உள்ளுரில் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துதல்

26.02.2009
பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ அலோக் பிரசாத் அவர்கள்
இந்திய உயர் ஸ்தானிகர்
கொழும்பு

மதிப்பிற்குரிய ஐயா

உள்ளுரில் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துதல்

பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய ரீதியிலான அனர்த்தங்கள் மற்றும் அதுபோன்ற வேறு பல சந்தர்ப்பங்களில் எல்லாம் பாதிப்புக்குள்ளான மக்களின் மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு தேவைகளின் அவசியத்தை அறிந்து உடனுக்குடன் தங்களின் அரசுக்கு தெரியப்படுத்தி உதவிய தங்களின் செயற்பாட்டிற்கு நன்றி கூற கடமைப்பட்டவனாவேன். சுனாமி ஏற்பட்டு ஒருசில மணித்தியாலங்களுக்குள் இந்திய வைத்தியக் குழு விரைந்து வந்ததையும் அதனைத் தொடர்ந்து பல நிவாரண உதவிகள் வந்தடைந்ததையும் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.

பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு ஈடுபடுத்தப்பட்டதாலும் அடிக்கடி இடம்பெயர்ந்ததாலும் போராளிகளாக விடுதலைப்புலிகளால் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டு விடுவோம் என்ற பீதியால் பாடசாலை செல்லாமையாலும் அவர்களின் உயர் கல்வி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் முற்றாகவும் வடகிழக்கின் எஞ்சிய மாவட்டங்களில் ஒரு பகுதியிலும் முற்றாக பாதிக்கப்பட்டுப் போனதை நான் கூறி நீங்கள் அறியவேண்டிய தேவையில்லை. பல்கலைக் கழகத்தில் கல்விபயில பல்வேறு துறைகளுக்கு தெரிவாகியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மாணவர்களுக்கு வெளியில் செல்வதற்கு அனுமதி கிடையாமையாலும் இந்தியாவிற்கு சென்று பட்டப்படிப்பை மேற்கொள்ள போதிய தகுதி இருந்தும் அதே காரணத்தால் கல்வியை தொடரும் சந்ததர்ப்பத்தை இழந்தும் மறுக்கப்பட்டும் உள்ளனர். அதேபோல் பட்டப்படிப்பிற்கு முன் வகுப்பாகிய ப்ளஸ் 1 மற்றும் 2 வகுப்புக்களில் சேர்ந்து கல்வி கற்கக்கூடிய திறமைசாலிகளுக்கும் அதேகதியே.

இலங்கை அரசின் அனுசரனையுடன் தங்கள் அரசின் அங்கீகாரத்தைப்பெற்று தமது கல்வி வாய்ப்பை இழந்த அல்லது மறுக்கப்பட்ட இத்தகைய மாணவர்கள் சிலரேனும் இந்தியாவில் உயர் கல்வி கற்கக்கூடிய வகையில் ஓர் திட்டத்தை தயாரித்து உதவுமாறு தங்களை வேண்டுகின்றேன். மேலும் இலங்கை அரசு மீள் குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளமையால் மேற்படிப்பு சம்மந்தமாக அக்கறை எடுக்க காலதாமதமாகலாம்.

இம் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் ஒத்தாசையையும் தாங்கள் பெறலாம்.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - த.வி.கூ