கிராஞ்சியில் நடைபெற்ற விமானத்தாக்குதல்
கிளிநொச்சி தொகுதியின் பூநகரி பிரிவில் உள்ள கிராஞ்சி கிராமத்தில் நடைபெற்ற விமானத் தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் பலியாகியமை கண்டனத்துக்குரியதாகும். இச் சம்பவத்தில் பாதிப்படைந்த அப்பாவி மக்கள் மீது மிக அக்கறை கொண்டுள்ளேன். இச் சம்பவத்தில் ஆண், பெண், சிறு பிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தும் 14 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். மிக ஆபத்தான நிலையில் உள்ள தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் வசதி கூடிய வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தொகுதி பல ஆண்டு காலமாக பாராளுமன்றத்தில் என்னால் பிரதிநிதித்துவப்பட்ட தொகுதியாகும். மிக அமைதியான இக்கிராமம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை பயிர்ச்செய்கைக்காக உருவாக்கப்பட்ட ஐந்து ஏக்கர் திட்டத்தில் குடியேற்றப்பட்ட 200 விவசாய குடும்பங்களோடு, கூடுதலான காணியுடன் சில நடுத்தர வகுப்பினரும் குடியேற்றப்பட்டனர். அப் பகுதியில் கடற்புலிகளின் தளம் கடலோரப் பகுதியில் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் அறிய விரும்புவது என்னவென்றால் கோழைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் விடுதலைப் புலிகள் பொது மக்கள் மத்தியில் தளம் அமைத்தால் அது பொது மக்களின் குற்றமா?
இத்தகைய சந்தர்ப்பத்தில் எந்த விலைகொடுத்தாயினும் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய கடமைப்பாடு அரச படைகளுக்கு உண்டு. பிற நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் ஒரு உயிரை காப்பதற்காக பல கோடி ரூபாக்களை செலவு செய்த வரலாறு உண்டு. கடற்புலிகளின் தளம் அமைத்திருப்பதாக அறிந்திருந்த விமானப்படையினர் மக்கள் குடியேற்றப்பகுதியில் அவை அமைக்கப்பட்டிருந்ததை கட்டாயம் தெரிந்துகொண்டு, மிக்க அவதானமாக செயற்பட்டிருக்க வேண்டும். தாக்குதல் ஏற்படுவதற்கு முன்பு பொது மக்கள் உசார்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் எவ்வளவு கீழ் தரமாக செயற்பட்டாலும் அவர்களைப் போல் அரச படைகள் செயற்பட முடியாது. போர்ச் சூழல் பிரதேசத்திலிருந்து 35 கிலோ மீற்றருக்கு மேல் அமைந்திருக்கின்ற ஓர் அமைதியான கிராமத்தில் வாழும் மக்களின் மனித உரிமைகள் பெருமளவு மீறப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்கள் அரச படைகள் மதிப்பை இழக்க காரணமாக இருப்பதால் இத்தகைய சம்பவங்களை அரச படைகள் தவிர்க்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் தமது பலத்தை இராணுவத்தினரிடம் காட்டவேண்டுமே தவிர நிராயுதபாணிகளான மக்கள் மீது அல்ல. நேற்றைய தினம் கல்கிசையில் பிரயாணிகள் பஸ் வண்டியில் வைக்கப்பட்ட குண்டு வீதியால் சென்ற 18 பேரை படுகாயப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக ஓர் பிரயாணியின் சமயோசித செயலினால் பெரும் அழிவுகள் ஏற்படாது காப்பாற்றப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பொறுப்பற்ற செயலினால் கெரவலப்பிட்டியாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ வெடி மருந்து யாரோ கொடுத்த தகவலினால் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அழிவு ஏற்படாது காப்பாற்றப்பட்டது. தம்முடன் வாழப் பயந்து தம் இருப்பிடங்களை விட்டு தமிழ் மக்கள் தென்னிலங்கையில் சிங்கள் மக்களுடன் வாழ்கின்றார்கள் என்பது விடுதலைப் புலிகள் அறிந்தவொரு விடயமாகும். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஓர் இனக்கலவரமே. இரத்த வெறி பிடித்த விடுதலைப் புலிகள் அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதையே விரும்புகின்றனர். அது நடைபெறாது தடுக்க வேண்டிய கடமை அரச படைகளுக்கு உண்டு. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் அழிவு ஏற்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை உண்டு.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ