அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மையில் இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலால் ஒன்றரை வயது குழந்தையை பலி கொண்டதோடு 18 அப்பாவி பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சில வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிய வருகிறது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தையை அல்லது தமது உறவினர் ஒருவரை இழப்பவர்களாலேயே இந்த இழப்பின் வேதனையை உணர முடியும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதைத் தவிர இவர்கள் சமூகத்திற்கு செய்த குற்றம் என்ன? இவ்வாறு துன்பப்படும் மக்களின் துன்பத்தை போக்கி நிம்மதி பெருமூச்சுவிட வைக்க முடியாவிட்டால் நாம் பௌத்த தர்மத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் என்று எவ்வாறு கூற முடியும்? எது நடப்பினும் யுத்தம் தொடர வேண்டுமென்று வாதாடுகின்றவர்கள் இன்றும் நம் நாட்டில் வாழ்கின்றார்கள். இனப்பிரச்சனை தீர்விற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருப்பவர்களும் அவர்களே.

துரதிஷ்டவசமாக நம் நாட்டின் நிலைமை இதுதான். இந் நாட்டையும் அந்த நாட்டின் மக்களையும் நேசிக்கும் நாட்டுப்பற்றாளனாகிய நான் ஓர் உயிரைத்தன்னும் வீணாக இழக்க விரும்பவில்லை. நம் நாட்டில் சரியாக கணிப்பிடின் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளார்கள். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற இந்த யுத்தத்தில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வடகிழக்கில் இடம்பெயர்ந்து பல துன்பங்களை அனுபவித்துள்ளனர். முறையான உணவு, உடை, இருப்பிடம், சுகாதார வசதி அன்றி வாழ்வதோடு தமது சொத்துக்களை முற்றாக இழந்தும் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பாவி பொது மக்களே. விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றதுபோல் ஆகிவிட்டது. இன்று தாம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என நன்கு அறிந்தும் உண்மை நிலையை நேர்மையாக மக்களுக்கு தெரிவித்து ஒருதலைபட்சமாக வேனும் யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி, ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும். அதேபோன்று அரசும் செயற்பட்டு விமானத் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுடன் செயற்படாத பட்சத்தில் அவர்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் அரசாங்கம் தம் மக்கள் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறுமேயானால் அரசாங்கம் தனது மதிப்பை இழந்து விடும்.

மிக விரைவில் கிளிநொச்சியிலும் மக்கள் இடம் பெயர வேண்டிய நிலைமை உருவாகும். ஏற்கனவே பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் பலாத்காரமாக கிளிநொச்சிப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்காக இடம்பெயர்ந்தவர்களுக்கு தங்குமிடம், உணவு, சுகாதார வசதி ஆகியவை செய்யப்பட வேண்டும். அதேவேளை விடுதலைப்புலிகள் தமது இரும்பு கதவை திறந்து மக்கள் தம் இஷ்டம்போல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும். குடாநாட்டில் இருந்து வன்னியில் பலாத்காரமாக குடியேற்றப்பட்டவர்கள் அனுமதி வழங்கப்பட்டால் தம் சொந்த வீடுகளுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு உண்டு. அதேபோன்று அரசும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும் மக்கள் தமது பகுதியை வந்தடைய ஏதுவாக ஆதரித்து உதவ வேண்டும்.

ஆகவே யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் இக்கட்டான இக் கட்டத்தில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கும் தொடர்ந்து பிறநாட்டில் சுற்றுலா செய்வதற்கும் ஏதுவாக அண்மையில் பாராளுமன்றத்தில் மூன்றுமாதகால விடுமுறை கேட்டுப் பெற்றமை கண்டிக்கப்பட வேண்டும்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ