இனப்பிரச்சனைக்கு வணக்கத்திற்குரிய பீடாதிபதிகளின் ஆதரவு கோரல்

09.02.2007
பல்வேறு மதத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தமிழாக்கம்.

இனப்பிரச்சனைக்கு வணக்கத்திற்குரிய பீடாதிபதிகளின் ஆதரவு கோரல்

59வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் நாமெல்லோரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒருமித்துப் போராடிய சிங்கள, தமிழ், இஸ்லாமிய மற்றும் இனத்தவர்கள் என மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தனது சுதந்திர தினச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ஆகவே குறிப்பிட்ட ஒரு இனத்தவருக்கன்றி சிங்கள, தமிழ், இஸ்லாமிய, பறங்கிய, மலே உள்ளடக்கிய இலங்கையர்கள் அனைவருக்கும் இந்தப் பெருமை சேரும். 1948ஆம் ஆண்டு முதற் பிரதம அமைச்சராகிய அதி கௌரவத்திற்குரிய டி. எஸ். சேனநாயக்க அவர்கள் “சுதந்திரம் பெற்றது மக்கள் மத்தியில் இன மத அரசியல் வேறுபாடின்றி அவர்களுடைய துன்பங்களைக் குறைத்து மகிழ்ச்சியைப் பெருக்கவே” என ஜனாதிபதி அவர்கள் தமது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இக்கூற்று 50 ஆண்டுகாலமாக மாறிமாறி ஆட்சி செய்த அரசுகள் இந்த அற்புதமான கொள்கையைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டதனால் நாடு சீரழிந்து மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்தது என ஒத்துக்கொள்கிறார் எனலாம்.

ஜனாதிபதி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுமாறு விடுத்த வேண்டுகோளை இந்நாட்டின் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என்ற பேதமின்றி அனைவரும் வரவேற்று ஏற்றுக்கொண்டு, நாம் ஒன்றுபட்டிருப்பின் எமது நாட்டை மிக்க உச்ச நிலைக்கு உயர்த்த முடியும் என்ற கூற்றையும் ஆமோதிக்கின்றனர். நாட்டின் ஒருபகுதியினர் அதிருப்தியுடன் வாழும்போது ஒற்றுமையை ஏற்படுத்துவது கடினமாகும். ஆகவே அனைவரையும் ஒற்றுமைப்படுத்தின் நாமனைவரும் நமக்குள் உள்ள சில வேறுபாடுகளை மறந்து – எம்முள்ளத்தின் அடியில் தூங்கக்கொண்டிருக்கும் தேசப்பற்றைத் தட்டி எழுப்பி சுயநலம் தலைதூக்காது தவிர்ப்பது நல்லதாகும்.

நாட்டுப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தேசப்பற்றாளர்கள் அனைவரையும் தன்னுடன் சேருமாறு ஜனாதிபதி அழைப்பு விட்டவேளையில் இனப்பிரச்சனையே அவருக்கு முக்கியமானதாக தோன்றியிருக்கவேண்டும். இனப்பிரச்சனை நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் இடையூறாக இருப்பதை நாமனைவரும் அறிவோம். ஆனால் இத்தடை நீக்கப்பட்டால் எமது முன்னேற்றம் பத்துமடங்காகப் பெருகுவது மட்டுமன்றி, எமது வளங்கள் சரியாக உபயோகப்படுத்தப்படின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு எமது நாடு முன்னேறமுடியும். அனுபவரீதியாக நான் விளங்கிக்கொண்ட உண்மை எவர் தன்நாட்டையும் அந்நாட்டு மக்களையும் நேசிக்கின்றாரோ அவர்மட்டும்தான் தேசப்பற்றாளர் அல்லாது தன்நாட்டையும் தன் இனத்தவரையும் நேசிப்பவர் தேசப்பற்றாளர் இல்லை. இது தேசப்பற்றுமல்ல. பிரச்சனைகளைத் தீர்க்கவும் இத்தகையோரால் முடியாது. நான் என் நாட்டையும், அதன் மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். வேறு இனத்தவர்கள் மதத்தவர்கள் மீது எதுவித வேறுபாடும் காணவில்லை. எனது நாட்டில் வாழும் பல்வேறு இன மத மக்களில் எனக்கு ஒரு விரோதியும் இல்லை. ஒரு சமயம் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ என்மீது விரோதம் கொண்டிருக்கலாம்.

எனது ஞாபகத்திற்கு எட்டிய வகையில் எனது தாயாரின் சீலைத் தலைப்பில் பிடித்துக்கொண்டு தினமும் காத்திருந்த “பேக்கர் மாமா”தான் (Baker Mama) நான் முதல்முதல் சந்தித்த சிங்களவர் ஆவார். தினமும் கிராமத்தைச் சுற்றிவரும் அவர் தன்னால் தயாரிக்கப்பட்ட பல்வேறு தின்பண்டங்களுடன் சரியாக மாலை 4 மணிக்கு எனது வீட்டுவாசலில் வந்து நிற்பார். அவர் தயாரித்து விநியோகித்த பதார்த்தங்கள் இன்றைய பேக்கரிகளில் நான் காண்பதில்லை. அடுத்து நான் சந்தித்த சிங்களவர் எமது கிராம மக்கள் அன்போடும் மரியாதையோடும் மதித்த மருத்துவமாது ஆவார். அந்த நாட்களில் ஒரு கிராமத்திற்கு அல்லது ஒருசில கிராமங்களுக்கு ஒரு மருத்துவமாது நியமிக்கப்படுவது வழக்கம். அப்பதவியை அநேகமாக சிங்களப்பெண்களே வகித்துவந்தனர். அதிகளவு மருத்துவ வசதிகளற்றகாலத்தில் இம்மருத்துவ மாதுக்களே பிள்ளைப்பேற்று மருத்துவ நிபுணர்களாக செயற்பட்டதோடு, அந்தக் கிராமத்தில் பிறக்கின்ற பிள்ளைகள் அனைவரும் இவர்களது மேற்பார்வையிலும், கவனிப்பிலும் பிரசவிக்கப்பட்டவரே. எங்களில் ஒருவராக எங்களுடன் வாழ்ந்த அவர் மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர். அவரது ஒரு தம்பியாரும் அங்குவாழ்ந்த ஒரு இஸ்லாமிய வியாபாரியின் மகனும் எனது விளையாட்டுத் தோழர்கள்.

கௌரவ கலாநிதி. டபிள்யூ. தகநாயக்க அவர்களுடன் ஏக காலத்தில் ஆசிரியப் பயிற்சிபெற்ற எனது தந்தையார் ஒரு கிராமப் பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டபோது, அதுவரைகாலமும் சிறுபான்மைத் தமிழருக்கு கல்விகற்க மறுக்கப்பட்ட அனுமதியை வாபஸ்பெறச் செய்தார். தனது கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழி போதிக்க ஒரு பட்டதாரி பௌத்த குருவை ஆசிரியராக நியமித்திருந்தார். தனிச்சிங்களச் சட்டம் 1956ல் அமுலாக்கப்படும்வரை 100மூ தமிழ்மாணவர்கள் கல்விகற்ற பாடசாலைகளில் சிங்களம் போதிக்கப்பட்டு வந்தது.

சிறுவனாக இருந்தபோது இத்தகைய அனுபவங்கள் எனது இனம் மதம் என்ற வேறுபாடின்றி எவர்மீதும் எதுவித வெறுப்புணர்வின்றி வளர உதவியது. எதுவித இனபேதமின்றி நாமனைவரும் சகோதரர்கள் போல வளர்ந்தோம். இதேபோன்றுதான் தம்தம் பகுதிகளில் சிங்களவர்களும், இஸ்லாமியர்களும், ஏனைய இனத்தவர்களும் வாழ்ந்தனர். எனது இக்கூற்று தெற்கே வாழும் சிங்கள இளைஞர்களுக்கு ஆச்சரியத்தையும், வெளியுலகத் தொடர்பற்ற விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுக்கும். அவர்களின் வாழ்நாளில் ஒரு சிங்களவரைத்தன்னும் சந்தித்திருக்கமாட்டார்கள். அனேகர் புகையிரதத்தைப்பற்றி கேள்விப்பட்டிருப்பினும், ஒரு புகையிரதத்தைத்தானும் பார்த்திருக்கமாட்டார்கள். சிங்களவர் தம்மைக் கொடுமைப் படுத்துவதாகவும், பிரபாகரன்தான் தமது ரட்சகர் என்றும் சிந்திக்கும் அளவுக்கு அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்.

சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், மலேயர் வேறும் சில இனத்தவர்கள் மத்தியில் வாழும் ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றிருந்ததோடு சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே மாணவர்களுடன் இருந்து கல்விகற்றிருக்கின்றேன். சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே ஆசிரியர்களிடம் கல்விகற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த நான், சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே மாணவர்களுக்கு கல்வி போதித்திருக்கின்றேன். ஆகவே நான் ஒரு இனத்தில் வைத்திருக்கும் அன்பும், மதிப்பும், இன்னொரு இனத்தில் வைத்திருக்கும் அன்புக்கும், மதிப்பிற்கும் எதுவிதத்திலும் கூடியதோ அன்றி குறைந்ததோ கிடையாது. நான் சிறுவனாக இருந்தபொழுது மனப்பாடம் செய்த சேர். வோல்டர் ஸ்கொற் என்பவரால் இயற்றப்பட்ட ‘ஒரு நாடோடிக் கவிஞனின் கடைசிக் கவிதை’ என்ற நாட்டுப்பாடலே, என்னை - எனது நாட்டை நேசிக்கத் தூண்டியது. நாட்டுக்காகவும், அதன் மக்களுக்காகவும், எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார் படுத்தியது. அக்கவிஞர் தனது கவிதையில் “இது என்னுடைய சொந்த நாடு என்று – தன் உள்ளேதன்னும் ஒரு தடவையேனும் கூறாத இதயமற்ற ஒருவன் உயிருடன் இருக்கின்றானா?” என்று கேள்வி தொடுக்கிறார். அச்சிறுவயதில், முன்பு இலங்கை என அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீ லங்காவில் பிரஜைகள் அனைவரையும் இன மத பேதமற்று - இலங்கைத் தாயின் பிள்ளைகளாகவே நான் கருதிக் கணித்துவந்துள்ளேன். மனிதாபிமானத்தின் மீது நான் கொண்ட அபிப்பிராயமே எனக்கு எத்தகைய ஆபத்து எதிர்நோக்கிய வேளையிலும், எனது நாட்டை பழைய பிரபல்யமான நிலமைக்கு மீட்டெடுக்க உறுதிபூணவைத்தது. இலங்கையில் இரத்தம், சிந்துவது நிறுத்தப்பட்டு மக்கள் மத்தியிலுள்ள பயமும் பீதியும் விலக்கப்பட்டு, நாட்டிலே பூரண சமாதானம் நிலவவேண்டும். சிங்கள, தமிழ், இஸ்லாம், மலே மற்றும் ஏனைய சமூகத்தவர்கள் மீண்டும் ஒரு தடவை சமாதானமாகவும், அமைதியாகவும், சகல உரிமைகளும், சலுகைகளும், சமமாக அனுபவித்து ஒருவரை ஒருவர் மதித்தும், நேசித்தும் வாழ வேண்டும். நாம் மிரட்டியோ அன்றி பலாத்காரத்தின்மூலமோ சகல மக்களையும் ஒன்றுபடவைக்க முடியாது. அன்பையும், பரிவையும் காட்டுவதன்மூலமே மக்களை வென்றெடுக்கமுடியும். இதுவே எமது சகல சமயங்களும் போதிக்கின்றன. மறுபிறப்பில் நம்பிக்கைகொண்ட நாம், இப்பிறப்பில் தமிழனாகப் பிறந்த நான், மறுபிறப்பில் ஒரு சிங்களவராக அல்லது இஸ்லாமியராக பிறக்கக்கூடும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஒருவருக்கொருவர் நாம் பாகுபாடு காட்ட முடியாது.

அர்த்தமற்ற ஒரு போரினால் 70 அல்லது 80 ஆயிரம் பெறுமதிமிக்க உயிர்கள் பறிபோயின. மரணத்தையும், அழிவையும் தவிர வேறு எதையும் அடையாத ஒரு யுத்தத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர பல்லாயிரக்கணக்கானவர்கள் அநாதைகளாக, மனநோயாளர்களாக, அங்கவீனர்களாக, பார்வையிழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். பற்பலகோடி பெறுமதியான அரச தனியார் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக சகல இன மக்களில் ஒருவர்தானும், வீதியில் பயமின்றி நடக்கவோ, பஸ்ஸிலோ, இரயிலிலோ பிரயாணம் செய்யவோ, வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பும் உத்தரவாதமோ இன்றி வாழ்கிறார்கள். இந்த நிலை கடந்த கால் நூற்றாண்டு காலம் நிலவிய போதும், திருப்தியுடன் மக்கள் வாழும் சமுதாயத்தில் பிரிவினைக்கு இடமில்லாத போதிலும், சிலர் நாடு பிரிந்து விடுமோ என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். தனது குடும்பத்தில் உயிரழிவோ, உடமையழிவோ அல்லது வேறு ஏதேனும் இழப்போ ஏற்பட்டிருப்பின் அத்தகைய ஒருவர் யுத்தம் தொடரவேண்டும் என்று கூறமாட்டார். யுத்தம் வேண்டி நிற்பவர்கள் இப்போரின் கொடூரத்தை அல்லது தாக்கத்தை உணரவேண்டுமாயின் - ஒருவரையிழந்த, விதவையாக்கப்பட்ட, அநாதையாக்கப்பட்ட, அங்கவீனராக்கப்பட்ட கண்பார்வையற்ற அல்லது மனநோயாளியாக்கப்பட்ட உள்ள ஒருவரது குடும்பத்தைச் சென்று பார்வையிடவேண்டும். எனது குடும்பத்தில் 6 பேரை நான் இழந்ததோடு 3 விதவைகளும், சில அநாதைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். சிலர் நான் தைரியசாலி எனப் புழுகுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை நான் எடுப்பதற்கு எனது மனத்தைரியமல்ல, எனது நாட்டுக்கு ஒரு பிரஜை செய்ய வேண்டிய முக்கிய கடமையையே நான் செய்கிறேன்.

நாடு முழுக்க யுத்தத்தால் களைப்படைந்து, சமாதானத்திற்காக ஏங்குகிறது. ஆனால் திருப்தி கொண்ட ஒரு சமுதாயம் உருவாக்கப்படும்வரை சமாதானத்தை நாம் அடைய முடியாது என்பதை அனைவரும் உணரவேண்டும். ஆகவே சர்வதேச சமூகம் நாட்டில் நடப்பவற்றை மிகவும் அவதானமாக கவனித்துக்கொண்டிருக்கின்றவேளையில் - எல்லாருக்கும் ஏற்புடையதாகிய ஒரு நியாயமான தீர்வை முன்வைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைத் தடைசெய்த நாடுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு, இலங்கை அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. மாவீரர் தினத்தை விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விமரிசையாகக் கொண்டாட அனுமதித்த – விடுதலைப்புலிகளைத் தடைசெய்த சில நாடுகள், அவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகளைத் தற்போது தளர்த்துவதுபோலத் தெரிகிறது. ஒஸ்லோ மற்றும் டோக்கியோ உடன்படிக்கைகள் மூலம் ஒப்புக்கொண்டபடி ஐக்கிய இலங்கைக்குள் ஒரு சமஷ்டி முறையிலான தீர்வை சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.

கடந்த 2, 3 வருடங்கள் எமது பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு சமயத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சில பிரதானிகள், ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் இயங்கும் பல்வேறு இலங்கை அமைப்புக்கள் இந்திய முறையிலான அரசியலமைப்பை சமஷ்டி அமைப்புக்கு மாற்றாக ஏற்கத் தயாராக உள்ளனர். சமஷ்டி முறையையும், ஒற்றையாட்சி முறையையும் சிலர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் தனிநாட்டைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் விரும்ப மாட்டார்கள். சர்வதேச சமூகம் ஏற்று சிறுபான்மை மக்களுக்கு சிபார்சு செய்யக்கூடிய, விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கும் பட்சத்தில் அது அரசுடைய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதோடு, விடுதலைப் புலிகளைப் பலவீனமடையச் செய்யும். அத்தகைய ஒரு தீர்வையும் விடுதலைப் புலிகள் நிராகரிக்கும் பட்சத்தில் சர்வதேச சமூகம் என்ன மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் கூறவேண்டிய அவசியமில்லை.

பண்டைக்காலத்தில் மன்னராட்சி நிலவிய சகல நாடுகளிலும், சமயப் பெரியார்களிடம் ஆலோசனைபெற்று ஆட்சி நடத்தும் வழமை இருந்துவந்துள்ளது. நம் நாட்டிலும் மகா சங்கத்தினருடைய வழிநடத்தல் இருந்திருக்கிறது. இந்த விடயத்தில் எனது நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி அறிந்துள்ளார். ஜனாதிபதி அவர்கள் தனது சுதந்திரதின விழா உரையின்போது எனது பெயரைக் குறிப்பிட்டமை இனப்பிரச்சனையின் இறுதித் தீர்வுக்கு – எனது தீர்வையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அவரது பேச்சு சமாதானத்தை அடையும் பணியில் நான் கொண்டுள்ள ஈடுபாட்டுக்கு உற்சாகத்தைத் தருகிறது. வாகரையில் ஜனாதிபதிக்கு மாலையணிவித்து கௌரவித்த ஒரு ஆலயத்தின் பிரதம குருவுக்கு நடந்ததுபோல இன்னொருவருக்கு இனிமேல் நடக்கக் கூடாது. இந்நாட்டிலுள்ள ஆண் பெண் அனைவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில் - தமிழருடைய எதிர்காலம் நியாயமற்ற, கர்வம் கொண்ட, கொடூரமான ஒரு சிறுகுழுவினரின் கையில் ஒப்படைக்கப்பட வேண்டுமா?

ஆகவே மகாசங்கத்தினரை மட்டுமல்ல நாட்டிலுள்ள பல்வேறு மதத் தலைவர்களையும் மிகவும் பணிவாக நான் வேண்டுவது “மனு நீதி அடிப்படையில் உருவாகியதுதான் மகிந்த சிந்தனை. அதனடிப்படையில் ஒரு பொருத்தமான தீர்வை ஜனாதிபதி அவர்கள் முன்வைக்க ஆலோசனை வழங்க வேண்டும். அவருடைய தீர்வு 50 ஆண்டுகாலமாக துன்பப்படும் மக்களுக்கு மீண்டும் அமைதியைக் கொடுக்கக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

என்றும் உண்மையுள்ள,

வீ. ஆனந்தசங்கரி
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி