இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு

03-05-2006
திரு. வே. பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
கிளிநொச்சி


அன்புள்ள தம்பி,

இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு

எனது முன்னைய கடிதங்களுக்கு நீங்கள் பதில் எதுவும் தராதபோதும் அவசிய தேவை காரணமாக மீண்டும் இக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் பதில் தராமை எனது கடிதங்கள் உங்களை வந்தடையவில்லை என எண்ணத் தோன்றுகிறது. எனது ஆலோசனைகளை ஏற்றிருந்தால் உங்கள் அமைப்பினுடைய தோற்றமும் மாறி நாட்டில் சமாதானமும் என்றோ ஏற்பட்டிருக்கும். எனது ஆலோசனைகளை ஏற்று செயற்பட இன்னும் காலம் கடக்கவில்லை. நான் நல்லெண்ணத்தோடு சுயமாக செயற்படுகின்றவன் என்பதை உறுதியாக நம்பவும், செல்வாக்கு மூலமோ அன்றி பண மூலமோ என்னை யாரும் வாங்கிவிட முடியாது. எமது மக்களும். எமது முழு நாட்டவரும் போதியளவு துன்பத்தை அனுபவித்து விட்டனர். உங்களுடைய செயற்பாடுகள் அனைத்தையும் உடன் நிறுத்தி மக்களை நிம்மதியாக வாழவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள்.

அண்மையில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக மீது தொடரப்பட்ட படுகொலை முயற்சியே என்னை இக்கடிதத்தை எழுதத் தூண்டியது. மிகவும் பாரதூரமான, மிகக் கோழைத்தனமான இக் குற்றச் செயலை முதற்கண் வன்மையாக கண்டிக்க விரும்புகின்றேன். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலைக்கு சமமான இச் சம்பவம் இந்திய முன்னாள் பிரதம மந்திரி ராஜீவ்காந்தி, தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் ஆகியோரின் படுகொலைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. கடிதத்தை சுருக்க வேண்டியுள்ளதால் உச்சியிலிருந்து உங்களை உருட்டி விட்ட இத்தகைய பாரதூரமான கொலைகள் பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை.

தொண்டர்கள் மீது பழியை போட்டுவிட்டு தந்திரமாக தப்பித்துக் கொள்ளும் தற்காலத் தலைவர்கள் அநேகரிடம் இல்லாத ஒரு சிறந்த குணம் உங்களுக்கு இருப்பதை நான் பாராட்டுகின்றேன். முன்னாள் யாழ் மேயர் துரையப்பா படுகொலை தொடக்கம் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கொலை முயற்சிவரை அரசியலிலும், தீவிரவாதத்திலும் ஈடுபடத் தொடங்கிய நாள் தொட்டு இன்றுவரை பொறுப்பை தட்டிக்கழிக்காமல் போராளிகளின் தப்பு தவறுகளுக்கு பொறுப்பேற்பது தலைமைக்குரிய நல்ல அம்சமாகும். இத்தகைய குற்றங்களை இன்னும் எவ்வளவு காலத்துக்கு மூடி மறைக்கப் போகின்றீர்கள?. இன்று உங்களை மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தின் தலைவரென உலகத்திலேயே அடையாளப் படுத்தப்பட்டுள்ளீர்கள். ஆரம்பத்தில் இருந்தே நல்ல ஆலோசனைகளுக்கு செவிசாய்த்திருந்திருப்பின் இன்று பெருமளவு தமிழ் மக்கள் தாம் இழந்த உரிமைகளை மீளப்பெற்று நாட்டின் ஏனையவர்கள் போல் சகல உரிமைகளையும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உமது ஆசை நிறைவேறியிருக்கும். உமது உறுதிப்பாட்டையும் போராளிகளின் கட்டுப்பாட்டையும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிகைப்படுத்தி பேசிய ஒரு காலம் இருந்தது. உங்கள் கொள்கைகளையோ அன்றி வழி முறைகளையோ ஆதரிக்காத பல சிங்கள, முஸ்லீம் மக்கள் கூட பாராட்டியதை நான் அறிவேன். அந்த நிலை இன்று மாறிவிட்டது. உங்களுடைய தளபதிகளும் அவர்களின் கீழ் செயற்படுகின்றவர்களும் பொது நோக்குடன் செயற்படாத சுயநலமிகளாகி விட்டனர். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தினரைப் பற்றியுமே கவலைப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவராக உங்களைவிட்டுப் பிரிவதற்கு முன் விழிப்படையுங்கள்.

இந் நாட்டுக்கு சமாதானத்தைக் கொண்டுவர நம் நாட்டவர் அனைவரும் சர்வதேச சமூகத்தினரும் அயராது உழைக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு உங்களை கொண்டு வர மிகப் பிரயத்தனம் செய்கின்றனர். தங்களின் கீழ் மாகாண அரசியல் தலைவர்களை வானூர்தி மூலம் கொண்டுவர மறுத்த அரசின் செயல், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறி ஒரு கர்ப்பிணித் தாயை கொண்டு இராணுவத் தளபதியை கொல்வதற்கு மனித குண்டாக உங்கள் போராளிகள் உபயோகப்படுத்தியதும் அந்தளவுக்கு பாராதூரமான விடயமல்ல.

ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வி யாதெனில் இராணுவத் தளபதியை கொலை செய்ய ஒரு மனித குண்டை அனுப்பக் காரணமாக இருந்தவர் யார் என்பதும், எதற்காக அனுப்பினார் என்பதுமே ஆகும். இதற்காகவே உங்கள் அமைப்புக்குள் எமது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்பாத போராளிகள் இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை நான் சுமத்துகின்றேன். தலைமை தடம் புரளுகின்றது என்பதை நீங்கள் ஏற்றக் கொள்ள வேண்டும். சமாதான முயற்சியை குழப்ப அன்றி தாமதிக்க, வேண்டுமென்றே மணிக்கூட்டை பின் திருப்பியவர் யார்?

மூதூரிலும் ஏனைய பகுதிகளிலும் அரச படைகளால் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களை இருசாராரையும் சமமாக கண்டிக்கின்றேன். மக்களை பாதுகாப்பதும் சிறியளவிலே தன்னும் பீதியடையச் செய்யாதிருப்பதும் அரசின் கடமையாகும். மக்களை கேடயமாக பாவியாது மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து ஒதுங்கி செயற்பட வேண்டிய கடமை உங்களுக்கும் உண்டு. மக்கள் இடம் பெயர்வதற்கும் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஏனைய சேதங்களுக்கும் விடுதலைப் புலிகளும் பொறுப்பேற்க வேண்டும். அப்பாவி மக்கள் பற்றி கடுகளவேனும் சிந்திக்காது பலரின் உயிரை குடித்து மேலும் பலரை ஊனமுறச் செய்த மனிதகுண்டுத் தாக்குதல் இராணுவத்தை வலுவாகத் தூண்டிவிடக்கூடிய சம்பவமாகவே இதை உணர்கின்றேன்.

நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டிய நேரம் உமக்கு வந்துவிட்டது. இனியும் நீர் உமது தளபதிகளையும் அவர்களுக்கு கீழ் செயற்படுகின்ற போராளிகளையும் நம்பியிருக்க முடியாது. அத்தகைய போராளிகள் பலர் குண்டர்கள் போல் செயற்பட்டு அப்பாவி மக்களை துன்புறுத்துகின்றனர். மானிடர்களிலும் உயர்ந்தவர்கள் போல் தம்மை கணித்து மக்களை அடிமைகள் போல் நடத்துகின்றனர். மக்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. தமிழ் ஈழம் என்றும் அடையக்கூடியதல்ல என்பதற்கு சில காரணங்களை இங்கே தருகின்றேன். ஆகவே பிரிவினையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கு சம்மதம் தெரிவித்து அறிவியுங்கள். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 49.7 வீத வாக்காளர்கள் பகிரங்கமாக சமஷ்டி தீர்வுக்கு ஆதரவளிததுள்ளதோடு கடைசியாக நடைபெற்ற மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினை தீர்விற்கு சமஷ்டி முறையை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது இத் தீர்வை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். நீங்கள் பிரிவினையை கைவிடின் ஜே.வி.பி, ஹெல உருமய ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எது எப்படி இருப்பினும் மக்களின் தீர்ப்புக்கு இப்பிரச்சினை விடப்பட்டால் நூற்றுக்கு எண்பது வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்பது உறுதி. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள்கூட ஏற்புடையதான மாற்றுத் தீர்வை அரசு முன்வைத்தால் அதை மக்களுக்கு சிபாரிசு செய்வதாக கூறியிருந்தார்

சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். எமது மக்கள் இதை வரவேற்பார்கள். சிங்கள, முஸ்லீம், மக்களும் இத் தீர்வை வரவேற்பார்கள். சர்வதேச சமூகமும் முழு ஆதரவோடு பல்வேறு உதவிகளும் வழங்க தயாராக உள்ளது.

தமிழீழ கோரிக்கையை ஆதரிப்பதில்லை என இந்தியாவில் ஆட்சிபீடம் ஏறிய கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அவர்கள் நிலைப்பாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையர் மீது விருப்பு வெறுப்பில் ஏற்பட்ட நிலைப்பாடு அல்ல. 1960 ம் ஆண்டளவில் கைவிடப்பட்ட தனிநாட்டுக் கோரிக்கை மீண்டும் தமிழ் நாட்டில் புதுப்பிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயமே இதற்குக் காரணமாகும். என்றோ கைவிடப்பட்ட கோரிக்கையை இன்று தமிழ் நாட்டில் யாரும் பேசுவதில்லை. இந்தியாவையும் இலங்கையையும் 28 மைல் அகலம் கொண்ட பாக்குநீரிணையே பிரிக்கின்றது என்பதும்; கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவொரு விடயமாகும். ஆகவே நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் எத்தகைய அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும் நாட்டுப் பிரிவினை என்றும் சாத்தியமாகாது. ஆகையால் அதற்குப் பதிலாக வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். தற்போது நீங்கள் திருமணமாகி பல பொறுப்புக்களுடன் உள்ளீர்கள். கவனிப்பதற்கு சொந்த பிள்ளைகளோடு பல ஆயிரக்கணக்கானோரின் பிள்ளைகளின் பொறுப்பும் உண்டு. ஆகவே மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை உங்களுக்கு உண்டு. ஒரு தந்தை என்ற முறையில் பிள்ளைகளைப் பற்றிய அக்கறை பெற்றோருக்கு எவ்வளவு உள்ளது என்பதை அறிவீர்கள். ஒரு பிள்ளைக்கு மரணம் ஏற்படுமிடத்து அல்லது பிள்ளையின் படிப்புக்கு பங்கம் ஏற்பட்டால் பெற்றோர் எவ்வளவு வேதனை அடைகின்றார்கள் என்பதை நீங்கள அறிவீர்கள். தலைவனை இழந்த குடும்பம் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வாழ்கிறது என்பது நீங்கள் அறியாததல்ல. யுத்தம் காரணமாக 60,000 பேரளவில் இறந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் எனது மதிப்பீட்டின்படி அதிலும் மிகக் கூடிய எண்ணிக்கையினர் இறந்திருக்க வேண்டும். கூறப்பட்டுள்ள எண்ணிக்கை நிலையானதாக இருப்பினும் தினமும் பலர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமது தரப்பில் 20,000 பேர் இறந்ததாக இராணுவமும், உங்கள் தரப்பில் 18,000 போராளிகள் இறந்ததாகவும் கூறப்படுகிறது. வேறு வழிகளில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கானோரின் எண்ணிக்கைக்கு என்ன நடந்தது. உங்களால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு அமையவே உங்கள் போராளிகள் செயற்பட்டார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. போராளிகள் தாமாகவே தம் இஷ்டப்படி கொலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். உங்களுடைய போராளிகள் பல ஆண்டுகள் பிரதமர் பதவியை வகுத்திருக்கக்கூடிய ஒருவரை இந்தியாவுக்கு இல்லாமல் செய்தனர். பல நன் மதிப்புக்குரிய சிங்கள, தமிழ், முஸ்லீம் அரசியல் தலைவர்களை நாடுபூராவும் கொன்றுள்ளார்கள். முன்னாள் யாழ் நகர மேயர் அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்த கொலை இடைநிறுத்தப்படாது 30 வருடங்களாக தொடர்கின்றன. மருதானை, மத்தியவங்கி, மத்திய பஸ் நிலையம், மத்திய தந்தி நிலையம், அலுத்கம புகையிரத வண்டி, ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து அவயங்களை இழந்து கண்பார்வை இழந்து, நடமாட முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் உங்கள் போராளிகளே பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் பின்வரும் படுகொலைகளை மறந்திருக்கமாட்டீர்கள். அனுராதபுரத்தில் 129 பேர், ஹபரணவில் 127 பேர், ஏறாவூரில் இரு சம்பவங்களில் 243 பேர், காத்தான்குடி 103 பேர், பள்ளியகொடலவில் 161 பேர், 35 மாணவ சிறுவர் புத்த குருமாரும், திருக்கோயிலில் 678 பொலிசாரும் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்துடன் உங்களுடைய தற்கொலைப் படையினர் தம்முடன் எடுத்துச் சென்ற உயிர்கள் எத்தனை? இப் படுகொலைகள் சிங்களவர்கள், தமிழர்கள். முஸ்லீம்கள் மத்தியில் எத்தனை விதவைகளையும் அநாதைகளையும் உருவாக்கியுள்ளன.

உங்கள் போராளிகளில் சிலர் பின்வரும் சம்பவங்களை எனக்கு ஞாபகப்படுத்த முயற்சிக்கலாம் . அவையாவன செம்மணி மயானக் கொலைகள், நெடுந்தீவு படகுக் கொலை, கிழக்கு பல்கலைகழக அகதிமுகாம், நவாலி தேவாலயம், குடத்தனை பாடசாலை, புதுக்குடியிருப்பு குண்டுத்தாக்குதல், அத்தோடு கிழக்கு மாகாணத்தில் கொக்கட்டிச்சோலை போன்ற சம்பவங்கள் அடங்கும். இச் சம்பவங்கள் நான் அறியாததல்ல. இரு பக்கத்திலும் இன்னும் பல சம்பவங்களைக் குறிப்பிடலாம் ஆனால் இம் மரணங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க உங்கள் போராளிகளால் கொலை செய்யப்பட்ட சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகியோரின் எண்ணிக்கை மிகக் கூடியதே. அர்த்தமற்ற இக் கொலைகளால் யார் என்ன பயன் அடைந்தார்கள்?

உங்களுடைய போராளிகளே இக்கொலைகளுக்கு பெருமளவில் காரணமாக இருந்தாலும் கூட சர்வதேச சமூகம் உங்களை மட்டுமே படு பாதகமான பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் என காலம் காலமாக உங்களை குறிப்பிட போகின்ற இப்பட்டத்தை சூட்டியுள்ளது. எதுவித நியாயமும் இன்றி வட மாகாணத்தில் இருந்த முஸ்லீம்களை விரட்டிய சம்பவத்தை உங்கள் எதிர்கால சந்ததி சபிக்கும். பௌத்தர்கள் மட்டுமன்றி சகல மத இனத்தவர்களும், இலங்கைக்கு பெருமை தேடித்தரும் அனுராதபுரத்தில் உள்ள அரச மரத்தையும், புனித தந்தத்தைக் கொண்ட ஆலயத்தையும் அழிக்க முயற்சித்தமையை எதிர்கால சந்ததி சபிக்கும். கண்டியில் உள்ள புனித தந்த கோயிலுக்கும் சைவ ஆலயங்களாகிய விநாயக, பத்தினி, முருகன் ஆகிய கோயில்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

1983 ஜூலை உங்கள் போராளிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்தே நாட்டில் பெரும் வகுப்பு கலவரம் மூண்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, பல்லாயிரம் கோடி தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் எரிக்கப்பட்டும் பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து ஒரு நொடிப்பொழுதில் ஓட்டாண்டி ஆகினர். பல லட்சம் பேர் நாட்டை விட்டு பிற நாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். கடந்த சில வருடங்களாக உங்கள் போராளிகளின் கொடூர செயலை பொறுக்க முடியாது உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்கள் புத்தளம் தொடக்கம் பாணந்துறை வரை தென்னிலங்கையில் சிங்களவர், முஸ்லீம்களோடு நிம்மதியாக, ஆனால் வறுமையோடு போராடிக்கொண்டு வாழ்கின்றனர். 1991ம் ஆண்டு வடக்கே வாழ்ந்த முஸ்லீம்கள் தலா 500 ரூபா பணத்துடன் தமது சொத்துக்கள் அத்தனையையும் விட்டு விட்டு இடம்பெயர்ந்த அவர்களில் அனேகமானோர் தெற்கே அநாதைகளாக வாழ்கின்றனர். இத்தகைய சூறையாடல் முன்பு இந்த நாட்டில் நடபெறாத ஒன்றாகும்.

தம் கலாச்சாரம் நாகரீகம் பற்றி பெருமை கொண்டிருந்த தமிழினம் இன்று தலை குனிந்து நிற்கிறது. இன்று நாம் அநாகரிகமான கொடூர கொலை செய்கின்ற, சூறையாடும் கூட்டமாக கணிக்கப்படுகின்றோம். தமிழினத்துக்கு இந்த அபகீர்த்தி ஏற்பட்டமைக்கு உங்கள் போராளிகளே பொறுப்பேற்க வேண்டும. எமக்காக போராட நீங்கள் வந்தவேளை எமது மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த உரிமைகளை தன்னும் உங்களால் பாதுகாக்க முடிந்ததா? நாம் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கின்றோமா? உங்கள் போராளிகளால் எமது மனித உரிமைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்களா?

நீங்கள் அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட வேளை எமது மக்கள் சந்தோஷமாக திருப்தியுடன் வாழ்ந்தார்கள் என்பதை மறுப்பீர்களா? அதுவரை இராணுவத்துடன் எமது மக்கள் நல்லுறவுடன் வாழந்தார்கள் என்பதையும் அதன் பின்பே உங்கள் போராளிகள் படிப்படியாக அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கைப்பற்றி இன்று எம் மக்களை தம் இரும்புக் கரத்தால் ஆள்கின்றனர். எமது மக்கள் கடவுளுக்கு பயந்து நியாயமாக நடப்பவர்கள். வன்முறையை உதறி தள்ளுபவர்கள். உங்களுடைய போராளிகளே மக்களை மிருகத்தனமாக கொன்றும், கைக்குண்டுகள் வீசியும் கிளைமோர் கண்ணி வெடிகளை புதைத்தும் வன்முறையையும் தூண்டுகின்றனரே அன்றி பொது மக்கள் அல்ல.

உங்கள் இயக்கத்தை ஒரு உள்ளுர் பத்திரிகை, கர்ப்பிணி தாய்மாரின் வயிற்றை கீறி பிறக்காத பிள்ளைகளை வெளியில் எடுத்து சுவர்களிலும், மரங்களிலும் அடித்துக்கொல்பவர்கள் என்றும் குழந்தைகளை துண்டு துண்டாக வெட்டுபவர்கள் என்றும் சிறு பிள்ளைகளை போர்வீரர்களாக சேர்த்துக் கொள்பவர்கள் என்றும் கூறியுள்ளது. உங்களைப்பற்றி பேசப்படும், எழுதப்படும், விடயங்களுக்கு இதுவொரு சிறு உதாரணமாகும். உங்களுடைய போராளிகளை நீங்கள் கட்டுப்படுத்தி செயற்பட வைக்கத் தவறியமையால் இன்று அவர்கள் கட்டுமீறி செயல்படுகின்றனர். ஆகவே எமது மக்களை காப்பாற்ற இன்னும் காலம் கடந்து விடவில்லை. உங்களுடைய அதிகாரத்தை உங்கள் உள்ளுர் தலைவர்கள் அபகரிப்பதற்கு முன் செயற்படுங்கள்.

விடுதலைப்புலிகளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு உரிய காரணத்தை கூற விரும்புகின்றேன். முக்கியமாக உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளுரிலும் வெளியூர்களிலும் செயற்படும் தமிழ், அச்சு, இலத்திரனியல் ஊடகங்களாகும். வெளிநாட்டில் வாழும் எமது தமிழர்களும் சர்வதேச சமூகமும் இவர்களுடைய புளுகு மூட்டைகளை எவ்வளவு காலம்தான் நம்புவார்கள்?. தங்களுக்கு சாதகமாக செயற்படும் சில ஊடகங்களின் கீழ்த்தரமான செயற்பாடுகளே கனடாவில் புலிகள் இயக்கம் தடைவிதிக்கப்பட்டமைக்கு முக்கியமான காரணமாகும். இலவசமாக விநியோகிக்கப்படும் 18க்கு மேற்பட்ட புலிகளுக்கு ஆதரவான வாரப்பத்திரிகைகள், மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், விடுதலைப் புலிகளை கண்டிப்பவர்களை கீழ்த்தரமாக விமர்சித்தல், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், விவாதங்கள் ஆகியன வானொலி, தொலைக்காட்சி பத்திரிகை ஆகியன இதற்கு உறுதணை செய்துள்ளன. புத்தி சுயாதீனமற்ற சிலரால் நடத்தப்படும் இணையத்தளங்களை படித்துவிட்டு விழுந்து சிரிப்பவர்களும் உண்டு. இத்தகைய கீழ்த்தரமான பிரச்சாரத்தை அவை சாதகமற்று பாதகமாக அமைவதால் உடன் நிறுத்த நடவடிக்கை எடுங்கள்.

அடுத்து பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தலைவர்களாகிய திரு சு.ப. தமிழ்ச்செல்வன், கலாநிதி அன்ரன் பாலசிங்கம் போன்றவர்களுடைய தரமாகும் பொதுமக்களே கிளைமோர் கண்ணி வெடிகளை வெடிக்க வைத்து இராணுவத்தினரை தாக்குகின்றார்கள் என்ற தமிழ்ச்செல்வனின் கூற்று அதேபோன்ற வேறு கூற்றுக்களையும் கேட்கும் சர்வதேச சமூகம் இவர்களை ஏளனம் செய்கிறது. தன்னுடன் பாங்கொக் நகருக்கு பேச்சுவார்த்தைக்கு வந்த போராளி தலைவர்கள் தமக்கு உதவுவதை விடுத்து தம் இஷ்டப்படி செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு சாதாரண விடயமல்ல. அதேபோல் என்னை கட்டி முத்தமிட்டு கிளிநொச்சியில் பொட்டம்மானால் நடத்தப்படும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு விருந்துக்கு அழைத்தது எனக்கு மறைமுகமாக விடுத்த அச்சுறுத்தலாகும். இவ்வாறு ஒழுங்காக பேச, நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் முக்கிய பேச்சவார்த்தைக்கு செல்ல பொருத்தமானவர்களா? கலாநிதி பாலசிங்கம் அவர்கள் பௌத்த குருமாரை, நாட்டுத் தலைவர்களை அழைக்க பிரயோகிக்கும் மட்டமான வார்த்தைகளை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

நிலைமை கட்டுமீறி போய்க்கொண்டிருக்கிறது. நம் நாடு இன்னுமொரு வகுப்பு கலவரத்தை எதிர்நோக்க முடியாது. சர்வதேச சமூகம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு திருப்திகரமான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முழு சக்திகளையும் பிரயோகிக்கின்றது. நீங்களும் இதை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நாட்டின் சகல அரசியல்கட்சிகளும் ஏற்கக்கூடிய வாய்ப்பு உண்டு. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதை பௌத்த குருமார்களும் வரவேற்கின்றனர். நாட்டுப் பிரிவினையை மட்டுமே சிங்களவர்கள் எதிர்க்கின்றார்கள். தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி தீர்வை நீங்கள் ஏற்கும் பட்சத்தில் அத் தீர்வுக்கு முழு ஆதரவும் கொடுக்க அனைவரும் தயாராக உள்ளனர். எதிர்பாராத இடங்களில் இருந்தும் இத் தீர்வுக்கு பெரும் ஆதரவு திரளும். என்னுடைய அனுபவத்தில் இந்திய முறையிலான ஓர் தீர்வே மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

இந்திய முறையிலான தீர்வை நான் வலியுறுத்திக் கூறுவதற்குக் காரணம் அதையாரும் சமஷ்டி முறை என்றோ ஒற்றையாட்சி என்றோ கூறாமையால் அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும். இத் தீர்வை நான் முன்வைக்கும் போது நான் எவரினதும் முகவராக செயற்பட வில்லை. அழுத்தத்துக்கு நான் அடிபணிபவனும் அல்ல. வாய்ப்புக்களுக்கு மயங்குபவன் அல்ல. இத் தீர்வுக்கு நீங்கள் உடன்படுவதாக இருந்தால் எஞ்சிய விடயங்களை அனுசரணையாளர் சர்வதேச சமூகம் ஆகியோருடன் இணைந்து தீர்வு காணலாம்.

நன்றி

இப்படிக்கு
அன்புள்ள



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி