ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் சகிப்புத்தன்மைக்கும் அகிம்சைக்குமாகிய தினம

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் சகிப்புத்தன்மைக்கும் அகிம்சைக்குமாகிய தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தில் சகிப்புத்தன்மையையும் அகிம்சையும் கடைபிடிக்குமாறு வேண்டுகோள்

நவம்பர் மாதம் 16ம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் சகிப்புத்தன்மைக்கும் அகிம்சைக்குமாகிய தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குரிய யுனெஸ்கோவின் மதன்ஜித்சிங் இனால் உருவாக்கப்பட்ட 2006 ஆண்டுக்குரிய விருதும், பரிசும் எனக்குக் கிடைத்தது. அடுத்த விருது 2008ம் ஆண்டுக்குரியதாகும்.

தினமும் நாட்டில் நடைபெறும் துக்ககரமான சம்பவங்கள் குழப்பமடையச் செய்கிறது. இரு பகுதியினரின் மோதலால் பலர் இறக்கின்றவேளை பல அப்பாவி மக்களும் கிளேமோர் குண்டு வெடிப்புக்களில் சிக்கியும், செல் வீச்சிலும், குண்டு வீச்சிலும் உயிரிழக்கின்றனர். வடக்கு கிழக்கில் தினம் தினம் வன்முறையால் எவரேனும் இறக்க தவறுவதில்லை. கடந்த மூன்று நாட்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் இறந்துள்ளனர். இன்னொருவர் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. நாம் எம்மை சகிக்கப் பழக்கப்படுத்துவதோடு கோபத்துக்கும் இடமளிக்கக் கூடாது.

பல்வேறு இன மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு பாராளுமன்றம் ஓர் இடமல்ல. ஒரு உறுப்பினர் தனது கட்சியும், தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் ஒன்றே என சூளுரைத்துள்ளார். தமிழ் மக்கள் உண்மையில் சமாதானப் பிரியர்கள். அகிம்சைக்குக் கட்டுப்பட்டுள்ள அவர்களை இரத்த வெறிபிடித்த பயங்கரவாத அணியினருடன் ஒன்றுபடுத்தி பேச முடியாது. இன்னுமொரு அரசியல்வாதி அதே பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு தலைவருடன் ஈழத்து காந்தியென மக்களால் அன்போடு அழைக்கப்படும் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களை ஒப்பிட்டார். சகிப்புத்தன்மைக்காவும், அகிம்சைக் கொள்கைக்குமாகவே இலங்கையின் காந்தி என அவர் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அகிம்சை கொள்கைக்கு கட்டுப்பட்ட இப் பெரும் தலைவரை உலகில் மிகக் கொடூரமான இயக்கமென பெயரெடுத்த ஓர் இயக்கத்தின் தலைவர் ஒருவருடன் ஒப்பிட முடியாது.

மகாத்மாகாந்தியின் 125 வது பிறந்த தினத்தில் மதன்ஜித்சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட யுனெஸ்கோவின் 2006ம் ஆண்டுக்குரிய விருது பெற்று கௌரவிக்கப்பட்ட நான் வன்முறையை வெறுத்துத் தள்ளி சகிப்புத்தன்மையையும் அகிம்சையையும் பல்லின மக்கள் மத்தியில் பரப்பி நாட்டுக்கு நிரந்தர சமாதானத்தை பெற்றுத்தர அனைவரையும் வேண்டுகிறேன்.



வீ. ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ