வன்னிப்பகுதியில் இரவு வேளைகளில் நடைபெறும் விமானத்தாக்குதல்கள்

17.04.2008
மேன்மைதங்கிய மஹிந்த ராஜபக்ஸ
ஜனாதிபதி
அலரிமாளிகை
கொழும்பு 03

அன்புடையீர்

வன்னிப்பகுதியில் இரவு வேளைகளில் நடைபெறும் விமானத்தாக்குதல்கள்

இரவு வேளைகளில் இலங்கை விமானப்படை ஒட்டிசுட்டானில் தாக்குதல் நடத்தியமையை அறிந்து குளம்பிய நிலையில் இத்தகைய தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட இருப்பதாக அறிந்து கவலையும் குளப்பமும் கொண்டுள்ளேன். பார்த்து விலகி ஓடிப்போய் தம் உயிரைக் காப்பாற்றக் கூடிய வாய்ப்பு பகலில் தாக்குதல் நடக்கும் போது இருந்தும் கூட பல சந்தர்ப்பங்களில் பகலில் தாக்குதல் நடக்கும் போது பலர் இறந்தும் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இரவுவேளைகளில் நடாத்தப்படும் விமானத்தாக்குதல்கள் அப்பாவி மக்களுக்கு சொல்ல முடியாத கஸ்டங்களையும் கணக்கில் அடங்கா மக்களுக்கு, காயங்களை ஏற்படுத்தியும் இரவு வேளைகளில் ஓடித்தப்ப முடியாது பொறிகளுக்குள் அகப்பட்டது போல் அகப்பட்டு விடுவார்கள். பகல் வேளைகளில் தாக்குதல் நடத்தும் போது உரியமுறையில் முன் எச்சரிக்கை விடுத்தும் இரவு வேளைகளில் தாக்குதல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கண்டிப்பான உத்தரவை விடுமாறு மிக உறுதியாக கேட்டுக்கொள்கிறேன். நம் நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய புனிதமான கடமை அரசுக்கு உண்டு இந்த அப்பாவி பொதுமக்களுக்கு ஏன் இந்த அரச பாதுகாப்பு மறுக்கப்பட வேண்டும். விமானப்படைக்கு சொந்தமான யுத்த ஜெற் விமானங்கள் கிளப்பும் பேரொலி காதை அடைக்கச் செய்யக் கூடியது. மட்டுமன்றி மக்களுக்கு மேலாக பறக்கும்போது பெண்களும், பிள்ளைகளும் பீதியால் கதறிக்கொண்டு உயிரை காப்பாற்றவென ஓடுவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனக்கு கூட இப்பயங்கரமான அனுபவம் ஏற்பட்டதுண்டு.

வன்னி வாழ் மக்கள் விடுதலை அடைய வேண்டியவர்களே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்களை விடுவிக்குமாறு பலதடவை வேண்டியுள்ளேன். அப்பகுதியில் வாழும் மக்களால் இனியும் விடுதலை புலிகளின் அக்கிரமங்களை பொறுக்க முடியாது யுத்த முனையில் தம்பிள்ளைகளில் நூற்றுக்கணக்கானவர்களை இனியும் அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. தம் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பேற்படாது தம்மை விடுவிக்கும் ஓர் நட்புறவுடன் செயற்படக் கூடிய இராணுவத்தை அவர்கள் வரவேற்க தயாராக உள்ளனர். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களிடம் இத்தகைய ஓர் வேண்டுகோளை நான் முன்பு ஒரு முறை விடுத்திருந்தேன்.

இராணுவ நடவடிக்கையால் ஒரு அப்பாவி உயிர் தன்னும் இழக்கப்படக் கூடாது. இந்த நிலைப்பாடே தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற உறுதிப்பாட்டை எமக்கு தாருங்கள் கட்டுநாயக்கா விமான நிலையம் புலிகளால் தாக்கப்பட்ட போது கொழும்பில் வாழ்ந்த நாம் எத்தகைய கலக்கத்துடன் வாழ்ந்தோம்.

வன்னிவாழ் மக்கள் நிரந்தர பயம் பீதியுடன் தான் வாழ்கின்றனர். இரவு வேளையில் நடைபெறும் விமான தாக்குதல்கள் அவர்களை மேலும் பீதி அடையவே செய்யும். ஆகவே, தயவு செய்து இரவுவேளை தாக்குதல்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவும்.

அன்புடன்

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி