மறுத்துவிட்டார். திரு.ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்களது முயற்சியும் தோல்விகண்டது. ஏனெனில், இனப்பிரச்சினை தீர்வில் அவர் பெரிய அக்கறை காட்டவில்லை என்பது அண்மையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து நிரூபணமாகின்றது. அரசியல் சாசனத்தில் 6வது திருத்தத்தின் மூலம் மிதவாதிகளிடமிருந்த தமிழர் தலைமையை பறித்தெடுத்து ஆயுதக் குழுக்களிடம் கையளித்தார். இதில் வேடிக்கை என்னவெனில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின் சமஸ்டியே இனப்பிரச்சினைக்கு முறையான தீர்வாக அமையும் என கூறிச் சென்றார்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கத் தவறியமையால் தமிழர்களும், இஸ்லாமியர்களும், விடுதலைப் புலிகளின் தயவில் வாழவேண்டி ஏற்பட்டது. நிலைமையை பிரபாகரனும் அவருடைய சகாக்களும் தமக்கு சாதகமாக பாவித்துக்கொண்டனர். தமது துப்பாக்கி பலத்தை பிரயோகித்து, அச்சுறுத்தி, மிரட்டி படிப்படியாக தமிழ் மக்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அவர்களுடைய ஜனநாயக உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பறித்தெடுத்ததோடு, மனித உரிமை மீறல்களிலும் கடுமையாக ஈடுபட்டனர். தமிழ் பேசும் மக்களைப்பொறுத்தவரையில் “எண்ணை சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த” கதையாகும்.

ஜுன் மாதம் 22ம் திகதி திரு பிரபாகரனுக்கு எழுதப்பட்ட கடிதம் இன்று வெளியிடப்படுகின்றது. முன்னைய கடிதங்களில் குறிப்பிடப்படாத பல விடயங்கள் பற்றி எழுதியமையால் அது நீண்ட கடிதமாக அமைந்துவிட்டது. முன்னைநாள் மேயரும் யாழ் எம்பியுமாக இருந்த அல்பிரட் துரையப்பா கொலை தொடக்கம் அவருடைய சாதனைகளை திரும்பிப்பார்த்து, அவருடைய கண்களைத் திறக்கும் நோக்குடன் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி பட்டியல் போட்டுக்காட்டியுள்ளேன். அவருக்கு இரக்கம் இருந்தால் கண்ணீர்வி;ட்டு அழட்டும். தன்னுடைய கொடிய செயல்களை கைவிட்டு இதுவரை காலமும் செய்தவற்றை எண்ணி வருந்தி புதிய பாதையில் செல்லுமாறு கேட்டுள்ளேன். நாட்டு பிரிவினை கோரிக்கையை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை ஏற்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை மேலும் சிக்கலடைந்த பின் ஒற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வை ஏற்குமாறு நான் அவரை கேட்க மாட்டேன். இக்காரணத்தினாலேயே சமஸ்டி என்றோ ஒற்றையாட்சி என்றோ விபரிக்கப்படாத இந்திய ஆட்சிமுறையிலான ஒரு தீர்வை ஏற்குமாறு நான் பிரச்சாரம் செய்து வருகின்றேன. மேலும் எமது மக்களில் சிலர் ஒற்றையாட்சி, சமஸ்டி ஆட்சி ஆகியபதங்களில் வெறுப்பு கொண்டுள்ளமையல் நான் அவ்வாறு கூறியுள்ளேன். “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையிலேயே தமது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதென இந்தியர்கள் பெருமையாக கூறுவார்கள். கடந்த 3 ஆண்டு காலமாக நம்நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய பலரை உள்ளுரிலும் வெளிநாட்டிலும் சந்தித்து இந்திய முறையிலான அரசியல் சாசனமே எம் நாட்டுக்கு பொருத்தமானதென கூறி வந்துள்ளேன். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் அதிகப்படியான மக்கள் இந்துக்களாக இருந்தபோதும் பெரிதாக மதிக்கப்படும் கண்ணியம் மிக்க ஒரு இஸ்லாமியர் அந்நாட்டின் தலைமை பதவியை வகிக்கின்றார். நிச்சயமாக அதுபோன்று எம் நாட்டில் நடைபெறாது என்பதை கூறும் அதேவேளை அப்பேற்பட்டநிலமை எதிர்காலத்தில் எமது நாட்டிலும் உருவாக வேண்டும். காலத்துக்கு காலம் இந்தியா அயலிலுள்ள இஸ்லாமிய நாடுகளுடனும், உள்ளுரில் காஸ்மீர் போன்ற பகுதிகளில் சில இஸ்லாமியர்களுடனும் பிரச்சினைப்படுவதை நாம் அறிந்துள்ளோம். இருப்பினும் ஓர் இஸ்லாமியரே ஜனாதிபதியாக பதவிவகிக்கின்றார். இந்தியாவில் சீக்கிய மக்கள் இரண்டு வீதத்தினரே இருந்தபோம் மிகவும் மதிக்கப்படுகின்ற ஒரு சீக்கியரான கலாநிதி மன்மோகன் சிங் அந்நாட்டு பிரதம மத்திரிப்பதவியை வகிக்கின்றார். முன்னைய பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி அவர்களுடைய வெளிநாட்டு மருமகள் ஆழுங்கூட்டணியின் தலைவியாக பதவி வகிக்கின்றார். சிங்களவர்கள் அல்லாதோர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று கூறும் ஒரு சிலர் வாழும் இந்நாட்டில் இப்பேற்பட்ட நிலமை சாத்தியமாகுமா? இந்தியாவிடமிருந்து நாம் படிக்கவேண்டிய பாடங்கள் பல உண்டு.

எனது கூற்றுக்கு ஆதாரமாக இன்னும் பல உதாரணங்கள் இருப்பினும் சிலருக்கு சங்கடமான நிலையை உருவாக்கக் கூடும் என்பதால் அவற்றை நான் இங்கே குறிப்பிடவில்லை. மேலும் சிங்கள, தமிழ் மக்களினதும் மொழிகள், மதம், கலாச்சாரம் என்பன இந்தியாவிலிருந்து வந்தன. ஓரளவிற்கு இஸ்லாமியர்களுக்கும் இது பொருந்தும். எமது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை யாரும் இதுவரை மறுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுப்பிரிவினையை ஒரு போதும் இந்தியா ஏற்காதென்பதையும், அதை வற்புறுத்தி எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எவர் பிரதமர் பதவியை வகித்தாலும், இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தத் தவறவில்லை. மேலும் இந்தியாவில் பிரிவினைக்கோசம் 50 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த போதும் பண்டிட் நோருஜி இறப்பதற்கு முன்பே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இன்று அதுபற்றி யாரும் பேசுவதில்லை. எந்தவகையான பிரிவினையையும் அவர்கள் விரும்பவில்லை. இந்தியாவின் மாணவர்கள் அரச மொழியை விரும்பி கற்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் நிர்வாக மொழியும் இணைப்பு மொழியும் உண்டு. தேசிய கீதம் இசைக்கப்படுவதை கேட்டவுடன் சகலரும் அதில் இணைந்துகொள்கிறார்கள். தமது தேசியக் கொடியை மிக மதிப்போடு ஒரு புனிதமான பொருளாக கருதுகின்றார்கள். இந்திய தொலைக்காட்சியில் நான் ஒரு காட்சியை கண்டேன். ஓர் பிச்சைக்காரி, அவ்வேசத்தில் நடித்தவர் இந்திய உயர் பொலிஸ் அதிகாரி கிரன்பேடி என எண்ணுகின்றேன், வீதியால் போகும் போது குப்பைத் தொட்டியிலிருந்து கிழிந்த ஒரு தேசியக்கொடியை எடுக்கின்றார். கண்ணாலே கண்ணீர் சிந்த தன் உடையில் ஒர் பகுதியை கிழித்தெடுத்து கிழிசலை தைத்துக்கொள்கிறார். அரைமணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வு பற்றி பல்வேறுபட்டவர்களின் விமர்சனங்கள், கருத்துக்கள் கண்ணீரோடு தெரிவிக்கப்பட்டன. அரச நிகழ்வுகள் தவிர்த்து வேறு வைபவங்களில் இலங்கையராகிய நாங்கள் தேசியக் கொடியை பெரிதாக மதிப்பதில்லை. நான் யாரையும் நோகடித்திருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும. மனத்திருப்தியுடன் வாழும் ஒருசமுதாயத்திடமே தேசியக்கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்கும் மனப்பாண்மை வருமேயன்றி பலாத்காரத்தின் மூலம் ஏற்படுத்த முடியாது.

இந்தியா ஏன் அப்படியும் நாம் இப்படியும் இருக்கின்றோம்? வறுமை, பாரபட்சம், நிலப்பற்றாக்குறை, உறைவிடமின்மை போன்ற பல பிரச்சினைகள் இந்தியாவில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மக்களும் மனத்திருப்தியோடு ஒன்றுபட்ட இந்தியப்பிரஜைகளாக வாழ்ந்துகொண்டு ஏனைய பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசித்தீர்த்துக் கௌகின்றனர்.

50 ஆண்டு காலமாக முத்திப்போன கான்சர் நோயை ஒத்த எமது பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை எமது மக்கள் மனத் திருப்தியுடன் சந்தோஷமாக வாழமாட்டார்கள். ஒருவருக்கு நன்மை செய்யாது தீங்கு விளைவிக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டுதல் செய்பவர்கள் உலகிலேயே எமது நாட்டில் மட்டும் இருப்பது ஆச்சரியமே. 1957 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தத்தை ரத்துச்செய்யுமாறு கோரி கண்டி தலதாமாளிகாவிற்கு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை இதற்கொரு சிறந்த உதாரணமாகும்.

பண்டா செல்வநாயகம் ஒப்பந்தம் 1957 ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்டிருப்பின் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்களும் பல கோடி பெறுமதியான அரச தனியார் சொத்துக்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான உயிர்களும். சொத்துக்களும் இழக்கப்படக் காரணமான “கறுப்பு யூலை” என்று அழைக்கப்படுகின்ற 1983 ஆம் ஆண்டு கலவரத்தையும் தவிர்த்திருக்க முடியும். 70 ஆயிரம் பேரின் உயிரை குடித்த இந்த யுத்தத்தையும் தடுத்திருக்கலாம். பெருந்தொகையான விதவைகளும், அனாதைகளும் உருவாகியிருக்க மாட்டார்கள். இந்த இழப்புக்களுக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? துரதிஸ்டமான இம்மரணங்களுக்கும், சொத்தழிவுகளுக்கும், இதேபோன்ற எதிர்கால நிகழ்வுகளுக்கும் எமது நாட்டில் உள்ள சில சுயநலம்கொண்ட அரசியல் வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அரசியலில் நான் ஒரு சிறு மீன் குஞ்சு. ஆனால், பிரபாகரனுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்திருந்தால் மோசடி மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 பாhளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவராக பதவியேற்று உறுப்பினருக்குரிய சகல உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்திருப்பேன். இவற்றை உதாசீனம் செய்தது பற்றி எனக்கு மனவருத்தமில்லை. ஏனெனில், நான் இந்நாட்டு மக்களையும் நாட்டையும் நேசிக்கின்றேன். இதை செய்ய முடியாதவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்பது மட்டுமல்ல அரசியலைவிட்டு ஒதுகங்கவும் வேண்டும்.

பல்வேறு கட்டுரைகளில் வாராவாரம் எனது பெயர் குறிப்பிடப்படுவதை நான் அவதானித்துள்ளேன். நான் அரசியல் கற்றவன். சட்டத்தரணியாக இருப்பதோடு அரசியல் சட்டம் பற்றியும் கற்றுள்ளேன். எமது நாட்டுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை நான் அறிந்திருக்கிறேன். தற்கால உலகில் எமது நாட்டுக்கு பொருந்தக் கூடிய பல அரசியல் யாப்புகள் உண்டு. தென் ஆபிரிக்காவின் யாப்பு மிகப்புதியது. சுவிஸ், கனடா ஆகிய நாடுகளின் யாப்புக்கள் மிகச்சிறந்தவை. அனேக யாப்புகளில் சிறந்த அம்சங்கள் பல உண்டு. மாவட்ட ரீதியான அதிகாரப்பகிர்வு மிக நல்லது. அதே போன்று காந்தீய அடிப்படையில் உருவாகும் பஞ்சாயத்து முறை எனக்கு மிக விருப்பமானதே. ஆனால், எமக்கு இன்று வேண்டியது எமது நோய்க்குரிய மருந்தே. பல்வேறு அரசியல் யாப்புக்களில் உள்ள நல்ல அம்சங்கள் தேவையை பொறுத்து பின்பு சேர்த்துக்கொள்ளலாம். 20 மைல் நீளங்கொண்ட பாக்குத்தெடுவாய் அயல்நாடாகிய இந்தியாவிடமிருந்து எம்மை பிரிக்கின்றது. கடலுக்கு அப்பால் 600 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள். தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு தலயாத்திரை உட்பட வேறு பல காரணங்ளுக்காக தினமும் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் செல்கின்றனர். பௌத்த யாத்திரிகர்களுக்கென சென்னையில் மகாபோதி சபையின் ஓர் கிளை உண்டு. அங்கே சிங்கள யாத்திரீகர்கள் வரவேற்கப்படுகின்றார்கள். பௌத்தசமயம் ஒருகாலத்தில் மிகவும் பிரபலம் அடைந்திருந்த தமிழ் நாட்டில், பல்வேறு பணிகளுக்கு இடமுண்டு. தமிழ் பௌத்த குருமார் பல ஆண்டுகளுக்கு முன்பு சமயப்பணிக்காக வந்து போயுள்ளனர். யார் எதை செய்யவில்லை என்று நான் குறை கூறவில்லை. ஆனால், சிறந்த ஒரு கத்தோhலிக்கராக இருந்தும் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் வைத்தியகலாநிதி ஜெயலத் ஜயவர்தனா அவர்கள் தமிழ் நாட்டில் பௌத்த சமயத்தை வளர்க்க அரும்பாடுபட்டுவருகின்றார். அவருக்கு நான் தலைவணங்குகின்றேன். மூன்று விகாரைகள் அமைப்பதற்கு உரிய இடத்தை அவர் பெற்றுள்ளார். தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் மிக உயரமான பௌத்தர் சிலை உண்டு. பௌத்த சமயத்தை வளர்ப்பதாக கூறிக்கொள்ளும் ஒருவர் இலங்கை சிங்கள பெத்தர்களுக்கே உரியதென்றும் ஏனையோர் இந்திய சென்றுவிடவேண்டும் என்றும் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நான் எவருக்கேனும். சரித்திரமோ, பூமிசாத்திரமோ போதித்து ஒரு சர்ச்சையை கிளப்ப விரும்பவில்லை. 20 மைல் நீந்தி பாக்கு தொடுவாயை கடப்பது ஒருவருக்கு பெரிய கஸ்டமான காரியமில்லை. அண்மையில் கூட இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள கால்வாயை பலர் நீந்திக்கடந்துள்ளனர். கடந்த காலத்தில் இரண்டு மணி நேரத்தில் கட்டுமரத்தில் இப் பிரயாணத்தை செய்ய முடியும். அவ்வாறு சிலர் மீன் பிடிக்க வந்திருக்கலாம், அல்லது குற்றம் செய்துவிட்டு தப்பியோடி வந்திருக்கலாம், அல்லது காற்றின் வேகத்தில் தள்ளப்பட்டு வந்திருக்கலாம். இந்த கட்டத்தில் இத்தகைய விவாதங்கள் அவசியமா? தமிழர்கள் பேத்துக்கீசரால் புகையிலைச் செய்கைக்கென கேரளத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் என ஒருவர் கூறக் கேட்டேன். கேரளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புகையிலை நடவோ, புல் நடவோ ஒருவர் வருவதற்கு போத்துக்கீசர்கள் வழிகாட்டத் தேவையில்லை. இது ஒரு பொறுக்க முடியாத மனத்தை நோகடிக்கும் கூற்றாகும். தமது வசதிக்கேற்ப ஒவ்வொருவரும் சரித்திரத்தோடு விளையாடக் கூடாது.

இன்று எமக்கு வேண்டியதெல்லாம் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் சொல்ல முடியாத துன்பங்களை நேரடியாக அனுபவிக்கின்ற ஒரு சாராரையும், மறைமுகமாக பாதிக்கப்பட்ட மறுசாராரையும், அவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதே. எது எப்படி இருப்பினும் இருசாராருக்கும் ஏற்பட்ட மரணம், அழிவு, சொத்து .இழப்புக்கள் தாங்கமுடியாதவை. இரு சிங்கள போர் வீரர்கள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை தீவைத்து கொழுத்தினர். ஆனால், படித்த தமிழர்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான சிறு நுலகங்களை அழித்தவர்கள் யார்? மற்றவர்கள் தமிழர்களை இன அழிப்பு செய்கிறார்களென விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் விடுதலைப் புலிகளால் நேரடியாக கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அரச படைகளால் செய்யப்பட்ட கொலைகளை விட பலமடங்கு அதிகம். போரில் சம்பந்தப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்படவில்லை. அதே போல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எண்ணிக்கை, போரில் சம்பந்தப்பட்டவர்கள் புற நீங்கலாக, மிகப்பெரிய அளவாகும். விடுதலைப் புலிகளால் சிங்கள மக்களுக்கு செய்யப்பட்ட கொரூர செயல்களுக்கு சாதாரணமான தமிழ் மக்கள் மீது குற்றம் காண முடியாது. அச்செயல்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட மிருகத்தனமான பயிற்சி அளிக்கப்பட்டவர்களின் செயல் என்பதை அவர்கள் நன்கு அறிவர். இக்கூற்றை யாரும் நிராகரிக்க முடியாது.

பிறர் புக முடியாத புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடைபெறும் கொரூரமான செயற்பாடுகள் பற்றி நான் பல தடவை முறைப்பட்டுள்ளேன். பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டு போர் பயிற்சி பெற்றுவரும் துர்ப்பாக்கியவான்களாகிய இவ்விளைஞர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் புகுந்து ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் விடுவிக்க முடியாதா? மனித உரிமை மீறல்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மட்டுந்தான் கண்காணிக்கப்படுகின்றதா? பெருமளவில் இடம்பெறும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கண்காணிக்கப்படுவதில்லையா?

பிரபாகரன் எவ்வாறு தமிழ் மக்களை பலவழிகளிலும் பாதிப்படையச் செய்து ஓட்டாண்டிகளாக்கியுள்ளார் என்பதை விபரமாக அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். தமிழ் மக்களுடைய இக்கட்டான நிலமையை அறிந்து, சிங்கள சகோதரர்கள் அவர்கள் மீது அனுதாபப்பட்டு அவர்களுடைய துன்பத்தை தீர்க்க, சர்வதேச சமூகம் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை தர முன்வராவிட்டால் அவர்கள் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து தமிழர்களை முற்றாக அழித்து ஒரு வித கஷ்டமுமின்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம். இதைத்தான் சிலர் விரும்புகின்றார்கள் போலும்.

எனது இந்திய முறையிலான தீர்வு ஆலோசனையை பல கட்டுரைகளிலும் ஆசிரிய தலையங்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்ததை நான் அவதானித்துள்ளேன். இந்த நிலைப்பாட்டை பல தடவை நான் வெளிப்படுத்தியுள்ளேன். பல்வேறு சட்ட நுணுக்கங்களை நன்கறிவேன். இது சம்பந்தமாக மாட்சிமை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் கலந்துரையாடிய போது, இரு தீர்வுத்திட்டங்களை முன்வைத்து அதில் ஒன்று இந்திய முறையிலானதாகவும் மற்றொன்று இந்திய முறையிலும் பார்க்க கூடிய அதிகாரங்கள் கொண்டதாகவும். முன்வைக்கப்பட்டால் இந்திய முறையிலான தீர்வையே நான் ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தேன். அதற்குரிய காரணம் மக்களை இலகுவாக ஏற்றுக்கொள்ள வைக்க முடீயும் என்பதோடு அத்தகைய தீர்வு எமது தேவைகளுக்கு ஏற்றதாக அமையும். மேலும், சில விடுதலைப்புலிகள் சார்பான தலைவர்களின் கூற்றுக்களால் தமிழ் நாட்டில் குழப்பமடைந்திருக்கும் 600 இலட்சம் தமிழ் மக்களை ஏற்கவைக்கக் கூடியதிட்டமாகவும் அமையும். பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்டர் அரசியல் சாசனத்தின் சாயல் இந்திய அரசியல் சாசனத்திலும் உண்டு. 25 ஆண்டு காலமாக இலங்கையில் அமுலில் இருந்த சோல்பரி அரசியல் யாப்பிலும் இருந்தது. இன்று அனேக அரசியல் யாப்புக்களில் பிரித்தானிய அரசியல் சாசனத்தின் சாயல் தென்படுகின்றது. ஆகவே இந்திய முறையிலான யாப்பை அமைப்பது தப்பாகாது.
அண்மையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டிருந்த சில சம்பவங்களிலிருந்து இந்தியாதான் இலங்கையை காப்பாற்றியுள்ளது. இந்திய கடற்படையினர் விரைவாக எடுத்த நடவடிக்கையும், தமிழ் நாட்டு பெலிஸாரின் துரிதநடவடிக்கையும் இலங்கையை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியது. நம் நாட்டு அரசியல் வாதிகள் இந்தியா பற்றிய விமர்சனங்களில் மிகக் கவனமாக செயற்பட வேண்டும். வெளிநாடுகளில் அரசுக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரத்திற்கு இலங்கை அரசின் பிரச்சாரம் ஈடுகொடுக்கவில்லை. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்தால் நாம் அவர்கள் மீது குறை கூற முடியாது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் உட்பட வடகிழக்கிற்கு பிரித்தானிய, இந்திய பாராளுமன்ற குழுக்கள் பார்வையிட அழைப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?

விடுதலைப் புலிகளின் இரும்புத் திரைக்குப் பின்னால் நடைபெறும் சம்பவங்களை அம்பலப்படுத்த அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? விடுதலைப் புலிகளின் தடுப்பு முகாம்களிலும், இருட்டறைகளிலும் சித்திரவதை செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை என்ன? ஆள்கடத்தல், சிறுவர்களை பலாத்காரமாக படையில் இணைத்தல் போன்ற விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்த விபரம் சர்வதேச சமூகத்தினரிடம் உண்டா? அவர்களுடைய பிரதேசத்தில் பிள்ளைகள் பகல் வேளைகளில் காடுகளில் வசிப்பதையும் இரவு வீடு திரும்பும் போது விடுதலைப் புலிகளால் பிடித்துச் செல்லப்படுவதை சர்வதேச சமூகம் அறியுமா? புலிகளால் பிடிக்கப்படும் பிள்ளைகளின் பெற்றோர் தமது ஆட்சேபனையை தெரிவிக்கும் வேளை கடுமையாகத் தாக்கப்படுவதும். தம் முயற்சியில் தோல்விகண்ட பெற்றோர் சிலர் தற்கொலை செய்த சம்பவங்களையும் சர்வதேச சமூகம் அறியுமா?

வேறு யாரும் புக முடியாத விடுதலைப் பலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதப்படைக்குச் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையை யாராவது அறிவார்களா? அரச படைகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பின் அவர்களின் பெயரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையதே. ஆனால், பல ஆண்டு காலமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஏற்படும் பல மனித உரிமை மீறல்களுக்கு யார் பொறுப்பு? இது பற்றி சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களோ உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களோ பேசுவது கிடையாது.

சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை முன்வைப்பதோ அல்லது என்னால் ஆலோசனை வழங்கப்பட்ட இந்திய முறையிலான தீர்வை முன்வைப்பதோ அரசுக்குள்ள ஒரேயொரு வழி. விடுதலைப்புலிகளை ஓரங்கட்டக் கூடிய மீண்டும் எதிர் காலத்தில் புதிய போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய அவசியமற்ற ஒரு நிரந்தரத் தீர்வாகவே அரசு முன்வைக்கும் தீர்வு அமைய வேண்டும். ஒஸ்லோ உடன்பாட்டின் படி சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே அரசு முன்வைக்க கடமைப்பட்டுள்ளது. இந்திய முறையிலான தீர்வைத்தவிர வேறு எந்த முறையிலான தீர்வை முன்வைத்தாலும் அது சர்வதேச சமூகத்திற்கு திருப்தியளிக்காது. தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு ஒரு நியாயமான தீர்வை விடுதலைப்புலிகளை ஏற்க வைப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு தேவைப்படும்.

இந்தநாடு பிளவுபடக் கூடாதென்பதே மக்களின் பொதுவான அபிப்பிராயமாகும். அந்த நிபந்தனைக்கு அமைய இன மத வேறுபாடின்றி ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம உரிமையுடன் எல்லாரும் வாழவேண்டும் என்பதே அனைவரின் ஒன்றுபட்ட கருத்துமாகும்.

எவரேனும் எத்தகைய பாகுபாட்டை திணிக்க முயற்சித்தாலும் அம்முயற்சி என்றும் சமாதானத்தை கொண்டுவர உதவாது.


அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி

தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி