03.01.2005.

மேன்மைதங்கிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களுக்கு

இத்தனை அனர்த்தங்கள் நடந்த பின்னும் இனிமேலாவது நாம் அனைவரும் கட்சிபேதங்களை இனமதமொழி வேறுபாடுகளை எல்லாம் தூக்கிஎறிந்துவிட்டு ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற தங்களின் கூற்றையே நானும் கொண்டுள்ளேன்.

இந்த சூழ்நிலையில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் வீரகேசரிக்கு அளித்த பேட்டியில் வடக்கில் வாழுகின்ற தமிழர்களுக்கு அரசு பாகுபாடு காட்டுவதாகவும் நிவாரண உதவிகள் எதுவும் சரிவரக் கிடைக்கவில்லை எனவும் தென் இலங்கை அரசியல்வாதிகள் எவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும்வந்து பார்க்கவில்லை என விசனத்துடன் கூறியுள்ளார். எனவே தாங்கள் இக்கருத்தை மறுக்கும்வகையில் இதுவிடயத்தில் கூடிய கவனம் எடுத்து அரசாங்கம் செய்யும் அனைத்து நிவாரணப்பணிகளையும், நிவாரண உதவிகளையும் பட்டியல்போட்டு காட்டவேண்டிய கடமைப்பாடும் பொறுப்பும் தங்களுக்கு உண்டு. கனரக வாகனங்கள் அங்கு அதிகமாகத் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். அவைகளை வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன். இதுமட்டுமல்ல வடக்கில் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, வடமாராட்சி கிழக்கு கரையோரப் பகுதிகளுக்கு நிவாரண உதவிகளையும், நிவாரணப்பணிகளையும் முடுக்கிவிட்டு அரசு தமிழ் மக்களை என்றும் கைவிடாது என்பதை நீங்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்தவேண்டும்.

அரசாங்கம் இந்த நிலையிலும் மனிதாபிமான ரீதியில் சிந்திக்காது போரியல் ரீதியாகவே சிந்திக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் எவ்வாறு இன்று அனைத்து கட்சிகளும் எதுவித பேதமுமின்றி ஒன்றுபட்டு மக்களுக்கு உதவுகின்றதோ அவ்வாறே அனைவரும் இங்கும் உதவவேண்டும் எனவும் கூறியுள்ளார். இலங்கை அரசியல்வாதிகள் எவரும் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்பதையும் பாதிக்கப்பட்ட மக்களை எவரும் வந்து பார்க்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். தாங்களும் பிரதம அமைச்சரும் கூட்டிய சர்வகட்சி மாநாடுகளை வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக்கூறும் 22 தமிழரசுக் கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிஷ்கரித்துள்ள வேளையில் இக்குற்றச்சாட்டு உங்களுக்குப் பொருந்தாது என நம்புகின்றேன். இதனை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு 22 தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களையே சாரும். அகதிகளைப் பார்வையிடச்சென்ற பிரதமர் தலைமையிலான குழுவுக்கு நடந்த விடயம் உலகறிந்ததே. அவர்கள் வந்து கேட்டாலும் கேட்காவிட்டாலும், இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எந்தவித பாகுபாடுமின்றி செயற்படவேண்டிய பாரிய கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உண்டு. நீங்கள் வெளிநாட்டிலிருந்த வேளையில் நிவாரணப்பணி, நிவாரண உதவிகள் சம்பந்தமாக எனது ஆலோசனைகளைக் கூறி பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி அதன் பிரதியைத் தங்களுக்கும் அனுப்பியிருந்தேன்.

தென் இலங்கை அரசியல்வாதிகள் எவரும் பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்க்கவில்லை என்று கடற்புலிகளின் தளபதி விசனத்துடன் கூறியதிலிருந்து, ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அகதிகளை பார்வையிடவந்த பிரதமர் குழுவினரை விடுதலைப் புலிகளோ, பாதிக்கப்பட்ட மக்களோ வரவேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மாறாக வேடிக்கை பார்க்கவந்து மக்களின் வேதனையைப் புரியாது இந்த நேரத்திலும் வீண் வம்புபேசும் கூட்டமே இந்த ஆர்ப்பாட்டத்தைச் செய்திருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.

தமிழர்களின் கலாசாரப் பண்புகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ஒரு அனாகரிகமான ஆர்ப்பாட்டம் நடத்தியதை மனதில் வைத்துக் கொண்டு அரசு செயற்படாமல் அங்கே பாதிக்கப்பட்ட மக்களின் அவலவாழ்க்கையை எண்ணி சகல உதவிகளையும் விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சகல அரசு இயந்திரங்களையும் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களின் நல்வாழ்வுக்கு உதவ முடுக்கிவிட்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய முக்கிய பணியில் முழுமூச்சுடன் பணிபுரிய எல்லோரும் இணையவேண்டும் எனவும் வேண்டுகின்றேன்.

யாழ்ப்பாண அனர்த்தங்களைப் பார்வையிடச் சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஜேவிபி பிரமுகர் விமல் வீரவன்ச அடங்கிய குழுவினருக்குநடந்த அனாகரீகமான ஆர்ப்பாட்டங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களோ, அல்லது யாழப்பாண மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களோ இதுவரை மன்னிப்புக் கோராத பட்சத்தில் தமிழர்களின் சார்பில் அக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹேம் அவர்களை சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவமதித்துப் பேசிய வேளையில் நாட்டுமக்கள் அனைவரது சார்பாகவும் நான் உடனடியாக பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தி, குற்றம் புரிந்தவர்கள் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.


வீ. ஆனந்தசங்கரி.
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி