வணக்கத்துக்குரிய எம். எக்ஸ் கருணாரட்ணம்

22.04.2008
திரு. வே. பிரபாகரன்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கிளிநொச்சி.

அன்புள்ள தம்பி,

வணக்கத்துக்குரிய எம். எக்ஸ் கருணாரட்ணம் போதகர் அவர்களுடைய அகால மரணம் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இம் மரணம் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விடயமல்ல. இவருடைய திடீர் மரணம் நாட்டுக்கும் குறிப்பாக வன்னிப் பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். போதகர் கருணாரட்ணம் அவர்களை நான் பல காலம் நன்கறிவேன். அவர் சிறந்ததொரு சமூகத் தொண்டனும், ஒரு மனிதஉரிமைவாதியும் ஆவார். எனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரது உறவினர்கள், அவரது திருச்சபையை சேர்ந்தவர்கள், அவரால் நன்மையடைந்த மக்கள் அவரின் சேவையை பெற முடியாமல் போனவர்கள் ஆகியோருக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதோ ஓர் மனிதர் முட்டாள்தனமான செய்கையால் விழுந்து கிடக்கிறார். இவரைப் போன்ற இன்னுமொரு மனிதர் எப்போது பிறப்பார்.

நீங்கள் வழமைபோல் உங்களுக்கு பழக்கப்பட்ட மாமனிதர் பட்டத்தை அவருக்கு சூட்டிவிட்டு உங்கள் கடமை முடிந்தது என இருந்து விடுவீர்கள். இவ்வாறன சம்பவங்கள் மீண்டும் எதிர்காலத்தில் தொடராதவாறு தடுப்பதற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசித்துள்ளீர்கள்? உங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களை திருப்திபடுத்த மட்டுமே உள்ளனர். ஒரு வன்மையான கண்டன அறிக்கையை விடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என அவர்கள் கருதுகின்றனர். ஆழ ஊடுருவி தாக்கும் அணி உங்களிடமும் உண்டு என்பதையும், அவ் அணி உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ஊடுருவிச் சென்று இவ்வாறான பல சம்பங்களில் ஈடுபடுவதும் அப்பாவி பொது மக்கள் பலர் மரணிப்பதும் நடைமுறையில் உண்டு என்பதையும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்வதாகத் தெரியவில்லை.

தமிழ் சிறுபான்மையினருக்கு பாராளுமன்ற உறுப்பினராகிய திரு. தி. மகேஸ்வரன், கௌரவ டி.எம். தசநாயக்கா போன்றவர்கள் பல தொண்டினை ஆற்றியிருந்தும் உங்களது உறுப்பினர்கள் அவர்களுக்கு என்ன செய்தார்கள்? உங்களது ஊடுருவி தாக்கும் அணியினர் கிளிநொச்சியிலிருந்து தெற்கே 300 கி.மீ மேல் ஊடுருவி வந்து மும்மொழியிலும் ஆற்றல் படைத்த பல்வேறு இன, மத மக்களாலும மத குருமார்களாலும் ஒரு கத்தோலிக்கராக இருந்தும், பெரிதாக மதிக்கப்பட்டவர் நாட்டின் பிரதம அமைச்சர் பதவியை வகிக்கக்கூடிய குணாதிசயங்களும், தகைமைகளும் பெற்றிருந்த ஒரு கண்ணியமான அரசியல்வாதியை கொன்றொழித்தனர். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒரே தகைமையின்மை மட்டுமே. ஆனால் உலகளாவியளவில் பார்க்கும்போது அந்தத் தகைமை அவ்வாறில்லை. என்றாவது ஒருநாள் உங்கள் உயிரை பறிப்பதிலேயோ அல்லது உங்களின் நெருங்கிய உறவினர்களின் உயிர்களை பறிப்பதிலேயோ முடியக் கூடிய இந்தப் பிரச்சினைக்கு நான் கூறும் ஆலோசனையை தீர்வாக எடுத்துக் கொள்ளவும். கண்ணிவெடிகள், கிளேமோர் வெடி குண்டுகள், அல்லது இவை போன்ற வேறு வெடிபொருட்களுக்கு ஆண் பெண் என்ற வித்தியாசமோ, சிங்களவர், தமிழர், என்ற வித்தியாசமோ இஸ்லாமியர், பௌத்தர் என்ற வித்தியாசமோ தெரியாது. ஆகவே இம் முறையை கையாண்டு ஆட்களை கொல்வதை உடன் நிறுத்தவும். நீங்கள் ஒரு அரசுடன் யுத்தம் புரிகிறீர்கள். நீங்கள் இவ்வாறனதொரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்ற வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரைப் போன்று இரு சாராரையும் குற்றம் கூறாமல் ஒரு சாராரை பற்றி மட்டும் குற்றம் கூறி மறு சாராரை மகிழ வைப்பது குற்றமாகும். தனிப்பட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை நீங்கள் உடன் நிறுத்துவீர்களேயானால் அரச படைகளும் வேறு வழியின்றி தாம் இலக்கு வைப்பதை உடனடியாக நிறுத்தியே ஆக வேண்டும். இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

அண்மையில் இரவு வேளைகளில் விமானம் மூலம் குண்டு போடுவதை பற்றி முறையிட்டபோது அந்த முறை நிறுத்தப்பட்டதென நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் கட்டுநாயக்கா, அனுராதபுர விமான நிலையங்களை விமானம் மூலம் இரவு வேளைகளில் தாக்கியது கவனிக்கப்பட வேண்டும். பத்திரிகைக்கு வரும் செய்திகளின்படி உங்கள் போராளிகளில் பலர் தினமும் உயிரற்ற சடலங்களாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் கிளிநொச்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதே போன்று சிங்கள இளைஞர்களின் அனேகமான சடலங்கள் தென்னிலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. இந் நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் ஒருவரும் மிஞ்சாது சிங்கள, தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் யுத்தமுனையில் பலியாக வேண்டி வரும்.

இந்த கடைசி நேரத்திலும் கூட தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு அவசியம் ஏற்படின் ஒருதலைப்பட்சமாகவேனும் போர்நிறுத்தத்தை பிரகடனப்படுத்தி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அல்லாமல் யுத்தத்தில் பங்காளியாகவும், இனப்பிரச்சினைகளில் ஈடுபாடுள்ள பல்வேறு கட்சிகளில் ஒன்றாகவும் இருந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ