எனது கவலையெல்லாம் துன்பப்படும் மக்களை பற்றியதே.

14.06.2008
கௌரவ டக்ளஸ் தேவானந்தா பா.உ
சமூக சேவைகள் அமைச்சர்

அன்புள்ள தம்பி!

எனது கவலையெல்லாம் துன்பப்படும் மக்களை பற்றியதே.

வட மாகாண நிர்வாகத்துக்கு பொறுப்பாக விசேட செயலணி குழுவுக்கு நீங்கள் நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து நான் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்துக்கு பதில் தந்தமைக்கு நன்றி.

நீங்கள் தனியாக ஊர்காவற்துறை தொகுதிக்கு நியமிக்கப்பட்டிருந்தாலும் அதையும் நான் ஆட்சேபித்திருப்பேன். ஆனால் 14 தேர்தல் தொகுதிகளையுடைய 5 மாவட்டங்களை கொண்ட வட மாகாணத்தை முழுமையாக உங்களிடம் கையளிக்கும்போது அதை நான் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்? நீங்களாக முன்வந்து அப்பொறுப்பை ஏற்க மறுத்திருக்க வேண்டாமா? எனக்கு உங்கள்மீது எத்தகைய தனிப்பட்ட எதிர்ப்பும் கிடையாது என்பதை உறுதியாக நம்பவும். கால் நூற்றாஷ்டுக்கு மேல் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் பற்றியதே எனது கவலையாகும். திடீரென நான் உங்கள் மீது வெறுப்புணர்வை காட்டவில்லை. 9 தீவுகளைக் கொண்ட ஊர்காவற்துறை தொகுதியை நீங்கள் பொறுப்பெடுத்து ஏற்கனவே புலிகளால் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் தொந்தரவு கொடுத்த காலத்திலிருந்தே அக் கசப்புணர்வு என்னிடம் இருந்து வருகிறது. நீங்கள் ஊர்காவற்துறை தொகுதியை பொறுப்பேற்றபோது ஊர்காவற்துறை மக்கள் எவ்வித பயனும் அடையவில்லை. அதற்கு முரணாக மிக கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மேலும் மிரட்டலையும், பீதியையும் ஏற்படுத்தி அம் மக்களின் ஜனநாயக உரிமை உட்பட சகல உரிமைகளையும் பறித்தமை அதிகரித்துக் கொண்டே சென்றது.

அக்டோபர் 2000 ஆண்டு தொடக்கம் ஜனவரி 2004 ஆண்டு வரை நாம் இருவரும் ஏககாலததில் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தவேளை நான் என்றாவது உங்களை பார்த்து புன்னகைத்தது உண்டா? ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அமைச்சர் பதவியையும் அனுபவித்து கொண்டும் துன்பப்படும் மக்கள் மீது நீங்கள் காட்டிய மனப்பான்மையில் எதுவித மாற்றமு ஏற்படவில்லை. தற்போதைய மான்புமிக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடமும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்கா அவர்களிடமும் பலமுறை உங்களைப் பற்றி முறையிட்டமையை அவர்களிடமே கேட்டு அறிந்து கொள்ளலாம்.

தென்னாபிரிக்க விஜயம் நான் கேட்டுப் பெற்றுக்கொண்டதல்ல. ஜனாதிபதியின் வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியவில்லை. விடுதலைப்புலிகள் வன்முறையை கைவிடும்வரை நான் அவர்களை சும்மா விடமாட்டேன் என்பது ரகசியமான விடயமல்ல. நம் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப்புலிகள் வேண்டுமென்றே நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய புனிதமான கடமை எனக்குண்டு. தென்னாபிரிக்காவில் ஒரு இளம் பெண்மணி நம் அனைவரையும் அவமதிக்கக்கூடிய வகையில் பொறுப்பற்ற முறையில் இலங்கை இராணுவத்தினர் மீது அபாண்டமான பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியது ஞாபகமிருக்கா. இனப்பிரச்சினை சம்பந்தமாக எனது நிலைப்பாடு பற்றி உலகம் அறிந்ததே. ஆனால் நீங்கள் அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கும் உங்களுக்க கூட்டுப் பொறுப்புண்டு என்பதை மறந்து அரசால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினுடைய தீர்வை மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கின்ற வேளை உங்களது தீர்வுத் திட்டத்தை முன்னெடுக்க முயற்சித்துள்ளீர்கள். உங்களை அவமானப்படுத்தி உம்மீது சேறுபூச நான் என்றும் நினைத்ததில்லை. தூரதிஷ்டவசமாக எனது அபிப்பிராயப்படி நீங்கள் உங்களது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. உங்களை விசேட செயலணிக்கு தலைவராக நியமித்தது எனக்கு வருத்தத்தை தரவில்லை. எனது ஆதஙகங்கள் அத்தனையும் இரண்டரை தசாப்தத்துக்கு மேலாக மீட்சி பெற வழியின்றி தொடர்ந்து துன்பப்படும் மக்கள் பற்றியதே. உங்களது நியமனத்தை மந்திரிசபை அனுமதித்திருக்கிறது என்றால் அவர்களுக்கு உங்களுடைய கடந்த காலத்தை பற்றியும், தற்போதைய நிலைமை பற்றியும் தெரியாது போனது கவலைகுரியதாகும். உங்களது நியமனம் பற்றி தெரிவித்து மக்களுக்கு சேவை செய்வதற்காக என்னையும் வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறியது மிகப் பெரிய வேடிக்கையானது. ஏனென்றால் நீங்கள் அமைச்சராக இருந்தவேளை நீங்கள் என்னை நடத்திய முறையை நான் என்றும் மறக்கவில்லை.

எனது கடிதத்தில் நான் கூறிய அத்தனையும் உண்மையானதே அன்றி என்னால் உருவாக்கப்பட்டதில்லை. நீங்கள் குற்றம் சுமத்துவது போல் நான் குறிப்பிட்ட கடிதங்களில் எதுவித மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகையினாலேயே குறிப்பிடப்பட்ட அக் கடிதங்களின் முழு பிரதிகளையும் அக் கடிதத்துடன் இணைத்திருந்தேன். கடிதங்களில் குறிப்பிடப்பட்ட அத்தனை விடயங்களும் பத்து வருடம் அல்லது பத்து நாட்களுக்கு முந்தியiவாயக இருந்தாலும் சரி உங்களது அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட கரும் புள்ளிகளை நீக்க நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே. விடுதலைப்புலிகளின் கெடுபிடியில் இருந்து எமது மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவர்கள் மேலும் கடந்த காலத்தைப் போல வேறு கெடுபிடியாளர்களிடம் சிக்கக்கூடாது என்பதே எனது விருப்பமாகும். எனக்கு வேண்டியதெல்லாம் நாடு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி மக்கள் ஜனநாயக வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே. அதற்கு நான் உங்களது உதவியை நாடுகிறேன். பதவிக்காகவும், பிரபலமடைவதற்காகவும் நீங்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்று கூறுவதை நான் நிராகரிக்கின்றேன். ஏனெனில் உங்கள் 13 வேட்பாளர்களும் மொத்தமாக சுமார் 8600 வாக்குககளை பெற்று 9 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றதை நானறிவேன். நீங்கள் கூறுவது போல உண்மையிலேயே தமிழினத்துக்கு சேவை செய்வதாக இருந்தால் தயது செய்து எமது தலைவர்கள் செய்த தியாகங்களை ஈ.பி.டி.பி உட்பட பல்வேறு இயக்கங்களின் இளைஞர்கள் செய்த தியாகங்களை விடுதலைப் புலிகளின் வன்முறையில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் உயிரிழப்புக்களையும் பலகோடி பெறுமதியான சொத்து இழப்புக்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டம் வெளிப்படும் வரை பொறுத்திருக்கவும். அந்த நேரத்தில் நீங்கள் கூறுவது போல் உமது சமூகத்துக்கு சேவை செய்வதை பற்றி யோசிக்கின்றேன். இன்றைய நிலைமையின்படி நீங்கள் உங்கள் சமூகத்துக்கு சேவை செய்ய போவதில்லை. அதற்குப் பதிலாக அச் சமூகத்தை அழிக்கப் போகிறீர். விடுதலைப் புலிகளின் முகவர்களாக 2004 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரை 2001ம் ஆண்டு மூன்று கட்சிகள் சேர்ந்து கூட்டாக போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பையும்; தயவு செய்து விசமத்தனமாக ஒப்பிட்டு பேச வேண்டாம். இவ்வாறு விசமத்தனமாக சில விடயங்களை திரித்து நீங்கள் கூறுவதால்தான் நான் உங்களை தூர வைத்து பழகுவதற்கு முக்கிய காரணம் அதுவேயாகும். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாங்கள்தான் என புலிகள் உரிமை கொண்டாடும் போது அந்தக் கூற்றை முதலில் எதிர்த்தவன் நானே.

எனது ஆலோசனைகள் தேவையெனில் இக் கடிதத்தை அவ்வாறு நீங்கள் கொள்ளலாம். ஆனால் எனது ஒத்துழைப்பு உங்கள் தேவைப்படுமானால் அரசியலில் இருந்து ஒதுங்குவதன் மூலமே அந்த ஒத்துழைப்பை தரலாம் என நான் கருதுகிறேன். தற்போதைய சூழ்நிலையை நன்கு அலசி ஆராய்ந்தபடியினால் அதைவிட வேறு வழி எனக்குத் தெரியவில்லை. மன்னிக்க வேண்டும் தம்பி. இவ்வாறுதான் என்னால் கூற முடியும்

நன்றிஅன்புடன்

வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ