கைதுகளும் தடுத்து வைத்தலும்

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- பத்மநாபா ஆகிய கட்சிகள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் - 03-12-2007


மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கட்கு,
அலரி மாளிகை,
கொழும்பு-03

மாண்புமிகு ஜனாதிபதி,

கைதுகளும் தடுத்து வைத்தலும்

சுற்றி வளைப்புத் தேடுதலில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் கைது செய்து பாதுகாப்பு அமைச்சின் தடுப்பு உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கிகிறோம்.

என்ன நோக்கத்தோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோ அதற்கு மாறான விளைவுகளையே இந்த நடவடிக்கை கொண்டு வரும் என்பது உறுதி.

உலகளாவிய அளவில் விடுதலைப் புலிகளும் அவர்களுக்கு சார்பானவர்களும், அரசு தமிழ் மக்களை துன்புறுத்துகின்றது என்று கூறும் குற்றச்சாட்டு நிச்சயமாக வலுப்பெறும். இனப்பிரச்சனை சார்பாக அரசு கொண்டுள்ள நிலைப்பாடானது சர்வதேச சமூகத்தினர் மத்தியில் தவறான கருத்தையே ஏற்படுத்தும். நுகேகொட சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டு, காயப்பட்டதும் போல் ஒரு சம்பவம் இடம்பெறுவதை தவிர்க்கவே அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதென சர்வதேச சமூகம் விளங்கிக் கொள்ளாது. பல்வேறு விதமான அடையாள அட்டைகளை விடுதலைப் புலிகள் வைத்திருப்பதால் அவர்களை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இறுதியில் விடுதலைப் புலிகளின் கெடுபிடிகளிலிருந்து தப்பி அரசின் பாதுகாப்புத் தேடி அடைக்கலம் கோரும் அப்பாவி மக்களே கஸ்டப்படுகிறார்கள்.

வடபகுதி தமிழர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் பெரும் மதிப்புடனும், நேசத்துடனும் வாழ்கின்றனர். பிடிபட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் போது அவர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அத்தகையவர்களின் அயலவர்களாகிய சிங்கள மக்கள் அவர்களை அப்பாவிகளென ஏற்றுக்கொள்வார்களா அல்லது தூர வைத்துக்கொள்வார்களா? மொத்தத்தில் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் நிலவிவந்த அந்நியோன்யம் குறைந்து இறுதியில் இன வேற்றுமை அரசியலுக்கே வழி கோலும்.

அரசினுடைய சங்கடமான நிலைமை எங்களுக்கு புரிகிறது. ஓர் வெறியன், அவன் ஓர் பைத்தியக்காரனாகவும் இருக்கலாம், ஒரு வெறிபிடித்த பைத்தியகாரனால் பணிக்கப்பட்டு அல்லது பெறுமதியான உபகாரத்தால் கவரப்பட்டு ஒரு துணிக்கடைத் தொகுதியில் ஒரு பார்சலைக் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு உடன் மறைந்து விடுகிறான். அப்பார்சல் நொடிப்பொழுதில் வெடித்து சிதறி 17 உயிர்களை அதேயிடத்தில் பலிகொண்டதோடு படுகாயமடைந்த ஐம்பதுக்கு மேற்பட்டவர்களில் மேலும் மூவரை பலிகொண்டுள்ளது.

சகல மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை பொது மக்களின் உயிருக்கு மேலும் கூடுதலான ஆபத்தை விளைவிக்கும.; உரிய பாதுகாப்பு அரசிடமிருந்து கிடைக்க தவறும் பட்சத்தில் இந்த அப்பாவி தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் எங்கே போவார்கள். தாம் பிறந்த வட மண்ணிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. தெற்கே ஏனையோருடனும் நிம்மதியாக வாழ முடியவில்லையெனில் அவர்களுக்குள்ள ஒரே இடம் இந்து சமுத்திரம் மட்டும்தான்.

அரசு கண் மூடிக் கொண்டு எதையும் பொருட்படுத்தக் கூடாது என நாம் கூற வரவில்லை. நன்றாக தேடலாம், சந்தேக நபரை பிடித்து தடுத்து வைக்கலாம். ஆனால் அப்பாவிகளாக யாராக இருந்தாலும் தேவையில்லாமல் ஒருநாள் கூட தடுத்து வைக்கப்படக் கூடாது.

அடையாள சான்றுகள் வைத்திருக்கும் எல்லோரையும் தயவு செய்து உடனடியாக விடுதலை செய்யுமாறு உரியவர்களுக்கு பணிப்புரை விடுக்கவும். கைது செய்யப்பட்டுள்ள ஏனையோர் தத்தம் அடையாளங்களை உறுதி செய்யப்படும் வரை தடுத்து வைக்கப்படலாம். இளைப்பாறிய நீதிபதிகள் குழுவொன்று, எவர் மீதும் சந்தேகம் இருக்குமாயின் அவரவர் முன்வைக்கும் ஆவணங்களை பரிசீலிக்கலாம். சந்தேகத்திற்குரியவர்களின் ஆவணங்களை பரிசீலித்ததன் பின்பு உண்மையான குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரிக்கலாம். வீண் பழியிலிருந்து தப்புவதற்கு அரசு இதைத்தான் செய்ய வேண்டும்.

சிறுபான்மை மக்களின் நன்மதிப்பை அரசு சம்பாதிக்க வேண்டிய இக்கால கட்டத்தில் நடைபெறும் சம்பவங்கள் சிறுபான்மை மக்களின் மன வேதனையை தூண்டுவதாக அமைவது தூரதிஷ்டமே. எமக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புக்கள் இச் சம்பவத்தையும், மக்கள் நடத்தப்படுகின்ற முறையையும் கண்டித்தும், எமது ஆதரவாளர்கள், இளைப்பாறிய அரச ஊழியர்கள், நண்பர்கள், முன்பின் தெரியாதோர் ஆகியோரிடமிருந்து கூட வருகின்றன. தயவு செய்து உடன் நடவடிக்கை எடுத்து தத்தம் அடையாளங்களை நிரூபிக்கக் கூடியவர்களை அவர்கள் வட பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உடன் விடுவிக்க உத்தரவு விடவும்.

கொழும்பில் மக்கள் கூடுதலாக தங்கியிருப்பதற்கு உரிய காரணங்களில் ஒன்று வவுனியா வரை சென்று வரும் புகையிரதப் போக்குவரத்து சேவை அனுராதபுரத்துடன் நிறுத்துவதாகும். வவுனியா ஓர் விடுவிக்கப்பட்ட பிரதேசமாகையால் புகையிரத சேவையை வவுனியா வரை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.