பயணிகள் பஸ் மீதான கிளேமோர்

பயணிகள் பஸ் மீதான கிளேமோர் தாக்குதலை கண்டித்து தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை– 06-12-2007

05-12-2007 அன்று அனுராதபுரம் - பதவியா வீதியில் அபிமன்னபுர என்ற கிராமத்தில் பயணிகள் பஸ் வண்டி மீது புலிகள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் 15 பொதுமக்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதோடு 28 பேர்வரை காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் கெப்பிட்டிகொலாவ, அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான பயணிகள் பேரூந்து படுகொலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்தான் இப்பகுதியில் நடைபெற்றது. இந்த நாட்டில் பொருளாதார சமூக ரீதியில் அடிமட்டத்தில் வாழும் இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பீதியுடனேயே வாழ்கிறார்கள்.

சாதாரண மக்கள் மீதான தாக்குதல்கள் மூலம் இலங்கையில் பாரிய இனக்கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை முழுவதும் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிதமடையச் செய்வதற்கும் நிரந்தர அராஜக நிலையொன்றை ஏற்படுத்துவதற்கும் புலிகள் முயற்சிக்கிறார்கள்.

இந்த வன்முறை கலாச்சாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய வன்முறைமயப்பட்ட தலைமைத்துவத்தை தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள். சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

நுகேகொட, அபிமன்னபுர தாக்குதல்கள் சதிகார நோக்கங்களுடனேயே நிகழ்த்தப்படுகின்றன.

இத்தகைய தாக்குதல்கள் இலங்கையின் சகல சமூகங்களினதும் வாழ்வு நரகமாகுவதற்கே வழிவகுக்கும்.

இந்த நாட்டில் இனப்பிரச்சனைக்கு அமைதி தீர்வையும், இன சமூகங்களிடையே நல்லுறவையும், சமாதானத்தையும் நேசிக்கும் மனிதர்கள் இத்தகைய தாக்குதல்களை உறுதியுடன் கண்டிப்பதற்கு முன்வர வேண்டும்.