உணர்வைத் தூண்டும் விடயங்களில் அரசு பாராமுகமாக இருக்க முடியாது

29-03-2009
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

உணர்வைத் தூண்டும் விடயங்களில் அரசு பாராமுகமாக இருக்க முடியாது

எதுவித பதவிவுக்கும் நான் ஆசைப்பட்டவன் அல்ல என்பதையும் அதிகாரத்தை பெற நான் பேராசை கொண்டவனும் அல்ல என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் அல்லது வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பேதமின்றி அநேக மக்களின் நலன் விரும்பி என்ற காரணத்தினால் எமது மக்களை பாதிக்கின்ற, எவ்விதமான, பிரச்சினைகள் ஏற்படும் போதும் அவற்றை தங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும். இடம் பெயர்ந்த மக்கள், அத்தகையோரின் எண்ணிக்கை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அப்பிரச்சினைகளின் தீர்வுக்கு வழிமுறை போன்ற விடயங்களே இன்று பெருமளவில் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் வரலாறு காணாத உணர்ச்சிமிக்க இடம்பெயர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அசட்டையீனம் காட்ட முடியாது. நான் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுபோல பல்வேறு மூலமாக கிடைத்த மாறுப்பட்ட தகவல்களின்படி முதலாவதாக இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை சம்பந்தமாகவும், அந்த எண்ணிக்கையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு தேவைகள் சம்பந்தமாகவும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமையால் அப் பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது

இடம்பெயர்ந்தவர்களில் சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள், நலிவுற்றோர், அவயங்களை இழந்தோர் ஆகியோர் பற்றி அவர்களின் உறவினர்கள் பெரும் கவலை அடைகின்றனர். அவர்கள் படுகின்ற துன்பத்தால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு பெரும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. இப்போதுதான் சர்வதேச சமூகம் பகிரங்கமாக விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி இடம்பெயர்ந்த மக்களை விடுவிக்காமைக்கு கண்டமும் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா ஸ்தாபனம் போன்றவை அவர்கள் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்படும் வரை சரியான முறையில் அம் மக்கள் கவனிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. கடந்த 20, 25 ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கு உணவு அளித்து வந்த அரசு இம் மக்கள் விடுவிக்கப்படும் வரை தொடர்ந்து உதவ வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தன் பிரஜைகளை சரியான முறையில் கவனிக்க வேண்டிய கடமைப்பாடு அரசுக்கு உண்டென நீங்கள் அளித்த உறுதிமொழி எனக்கு பெரும் நிம்மதியை தருகின்றது. இச் செய்தியை உள்ளுரிலும், வெளி நாடுகளிலும் வாழும் பலருக்கு நான் அனுப்பியுள்ளேன்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே! விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுள்ள இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை சம்பந்தமாக அரசாங்கத்தினுடைய நிலைப்பாட்டுடன் என்னால் ஒத்துபோக முடியவில்லை. உண்மையான நிலைமையை அரசு கண்டறிய முயற்சிக்க வேண்டுமேயொழிய தெளிவற்ற நிலையில் அதை விட்டுவிட முடியாது. இது சம்பந்தமாக தங்களை எவரேனும் குறை கூறுவதை விரும்பாமையினாலேயே இதனை நான் வற்புறுத்தி கூறுகிறேன். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களை மீள குடியமர்த்த வேண்டிய பணி தங்களை காத்து நிற்கிறது. வடக்கே கடமையாற்றும் அரச அதிபர்கள் தரும் புள்ளி விபரங்கள் விடுதலைப் புலிகளின் வற்புறுத்தலால் தயாரிக்கப்பட்டவை என கூறி அவற்றை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது. இதுவரை காலமும் அரச ஊழியர்களால் தயாரிக்கப்பட்ட இவ் அறிக்கைகள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை ஆகும். சனத்தொகை பற்றிய புள்ளி விபரம் விடுதலைப் புலிகளின் தலையீட்டால் மிகைப்படுத்தப்பட்டமை உண்மையே. ஆனால் அனேகமாக ஏனைய விபரங்கள் அத்தனையும் பெறுமதிமிக்கதும், உண்மையானதுமாகும். கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட அதிபர்கள் தத்தம் மாவட்டத்தில் முறையே 1,958,32 பேரும், 2,203,11 பேரும் மொத்தம் 4,161,43 பேர் 30-12-2007 இல் வசித்து வந்தததாக கணக்கிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் அழுத்தத்தால் இவ் எண்ணிக்கை இரண்டு மடங்காக காட்டப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் கூட குறைந்த பட்சம் 2,008,71 பேர் அம்; மாவட்டங்களில் இருந்திருக்க வேண்டும். வவுனியா மன்னார் ஆகிய மாவட்ட மக்களைச் சேர்ந்த 2,856,74 பேர் இக் கணக்கில் உள்ளடக்கப்படவில்லை. வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 50,000 பேர் இடம் பெயர்ந்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மொத்தமாக குறைந்தபட்சம் 2,580,00 மக்கள் இருந்திருக்க வேண்டும். இவற்றில் 55,000 மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து சேர்ந்துள்ளமையால் இத் தொகையை கழித்து மதிப்பிடின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 2,000,00 இற்கு மேற்பட்ட மக்கள் இருக்க வேண்டும்.

நான் யாரையும் தப்பாக வழி நடத்தவோ அன்றி விடுதலைப் புலிகளின் பொய் பிரச்சாரத்தால் தப்பாக வழி நடத்தப்பட்டவனோ அல்ல. என்னால் குறிப்பிடப்பட்டவை மறுத்துரைக்க முடியாத உத்தியோகபூர்வமான அறிக்கைகளில் இருந்து பெறப்பட்டவையே. சட்டப்படி இல்லாவிட்டாலும் இந்நிலைப்பாட்டை திருப்திகரமாக ஐ.நா சபை, மனித உரிமை அமைப்புக்கள் பொதுவாக சர்வதேச சமூகம் ஆகியவற்றுக்கு விளக்க வேண்டிய தார்மீக கடமை அரசுக்கு உண்டு. நாங்கள் யாரையும் கோபமடைய செய்யத் தேவையில்லை. அத்தோடு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் எந்த ஸ்தாபனத்தையும் கோபமடைய வைக்க எவரையும் அரசு அனுமதிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தமது உறவினர்களுக்கு ஏது நடந்ததோ என அறிய முடியாது மிக்க கவலையும், பீதியும் கொண்டுள்ள உறவினர்களின் பயத்தையும், பீதியையம் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எந்த அக்கிரமத்துக்கும் தயங்காத, தம் செயற்பாடுகளுக்கு எவருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமற்ற, தாம் நன்மையடைய எதையும் செய்யக்கூடிய ஓர் இயக்கம் இதில் சம்பந்தப்பட்டுள்ளமையால் மக்கள் பீதி அடைந்திருப்பது நியாயமானதே. தற்போதைய நிலையில் சரியான உண்மை நிலையை அறியும் வரைக்கும் குறைந்தபட்சம் 2,50,000 மக்களுக்கேனும் அரசு தொடர்ந்து உணவும், மருந்து வகைகளும், அனுப்ப வேண்டியது தவிர வேறு வழியில்லை. ஆனால் என்னுடைய கணிப்பின்படி அங்கே 3,000,00 மக்கள் வரை இருக்கின்றார்கள் என்பதே. அரசு இதை தன் நற்பெயரை காப்பாற்றுவதற்கு மட்டுமன்றி இந்த நாட்டு பிரஜைகளுக்கு செய்ய வேண்டிய கடமையாக செய்ய வேண்டும். அப்படியாயின் குற்றத்தை ஏற்க வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளுடையதாகும். முன்பு ஒரு கடிதத்தில் விரக்தி காரணமாகவும், சர்வதேச சமூகம், புலம் பெயர்ந்த மக்கள் ஆகியோரிடம் அனுதாபம் தேடுவதற்காகவும் இந்தியாவிலே நடந்தது போல இந்திய சுதந்;திரப் போராட்டத்தை பிரித்தானிய அரசுக்கு எதிராக முடுக்கி விடவும் செய்த 1500 பேரை பலியெடுத்தும் அங்கவீனராக்கிய ஜாலியன்வாலா பாக் போன்றவொரு சம்பவத்தை உருவாக்கிக்காட்டத் தயங்க மாட்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் இம் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள 25 ச.கி.மீ பிரதேசத்திற்குள் கடும் நெரிசலுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு மேலும் பல கஷ்டங்களை ஏற்படுத்தும் வகையில் இராணுவம் போரை முன்னெடுத்துச் செல்லக் கூடாதென அரசு படைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். 80,000 மக்களோ அன்றி 2,000,00 மக்களோ என்பதல்ல முக்கியம் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். உள நோயால் பாதிக்கப்பட்டு பெரும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் பிரேதங்களுடன படுத்து உறங்குவதும் தாம் அன்போடு நேசித்த உறவினர்களின் பிரேதங்களை எரிக்கவோ, அடக்கம் செய்யவோ, வசதியின்றி வீசி எறிவதும் சகஜமாகிவிட்டது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் துர்நாற்றமெடுக்கின்றன. இருப்பினும் தம் உறவினர்களில் ஒருவரையேனும் விட்டுவிட்டு வெளியேற அவர்கள் தயாரில்லை. முழு குடும்பமாக வெளியேறுவதையே விரும்புகின்றனர். கொடிய விஷப் பாம்புகள், விஷ குளவிகள், நுளம்பு போன்ற ஜந்துக்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். எந் நேரமும் ஓர் கொடிய தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம். எல்லாவற்றுக்கு மேலாக தினம் 24 மணித்தியாலமும் குண்டு விழுமோ, எத்திசையில் இருந்து ஷெல் அடியும், பீரங்கித் தாக்குதலும் ஏற்படுமோ என்ற நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள்.

ஜனாதிபதி அவர்களே! விடுலைப் புலிகளின் சிறிய விமானம் கொழும்பில் குண்டு போட்டவேளை மக்கள் எத்தகைய பய பீதியுடன் வாழ்ந்தார்கள் என்பது நாங்கள் அறியாததல்ல. விடுதலைப் புலிகள் மிருகத்தன்மை படைத்தவர்கள் அல்ல. அவர்கள் உண்மையான மிருகங்கள். நாங்கள் மிருகங்களும் அல்ல, மிருகத் தன்மை படைத்தவர்களும் அல்ல. இத்தகைய துன்பங்களை தம் உறவினர்கள் அனுபவித்துக கொண்டிருக்கின்ற வேளையிலே தெற்கே வாழும் மக்களால் எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இங்கே குறிப்பிட்டவை மக்கள் படும் துன்பங்களில் ஒரு சிறு பகுதியே வெளிகாட்டப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் 2500 ச.கி.மீ விஸ்தீரணம் கொண்டது. அவர்களில் இரண்டு லட்சம் பேர் 25 ச.கி.மீ விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் வாழ்வது மானிடர்களால் முடியாத காரியமாகும். நாட்டில் ஓர் பெரும் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் அம் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஆகவே தயவு செய்து இந்த அப்பாவி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் வரை இராணுவத்தை முன்னேறிச்செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கவும். பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிh ஊசலாடுகிறது. பல்லாயிரக்கணக்கான தோழர்களை தியாகம் செய்து இராணுவத்தினர் இவ்வளவு காலமும் எடுத்த நற்பெயரை ஒரு சிறு அசம்பாவித சம்பவத்தால் இழந்து விடக்கூடாது. 4,000 மக்கள் காயப்பட்டு திருமலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என்றால் எத்தனை பேர் மரணித்திருப்பார்கள். என்பதை ஊகிக்க முடியும்? யாருடைய தவறினால் இவர்கள் மரணித்தார்கள் என்பதல்ல முக்கியம். அவர்களை காப்பாற்ற பல்வேறு வசதிகள் அரசுக்கு இருந்தும் அவ்வாறு அம் மக்களை இறக்கவிட வேண்டுமா என்பதே இன்று ஒவ்வொருவரும் எழுப்பும் கேள்வியாகும் எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலான மக்கள் இறக்கின்றார்களோ அவ்வளவுக்கு புலிகளின் சந்தோஷமும் கூடும். அவர்களை பாராட்டுவதற்கு மக்களும் இருக்கின்றார்கள். அனால் இதே மனப்பான்மையை அரசு கடைபிடிக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு இறப்பும், காயமடைவதும் யாரால் நிகழ்ந்திருந்தாலும் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கான வாய்ப்பு அரசுக்கு முதல் இருந்தது. ஆனால் தற்போது யுத்தத்தின் கடைசி கட்டத்தில் குண்டு வீச்சு, ஷெல் அடி, பீரங்கி தாக்குதலில் பலர் பாதிக்கப்படுகின்றனர். உணவு எடுத்துச் சென்ற கப்பலை தடுத்தால் மக்கள் பட்டினியால் மரணிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே அரசுக்கு இருக்கிற ஒரேயொரு வழி ஐ.நா சபையை கொண்டு விடுதலைப் புலிகளை எச்சரித்து மக்களை விடுவிப்பதே. ஐ.நா சபையினுடைய வேண்டுகோளை விடுதலைப் புலிகளினால் நிராகரிக்க முடியாது. உலக சமாதானத்துக்காவும், பாதுகாப்பிற்காகவும் ஐ.நா உருவாக்கப்பட்டது. ஆகவே ஐ.நா வின் உதவியை நாடுவது எந்தவித தப்பும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைனையும் கூறட்டும் பயங்கரவாதத்தின் தாக்கத்தை ஒருவர் உணர வேண்டுமாக இருந்தால் தன் குடும்பத்தில் மிக்க அரிய ஜீவனை இழந்திருக்க வேண்டும். தாங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற முறையிலும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர் என்ற காரணத்தினாலும் குறைந்த பட்சம் அமெரிக்கா, இந்திய போன்ற நாடுகளின் உதவியை பெற்று மேலும் தாமதமின்றி அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகையவொரு ஒழுங்கு இல்லாத பட்சத்தில் ஐ.நா சபையை அழைப்பது எங்களுக்கு ஒரே வழி. அன்றேல் ஏதாவது நட்பு நாடுகளின் உதவியை பெற வேண்டியது தவிர்க்க முடியாத கடமையாகும்.

நான் அரசியலில் லாபம் தேட முயற்சிக்கவில்லை. ஆனால் எனனுடைய கடமையை ஒரு தமிழன் என்றில்லாமல் இலங்கை பிரஜை என்ற கோதாவிலே இதை செய்கிறேன். நீங்களும் நானும் எமது கடமையில் இருந்து தவறி விட்டோம் என்று சர்வதேச சமூகம் குற்றம் சுமத்த இடமளிக்கக்கூடாது என்பதே எனது பெரு விருப்பமாகும்.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி
த.வி.கூ- தலைவர்