தமிழ் மக்கள் மீதான கொலைகளை அனைத்து தரப்பும் உடன் நிறுத்துக
வடக்கு கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான கொலைகளை உடன் நிறுத்த தமிழ் அமைப்புக்கள் மட்டுமல்ல, அரசும் மதகுருமார்களும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும். அப்பாவி பொது மக்களைப்பற்றி சிறிதும் கவலைப்படாது இராணுவத்தினரை இலக்கு வைத்து கைக்குண்டு எறிதல், கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல் போன்றவையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அண்மை காலமாக அரசியற் காரணத்திற்காக தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவது வேதனைக்குரியதும், கண்டனத்துக்குரியதுமாகும். எவரது உயிரையும் எடுக்கும் உரிமை எவருக்கும் ஆண்டவனால் வழங்கப்படவில்லை.
அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெறும் கொலைகளை முடிவிற்கு கொண்டுவர அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை விடுதலைப் புலிகள் சக அமைப்புக்களின் உறுப்பினர்களை முடிவற்று செய்யும் தொடர் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்த காலங்களில் மாற்று அமைப்பினர் என்ற ஒரே காரணத்தால் பலர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும், இன்று அவ் அமைப்புக்களின் பலர் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவை புலிகளிற்கு பயன்படுவதை கருத்திற்கொண்டாவது, கடந்தகால மாற்று இயக்க கொலைகளினால் பயன் இல்லை என்பதை விடுதலைப் புலிகள் இனியாவது உணர்ந்து கொலைகளை நிறுத்த முன்வர வேண்டும்.
புலிகளை சந்தித்துவரும் மதகுருமார்கள், புலிகள் சொல்வதை மட்டும் செவிமடுத்து வருவதை விட்டு புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொலைகளை நிறுத்துமாறு கேட்க, மதத்தின் பெயராலும்;, மக்கள் சேவையின் பெயராலும் கடமைப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்கள் கொலைகளை கட்சி அடிப்படையில் ஆதரிப்பதை விடுத்து பத்திரிகைகளும் வெளிநாட்டு தமிழர்களும், புலிகளின் அமைப்பை வலியுறுத்துவதோடு நடைமுறை மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். எமது மண் இன்று எமது மக்களாலேயே ஒரு சுடுகாடாகி வருகின்றதென்ற உண்மையை உலகத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று வடக்கு கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லீம் மக்கள் இழப்பதற்கு எதுவுமற்றவர்கள் ஆகிவிட்டார்கள் என்பதையும் உணர வேண்டும்.
தமிழ் மக்களிற்கு கௌரவமான தீர்வு
தமிழ் மக்களிற்கு கௌரவமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வு ஒன்றை தென்னிலங்கை அரசியற் கட்சிகள் ஒருமுகமாக முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதரவை பிரதான எதிர்கட்சியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க வழங்க முன்வர வேண்டும். தென்னிலங்கை கட்சிகளின் விரைவான இம்முயற்சியே இந்த மண்ணில் கொலைகளை நிறுத்தக்கூடிய சூழ்நிலையை விரைவுபடுத்தக்கூடிய ஒரேயொரு பாதையாகும். இல்லாவிடின் அதற்கான கூடிய விலையை இந்த நாடு கொடுக்க வேண்டிவரும். அநியாயமான மூவின மக்களினதும் உயிரிழப்பிற்கே அது வழிவகுக்கும். கௌரவமான தீர்விற்கும், கொலைகளை நிறுத்தவும், முதல்வர் டாக்டர் மு. கருணாநிதியும் இந்திய மத்திய அரசும் தமது செல்வாக்கை சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் செலுத்த வேண்டும்.
காலவரையறையுடன் பேச்சுக்களை மீள தொடங்குக.
ஒரு காலவரையறையுடன் அரசும் - புலிகளும் பேச்சுக்களை தொடங்குவதன் மூலமே தீர்வை காண்பதுடன் ஏனைய பல்வேறு பிரச்சினைகளையும் முடிவிற்கு கொண்டுவர முடியும். ஒரு காலவரையறை வகுத்து நிரந்தர அரசியல் தீர்வுக்கான பேச்சை ஆரம்பிக்க தவறியமையாலேயே இன்று இந்த சமாதான ஒப்பந்தம், அனைத்து தரப்புக்கும் கொலைகளை இலகுவாக செய்துவிட்டு தப்புவதற்கே வழிவகுத்து கொடுத்துள்ளது. இத்தனைக்கும் கொல்லப்பட்டு வருபவர்கள் அப்பாவி தமிழ் மக்களும் கட்சிகளினதும், புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களினதும் ஆதரவாளர்களே. ஒட்டு மொத்ததத்தில் தமிழ் சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள விரைவாக செயற்படுவதே உண்மை
காலவரையறையுடன் பேச்சுக்களை ஆரம்பமுதலே தொடங்காத காரணத்தினால்தான் இன்றும் இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசாமல் பேச்சுக்களில் ஆரம்பத்தில் புலிகள் சார்பிலேயே கலந்து கொண்ட கருணாவை பற்றி மட்டும் பேசிக்கொண்டு காலத்தை விரையம் செய்கின்றோம். தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கே இந்த கால அவகாசம் “சமாதான காலம்” என்ற பெயரில் பயன்படுகின்றது என்பதே துரதிஷ்டமான உண்மை நிலை. எனவே காலவரையறையுடன் கூடிய “இறுதி அரசியல் அதிகாரத்தை பெறுவது பற்றிய” பேச்சுக்களை தொடங்க சர்வதேச சமூகம் அரசையும், புலிகளையும் நிர்ப்பந்திக்க வேண்டும். அதேவேளை, அவுஸ்திரேலியா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் மனித உரிமைகளை மேம்படுத்தும் விடயத்தில் பேச்சுவார்த்தை தரப்புகளிற்கு பங்களிப்பு வழங்க முடியும்.
அனுசரணையாளர்களினதும், கண்காணிப்பு குழுவினதும் மெத்தன போக்கு
அனுசரணையாளர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் செயற்பட்டு வருபவர்கள், சமாதான ஒப்பந்த ஆரம்பகாலத்திலேயே அரசியல் கொலைகள் தொடங்கியபோது பாராமுகமாக இருந்தது இன்று நிலைமைகளை மோசமடைய செய்துவிட்டது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாநகரசபை உறுப்பினர் போன்ற மக்கள் சேவையாளர்களின் கொலைகளின் போதே விடுதலைப் புலிகளின் அரசியற் கொலைகளை கட்டுப்படுத்த முயற்சித்திருந்தால் இன்று கண்காணிப்பு குழுவினரே கடல் நீர்ப்பரப்பில் 710 போர் வீரர்களையும், மாலுமிகளையும் கொண்ட கப்பலை புலிகள் தாக்க வந்தபோது தங்கள் உயிருக்காக அடைக்கலம் தேடி ஓட வேண்டி வந்திருக்காது.
வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி