இனப்பிரச்சினைக்கான தீர்வு.

01-06-2010
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச,
ஜனாதிபதி,
கொழும்பு.

இனப்பிரச்சினைக்கான தீர்வு.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

இனப்பிரச்சினைக்கு ஓர் திருப்திகரமான தீர்வு காண்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முதற்கட்டமாக தாங்கள் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை மக்கள் வரவேற்கின்றார்கள். இத்தனை உயிரிழப்புகள்,சொத்திழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர் காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எவரும் தலையிடாது இருக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

இது சம்பந்தமான எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. ஓற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு காணமுடியாதென்ற கருத்தை நான் பல காலமாக கொண்டுள்ளேன். அதற்கு ஒரேயொரு மாற்றீடாக நாட்டுப் பிரிவினைக்கு இடமளிக்காது, அவசியமேற்படின் இந்தியாவின் உத்தரவாதத்துடன் இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். சர்வகட்சி குழுவினரின் ஆலோசனையை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு தை மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.

“இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஸ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக வற்பறுத்தி வந்தமை ஓர் இரகசியமான விடயமல்ல. சமஸ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால், சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாக கூறி வந்துள்ளோம். இந்த விடயத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. வன்முறையை வெறுத்துத் தள்ளி அகிம்சை முறையிலும், நட்புடனும் எமது நாட்டு மக்களை எமது நிலைப்பாட்டிற்கு சம்மதிக்க வைத்து ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியாது என்பதையும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அத்துடன் நாடு பிரிந்து விடக்கூடும் என்ற அச்சம் கொண்டவர்களுடைய பயத்தைப் போக்க முயற்சிப்போம். எமது மக்கள் மத்தியில் பிரிவினைப் பற்றிய சிந்தனை முற்றாக அழிக்கப்பட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய தன்மையை ஏற்க வைப்போம்”

நடந்தேறிய தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுடைய தீர்ப்பை அரசும,; சர்வதேச சமூகமும் ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு பொருத்தமான பதிலை இத்துடன் இணைத்துள்ளேன். இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65119 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 9 வீதத்தினர் மட்டுமே. மேலும், பல்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் முறையாக வாக்களிக்க முடியவில்லை. ஆகவே, தயவு செய்து பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது சம்பந்தமாக சகல தமிழ் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இத்துடன் 2008ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ‘ஐலன்ட’ பத்திரிகையில் வெளியான எனது ஜனவரி 23ஆம் திகதிய உரையை இணைத்துள்ளேன்.

நன்றி.


அன்புடன்


வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக்கூட்டணி