பத்திரிகை அறிக்கை - மகிந்தபுரம் யாழ்ப்பாணம்

மகிந்தபுரம் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைக்கப்பட்டு தற்போது பாவனையற்று இருக்கும் தேசிய வீடமைப்பின் திட்டத்தை திருத்தியமைத்து மகிந்தபுரம் என பெயரிட எடுத்த பாராளுமன்றத்தின் தீர்மானம் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. இம் முயற்சி புத்திசாலித்தனமற்ற, ஏற்புடையதற்ற, காலத்திற்கு ஒவ்வாத, எதிர்பார்த்ததற்கு மாறான விளைவை ஏற்படுத்தக்கூடிய செயலாகும்.

நாட்டில் அமைதியின்றி மக்கள் பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் அரசு வீதிகளின் பெயர்களையும், கிராமங்களின் பெயர்களையும் மாற்றி வருவதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதற்கு நாவற்குழி வீட்டுத்திட்டத்தை மகிந்தபுரம் என்று மாற்றுவதற்கு அரசாங்கத்தை குறைகூறுகின்றனர். இம் முயற்சி நாவற்குழியின் கிராமத்தின் பெயரையும், நாவற்குழி புகையிரத நிலையத்தின் பெயரையும் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம். நாடு குறிப்பாக யாழ்ப்பாணம் அனைவரும் ஏற்றுக்கொள்ளகூடிய நியாயமான தீர்வு இனப்பிரச்சனைக்கு ஏற்பட்டதும் ஜனாதிபதியின் பெயரில் ஒரு தகுதியான நினைவுச் சின்னத்தை அமைக்க காத்திருக்கிறது.

கைவிடப்பட்ட ஒரு திட்டத்திற்கு மகிந்தபுரம் என்ற பெயரை சூட்டுவது கேலிக்கூத்தல்ல. ஒரு நாட்டின் தலைவருக்கு கொடுக்கப்படும் பெரும் கௌரவம் என ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி அவர்களுக்கு முழு மரியாதை கொடுக்கும் இம் முயற்சி எதிர்பார்ப்புக்களுக்கு மாறான விளைவையே ஏற்படுத்தும் என்பதோடு அவசியம் ஏற்படின் முற்று முழுதான ஒரு புதிய திட்டத்தை உருவாக்குவதே சிறந்ததென கருதுகிறேன்.

வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ