பத்திரிகை அறிக்கை

அப்பாவி மக்கள் 26 பேரின் உயிரைக் குடித்து மேலும் 65 பேருக்கு கடும் காயத்தை விளைவித்த விடுதலைப்புலிகளின் மிக கீழ்த்தரமான கோளைத்தனமான செயலை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. மிகவேகமாக பொறுமையை இழந்து வரும் சர்வதேச சமூகத்தினரை கடும் கோபத்திற்குள்ளாக்குவதைத் தவிர வேறு எந்த நன்மையையும் பெற்றுத்தராத இந்த வகையான அப்பாவி மக்களின் கொலைகளை விடுதலைப்புலிகள் கைவிடவேண்டும். மனித சமுதாயத்தின் மத்தியில் கொடூர மிருகங்களுக்கு இடமில்லை. மனித உள்ளம் கொண்ட எமக்கு சில புனிதமான கடமைப்பாடுண்டு. ஒழித்து விளையாடாது ஒவ்வொருவரும் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தவேண்டும்.

நான் பல தடவை ஊடகங்களை குறிப்பாக உலகளாவிய தமிழ் ஊடகங்களை விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயல்களை கண்டிக்காமைக்கு கண்டித்துள்ளேன். அவர்கள் அப்படிச் செய்யாமை விடுதலைப்புலிகள் மேலும் மேலும் மக்களைப் பீதியடையச் செய்யத் தூண்டியுள்ளது. சில மனித உரிமை அமைப்புக்களும் இதே தவறைச் செய்துள்ளன. நான் சகல இன மக்களையும,; ஊடகங்களையும் மனித உரிமை அமைப்புக்களையும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல கட்சித் தலைவர்களையும் விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதச்செயல்களை விடுத்து ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழும் ஏழைக் கிராமவாசிகளை விட்டு வைக்குமாறு கேட்கவேண்டும். இந்த ஏகோபித்த கோரிக்கை அவர்கள் இத்தகைய செயல்களில் எதிர்காலத்தில் ஈடுபடாது தடுக்க உதவலாம். மேலும் இத்தகைய கொடுஞ்செயல்களை தொடர்ந்து மக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதையும் அவர்களுக்கு உணர்த்தும். சர்வதேச சமூகத்திடம் நான் விடுக்கும் வேண்டுகோள் நாட்டில் தம்மைப் பற்றி தவறான விமர்சனங்களை சிலர் செய்திருப்பினும் கூட அவற்றைப் பொருட்படுத்தாது விடுதலைப்புலிகளின் அக்கிரமச்செயல்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என எச்சரிக்கவேண்டும் என்பதே.



வீ.ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி