ஐக்கிய இலங்கைக்குள் நேர்மையான, நியாயமான அரசியல் தீர்வு காணல்










ஐக்கிய இலங்கைக்குள் நேர்மையான, நியாயமான அரசியல் தீர்வு காணல்

அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களால் நம் நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இவ் வேண்டுகோளை விடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது எமது எதிர்கால சந்ததியினர் அமைதியாகவும், செழிப்புடனும் வாழக்கூடிய நிலையை உருவாக்கக் கூடிய ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த எனது இறுதிக்கால சில வருடங்களை எவ்வாறு அர்ப்பணிப்புடன் செலவிடுகிறேன் என்பதை அனேகர் அறிவர். நாம் அனைவரும் ஓரளவு பொறுப்பேற்க வேண்டிய போராட்டத்தினால் சகல சமூகத்தில் இருந்து எமது தலைவர்கள் பலரையும், இளைஞர்கள், ஏராளமான பொதுமக்களையும் இழந்துள்ளதோடு பெரும் பொருள் நட்டத்தையும் அடைந்துள்ளோம். அமைதியையும், ஓர் அரசியல் தீர்வையும் பெற்றுவிட்டோமேயானால் அந்த நிலையை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லாது போனாலும் கூட எமது நாட்டு இளைஞர்களும், பிள்ளைகளும் வேறுபட்ட ஓர் இலங்கையில் திகில், வன்முறை, யுத்தம் ஆகியவற்றை கடந்தகால கனவுகளாக மறந்து வாழ்வார்கள் என மகிழ்ச்சியடைவேன். தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து அனைவரின் சுபிட்சத்திற்காக நம் நாட்டை கட்டியெழுப்பி புதிய விடியலை காண ஓர் புதிய சமுதாயம் பிறக்கும்.

அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டபோது நீண்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களும், எமது பிள்ளைகளும் மிக மோசமான வறுமையுடன் போராடுவதை கண்டு மனம் நொந்தேன். அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொண்டுவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை அவதானித்தேன். இருப்பினும் அம் மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், எதுவித பயமுமின்றி ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவும், அவர்களுக்கு எமது ஆதரவு தேவை. கிழக்கு மாகாணத்தில் வேறுபட்ட சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்வது சிறப்பம்சமாக இருப்பினும் அவர்கள் ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் மிரட்டாமல், பயமுறுத்தாமல் சகோதரர்போல் வாழும் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். கிழக்கு மக்கள் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உண்டு. இருப்பினும் இஸ்லாமிய, தமிழ், சிங்கள மக்கள் அனைவரும் சிறுபான்மையினரோ, பெரும்பான்மையினரோ என்ற பேதமின்றி சமமாக வாழ்ந்தாலே கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும். இதற்கு முன்னோடியாக அனைவரும் ஏற்கக்கூடிய ஓர் அரசியல் தீர்வு அவசியமாகும்.

எனது ஐரோப்பிய பயணங்களின் போதும், அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போதும் இலங்கை வாழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ள தமிழ் மக்களுடன் பிரிவினையை ஏற்க முடியாதென பல தடவை வாதாடியுள்ளேன். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ முடியும் என்று முழு நம்பிக்கையுடன் இருந்தேன். பல்வேறு சமூகத்தலைவர்கள், இனத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியபோது மிகச் சொற்ப எண்ணிக்கையினரை தவிர ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல் தீர்வை காணலாம் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் சமூகத்தினர் எனது கருத்தை ஏற்கின்றார்கள் என்பதை பெருமையுடன் கூற விரும்புகின்றேன். ஐக்கிய இலங்கைக்குள் ஓர் அரசியல்தீர்வை ஏற்படுத்துவதன் மூலமே முன்னேற முடியும் என்பது அவர்களின் கருத்தாகும். தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலர் என்னுடன் சேர்ந்து தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் பேரால் நடந்தேறிய வன்முறைகளுக்கு மனம் நொந்து வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோர தயாராக உள்ளனர். பலவற்றை இழந்த மக்களுக்காக அனுதாபப்படுகின்றேன். இருப்பினும் நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

இன ஒதுக்கல். பிரிவினை போன்ற நச்சுத்தன்மை பிரச்சாரத்தையே விடுதலைப் புலிகள் தொடர்ந்து போதிப்பர். சிங்கள மக்கள் எதையும் தரமாட்டார்கள். அதிகாரப் பகிர்வோ, அதிகாரப் பங்கீடோ, அமைதியையோ தரமாட்டார்கள் என தமிழ் மக்களுக்கு போதித்துக் கொண்டேயிருப்பார்கள். இன்று புலிகள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். தமது அரசியல் விஷத்தை உள்ளுரிலோ, பிற நாட்டிலோ தமிழ் மக்கள் மீது செலுத்த முடியாதவாறு தாம் அரசியலில் முழு தோல்வி அடைந்து விட்டோம் என்பதே அவர்களுக்குள்ள பயம். பிரபாகரனுக்கு ஒரு அரசை பெற்றுக் கொடுப்பதை தவிர அவருக்கு எந்த அரசியல் தீர்வும் ஏற்புடையதாக இருக்காது. இருப்பினும் தமிழ், முஸ்லீம் மக்கள் கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் சிங்கள மக்களுடன் சரிநிகர் சமானமாக வாழக்கூடிய ஓர் அரசியல் தீர்வே விடுதலைப் புலிகளையும் அவர்களுடைய வங்குரோத்து கொள்கைகளையும் தோற்கடிக்க முடியும். ஓர் நீதியானதும், நியாயமானதுமான அரசியல் தீர்வே விடுதலைப் புலிகளின் மிரட்டலும், குரூரமும் தேவையில்லை என்பதை உள்ளுரிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழ் மக்களுக்கு உணர்த்தும். இலங்கையின் அரசியல் தீர்வுக்கு இந்திய முறையிலான தீர்வே சிறந்ததென தொடர்ந்து நான் வற்புறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற பதங்களை பாவியாது இந்திய அரசியல் சாசனம் 60 ஆண்டுகளுக்கு மேல் பிரிவினைக்கு இடம் கொடாது நாட்டை ஒற்றுமையாக வழிநடத்தியது மட்டுமல்லாது, இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் நடவடிக்கைகளை நான் ஆதரித்து வந்துள்ளேன். பேராசிரியர் திஸ்ஸ விதாரண இலங்கை வாழ் மக்களின் அபிலாசைகளுக்கு இடங்கொடுத்து அனைவரும் இணக்கம் காணக்கூடிய ஓர் தீர்வை காண்பதற்கு அயராது உழைத்தவர். அவருடைய உழைப்பில் நான் பெரு மதிப்பு வைத்துள்ளேன். இருப்பினும் வரப் போகின்ற தீர்வுத் திட்டம் ஒற்றையாட்சி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதென ஊடகங்கள் மூலம் அறிந்து மிகவும் விசனமடைந்தேன்.

அரசு தமிழ், முஸ்லீம் மக்கள் மீது நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பல தசாப்தகால முரண்பாடுகள், மரணங்கள், அழிவுகள், துன்பங்களோடு கூடிய அரசியல்சாசன சம்பந்தமான விவாதங்கள் ஆகியவற்றின் பின் ஒற்றையாட்சி முறை ஒரு போதும் இனப்பிரச்சனைக்குரிய தீர்வாக தமிழ், முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒரு அரசியல் தீர்வு மூலம் இரு விடயங்களை சாதிக்கலாம்.

விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிப்பது.
சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ்ந்து நாட்டை கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு கொடுக்கும்.

ஓற்றையாட்சியின் கீழ் காணப்படும் அரசியல் தீர்வு அரசு ஏனைய சமூகங்களுக்கான நியாயமான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள தயாரில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அமையும். அது விடுதலைப் புலிகளின் பிரிவினை கோஷத்தை வலுவடைய செய்யும். ஓற்றையாட்சியின் கீழ் ஏற்படப் போகும் ஒரு தீர்வு தமிழ் மக்கள் பிரிவினை கோஷத்தை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் செயற்பட வருமாறு என்னைப் போன்றவர்களால் விடுக்கப்பட்ட சவாலுக்கு ஏற்பட போகும் தோல்வியாகும். ஒற்றையாட்சி தீர்வு அரசு நீதியாக செயற்படும் என்ற தமிழ் சிங்கள, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் ஓர் செயலாகும். இத்தகைய பிரச்சாரமே இன்னும் விடுதலைப் புலிகளுக்கு பிராணவாய்வு கொடுத்து சிலர் மத்தியில் அவர்களின் செல்வாக்கை நிலைக்க செய்துள்ளது.

ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்கப்படும் தீர்வுத்திட்டம் அரைகுறை தீர்வாக அமைவது மட்டுமன்றி எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் தூண்டுதலோடு மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கின்ற ஒரு நிலையை உருவாக்க வழிவகுக்கும். விளைவு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை இழந்தும் ஏற்படுத்திய ஒரு தீர்வு குழம்பி பழைய நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும். எந்த அரசியல் தீர்வும் அமுலாக்கப்படும் வேளையில் நான் உயிருடன் இருப்பேனோ என்பது தெரியாது. ஆனால் இந் நாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனது தாழ்மையான வேண்டுகோளை ஏற்பார்கள் என்று நம்புகின்றேன். இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லீம் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமாக வாழும் வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்கிறேன். எமக்கொரு அரசியல் தீர்வு மிக அவசியமானதே. ஆனால் அத் தீர்வு நீதிக்கும், நியாயத்துக்கும் உட்பட்டதாக அமைய வேண்டும். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் மிக்க நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஒற்றையாட்சி முறை அந் நம்பிக்கையை முற்றாக அழித்துவிடும். ஆனால் மறுபுறம் நீதிக்கும், நியாயத்துக்கும் உட்பட்ட ஒரு அரசியல் தீர்வு சகல சமூகத்தினரையும் ஒற்றுமைபடுத்தி சமாதானத்திற்கான விடிவுகாலம் ஏற்படும்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ