இடம்பெயர் முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்கவும்

07-10-2009
மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை
கொழும்பு.



மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு,


இடம்பெயர் முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்கவும்


பல்லாயிரக் கணக்கான இடம்பெயர்ந்த மக்களின் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் நம்பிக்கையிழந்து வெறுப்பும் அடைந்து பெரும் ஏமாற்றத்துடன் இக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கடந்த சில மாதங்களாக அவர்களின் பிரச்சினைகள் சில பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அகதி முகாம்களில் உள்ளவர்களில் அனேகர் நான் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்களும் நானும் 1970ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாக பாராளுமன்றத்துக்கு சென்றோம். அவ் வேளையில் வயதில் மிகச் சிறியவர் நீங்களே. ஆனால் நானோ வயதாலும் அனுபவத்தாலும் அரசியலிலும் மூத்தவனாக இருந்தேன். நான் கூறும் பல விடயங்கள் உங்களுக்கு கசப்பாக இருக்கலாம். ஆனால் நான் உங்களை பிழையான வழிக்கு இட்டுச் செல்ல மாட்டேன் என்பதையும் நான் கூறும் ஆலோசனைகள் நன்மை பயக்கக்கூடியதாக அமையும் எனவும் இலங்கை வாழ் பல்வேறு இன மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் என்பதையும் உறுதியாக கூறுகின்றேன். நான் அடிக்கடி கூறுவது போல் என்னுடைய நாட்டையும் அதன் மக்களையும் வலுவாக நேசிப்பவன் என்பதையும் நான் ஒரு தேச பற்றற்றவனாகவோ, துரோகியாகவோ எந்த சந்தர்ப்பத்திலும் கணிக்கப்பட கூடியவன் அல்ல என்பதை உறுதியாக கூறுகின்றேன். மேலும் நான் எவருக்கும் எடுபிடியாகவோ அல்லது சுயநலன் கருதி துதிபாடுபவனோ அல்ல. நான் எப்பொழுதும் உள்ளதை உள்ளபடி கூறுபவன் என்பதை நீங்களும் இந்த நாடும் நன்கறியும்.

நீங்கள் அதிஷ்டவசமாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் நாட்டின் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவியை அடைந்து மக்களுக்கு சேவை செய்ய முடிகிறது. ஆனால் நானொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் ஒரு உள்ளுராட்சி சபையினூடாக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய உரிமைகூட மறுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவுதான் கூறினாலும் இந் நாட்டில் சிறுபான்மை இனம் இல்லை என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதையும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் உங்கள் பாதையில் குறுக்கிடும் துணிச்சல் அற்ற நிலை நிலவுவதையும் யாராலும் மறுக்க முடியாது. சிறுபான்மை இனம் இல்லை என்பது உருவாக்க வேண்டியது உங்கள் கடமை. அந்த நிலைமை உருவாகி விட்டது என்ற நிலைமையை உணர்வதும் அதை எடுத்துக்கூற வேண்டியதும் மக்களுடையதாகும். இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு வேண்டிய முயற்சிகளை நீங்கள் செய்து வருகின்றீர்கள். ஆனால் நானோ ஒரு தடவையல்ல இரு தடவைகள் தேவையற்ற நிலையில் பாராளுமன்றம் இரு தடவைகள் கலைக்கப்பட்டதால் காலம் பூர்த்தியடையாது பதவி இழந்தேன். வேறு இரு சந்தர்ப்பங்களில் உள்ளுரில் ஏற்பட்ட சட்ட விரோத செயல்களால் வட பகுதியில் ஜனநாயகம் தடம் புரண்டு இரு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டேன். ஒரு தேர்தலில் ஒரு ஆயுதக்குழு ஆறு லட்சம் வாக்களர்கள் இருந்த இடத்தில் 8000 வாக்குகள் பெற்று 09 ஸ்தானங்களை கைப்பற்றியது. கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலை அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறி இன்னுமோர் ஆயுதக்குழு தன்னுடைய குழு உறுப்பினர்கள் பலரை உள்ளடக்கி வேறொரு அரசியல் கட்சிக்கு வடக்கு கிழக்கில் 23 தமிழ் பிரதிநிதித்துவத்தில் 22 ஐ பெற்றுக் கொடுத்தது. தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் வலுவான அறிக்கைகளையும் சிபாரிசுகளையும் ஆதாரமாகக் கொண்டு அன்றைய அரசாங்கம் உண்மையாக இஷ்டப்பட்டிருந்தால் அந்த நிலைமையை மாற்றி ஜனநாயகத்தை முறைப்படி செயற்பட வைத்திருக்க முடியும். இன்றைய அரசாங்கம் முறைப்படி உருவாக்கப்பட்டதல்ல என்ற எனது நிலைப்பாட்டை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டவுடன் பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் நடத்தி ஜனநாயகத்தை அதன் உரிய இடத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் திட்டமிட்டு மோசடி மூலம் என்னை தோற்கடித்திருந்தும் பாராளுமன்றத்திற்கு வரும் வாய்ப்பு பல என்னை தேடி வந்ததையும் நீங்கள் அறிவீர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வட மாகாண ஆளுநராக பதவி ஏற்கும்படி என்னை நீங்கள் கேட்ட போது நான் என்ன கூறினேன் என்பதையும், அதன் பின் கடந்த வருடம் ஜனவரி 22ம் திகதி மீண்டும் அப் பதவியை எனக்குத் தர நீங்கள் முன் வந்தபோது நான் தயக்கம் காட்டியதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நான் பதவியை தேடி அலைபவன் அல்ல. இன,மத பேதமற்ற அமைதியான ஓர் ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்குவதே எனது ஒரே நோக்கம் என்பதையும் உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இதை நான் கூறுகின்றேனே அன்றி இச் சந்தர்ப்பத்தில் இவை பற்றி கூறுவது பொருத்தமற்றதாகும்.

ஜனாதிபதி அவர்களே!

இந்த நிலையை அடைவது இலகுவான காரியமல்ல. அதற்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் கவனமெடுத்து சில பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இன்று நாடு எதிர்நோக்கும் மிகப் பாரதூரமான பிரச்சினையாகிய இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை. எதுவித தாமதமுமின்றி உடன் தீர்க்க வேண்டிய பிரச்சினையாகும். இந்த நாட்;டை உயிரிலும் மேலாக நேசிக்கும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய உங்கள் ஆலோசகர்கள் பலரிலும் கூடுதலாக விடமறிந்த எனது ஆலோசனைகள் இந்த விடயத்தில் இன்றியமையாததாகும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் நவம்பர் 18, 2005 ஜனாதிபதியாகி தொடர்ந்து வந்த 59வது சுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை 2006ம் ஆண்டு பெப்ரவரி 05ம் திகதி ‘தி ஐலன்ட்’ பத்திரிகையில் பிரசுரமானபடி இங்கே குறிப்பிடுகின்றேன். அதேபோன்று பயங்கரவாதிகளின் கெடுபிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் விரைவாக ஜனநாயக ஆட்சியை நாம் உருவாக்க வேண்டும். தமிழ், முஸ்லீம் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டிய எமது கடமையுடன் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால உலகம் சுபிட்சமாக அமைக்கப்படவும் வேண்டும். மொரஹகாகந்த மகாசமுத்திர அங்குரார்ப்பண நிகழ்வில் நான் கூறியதை மீண்டும் வலியுறுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்க சிறந்த ஆயுதம் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதேயாகும். இதற்கு தென்னிலங்கை வாழ் சிங்கள மக்கள் தயாராக உள்ளனர். இரத்த வெறிபிடித்த விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க நாம் தயாராக இல்லை. இருப்பினும் நாங்கள் நியாயமாகவும், நீதியாகவும் செயற்படுவதாக இருந்தால் குறைந்த பட்சம் திரு.வீ. ஆனந்தசங்கரி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கோரிக்கைகளுக்கு சம்மதிக்க வேண்டும்.

இந்தப் பேச்சில் மிக முக்கியமானவை யாதெனில் தமிழ், முஸ்லீம் மக்களின் உயிரையும், சொத்துக்களையம் பாதுகாக்க வேண்டும் என்றும் இவர்களுடைய குழந்தைகளின் எதிர்கால உலகம் சுபிட்சமாக அமைக்க வேண்டியது உங்கள் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளமையே. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே எனவும் கூறியுள்ளீர்கள். தென்னிலங்கை மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள் என உறுதி கூற நீங்கள் தவறவில்லை.

சாதாரண சிங்கள மக்கள் பற்றி நான் என்ன கருத்தை கொண்டிருந்தேன் இன்றும் கொண்டுள்ளேன் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள்.அச்சு ஊடகங்கள், பதிவு செய்யப்பட்ட மின் ஊடகங்கள் போன்றவற்றை பரிசீலிதத்hல் நூற்றுக்கணக்கான புகழாரங்களை சிங்கள மக்களுக்கு நான் சூட்டியிருக்கின்றேன். அதேபோன்று எனது அறிக்கைள், செவ்விகள், வெளிநாட்டில் வாழும் எம் நாட்டவர்கள், பல்வேறு வெளிநாட்டுத் தூதரகங்கள், கலந்துரையாடல்கள், பட்டறைகள் ஆகியவற்றிலும் அவ்வாறே செய்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இனக்கலவரம் நாட்டுக்கு அபகீர்;த்தியை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மகிழச்சியற்ற, வெறுப்புக்களை தூண்டக்கூடிய சம்பவங்கள் பல நாட்டில் நடந்தேறிய போதும் ஒரு சிறு இன வன்முறைகூட ஏற்படவில்லை. பெரியளவிலோ, சிறியளவிலோ வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் ஏற்பட்ட போதெல்லாம் மக்கள் அமைதியாக இருக்கும்படியும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும் என்னால் பல கோரிக்கைகள் விடப்பட்டன. அதேபோன்று நீங்களும் பல தடவைகள் செய்திருந்தீர்கள். எமது கோரிக்கைகளுக்கு செவிமடுத்து பொறுமையை கடைபிடித்து சாதகமாக செயற்பட்டனர். தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எனது கூற்றை மறுக்கமாட்டார்கள். சாதாரண சிங்கள மக்களுக்கு மதிப்பளிப்பதாயின், சிறுபான்மை மக்களுக்கு நீதி வழங்குவதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தங்களின் கூற்றை நானும் ஆமோதிப்பதே ஆகும். அவர்களுக்கு தமிழ் மக்கள் அப்பாவிகள் என்பதும் சிங்கள மக்களுக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்பதும் தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்பதும் அவர்கள் நன்கறிந்ததே.

ஜனாதிபதி அவர்களே! மிக்க வருத்தத்துடன் தங்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் சிலர் முறையாக செயல்பட வில்லை என்பதை தயக்கத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எல்லா புள்ளி விபரங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நிச்சயமாக நான் கூற மாட்டேன். அலரிமாளிகையில் 26-03-2009 அன்று நடந்ததொரு சம்பவத்தை ஞாபகமூட்ட விரும்புகின்றேன். பல்வேறு தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் விளக்கமளிக்கும் போது விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து 55,000 மக்கள் அரச பாதுகாப்பு பிரதேசத்துக்கு வந்து விட்டனர் என்றும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் எஞ்சியுள்ளவர்கள் இன்னும் 85,000 பேர்வரை இருக்கும் என்று நீங்கள் கூறியபோது அங்கே 2,50,000 மக்கள் அகப்பட்டுள்ளார்கள் என நான் கூறியிருந்தேன். உங்களை சுற்றி இருந்தவர்கள் நான் கூறிய கணக்கில் பிழை கண்டனர். ஆனால் எவ்வாறு 3,00,000 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தனர் என்பது பற்றி எவரும் விளக்கம் தரவில்லை. அதேபோன்று மே 07,2009 அன்று அரச உயர் அதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இன்றும் 20,000 பேர் மட்டுமே இருப்பதாகவும் 1,00,000 இற்கு மேற்பட்ட மக்கள் இருப்பதாக எவ்வாறு நான் கூற முடியும் என என்மீது குற்றம் கண்டனர் ஒரு பத்திரிகை மாநாட்டில. ஆனால் ஒரு சில நாட்களில் ஒரே இரவில் 85,000 பேரும் அதைத் தொடர்ந்து பல ஆயிரம் பேர் வந்துள்ளனர். ஆகவேதான் உங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு சங்கடமான நிலைமையை உருவாக்காது அவதானமாக செயற்பட வேண்டும்.

உங்கள் மீது குற்றம் காணுவது எனது நோக்கமல்ல தற்போது நடக்கின்ற சம்பவங்களை பார்க்கும் போது வன்னி மக்களின் உண்மையான நிலைப்பாடு பற்றி தங்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை என எனக்குத் தோன்றுகிறது. கால் நூற்றாண்டுகளுக்கு மேல் வன்னி மக்கள் புலிகளின் பயங்கரவாதத்திற்குள் வாழ்ந்தார்கள். பல வருடங்களாக சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் வன்னிக்கு வரும்வரை வன்னி மக்கள் சமாதானமாகவும், அமைதியாகவும் வாழ்ந்தனர். மக்கள் அதன்பின்; வாழ்க்கையில் பலவற்றை இழந்தனர். ஜனநாயக உரிமை முற்றாக பறிக்கப்பட்டு அடிப்படை உரிமை, மனித உரிமை போன்றவை கடுமையாக மீறப்பட்டுள்ளன. உங்களுடைய சுதந்திர தின பேச்சு இவர்களுடைய நிலைபற்றி சரியாக கணித்துள்ளீர்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் இன்று அதிகாரிகளால் ஏமாற்றப்பட்டு விட்டதாக இம் மக்கள் உணர்கிறார்கள். வன்னி மக்கள் இராணுவத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பால் இராணுவம் இலகுவாக யுத்தத்தை வெல்ல முடிந்தது. நாட்டை குறிப்பாக வன்னி மக்களை மீட்டெடுக்க இராணுவத்தினர் பெரும் தியாகங்களை செய்துள்ளனர். அதேபோல் வன்னி மக்களும் பயம், பீதி மத்தியில் யுத்தத்தை வெல்வதற்காக இராணுவத்தினருக்கு பல்வேறு வகையில் உதவியுள்ளனர். இப்போது அவர்களும் விடுதலைப் புலிகளால் பலாத்காரமாக இணைத்துக் கொள்ளப்பட்ட அப்பாவி பிள்ளைகளும் இன்று கவனிக்கப்படும் முறையை பார்க்கின்றபோது தங்களால் செய்யப்பட்ட உதவிக்கு தண்டிக்கப்படுவதாக உணர்கின்றனர். ஆனால் அவர்கள் உதவியின்றி இந்த யுத்தத்தை வென்றிருக்க முடியாது. வன்னி மக்களின் உதவியை பாராட்டும் முகமாகவே வன்னி மக்களை அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் இராணுவத்தினர் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர். படைகளைச் சேர்ந்த பெண் வீராங்கணைகள் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் மீது மிக அக்கறை கொண்டு செயற்பட்டனர். மக்கள் நடாத்தப்படும் முறை மகிழச்சிக்குரியதல்ல என அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். முகாம்களில் நடப்பதெல்லாம் தமக்குத் தெரியும் என தம்பட்டம் அடிப்பவர்கள் பலர் உள்ளனர். சிலர் என்ன கூறுவதென்றே தெரியாமல் உளறுகின்றனர். ஆனால் அவர்கள் கள நிலைமைகள் பற்றி எதுவும் அறியாதவர்களே. வன்னி மக்களுக்காக தம் உயிரை பறிகொடுத்த போர் வீரர்கள் எவ்வாறு வன்னி மக்கள் துன்பப்பட்டிருந்தார்கள் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்களின் சோகக் கதையை கூற இன்று அவர்கள் உயிருடன் இல்லை.

ஜனாதிபதி அவர்களே! இவ்வாறு நடிப்பவர்கள் தேச பக்தி என்று கூறுவார்கள். சிறந்த பௌத்தர்கள் எனக் கூறிக்கொண்டு உளறுபவர்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதோடு நீங்கள் ஒரு தந்தையாக, தாயாக, சகோதரனாக, சகோதரியாக ஒரு மகனாக அல்லது கணவனாக எண்ணி பேச தைரியமற்ற இந்த அப்பாவி ஜீவன்களை தயவு செய்து அனுதாபத்துடன் ஒரு தடவை நோக்குங்கள். வெளி உலகை திருப்திப்படுத்துவதற்காக நாம் எதையும் செய்யத் தேவையில்லை. மற்றவர்களை குற்றம் காணாது நாம் எமது மனச்சாட்சிக்கு அமைய நடப்போமாக.

ஜனாதிபதி அவர்களே! நீண்டகாலம் அமைதியாக இருந்து இன்று இக் கடிதத்தை எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். உங்களின் நன்மைகருதி நீங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகளுடன் என்னால் ஒத்துபோக முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள். விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட, வட பகுதியில் விரைவாக ஜனநாயக ஆட்சியை நிறுவ திடசங்கற்பம் பூண்டுள்ளீர்கள். எதிர்பார்த்த பலனை அடையாமையால் தயவு செய்து இந்த விடயத்தில் வேகமாக செயற்பட வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். மக்கள் உண்மையான ஜனநாயகத்தில்தான் தமது உரிமைகளை அனுபவிக்கிறார்களே அன்றி செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்தில் அல்ல. மக்கள் சுதந்திரமாக தமது தலைவர்களை தெரிவு செய்ய வேண்டுமே அன்றி அரசாங்கத்தினால் அல்ல. யாழ்ப்பாணமும், கிழக்கும் விடுவிக்கப்பட்ட பிரதேசமாக கருதினாலும் அங்கே மக்கள் சுதந்திரமாக வாழவில்லை. தயவு செய்து அவர்களை விடுவிக்கவும்.

தமிழ், முஸ்லீம் மக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்கின்ற கடமை இருப்பதாக கூறியுள்ளீர்கள் கிளிநொச்சி வென்றெடுக்கப்பட்ட உடன் யுத்தத்தை அரசு வென்றுவிட்டது என்றும் ஓர் ஆண்டு நீடித்தாலும் இனி ஒரு அப்பாவி உயிர்தன்னும் அவசியமின்றி இழக்கப்படக் கூடாது என உங்களுக்கு கூறியிருந்தேன். துரதிஷ்டவசமாக என் ஆலோசனையை யாரும் செவிமடுக்கவில்லை. எனது ஆலோசனை ஏற்கப்பட்டிருந்தால் பல அப்பாவி உயிர்களும் பலருடைய கால் கைகளும் பல கோடி பெறுமதியான அரச, தனியார் உடைமைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். வன்னி மக்கள் நாடோடிகள் போல் அடிக்கடி இடம்மாறி தம் உடைமைகளை படிப்படியாக இழந்து இறுதியில் மாற்று உடையின்றி முகாம்களை வந்தடைந்தனர். அனேகர் பல நாட்களாக, சிலர் சில வாரங்களாக உணவருந்தவில்லை. முகாம்களுக்கு வருவதற்கு முன்பு பல நாட்கள் குழந்தைகள் பால் இன்றி தவித்தனர். போதிய உணவின்றி மக்கள் தமது சக்தியை இழந்தனர். வன்னியில் பட்டினியால் அகதி முகாம்களுக்கு வந்த இறந்தவர்களில் பலர் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டனர். பலர் ஒரே கூடாரத்தையும், நூற்றுக்கணக்கானோர் ஒரே மலசல கூடத்தையும் பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

உலகின் எப்பகுதியிலும் கேள்விப்படாத அளவுக்கு மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். வேறு நாட்டு அகதிகளிலும் பார்க்க எமது அகதிகள் வசதியுடன் வாழ்கிறார்கள் என்று தம்பட்டம் அடியாது எமது மக்களை முறையாக பார்க்க வேண்டிய கடமை எமக்குண்டு. இடம்பெயர்ந்த மக்கள் தத்தம் மாவட்டங்களிலேயே பல இடங்களில் தங்கக் கூடிய வாய்ப்பு இருந்தும் தம் சொந்த இடங்களில் இருந்து நூறு மைல் தூரத்திற்கப்பால் அரசு தம்மை ஏன் கொண்டுவந்ததென கேள்வி எழுப்புகின்றனர். இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த பலருடன் கலந்துரையாடியபின் நானும் அதே கருத்தைக் கொண்டுள்ளேன். மீளக் குடியமர்த்தலுக்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட அரச அதிபர்களுடன் அவர்களின் கீழ் கடமையாற்றும் கிராம சேவகர்கள், சில உள்ளுர் தொண்டர்களிடமும் கையளித்தால் கண்ணி வெடிகள் இருக்கின்ற இடத்தை சுலபமாக கண்டுபிடிக்கலாம். இப் பிரதேசத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி அப் பிரதேசத்தை நன்கு அறிந்த ஒருவருடன் இது சம்பந்தமாக ஆலோசிக்காமையும் உதவி நாடாமையும் ஓர் பெரிய மர்மமாக இருக்கின்றது. இரை தேடி அலையும் ஒரு கிழட்டுப்புலியாக எனக்கு யாரும் முத்திரை குத்தமாட்டார்கள் என நினைக்கிறேன். அரசு இந்த மக்களை எதுவித தாமதமுமின்றி எதுவித காரணமுமின்றி உடனடியாக மீள்குடியேற்ற வேண்டும்.

ஜனாதிபதி அவர்களே! நீங்கள் அவர்களின் சொத்துக்களை பாதுகாத்துத் தருவதாக பொறுப்பெடுத்திருந்தீர்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களில் அந்த நாட்களில் ஓர் பிச்சைக்காரனைத்தன்னும் நான் பார்த்ததில்லை. அனேகமானவர்கள் மிக்க வசதியாகத்தான் வாழ்ந்தார்கள். சிலர் மிகப் பெரிய வீடுகளிலும் மற்றும் சிலர் உழவு இயந்திரங்கள், லொறிகள், கார்கள், வேன்கள், இரு சில்லு உழவு இயந்திரங்கள், ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்களையும் வைத்திருந்தனர். அனேகர் பெரும் கமக்காரர்களாகவும், பாற்பண்ணை, கோழிப்பண்ணை முதலியன வைத்திருந்தனர். வாழ்நாள் முழுதும் சேமித்த பணத்தை தங்க நகைகளாக மாற்றி அவைகள் உட்பட தம் சகல சொத்துக்களையும் அங்கேயே விட்டுட்டு வந்தனர். அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பும் போது எதுவும் இருக்கப் போவதில்லை. அவர்கள் மீட்கக் கூடிய சொத்துக்களை மீட்டெடுத்து ஓர் பொது இடத்தில் சேகரித்து வைக்க ஒரு சந்தர்ப்பம் கொடுப்பீர்களேயானால் அது பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.

அவர்களுக்கு இஷ்டமின்றியும் பெற்றோருக்கு விருப்பமின்றியுமே ஏறக்குறைய சகல பிள்ளைகளும் புலிகளால் பலாத்காரமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர் என்பதனை நீங்கள் உட்பட சகல உலகத்தவர்களும் அறிவர். பிள்ளைகளைப் பிடிப்பதை ஆட்சேபித்த சில பெற்றோர் தற்கொலை கூட செய்துள்ளனர். ஆட்சேபித்த பெற்றோர் அநேகர் மூர்க்கத்தனமாக புலிகளால் தாக்கப்பட்டும் உள்ளனர். அனேக பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் பதுங்கு குழிகளுக்குள் வைத்து உணவளித்தும் வந்தனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட பிள்ளைகள் தமக்கு முதல் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது தப்பியோடி வந்து விட்டனர். முகாம்களில் உள்ளவர்கள் எவரேனும் ஒருநாள் பயிற்சிக்கு சென்றிருந்தாலும் சரணடைய வேண்டுமென கேட்டுக் கொண்டதாலேயே சரணடைந்தனர். தீவிரமாக புலிகளுடன் செயற்பட்டவர்கள் முகாம்களை விட.;டு தப்பி வந்து நாட்டைவி;ட்டே ஓடி விட்டனர். தப்பியோட எண்ணாத அப்பாவி சிறுவர்களே இன்று புலிகள் என முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளனர். இவர்களில் அனேகர் திறமையாக கற்கக் கூடியவர்கள் என்பதால் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியவர்கள். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் மலேசியாவிலிருந்து வந்த பிள்ளைகள் வயது கட்டுப்பாடின்றி பாடசாலைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இழந்த ஐந்து வருட படிப்புக்கு ஈடுசெய்யும் வகையில் சில சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது போல் விடுதலைப் புலிகளினால் கல்வியை இழந்து அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த பிள்ளைகளுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும். கல்வி கற்க விரும்பாத மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டும். பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்காக சர்வகலாசாலை, தொழில்நுட்ப கல்லூரி, ஆகியவற்றுக்குத் தெரிவாகி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர் அவர்கள் அத்தகைய கல்வியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட ஸ்தாபனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். முகாம்களில் வேறு தீவிர புலிகள் இருக்க நியாயமில்லை. அத்தகையவர்கள் அடையாளம் காணப்பட்டு அதிகாரிகளுக்குத் தெரியபடுத்தப்பட்டுள்ளனர். தயவு செய்து இன்னும் முகாம்களிலும், புனர்வாழ்வு நிலையங்களிலும் உள்ள சிறு பயிற்சி பெற்றவர்களையும் ஆயுதப் பயிற்சி பெறாதவர்கள் அனைவரையும் விட்டுவிடுங்கள்.

மேலும் எதுவித தாமதமுமின்றி காயமடைந்தோர், வயதானவர்கள், நலிந்தோர் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகளுடைய தாய்மார்கள், ஊனமுற்றோர், புத்தி சுயாதீனமற்றவர்கள், மன நோயாளிகள், அனாதைகள,; ஆதரவற்றவர்கள், விடுவிக்க தகுதியுடையோர் அனைவரையும் விட்டு விடுங்கள். அத்துடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைப்பதோடு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தோரை அவர்கள் சேர்ந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வையுங்கள். அகதி முகாம்களில் என்ன நடக்கின்றது என்ற விபரங்கள் உங்களுக்குத் தரப்படுவதாக தெரியவில்லை. எதையும் நேரில் பார்த்தால்த்;தான் நம்பிக்கை ஏற்படும். நீங்கள் அவசியம் சில முகாம்களுக்கு விஜயம் செய்ய வேண்டும். மனிக் பார்ம் தவிர எமது நாட்டில் நீங்கள் அதிபராக இருக்கும போது இத்தகைய சம்பவங்கள் நடக்கவும் கூடாது. நடக்க விடவும் கூடாது. உங்களுடைய ஒரு பாவமும் அறியாத 3,00,000 திற்கு மேற்பட்ட மக்களின் உயிருடன் விளையாடலாம் என்று கருதுவோரின் கண்கள் திறக்கட்டும். பொக்கட் செலவுக்கு பெற்றோர் கொடுக்கும் பணத்தில் கசாப்புக்கடையில் உள்ள கால் நடைகளை வாங்கி அவற்றுக்கு விடுதலை கொடுத்த குழந்தைகளை கொண்ட பெருமைமிக நாடாகும் எமது நாடு. இறுதியாக முகாம்களுக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை ஒரு சல்லிக் காசையும் காணாத இடம் பெயர்ந்த குடும்பத்தினருக்கு அவர்களின் பிள்ளைகள், முதியோர் ஆகியோரின் சிறு தேவைகளுக்காக ஒவ்வொருவருக்கும் சிறு தொகை பணம் கொடுத்து உதவ நடவடிக்கை எடுக்கவும்.

தமிழ் மக்களை வென்றெடுப்பதாயின் முதலில் இவற்றை செய்து பின் அவர்களை விரைவாக மீள் குடியேற்றவும். அதன்பின்பு அபிவிருத்தி பற்றி யோசிக்கவும்.

நன்றி




வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ