இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு

19-06-2006
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி
அலரி மாளிகை,

அன்புடையீர்,
இனப்பிரச்சினைக்கு ஓர் தீர்வு

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சமாதானம் வீட்டுப்படி வரை வந்துள்ளது. ஆனால் வெற்றிகரமாக சமாதானத்தை விரைவில் ஏற்படுத்துவது தாங்கள் காட்டும் தைரியத்திலும் செயற்படும் வேகத்திலுமே தங்கியுள்ளது. நாளுக்கு நாள் அரசியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் சூழ்நிலைக்கேற்ப தாங்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தங்களுக்கு எத்தகைய கட்டுப்பாடு இருப்பினும் எனது கடிதத்தை பொறுமையாக படித்து எனது ஆலோசனைகளை ஏற்று செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். இறைவனால் எமக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி சிங்கள, தமிழ, இஸ்லாமிய, வேறு இன மக்கள் அனைவருக்கும் மன நிம்மதியை பெற்றுத்தர தவறின் எமது மக்களை நாம் ஏமாற்றுவதாக கருதப்படும். இச் சந்தர்ப்பத்தை நாம் நழுவ விட்டால் எமது எதிர்கால சந்ததியினர் எம்மை சபிப்பர்.

இனப்பிரச்சினைத் தீர்விற்கு முன்னைய ஜனாதிபதி முன் வைத்த ஆலோசனைகள் வாபஸ் பெறப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்பு இனப்பிரச்சினை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்த சிங்களம் தனி அரச மொழிச்சட்டம் அமுலாக்கப்பட்டு 50 ஆண்டுகளின் பின்பு தாங்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். முன்னைய ஜனாதிபதி மேன்மைதங்கிய சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முன்வைத்த தீர்வுத் திட்டம் பலரால் மிக உற்சாகமாக வரவேற்கப்பட்டது. அதுவே இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களில் சிறந்ததென வர்ணிக்கப்பட்டும் ஒரு கட்டத்தில் இரு காரணங்களால் வாபஸ் பெற வேண்டி ஏற்பட்டது. முதல் காரணம் காலம் கடந்தமையால் மக்கள் உற்சாகம் இழந்தனர். இரண்டாவது காரணம் பல மாற்றங்கள் செய்யப்பட்டதால் அதனுடைய உருவத்தில் ஏற்பட்ட மாற்றமுமாகும். பண்டாரநாயக்கா-செல்வநாயகம் உடன்படிக்கை , டட்லி-செல்வநாயகம் உடன்படிக்கை ஆகியவற்றுக்கும் இதே கதியே ஏற்பட்டது.

இதே பிழையை நாம் மீண்டும் விடக்கூடாது. எமது அனுபவ ரீதியாக எந்த விடயத்திலும் காலதாமதம் பாரிய விளைவுகளையே ஏற்படுத்துவது நாம் கண்டறிந்த உண்மை. தாங்கள் பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்து வரும் சில மாதங்களுக்குள் ஓர் தீர்வு காணத் தவறின் மக்களின் உற்சாகம் மடிந்து தீர்வுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுப்படும். அதன்பின் வழமைபோல் தங்களுக்கு தீர்வு காண்பது கஷ்டமானதாக இருக்கும். தயவு செய்து சர்வகட்சி மாநாட்டில் அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். கடந்த காலத்தைப் போல் அது மாறுபட்ட விளைவையே ஏற்படுத்தும். இனப்பிரச்சினைத் தீர்வு காண்பதற்கு மக்கள் தங்களுக்கு ஆணை தந்துள்ளனர். 50 வருடத்துக்கு மேற்பட்ட இப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய திறமையும், மன உறுதியும் தங்களிடம் உண்டு. கடந்த வாரம் ஓஸ்லோவிலும் விடுதலைப் புலிகள் தமது சுயரூபத்தை காட்டியுள்ளனர். ஒஸ்லோ செல்வதற்கு தந்திரமாக தங்கள் அரசினதும், நோர்வே அரசினதும் உதவியை பெற்று அங்கு சென்றபின் அரசுடன் பேச மறுத்து விட்டனர். விடுதலைப் புலிகளிடமிருந்தே ஆபத்தை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து ஒஸ்லோ செல்ல வேண்டிய தேவையில்லை. அண்மையில் விசேட தூதுவர் கௌரவ யன் அன்சன் பவுர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டபோது இவ்விடயம் பற்றி பேசியிருக்கலாம். அவர்களுக்கு ஒஸ்லோவிலும் சுவிட்சர்லாந்திலும் சொந்த வேலை இருந்திருந்ததை இச் சம்பவம் வெளிப்படுத்தியது. இதைத் தவிர பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அவர்களுக்கு எதுவித அக்கறையும் கிடையாது. தந்திரோபாயங்களை பாவித்து காலம் கடத்தி தமது நிலைப்பாட்டை ஸ்தீரணப்படுத்தவே முயற்சிக்கின்றார்கள் என்பதையும், அவர்கள் எந்தத் தீர்வுக்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதையும் நான் தங்களுக்கு உறுதியாக கூற விரும்புகின்றேன்.

அவர்களுடைய சகல சட்டவிரோத செயல்கள் அத்தனைக்கும் போர்நிறுத்த உடன்படிக்கை சட்டவலுப் பெற உதவியது. ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழுவினர், கௌரவ எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்குக்கூட உட்புக அனுமதி கிடைக்காத சட்டவிரோதமான அவர்களுடைய கட்டுப்பாட்டு பிரதேசங்கள் சட்டரீதியான அங்கீகாரம் பெற உதவியது. பெலியத்த, கிளிநொச்சி ஆகிய தொகுதிகளை பாராளுமன்றத்தில் 1970ம் ஆண்டு நீங்களும், நானும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தோம். நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் அதிஷ்டவசமாக சுதந்திர பிரஜைகளாக வாழ்கின்றார்கள். ஆனால் கிளிநொச்சி மக்களோ விடுதலைப் புலிகளின் அடக்கு முறைகளுக்கு அஞ்சி அடிமைகள் போல் வாழ்கின்றார்கள். அவர்களுடைய ஜனநாயக உரிமைகள், அடிப்படை உரிமைகள்,மனித உரிமைகள் அத்தனையும் பறிக்கப்பட்டு, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு எத்தகைய ஆபத்து ஏற்படினும் அவர்களை மீட்டெடுக்க வேண்டிய தார்மீகக் கடமை எனக்குண்டு. விடுதலைப் புலிகளின் இரும்புத் திரைக்குப் பின் தடுப்பு முகாம்கள், சித்திரவதை முகாம்கள், இருட்டறை கூடங்கள், பணம் பறித்தல், சிறுவர் சிறுமியரை யுத்தத்துக்கு அணிதிரட்டல் மட்டுமல்ல கொலைகளும் அங்கே நடக்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக என்னைத் தவிர வேறு யாருக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் மக்களைப் பற்றி அக்கறை கிடையாது. மேலும் அவர்களுடைய சட்டவிரோத செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத்தரக்கூடிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதிலேயே அனைவரும் அக்கறையாக உள்ளனர். அவ்வாறு துன்பப்படும் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். இந் நாட்டு ஜனாதிபதி என்ற வகையில் அது தங்களுடைய கடமையாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஒரு தனி வாழ்க்கை முறைக்கு தம்மை பழக்கிக்கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவரும் தலைவர்கள். அவர்கள் தற்போது செயற்படும் மிக உயர்ந்த பீடத்திலிருந்து இறங்கி வருவது அவர்களுக்கு கஷ்டமே. திரு சு.ப. தமிழ்ச்செல்வனின் புதிய கண்டுபிடிப்பு யாதெனில் திரு. பாலித்த கொஹேன அமைச்சரவை அந்தஸ்த்து பெறாமையால் அவருக்கு தங்களுடன் பேச தகுதி இல்லை என்பதாகும். அவர்கள் தம்மை பற்றி மிக உயர்வாக சிந்திக்கின்றார்கள். அவர்கள் தமது கடுமையான கட்டுப்பாட்டுக்குள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை பற்றி கடுகளவும் அக்கறைகொள்வதில்லை. தற்போது தங்களுக்குள்ள ஒரேயொரு வழி சர்வதேச சமூகத்தின் கணிப்புக்கமைய சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்புடையதொரு தீர்வு திட்டத்தை முன்வைப்பதே. நான் தங்களுக்கு 07-05-2006 இல் எழுதியனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். “ ஐரோப்பிய யூனியன் விடுதலைப் புலிகள் மீது தமக்குள்ள வெறுப்புணர்வை பிரயாணத்தடை விதிப்பதன் மூலம் வெளிப்படுத்தியதோடு விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் தாம் பார்த்துக்கொண்டிருக்க தயாராக இல்லை என சமிக்ஞையும் காட்டியுள்ளது”. நான் இவ்வாறு கூறி ஒரு மாதத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது முழுத்தடை விதித்து விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல என்றும் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிள்ளைகளை யுத்தத்துக்கு சேர்த்துக் கொள்வதையும், மக்களை கொல்வதையும் நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் பலதடவை வற்புறுத்தி கேட்டபோது அதை செய்திருந்தால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்க மாட்டாது. விடுதலைப்புலிகளின் நடத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடும் சவாலாக தோன்றியது. அதே கடிதத்தில்; “விடுதலைப் புலிகளுக்கு விடுத்த சமிக்ஞையை அரசு தனக்கும் விடுக்கப்பட்டதாக ஏற்று தமது கணிப்பின்படி தமிழ் மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சிபாரிசு செய்யக்கூடிய ஓர் நியாயமான தீர்வை முன்வைக்காத பட்சத்தில் விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய யூனியன் கடுமையாக இருக்கப் போவதில்லை” என்று கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன்.

ஒஸ்லோ ஒப்பந்தத்துக்கு அமைய ஐக்கிய இலங்கைக்குள் சர்வதேச சமூகத்துக்கு திருப்தி தரக்கூடிய ஒரு தீர்வை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கையிலேயே விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் முற்றாக தடை செய்தது. ஒஸ்லோ ஒப்பந்த அடிப்படையில் ஒரு தீர்வு திட்டத்தை அரசு முன்வைக்க தயக்கம் காட்டும் பட்சத்தில் மிகவும் சிரமப்பட்டு தமது பிரதிநிதிகள் மூலம் இலங்கைக்கு சமாதானத்தை கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் சர்வதேச சமூகம்; எம்மை நாணயமற்றவர்களாக நோக்கும். ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி உட்பட இராஜதந்திரிகள் எடுத்த சிரமத்தை நாம் மறந்துவிட முடியாது.

விடுதலைப் புலிகளின் அகங்கார போக்கினால் தங்கள் அரசு ஒருதலைபட்சமாக செயற்பட்டு தமிழ், இஸ்லாமிய மக்களுக்கு ஏற்புடையதான ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டிய காலகட்டம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. சொந்த இஷ்டப்படி நடக்க முடியாமல் தாங்கள் இருப்பது நான் அறியாததல்ல. ஆனால் கடந்த சில மாதங்களுக்குள், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இருந்த நிலையுடன் ஒப்பிடும் பொழுது, அரசியல் சூழ்நிலையில் பெருமளவு மாற்றங்கள ஏற்பட்டுள்ளது. ஆகவே தங்களுடைய கைகள் கட்டுப்பட்ட நிலைமை நீடிக்கக்கூடாது. மனசாட்சியின் அடிப்படையில் சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது. தங்களுடைய கொள்கையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்ற எனது கூற்றை நிரூபிக்க என்னிடம் பல ஆதாரங்கள் உண்டு. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சில படங்கள் பார்ப்பவர்களின் உள்ளத்தை உருகக்கூடியவை. நாட்டின் ஏதோவொரு பகுதியில் இந்த காட்சி தினமும் காணக்கூடியதாக உள்ளது. இந்த அப்பாவி குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்? இவ் ஏழை பெண்கள் எத்தகைய தீங்கை யாருக்கேனும்; விளைவித்திருக்க முடியும்? இந்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஏன் இத்தகைய கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். தம் உறவுகளின் பிரிவை தாங்க முடியாது பெண்கள் மார்பில் அடித்து அழுது புலம்பும் காட்சிகள் தாங்கமுடியாதவை. நல்ல பௌத்த மதத்தவர்கள், கிறீஸ்த்தவர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள், மற்றும் பிற மதத்தவர்கள் ஆகிய நாம் அனைவரும் இச் செயல்களில் ஈடுபடுபவர்களை வெறுத்து ஒதுக்கி மனிதாபிமானத்தின் விரோதிகள் என கண்டிக்க வேண்டும். இந்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த உதவுமாறு தாங்கள் மக்களை வேண்ட வேண்டும். இத்தகைய கொலைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க தாங்கள் எடுக்கும் எந்த முயற்சியையும் மக்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது பிரச்சினை ஒவ்வொருவரின் குடும்பத்திலும் இத்தகைய சோக சம்பவம் ஏற்படும் வரைக்கும் பொறுத்திருக்காது பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இத்தனை ஆண்டுகள் நடைபெற்றவையும் தினமும் எமது நாட்டில் நடைபெறும் சம்பவங்களும் தாமதமின்றி எமது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை உணர போதுமானது. நாட்டில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுகின்ற வேளை சிறு சிறு அரசியல் இலாபத்தை தேடி நாம் அலையக்கூடாது. ஆகவே தயவு செய்து இணைத்தலைமை நாடுகளோ அல்லது சமஷ்டி ஆட்சி முறையில் வெற்றிகண்ட நாடுகளின் பிரதிநிதிகளோ அங்கீகரிக்கும் ஓர் நியாயமான தீர்வை தயாரித்து விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்துக்கு வைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் எதுவித நொண்டிச்சாட்டும் கூறாமல் இருப்பதற்காகவே இத்தகைய ஆலோசனையை நான் வழங்குகின்றேன். அவ்வாறானவொரு தீர்வை விடுதலைப் புலிகள் ஏற்பார்களேயானால் ஏதாவது ஒரு நிர்வாக ஒழுங்குகள் ஏற்படும் பட்சத்தில் ஏனைய தமிழ் கட்சிகள், புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் ஒன்ற ஒரேயொரு நிபந்தனையுடன், கூடுதலான பிரதிநிதித்துவத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்குமாறு சம்மதிக்க வைக்க முடியும்.

இத்தகைய தீர்வுத்திட்டத்தை விடுதலைப் புலிகள் நிராகரிக்கும் பட்சத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து தடைகள் உட்பட பல்வேறு வழிவகைகளை கையாண்டு புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசால் முன்வைக்கப்படும் ஆலோசனை ஒஸ்லோ ஒப்பந்தத்துக்கு உட்பட்டதாக அமைந்திருப்பின் புலிகள் அத் திட்டத்தை நிராகரிப்பதை நியாயப்படுத்த முடியாது. நாட்டுப் பிரிவினையை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியா கூறி வருகிறது. இக்கூற்று இந்தியாவோடு சம்பந்தப்பட்டதாக இருப்பினும் 28 மைல் நீள பாக்கு நீரிணை இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிப்பதால் அந்தக் கூற்று இலங்கைக்கும் பொருந்தும். இந்தியாவின் முக்கிய பிரச்சினை அதன் இறைமையும், உருக்குலையாத் தன்மையுமே. இந்தியா முற்றுமுழுதாக பிரிவினையையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பது எமக்காகவல்ல. இருப்பினும் எம் நாட்டில் சமஷ்டி பிரிவினைக்கு வழிகோலும் என்று கருதுகின்றவர்களுக்கு இந்தியாவின் இந் நிலைப்பாடு அப் பீதியை போக்கும். எக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி இந் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது. “சமஷ்டி”, “ஒற்றையாட்சி” ஆகிய இரு வார்த்தைகளை வெறுப்பவர்களுக்கு இந்திய ஆட்சி முறை மிகவும் பொருந்தும். ஏனெனில் இந்திய அரசியல் சட்டம் சமஷ்டி அடிப்படையிலோ, ஒற்றையாட்சி அடிப்படையிலோ உருவாக்கப்பட்டதல்ல. நாம் வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்றோம் என்று பெருமையாக இந்தியர்கள் கூறிக்கொள்வார்கள். இந்தியாவிடமிருந்து இலங்கையர்களாகிய நாம் பல விடயங்களை கற்கக்கூடியதாகவுள்ளது. பெரும்பான்மையான இந்துக்களை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவின் ஜனாதிபதி ஒர் இஸ்லாமியர். அத்தோடு இந்திய சனத்தொகையின் இரண்டு வீத மக்களைக் கொண்ட சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவி வகிக்கின்றார். இப் பதவிகளை வகிக்கும் இரு பெரியாரும் பொது மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்களாக, மதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஓர் கத்தோலிக்க பிற நாட்டவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆளும் கட்சியாகிய ஐக்கிய முற்போக்கு கூட்டமைப்பின் தலைவியாகவும் செயற்படும் இவர் நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றவர்.

இந்திய ஆட்சி முறையை பின்பற்றுவது சம்பந்தமாக உள்ளுரிலும் வெளிநாட்டு இலங்கையர்கள் பலருடனும் பேசியிருக்கிறேன். எனது பிரேரணையை பெருமளவில் ஆதரிக்கின்றனர். எமது கலை கலாச்சாரம் மொழி முக்கியமான இரு மதங்கள் இந்தியாவிலிருந்து வந்தவை என உணர்கின்றனர். எமது மூதாதையர்கள் இந்தியரே. எம் இரு நாட்டுக்கும் இடையில் பல விடயங்களில் ஒற்றுமை இருப்பதால் இந்திய முறையிலான அரசியல் சாசனம் எமது பிரச்சினை தீர்வுக்கு பெருமளவு உதவும். இந்திய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிராணாப் முக்கர்ஜி அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர் சிங்கப்பூரில் அசோசியேட்டட் பிரஸ் நிருபருக்கு தெரிவித்த கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அவருடைய கூற்று, “ஒரே இன மக்கள் இரு நாட்டிலும் இருப்பதால் எமது தீவிர பங்களிப்பு சமாதான முயற்சி தீர்வுக்கு உதவுவதற்கு பதிலாக குழப்பத்தையே உண்டு பண்ணும். ஆனால் நாம் சமாதான முயற்சியை முற்றுமுழுதாக ஆதரிக்கிறோம் என்பதே. தமிழ் நாடு சட்டசபை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அதற்கு முன்பு கௌரவ அமைச்சரின் கூற்று பொருத்தமாக இருந்திருக்கலாம்.ஆனால் இன்று தமிழ் நாட்டில் அரசியலில் ஏற்பட்ட மாற்றம் நிலைமையை முற்றுமுழுதாக மாற்றிவிட்டது. எனது கருத்துப்படி நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நினைக்கின்றேன். நம் இரு நாடுகளிலும் ஏககாலத்தில் நடந்த இரு அபூர்வ சம்பவங்கள் இரு அரசுகளும் இனப்பிரச்சினையை பேசித் தீர்க்க சுமூகமான ச+ழ்நிலையை உருவாக்கியுள்ளன. இரு சம்பவங்களில் ஒன்று ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசில் தி.மு.க முக்கிய பங்கு வகிப்பதும் தமிழ் நாடு ஆட்சியை காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் தி.மு.க கைப்பற்றியதுமே. இது ஓர் அபூர்வ சம்பவம் மட்டுமல்ல இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதும் கூட. அடுத்த சம்பவம் ஆளும் கட்சியை சார்ந்த தாங்கள் ஜனாதிபதி பதவியை வகிப்பதே. இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டு அரசுடன் நட்பு கொண்டுள்ள மத்திய அரசின் நட்பு இலங்கைக்கு இருப்பதால் இப்பிரச்சினை இன்று தீர்க்கப்படா விட்டால் என்றும் தீர்க்கப்படமாட்டாது.

இக்காரணத்தினாலேயே இந்திய முறையிலான தீர்வுத்திட்டத்தையே எம் இனப்பிரச்சினை தீர்வுக்கு முன் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அது இலங்கை தமிழர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதோடு நான் பல பிரமுகர்கள் கட்சித் தலைவர்கள் சமய பெரியார்கள் இன்னும் பலருடன் கலந்துரையாடி கண்டு கொண்டது எனது ஆலோசனைக்கு பெருமளவு ஆதரவு சிங்கள, முஸ்லீம் மக்களிடம் உள்ளது என்பதுவே. நாட்டுப்பிரிவினைக்கு அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுள் தமிழ் நாடு மாநிலமே இலங்கைத் தமிழர்களில் பெரும் அக்கறை காட்டுகின்றது. காரணம் அவர்களும் தமிழர்களே. இந்திய முறையிலான தீர்வை தமிழ் நாடு அரசு வரவேற்பதோடு தமிழ்நாட்டு அரசியல் வாதிகளாகிய திருவாளர்கள் வை.கோ, நெடுமாறன், திருமாவளவன், போன்ற, நம் நாட்டு நிலைமைகளையும் முற்று முழுதாக புரியாத இவர்களுக்கும் திருப்தியளிக்கும். அவர்கள் தமது மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரத்தை இலங்கை மாநிலங்களுக்கு வழங்குமாறு கேட்க மாட்டார்கள்.

மிகத் தயக்கத்துடன் நான் தங்களுக்குக் கூறுவது என்னவெனில் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சகல ஜனநாயக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளும் மீறப்பட்டு, பல ஆண்டு காலமாக பிரிவினைக்காக போராடிய தமிழ் மக்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் ஒற்றையாட்சியின் கீழ் இதுவரை காணாத தீர்வை இனி காணலாம் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். அரசின் தீர்வு எப்படி இருக்குமோ எவ்வாறு அமையுமோ என்ற சந்தேகத்தினாலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை நேரடியாக எதிர்க்கத் தயங்குகின்றார்கள். அவர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணவும் தயாராக உள்ளனர். ஆனால் அத்தகைய தீர்வு ஓர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வாக அமைய வேண்டும் என்பதே அவர்களுடைய உறுதியான நிலைப்பாடாகும். விட்டுக்கொடுப்பு அடிப்படையில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக தமிழ் மக்கள் இந்திய அரசியல் அமைப்பை ஒத்த, சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் ஏற்புடையதான தீர்வை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வர். தினம் 1500 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இந்தியாவுக்கு விஜயம்செய்து தமிழ் நாட்டில் சுதந்திரமாக நடமாடி வருகின்றவர்கள் தமது சொந்த நாட்டிலேயே வேலை முடிந்து வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்புவோமோ என்ற ஐயத்துடன் வாழும் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.

இறுதியாக பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபாடு இருந்தமையால் அதாவது தனி சிங்கள மொழிச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 50 ஆண்டு காலத்தில் தமிழர்கள் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தார்கள் என்பதை எங்களில் சிலருக்கு மட்டுமே தெரியும். பண்டா –செல்வா ஒப்பந்தம் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் மக்களை பொறுத்தவரையில் சோகம் நிறைந்த வரலாறே. 50 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரு பெரும் கட்சிகள் இனப்பிரச்சினை தீர்விற்கு சமஷ்டி முறையை முன்வைத்துள்ளனர். ஐ.தே.கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தல் நேரத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த கட்சியின் வருடாந்த மாநாட்டிலும் சமஷ்டி ஆட்சி முறையை தீர்வாக முன்வைத்தன. ஜனாதிபதி தேர்தல் உட்பட நீண்டகாலமாக இடதுசாரி கட்சிகள் சமஷ்டி ஆட்சி முறையையே தீர்வாக முன்வைத்து வந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமையாகிய வாக்குரிமையை சுதந்திரமாக அளிக்க புலிகள் மூன்று தடவை இடையூறு செய்தனர். ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த வாக்குகள் தங்களுக்கு எதிராக விழுந்த வாக்குகள் அல்ல என்று தாங்கள் கூறியதை நான் அறிவேன். இவையனைத்தையும் ஒன்று சேர்த்து பார்ப்பீர்களேயானால் இனப்பிரச்சினைக்கு தங்களுடைய தீர்வு இந்திய முறையை ஒத்ததாகவே அமையும். அது சமஷ்டி, ஒற்றையாட்சி ஆகிய முறைகளை எதிர்ப்பவர்களுக்கும் திருப்தியளிக்கும். இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள தமிழர்கள் இதனை வரவேற்பார்கள். இத் தீர்வு இந்திய அரசுக்கு திருப்தியளிக்ககூடியதாகையால் சமாதான முயற்சியில் இந்திய அரசை முற்றுமுழுதாக ஈடுபட வைக்க முடியும். எல்லாவற்றுக்கு மேலாக நியாயமான ஓர் தீர்வென ஏற்கப்பட்டு அமுல்படுத்தும் வேளையில் நம் நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ்வர். அப்படியும் புலிகள் இத்தீர்வை எதிர்ப்பார்களேயானால் அவர்கள் மக்களால் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

நன்றி



வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - த.வி.கூ