24.11.2007.
கௌரவ ரணில் விக்கிரமசிங்க பா.உஎதிர்கட்சி தலைவர்
அன்புடைய எதிர்கட்சி தலைவருக்கு!
தேசிய அரசு அமைக்கும் தார்மீக கடமை தங்களுக்கு உண்டு
அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மகிந்த விஜயசேகர அவர்கள் கடந்த 22ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி அவர்கள் தங்களுடன் இணைந்து தங்களை பிரதம அமைச்சராக கொண்டு ஒரு தேசிய அரசு அமைக்க விரும்புவதாக தங்களுடன் கூறுமாறு பத்திரிகைகளுக்கு கூறியுள்ளார். ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோள் சம்பந்தமாக எனது அவதானிப்பை கூற விரும்புகின்றேன். நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாரிய அக்கறை காரணமாக இக் கோரிக்கையை ஏற்க வேண்டிய தார்மீக கடமை தங்களுக்கு உண்டு இவ் ஆலோசனையை இந் நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஆதரிப்பார்கள் என்பதையும் பல்வேறு இன மத மக்கள் பெருமளவில் வரவேற்பார்கள் என்பதையும் நான் நம்புகின்றேன். பல்வேறு மதத் தலைவர்களுடைய ஆதரவும் இதற்குண்டு. ஒருவருடைய சகிப்புத் தன்மையை மிஞ்சிய துன்பத்தை அனுபவித்து வந்த எமது மக்கள் சமாதானத்திற்காக ஏங்கி நிற்கின்றார்கள். சிரேஷ்ட அரசியல் வாதியாகிய நீங்கள் இருவரும் கடந்த 50 ஆண்டுகாலமாக நாடு எதை இழந்தது என்பதையும் அதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதையும் அறிந்திருக்கின்றீர்கள். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் பற்றிய தெளிவு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் குறைவாக இருப்பதே நாடு எதிர் நோக்கும் பல பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா பெறுமதியான அரசுடையதும் பொது மக்களுடையதும் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஏனைய இழப்புக்களின் பெறுமதியோ கணிக்க முடியாதவையும் மீளப்பெற முடியாதவையுமாகும். தமிழ், சிங்கள, முஸ்லீம் ஆகிய மூன்று பிரதான சமூகத்தினர் மத்தியில் யுத்;தத்தினாலோ அல்லது வேறு விதத்தினாலோ 70,000 இற்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. கிளேமோர் மற்றும் குண்டு ஆகியவற்றால் பேரூந்துகள், புகையிரதங்கள், ஹோட்டல்கள், பொதுச்சந்தைகள், வீதியோரங்கள் போன்றவற்றில் இறந்த மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம். அப்பாவி பொது மக்களுடைய உயிரிழப்புக்கள் கணக்கில் அடங்கா. பள்ளிவாசல்களிலும், பௌத்த, இந்து கோவில்களிலும் பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் 30,000 இற்கும் மேற்பட்ட விதவைகளும், பெருமளவு அநாதைகளும் உருவாக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறியாததல்ல. எம்மில் பலர் அநாதரவற்ற நிலையில் உள்ளனர். 1958, 1977, 1983 ஆகிய வருடங்களில் பெரும் இனக்கலவரங்களும் இடையிடையே சிறு சிறு கலவரங்களும் நடந்தேறியுள்ளன. வட மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் மக்கள் எதுவித காரணமுமின்றி குறுகிய கால அவகாசத்தோடு தமது வீடுகள், நகைகள், தொலைக்காட்சி, வானொலி, கார், லொறி போன்ற சகல சொத்துக்களையும் விட்டு விட்டு வெறும் ஐநூறு ரூபாவோடு வெளியேற்றப்பட்டனர். இவர்கள் கடந்த 17 வருட காலமாக தென்னிலங்கையில் 160 அகதி முகாம்களில் இருந்து நம் மண்ணுக்கு என்று திரும்புவோம் என்ற ஏக்கத்தோடு வாழ்கின்றனர். பலர் அங்கவீனர்களாகவும், கை, கால், கண்பார்வையற்றவர்களாகவும் வாழ்கின்றனர். எத்தனையோ சீமான்கள் ஒரே இரவில் ஓட்டாண்டி ஆக்கப்பட்டார்கள்.
எத்தனையோ பிள்ளைகள் தமது கல்வியை இழந்துள்ளனர். தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் பல்வேறு துறைகளில் தாம் தெரிந்திருந்த தொழில்நுட்ப திறமைகளை இழந்துள்ளனர். வடபகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் தம் தொழில்களை இழந்துள்ளனர். எத்தனையோ பேர் தமது அன்புக்குரியவர்களையும், பல குடும்பத்தினர் நம்பி வாழ்ந்த ஏக உழைப்பாளிகளையும் இழந்துள்ளனர். நான் கூட இரு சகோதரர்களையும் நான்கு பெறா மக்களையும் இழந்துள்ளேன். எத்தனையோ குடும்பங்கள் சிதறி உடைந்து போயுள்ளன. மீனவர்கள், விவசாயிகள், தொழில் நுட்பம் தெரிந்த பலர் ஆயிரக்கணக்கில் வேலையின்றி தம் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் அனைவரும் வாழ்கின்றனர். இத்தகைய கொடுமைகள் முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டாமா? நிறுத்த வேண்டுமெனில் நாட்டில் பொறுப்புள்ள தலைவர்களுக்குள்ள ஒரே வழி உடைந்த புண்பட்ட அனைவரின் உள்ளங்களுக்கும் ஒன்று சேர்ந்து பகுதி பகுதியாக அன்றி ஒரு நிரந்தர தீர்வை காண்பதன் மூலமே. இதுமட்டுமல்ல இதைவிட இன்னும் துன்பகரமான சம்பங்கள் நமது நாட்டில் நடக்கின்றன. இருப்பினும் நாட்டு மக்களுடைய துன்ப துயரங்களைப் பற்றி அக்கறைபடாத ஒரு சிலர் இருக்கின்றனர். சிலர் தமது பதவிகளை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறார்களே அன்றி துன்பத்துடன் வாழும் மக்களுக்கு அனுதாபமாக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த தயாரில்லை. நாட்டின் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக பதவி ஏற்கக்கூடிய வாய்ப்பை உடைய நீங்கள் சந்தர்ப்பத்துக்கு உதவகூடிய வகையில் சகல பேதங்களையும் மறந்து துன்பப்படும் மக்களுடைய நல்வாழ்வுக்கு பெரும்மதிப்பளித்து தங்களுக்கு தரப்பட்ட இந்த வாய்ப்பை ஏற்க வேண்டும். தங்களுக்கு விசுவாசம் செலுத்துகின்ற பாராளுமன்ற அணியுடன் ஒன்று சேர்ந்து 50 வருடத்துக்கு மேற்பட்ட இந்த இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். நம் நாட்டையும் மக்களையும், மக்களின் ஜனநாயக உரிமைகளையும் இணைந்து காப்பாற்றியவர்கள் என்ற பெருமையை சரித்திரம் தங்களுக்கு கொடுக்கும்.
தேசிய அரசு எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும் என்பதையும் எந்த கால எல்லைக்குள் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் தாங்களே நிர்ணயிக்கலாம். தேர்தல் பிரச்சாரத்தின் போது இனப்பிரச்சனையை தேர்தல் பிரச்சாரத்துக்குள் சேர்க்காது தேர்தல் முடிந்த பின் ஓர் தீர்வை காண இருவரினதும் நடவடிக்கை அமைய வேண்டுமென நான் கேட்டிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன்
இந்த நாட்டையும், அதனுடைய மக்களையும் நேசிக்கும் ஒரு நாட்டுப் பற்றாளன் என்ற வகையிலும் மக்கள் சார்பிலும் தாங்கள் இருவரும் தங்கள் அணியினரும் சகல அரசியல் பேதங்களையும் மறந்து ஒற்றுமையாக நம் நாட்டை முன்பிருந்த பழம் பெருமையோடு மக்கள் அனைவரும் சமமாக சகல உரிமைகளையும் அனுபவிக்கும் இலங்கை மாதாவின் பிள்ளைகளாக வாழ உதவ வேண்டுமென மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய இந் நற் பணிக்கு சகல மதத் தலைவர்களடைய ஆசீர் வாதம் வழி நடத்தலும் உண்டு
அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ