அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும்.

அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும்.

கோட்டை புகையிரத நிலைய மிருகத்தனமான தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து 100 பொது மக்கள் படுகாயம் அடைந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கண்டியிலிருந்து தம்புள்ள நோக்கி வந்த பேருந்தில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் மரணித்தும் 16 பேர் காயமுற்ற சம்பவமும் படு கோழைத்தனமான செயலாகும்.

கடந்த வாரம் மன்னார் மடுவுக்கு அண்மையில் ஏற்பட்ட கிளைமோர் தாக்குதலில் மாணவர்கள் சிலர் உட்பட 18 பேர் மரணித்தது மற்றும் பல பேர் படுகாயமடைந்ததும் மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல. இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி தற்கொலைக் குண்டுதாரி முட்டாள் தனமாக தனது உயிரையும் மேலும் நான்கு பேரின் உயிரை எடுத்ததோடு 18 பேருக்கு மேல் காயம் ஏற்படுத்தியிருந்தார்.கடந்த வாரம் கெப்பிற்றிக் கொலாவில் இனம் தெரியாத கடுமையாக பழுதடைந்திருந்த சடலங்கள் கிடங்குகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் 70 உயிர்கள் பறித்தெடுக்கப்பட்டு படுகாயமடைந்த 150 பேருக்கு மேற்பட்டோருக்கு சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தி பல விதவைகள் அனாதைகள் அங்கவீனர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலமையை உருவாக்கியதில் தமிழ் ஊடகங்களுக்கு ஓரளவு பங்குண்டு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஊடகங்கள் அத்தனையும் ஒரு முகமாக இச்செயலை வன்மையாக கண்டிக்காமை விடுதலைப் புலிகளுக்கு கணிசமான அளவு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.ஊடகங்கள் பரந்தளவில் செயற்படும் தம் நிருபர்கள் மூலம் இத்தகைய சம்பவங்கள் சம்பந்தமான துப்புக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவலாம்.அத்தகைய தமது கடமைகளை மறந்த ஊடகங்கள் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது. ஒருவரின் உயிரை இன்னுமொருவர் எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என நம்புவதால் நான் ஒவ்வொரு கொலையையும் கண்டித்து வந்துள்ளேன்.

தற்சமயம் நான் ஜக்கிய ராட்ச்சியத்தில் நிற்பதால் யாழ் நகரில் பிரசுரமாகும் ஒரு தமிழ் தினசரியில் நான் சிங்கள மக்களின் கொலைகளுக்கு மட்டும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தமிழர்களின் கொலைகள் பற்றி கண்டிப்பது இல்ii எனவும் குற்றம் சாட்டியுள்ளாதாக அறிவிக்கபட்டுள்ளது அத்தகைய ஒரு முடிவுக்கு வருவது மிகவும் தவறாகும். அப்பத்திரிகை குறிப்பாக அடையாளம் காணப்படாத 16 சடலங்கள் பற்றியே குறிப்பிட்டுள்ளது. நான் நாட்டில் இருக்கும் வரை அச்சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

இப் 16 துர்பாக்கியவான்களின் சடலங்களின் இன அடையாளம் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் அறிந்திருப்பின் என்னை வீண்வம்புக்கு இழுக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விபரம் தெரிவிப்பதே கண்ணியமான செயலாகும்.வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் அதிகமான கொலைகளுக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பானவர்கள். விடுதலைப்புலிகள் நினைத்தால் ஏனைய கொலைகளையும் நிறுத்த முடியும்.

தென்னிலங்கையில் நடைபெறும் பெரும்பாலான கொலைகளுக்கு சந்தேகமின்றி விடுதலைப்புலிகளே பொறுப்பு. இப்பத்திரிகை ஏன் இக் கொலைகளை கண்டிப்பதில்லை. என்னை என்ன செய்ய வேண்டும? என இப்பத்திரிகை ஆசிரியர் ஏன் வாசகர்களைக் கேட்க வேண்டும். திடசங்கமாக இவ் ஆசிரியர் யாருக்கோ ஓர் செய்தி அனுப்புகிறார். அந்த நபர் யார்? ஆசிரியர் அனுப்பும் செய்தி தான் என்ன?.

நான் ஒவ்வொரு கொலையையும் மிருகத்தனமான கொலை என்றே கண்டிப்பேன். யாரும் யாரையும் கொலை செய்யுமாறு தூண்ட மாட்டேன். விடுதலைப்புலிகள் இக் கொலையை உடன் நிறுத்த வேண்டும். அது அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. மாறாக நாளுக்கு நாள் தமது மதிப்பை தான் இழந்து கொண்டு போவார்கள் சர்வதேச சமூகமும் அப்படி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கை விடுமாறு விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கை விட வேண்டும். இராணுவத்தினர் மத்தியில் கறுப்பு செம்மறிகள் உண்டு. அத்தகைய கறுப்பு ஆடுகள் பொது மக்களை தாக்கும் போது எல்லாம் இனம்கண்டு தமது உயர் அதிகாரிகளின் கவனத்திற்க்கு ஏனையவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

இப்போ விடுதலைப்புலிகளுக்கு எஞ்சியுள்ள ஒரே வழி ஓர் இனகலவரத்தை ஏற்படுத்துவதே. அதற்காக சிங்கள மக்கள் தயார் இல்லை. ஏன் எனில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பாதிக்கு மேற்பட்டோர் சிங்கள முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழுகிறார்கள் என்பதை நன்கு அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தமது என்பதை அறிந்து வைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் சுயநலத்துடன் இரத்த வெறி பிடித்தவர்கள் என்பதை தமிழ் மக்கள் அறிந்துள்ளார்கள். விடுதலைப்புலிகளுடன் வாழ்வது எவ்வளவு சங்கடம் என்பதை நன்கறிந்துள்ளனர்.

தமது பொறுப்பை உணர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் குண்டுகள் கிளைமோர் குண்டுகள் புதைக்கப்படும் இடங்;களை பற்றிய தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். மன்னார் சம்பவம் அரச படையினரின் ஊடுருவித்தாக்கும் பிரிவினரால் ஏற்பட்டதென்று விடுதலைப்புலிகள் கூறுவர்களேவானால் அவர்கள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் திறமையை இழந்துவிட்டார்கள் என ஒப்பு கொண்டு தமது போராளிகளை அரசிடம் சரணடைய வைக்கவேண்டும். திருநெல்வேலிச் சம்பவத்துக்கு யார் பொறுப்பு? சுதந்திர தினத்தன்றும் தம் கடமையை செய்யத் தவறாத புலிகள் 15 உயிர்களை அன்றும் எடுத்துள்ளனர்.

தாம் தொடர்ந்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என விடுதலைப்புலிகள் கருதக் கூடாது. இங்கே குறிப்பிட்டுள்ள 5 சம்பவங்களில் விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்டவை. எவை அரச படைகள் சம்பந்தப்பட்டவை எவை என்பதை தமிழ் மக்கள் அறியப்பட வேண்டும். இந்திய அரசு தலையிட்டு அப்பாவி பொதுமக்கள் மீது கை வைக்காதே என் புலிகளை எச்சரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.



வீ ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலை கூட்டணி