மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம்.

09.03.2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு,

மிக்க அவதானத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியம்.

ஈழப்போரின் இறுதி முடிவு இந்த வாரத்துக்குள் கிடைத்து விடுமெனவும் அடுத்து வரும் 72 மணித்தியாலயங்களும் விடுதலைப் புலிகளுக்குக் கஷ்டமான காலமெனவும் பாதுகாப்புப் படையினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து எனக்குப் பெரும் பீதியை உண்டு பண்ணியுள்ளது. நான் விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனது சிந்தனையின் முன்னிலையில் நிற்பது எமது நாட்டினதும,; நாட்டு மக்களினதும் அக்கறையே.

அண்மையில் வன்னி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்த இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள் வன்னி படை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் இராணுவ அதிகரிகள் மத்தியில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி முக்கியமானதுடன் யாரும் புறக்கணிக்கத் தக்கதுமல்ல ';;இந்த நிமிடம் தொடக்கம் எமது முன்னேற்றம் மிக்க அவதானமாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூடிய அக்கறையும் கொண்டதாகவும் அமைய வேண்டும். அவர்களுக்கு மிகவும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியதே நமது முன்னுள்ள முக்கிய பொறுப்பாகும”;. ; இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

பொது மக்களுடன் கலந்து செயற்;படும் விடுதலைப் புலிகள் எதற்கும் எதனைச் செய்யவும் தயாராகவுள்ளனர். மிக விரக்தியடைந்த நிலையிலுள்ள அவர்கள் இராணுவத்தினரை தூண்டக் கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தயங்கமாட்டார்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் எவரையேனும் திருப்திப்படுத்துவதற்காக யுத்தத்தை விரைவில் முடிக்க முடியாது. ஒவ்வொருவரும் மிக்க அவதானமாகச் செயற்பட வேண்டிய கட்டம் இதுவாகும்.

நான் மிக்க பயத்துடனும் அவதானத்துடனும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக் கொள்வது யாதெனில், விடுதலைப் புலிகள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில் “ஜாலியன்வாலா பாக்” இல் நடந்த சம்பவம் போன்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என்பதேயாகும். அவ்வாறு செய்தால் அத்தகைய ஒரு சம்பவத்தை வைத்து ; சர்வதேச சமூகத்தையும் உலகளாவி வாழும் தமிழர்களையும் தூண்டிவிட ஒரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கியதாக முடிந்துவிடும். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை தமது தேவைக்காகத் தடுத்து வைத்துப் பட்டினி போடும் ஒரு குழு தமது அபிலாஷைகளை நிறைவேற்ற எதனையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். “ஜாலியன்வாலா பாக்” சம்பவத்தில்தான் 10 நிமிடங்களில் 1550 துப்பாக்கி ரவைகளை உபயோகித்து கதறக் கதற 1516 இந்திய மக்களை பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் சுட்டுத் தள்ளியும் காயப்படுத்தியும் இருந்தனர்.

இந்தச் சம்பவமானது பிரித்தானியரின் இந்திய ஆட்சி வரலாற்றில் ஒரு பெரும் கரும் புள்ளியாகவும் இந்திய மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு திருப்பு முனையாகவும் அமைந்தது. இவ்வாறானதொரு சம்பவம் எமது நாட்டில் நடக்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை. அப்படி ஏதும் நடந்து விடக் கூடாதென்பதே எனது பிரார்த்தனையாகும். ஒரு சிறிய சம்பவம் கூட அழிந்து போய்க் கொண்டிருக்கும் ஓர் இயக்கத்துக்கு புது வாழ்வளிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம். கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் ஒரு இலட்சத்து ஐயாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சதது இருபதினாயிரம் மக்கள் வாழ்கிறார்கள். விடுதலைப் புலிகள் எதனையும் மிகைப்படுத்திக் கூறுபவர்கள் என்பதால் அந்த எண்ணிக்கையில் எழுபத்தைந்த வீதத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும் அங்கு 3 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாழவேண்டும். மன்னார், வவுனியாவிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இத்தொகை மேலும் அதிகரிக்கும். இவற்றில் சுமார் நாற்பதினாயிரம் மக்களே வவுனியா வந்துள்ளனர். ஏற்கனவே வெளியேறியவர்களையும் சேர்த்துக் கணித்தால் 3 இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளனரென்பது சரியாக இருக்கலாம்.

மூன்று இலட்சத்து முப்பதாயிரம் மக்களுக்குத் தேவைப்படும் உணவுப் பொருட்;கள் ஏறக்குறைய ஐந்து ஆயிரம் தொன் ஆகும். அங்கே வாழும் அநேக மக்கள் மிகப் பட்டினியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். உண்மையில் அங்கு உணவு,மருந்துப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அதை நிறைவேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கால் நூற்றாண்டு காலமாக விடுதலைப் புலிகளுக்கு உணவளித்து வந்தது அரசாங்கமே. அங்கே உள்ள மக்களை அரசாங்கமே காப்பாற்ற வேண்டுமென்பதால் அங்குள்ள மக்களின் தேவைக்கேற்ப அவர்கள் விடுவிக்கப்படும் வரை போதியளவு உணவு மற்றும் மருந்து வகைகள் அனுப்பப்பட வேண்டும்.

மிக பயங்கரமான நிலைமை தவிர்க்கப்படுவதற்கு இராணுவத்தினர் விமானம் மூலம் குண்டு பொழிவதனையும் ஷெல், பீரங்கி மூலம் தாக்குவதனையும் உடன் நிறுத்த வேண்டும். இப்படி ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளதென்பதனை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டால் உடனடியாக தலையிட்டு இந்த அவல நிலையை நிறுத்த முன்வரவேண்டும்.
நன்றி


வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி