யுத்த சூனிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி

11-05-2009
எஸ். ப. திவாரட்ண
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்
கொழும்பு

ஆணையாளர் அவர்களே!


யுத்த சூனிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி

கடந்த 07-05-2009 ம் திகதி பத்திரிகையாளர் மாநாட்டில் யுத்த சூனியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உணவுத் தட்டுப்பாடு பற்றி தாங்கள் அறிந்திருந்ததாகவும் ஒரு கப்பல் நிறைய உணவுப் பண்டங்கள் ஏற்றப்பட்ட நிலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்பின்மையால் இடம் பெயர்ந்த மக்களுக்கு அதனை அனுப்பி வைக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். கஷ்டமான வேலையாக இருந்தாலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இணங்க வைத்தோ அல்லது வேறு வழி மூலமோ அம் மக்களுக்கு உணவு அனுப்பி வைக்க வேண்டிய கடமைப்பாடு தங்களுக்குண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தால் நிச்சயமாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது கடமையை தட்டிக்கழித்திருக்காது. எது எப்படியிருப்பினும் எத்தகைய நியாயமான விளக்கத்தை கொடுத்திருந்தாலும் அப்பாவி மக்களை பட்டினி போடுவதை சர்வதேச சமூகம் மன்னிக்காது. ஏல்லாவற்றுக்கு மேலாக சித்தார்த்தர் பரிநிர்வாண நிலையை அடைந்த வெசாக் தினத்தை கொண்டாடும் இவ் வேளையில் நாம் அனைவருக்கும் தயவு தாட்சணியம் காட்டவேண்டும். புத்த பெருமான் பரிநிர்வாணமடைந்த தினத்தை சர்வதேச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த முயற்சி எடுத்ததும் நமது நாடே.

உணவுத் தட்டுப்பாடு இருப்பதை ஏற்றுக் கொண்டு அரசு இந்த விடயத்தில் எதுவும் செய்ய முடியாதென்றும் தெரிவித்துள்ளீர்கள். சர்வதேச சமூகத்துக்கு ஒரு சமிக்ஞை காட்டியிருந்தால் இடம் பெயர்ந்த அனைவருக்கும் அத்தனை பொருட்களும் பெருமளவு வந்து குவிந்திருக்கும். தங்களுக்கு சங்கடமான நிலையை நான் உருவாக்க விரும்பவில்லை. அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்தியா மூலமாக கப்பல் நிறைய உணவுப் பொருட்கள் இறக்கப்பட்டால் அது நீண்ட நாட்களுக்கு போதுமானதாக இருப்பதோடு அரசு மக்களை பட்டினி போடுகிறது என்ற குற்றச்சாட்டிலிருந்தும் தப்பிக் கொள்ள முடியும்.

தாங்கள் அப்பகுதியில் மேலும் 20,000 மக்கள்தான் இருப்பதாகவும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் எவ்வாறு கணக்கெடுக்க முடியுமென வினவியுள்ளீர்கள். உங்களுடைய கேள்வி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. நீங்கள் கூறுவது போல் இன்றும் 20,000 மக்கள்தான் அங்கு இருக்கிறார்கள் என்றால் இதுவரை வெளியேறிய 1,87,810 பேருடன் கூட்டி வருகின்ற தொகை 2,07,810 பேர் மட்டும்தானா விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்பட்ட நேரம் புதுமாத்தளன் பகுதியில் வாழ்ந்தார்கள்? என்னுடைய கூற்று நம்பகரமான வட்டாரத்திலிருந்து பெறப்பட்டதே. 31-12-2008; அன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய இரு மாவட்டங்களிலும் 4,87,048 பேர் வாழ்ந்திருக்கிறார்கள். இத் தொகையுடன் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இத்தனை ஆண்டு காலமாக இந்த எண்ணிக்கையின் அடிப்படையில்தான் இம் மாவட்டங்களுக்கு அரசாங்கத்தினால் உணவு அனுப்பப்பட்டு வந்துள்ளது. ஆனால் உங்கள் கூற்றுப்படி மக்கள் பெருமளவில் வெளியேறும்வரை மூன்று இலட்சம் மக்களுக்கே உணவு வழங்கியிருக்கிறீர்கள். ஆகவே கடந்த மூன்று நான்கு மாதங்களாக போதிய உணவு மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள்.

இப்போது விளங்குகிறது பால் மா இன்றி ஏன் குழந்தைகள் இறந்தார்கள் என்றும், முதியோர் போசாக்கின்மையால் மெலிந்தனர் என்றும். பல இடங்களில் மக்கள் கஞ்சிக்காக நீண்ட கியூ வரிசையில் காவல் நிற்கின்றனர். பல நாட்கள் அநேகர் சோறு உண்ணவில்லை. பால் மாவுக்கும், திரிபோசாவுக்கும் பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 07-05-2009 அன்று 25 மெ.தொ உணவு மட்டுமே சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல் எடுத்துச் சென்று 400 காயமடைந்தவர்களுடன் திரும்பியது. கப்பல் சென்றதும் பலத்த செல் தாக்குதல் காரணமாக கரைக்கு வராது, காத்திருந்த 500 க்கு மேற்பட்ட காயமுற்றோரை விட்டுச் சென்றது. மறு தினம் 300 மெ.தொன் உணவுடன் வந்த கப்பல் 450 நோயாளிகளையும் ஏற்றிச் சென்றது. வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகள் கடும.; பசியால் மயங்கி வீழ்கின்றனர். தாய்மார்கள் குழந்தைகளின் பால் மாவுக்காக காத்து நிற்கின்றனர். கடைசியாக உணவு கப்பல் ஏப்ரல் மாதம் 2ம் திகதியே வந்தது. அதன் பின் சிறு கப்பலிலேயே உணவு எடுத்துச் செல்லப்பட்டது.

குழந்தைகள் மத்தியில் தொற்று நோய்கள் பரவுகின்றன. இதுவே கள நிலைமைகளாகும். நான் வேண்டுவதெல்லாம் போதியளவு உணவை மக்களுக்கு அனுப்பப்பட வேண்டுமென்பதே.

நன்றி


வீ.ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ