முல்லைத்தீவில் முன்னோடியக இராணுவமுகாம் அமைப்பதும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகள் அமைப்பதும் இன்று உசித்தமான செயல் அல்ல

ஊடக அறிக்கை. 2010-07-02
முல்லைத்தீவில் முன்னோடியக இராணுவமுகாம் அமைப்பதும்
வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கு வீடுகள் அமைப்பதும்
இன்று உசித்தமான செயல் அல்ல

முல்லைத்தீவில் முன்னோடியாக ஒரு இராணுவ முகாம் அமைப்பதையும், இராணுவத்தினருக்கு வடக்குகிழக்கில் நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுப்பதாக அரசு எடுத்த முடிவையும் இன்றைய சூழ்நிலைக்கு ஒவ்வாதெனவும், எதிர்பார்த்த விளைவை கொடுக்காதெனவும், விரைவில் ஓர் அனர்த்தத்திற்கு வழிகோலும் எனவும் வெளிப்படையாக எனது கருத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். இந்த முடிவை புத்திசாதுரியமற்ற முறையில் நான் ஆட்சேபித்து குளவி கூட்டுக்கு கல்லெறிந்தவன் போன்ற நிலைக்கு ஆளாகமாட்டேன். நான் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் தேசப்பற்றுடனேயே நோக்குவேன். அரசு உடனடியாக இவ்விரு நடவடிக்கைகளையும் நிறுத்தி ஏற்கனவே திறக்கப்பட்ட இராணுவ முகாமை மூடி புதிதாக இராணுவமுகாம் எதையும் திறக்க வேண்டாம் எனவும் ஆலோசனை கூறுகின்றேன். அரசாங்கம் எனது கருத்தை பாராட்டி எனது ஆலோசனைக்கு மதிப்புக்கொடுக்கவேண்டும்.

விடுதலைப் புலிகளோடு போராடி வெற்றி கண்ட நல்ல ஒரு இராணுவம் இருந்தது. விடுதலை இயக்கமாக ஆரம்பித்து பின் காலப்போக்கில் மக்களுக்கும்இ மக்களின் சொத்துக்களுக்கும் பெரும் இழப்புகளை உருவாக்கிய இயக்கத்தை தோற்கடிக்க பொதுமக்களும் பெருமளவில் உதவினர். முழுநாடும் சொல்லமுடியாத துயரை அனுபவித்தது. வடக்கு கிழக்கு மக்கள் அடைந்த இழப்புக்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி நான் விபரிக்க முன் வரவில்லை. எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு நிலை மீண்டும் உருவாகுவதை அவர்கள் விரும்பவில்லை. எவரேனும் அதைப்புதுப்பிக்க முயற்சித்தால் அந்தச் சவாலை அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். விடுதலைப் புலிகளிடம் சிறந்த ஆயுதங்கள் இருந்தமையினாலேயே அவர்களால் மக்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடிந்தது மட்டுமல்ல நிரந்தரப் பயப்பீதியுடன் வாழவைக்க முடிந்தது. நட்புறவுடன் பழகக்கூடிய இராணுவம் அமைந்துள்ளமை எமக்கு மகிழ்ச்pயைத் தருகின்றது. ஆனால் அவர்கள் மத்தியிலும் சில கறுப்பாடுகள் கலந்திருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும் இலங்கையராகிய நாம் வேண்டுவது வெறும் அமைதி மட்டுமல்ல பூரணமான அமைதியான வாழ்க்கையே. எவரின் கையிலும் ஆயுதம் இருப்பதை நாம் விரும்பவில்லை. தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், மற்றும் வேறு இனத்தவர், புலிகள், போர்வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட் உயிர்களை நாம் இழந்துள்ளோம். ஆனால் அவர்கள் அனைவரும் நம் நாட்டு பிரஜைகளே.

ஆகவே நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இராணுவ ஆட்சியோ பொதுமக்கள் மத்தியில் இராணுவ குடியிருப்புகளோ வேண்டாம் என ஒரே குரலில் கூறுவோம். நாம் வேண்டுவது இராணுவ தலையீடற்ற சிவில் நிர்வாகமே. பொம்மைக் கடைகளிலும் விளையாட்டுத்துப்பாக்கிகள் கூட விற்பதனை நாம் வெறுக்கின்றோம். எமக்கு துப்பாக்கிக் கலாச்சாரம் வெறுத்துவிட்டது. அரசு மட்டும் முன்னின்று நாட்டில் உள்ள ஆயுதங்களை மீளப்பெறுவதோடு இராணுவத்தின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி முகாம்களிலேயே தங்க வைக்குமானால் பொதுமக்களாகிய நாங்கள் வேறு எவரிடமும் ஆயுதம் இல்லாது பார்த்துக்கொள்ளுவோம்.

இறுதியாக அரசு எனது வேண்டுகோளை செவிமடுத்து மக்களை அமைதியாக வாழ விட வேண்டும் என மிகவும் மன்றாட்டமாக வேண்டுகின்றேன். மக்கள் எதுவித மேலாதிக்கமும் இன்றி சுகந்திரமாக நடமாட தொடங்கும்போது ஏனைய விடயங்களை பற்றி ஆலோசிக்கலாம். அப்படிச் செய்யத்தவறினால் இவ்வளவு காலமும் எடுத்த முயற்ச்சிகள் பல்வேறு பிரிவு மக்கள் செய்த தியாகங்கள் அத்தனையும் விழலுக்கிறைத்த நீராகிவிடும். தமக்கு இஷ்டம் இல்லாத விடயங்கள் பற்றி நேரடியாக தெரிவிக்கும் தைரியமின்றி மக்கள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் கவலைகள் எல்லாம் எதுவித கருத்துக்களையும் சாத்வீகமான முறையில் எடுத்துக் கூற கூடிய நிலை இன்று நாட்டில் இல்லையே என்பதே. நான் உறுதியாக கூறிக்கொள்ள விரும்புவது என்னவேன்றால் அரசாங்கம் அவ்வறான நடவடிக்கைகளை கைவிடாது விட்டால் நாட்டின் ஒருபகுதி மக்களுக்கு அமைதியை கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்க முடியாது. நான் தெரிவிப்பது மக்களின் குரலே.


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி