விடுதலைப் புலிகளின் கரங்களை பலமடையச் செய்ய வேண்டாம்
சமஷ்டி கோட்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் புதிய நிலைப்பாட்டை எடுக்க ஐக்கிய தேசிய கட்சி எடுத்திருக்கும் முடிவு எனக்கு அதிர்ச்சியை தருகிறது. இதை நான் வன்மையாக ஆட்சேபித்து சமஷடி கோட்பாட்டை கைவிட வேண்டாமென ஐக்கிய தேசிய கட்சி தலைமையை வேண்டுகிறேன்.
ஆட்சியில் இருந்தவேளையில் ஒஸ்லோ உடன்பாட்டுக்கு ஐக்கிய தேசிய கட்சி கட்டுப்பட்டுள்ளமையால் கொள்கையில் மாற்றம் ஏற்படும் போது சர்வதேச சமூகத்தின் உறவுக்கும் பாதிப்பு ஏற்படும். 2002 மார்கழி 05ம் திகதி நோர்வே அரசு விடுத்த அறிக்கையில் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட யோசனையாகிய, தமிழ் பேசும் மக்கள் வாழும் பூர்வீக பிரதேசங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய சமஷ்டி ஆட்சி முறையை பரிசீலிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. 2003ம் ஆண்டு ஜூன் 09ம், 10ம் திகதிகளில் டோக்கியோவில் நடைபெற்ற மாநாட்;டில் 51 நாடுகளும், 22 சர்வதேச ஸ்தாபனங்களும் கலந்து கொண்டன. யசூசி அகாசி தலைமை தாங்கிய அம் மாநாட்டில் ஜப்பான் பிரதமர் கௌரவ யூனிச்சிரோ கொய்சுமீயும், கௌரவ ரணில் விக்கிரமசிங்காவும் உரையாற்றினர். இம் மாநாட்டில் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது ஒரு மைல்கல்லாக கணிக்கப்பட்டது. மேலும் இம் மாநாட்டில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தை மூலம் சமஷ்டி அடிப்படையில் தீர்வுகாண இரு சாராரும் ஒப்புக்கொண்டதன் மூலம் இலங்கை வாழ் சகல மக்களுக்கும் நன்மைதரும், சமாதானத்தை கொடுக்கும் முக்கிய மாநாடாக இது கருதப்பட்டது. இத்தகைய ஈடுபாட்டின் பின் ஐக்கிய தேசிய கட்சி தனது பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுமேயானால் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஏனைய தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்த 51 நாடுகளும் 22 சர்வதேச ஸ்தாபனங்களும் இலங்கையை ஒரு சதத்திற்கும் நம்பமாட்டார்கள் என்பதோடு இலங்கை எல்லாவற்றிற்கும் மேலான பெறுமதியான தனது மதிப்பையும், மரியாதையையும் இழக்க நேரிடும்.
13 ஆண்டுகளுக்கு மேல் எதிர்கட்சியில் இருந்தமையை முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலில் 49.7 சத வீத வாக்குகள் பெற்றுக் கொடுத்த அரிய கொள்கையை மாற்றுவதை நியாயப்படுத்த முடியாது. அவர்களை போலவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 17 ஆண்டுகள் தொடச்சியாக எதிர்கட்சியில் இருந்தது. இலங்கை வாழ் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர் என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும். தீர்வு ஒன்று ஏற்படும் நிலையை அடைந்துள்ள மிக முக்கியமான இவ்வேளையில் ஐக்கிய தேசிய கட்சி தனது கொள்கையை மாற்ற முயல்கிறது. தீர்வு அண்மித்துவிட்டதன் அறிகுறியாக ஆளும் கட்சியினரின் கருத்துக்களிலும் மாற்றம் தெரிகிறது.
ஐக்கிய தேசிய கட்சி இக் கட்டத்தில் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறக்கூடிய இந்த தவறை செய்ய கூடாது. 1957ம் ஆண்டு கண்டி யாத்திரை மேற்கொள்ளப்படாது இருந்திருந்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வு 50 ஆணடுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும் என்பது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்களும், பல கோடி ரூபா பெறுமதியான சொத்தழிவுகளும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஒரு சிலரின் பதவியை நிலைக்கச் செய்யவும் பதவியில் ஏற்றவும் தினமும் நாம் உயிர் இழப்புக்களையும், பொருள் அழிவுகளையும் எதிர்நோக்க வேண்டுமா? துன்பகரமான சரித்திர நிகழ்வுகள் மீண்டும், மீண்டும் நடைபெற வேண்டும் என்ற சாபக்கேடு எம் நாட்டை பீடித்திருக்கிறதா?
ஒற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக அமையாது. சுமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியலமைப்பு முறையே ஏற்கக்கூடியதாக இருப்பதோடு சமஷ்டி என்ற பதத்தில் வெறுப்புடையவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும். நான் இந்த சிபாரிசை இந்த நாட்டையும் அதன் மக்களையும் நேசிப்பவன் என்ற வகையில் இம் முறைமையை சிபாரிசு செய்கிறேனே அன்றி ஒரு தமிழன் என்பதற்காக அல்ல. நான் ஒரு இலங்கை நாட்டுப்பற்றாளனாக இறப்பதையே விரும்புகிறேன். நான் வேண்டுவதெல்லாம் இலங்கை சமூகம் மனத்திருப்தியுடனும், சமாதானமாகவும் வாழ வேண்டும் என்பதே
வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ