மிகச்சிறந்த செயல் சந்திரகாந்

மிகச்சிறந்த செயல் சந்திரகாந்

பல ஆண்டுகள் தம்வசம் இருந்த ஆயுதங்களை கைவிடுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது. இத்தகைய ஓர் முடிவை எடுக்க வழி வகுத்த கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கே இப்பெருமை உரியதாகும். இம்முடிவு கிழக்கு மாகாண மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொடுக்கும. உண்மையில் ரி.எம்.வி.பி. யினருக்கு விடுதலைப்புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையால் அன்று அவர்கள் தம் ஆயுதங்களை கைவிட்டிருக்க முடியாது. எனினும் அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடியது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதும் உண்மையே. இப்போதுதான் கிழக்கிழங்கையில் ஜனநாயகம் உதித்துள்ளது. இக்கட்சி தனது பெயரில் உள்ள புலிகள் என்ற சொல்லை கைவிடுவதோடு தம்மிடம் சிறுவர்கள் போராளியாக யாரேனும் இருப்பின் அவர்களையும் உடன் விடுவிக்க வேண்டும். அவர்கள் இனி மக்களுடன் கலந்துரையாடி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கி சகோதரத்துவத்தையும் வளர்க்கவேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள, சகல மக்களும் சகல உரிமைகளையும் அனுபவிக்கின்றார்களா என்பதை கவனிப்பதோடு, வேறு எவரேனும் அவர்களின் உரிமைகளில் தலையிடாது பார்த்துக்கொள்ளவும் வேண்டும். வேறு எந்த குழுக்களும் ஆயுதங்களுடன் இருப்பின் அவர்களை வற்புறுத்தி ஆயுதங்களை கைவிடவைப்பதோடு, தேவை ஏற்படின் அவர்கள் அரச பாதுகாப்பை நாடவைக்கவும் வேண்டும். மிக்க நன்றி தம்பி சந்திரகாந்தன் தொடர்ந்து கடைப்பிடிக்கவும்.



வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.