சுடர்ஒளி ஆசிரியரின் முறைதவறிய கைது கண்டிக்கப்படவேண்டியதாகும்
தேசிய தமிழ் தினசரி சுடர் ஒளி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் திரு. வுத்தியாதரன் அவர்களின் முறை தவறிய கைதை தமிழர் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது பத்திரிக்கையாளர்கள் ஓர் தேசத்தின் காவலர்கள் பல சிரமங்கள் மத்தியில் சில சந்தர்ப்பங்களில் தம் உயிரையும் பணயம் வைத்து சேகரிக்கும் செய்திகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய கடமை அவர்களுக்குணடு.
காவல் துறையினர் சமாதானத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் என்ற கோதாவில் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் நிருபர்களுக்கும் பாதுகாப்பும் உதவியும் அளிப்பதோடு அவர்களின் கடமைக்கு எதுவித இடையூறும் செய்யாதிருக்க கடமைப்பட்டவர்களாவர். அவர்கள் எழுதுவது அத்தனையும் எமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம் இருப்பினும் உண்மையை வெளிப்படுத்தி பாரபட்சமற்ற செய்திகளை பிரசுரிப்பது வரவேற்கதக்கதாகும். பத்திரிக்கை ஆசிரியர் தான் சேகரிக்கும் செய்தி வந்த வழி பற்றிய இரகசியத்தை காப்பற்றவேண்டிய கடமை உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.
பாரபட்சமின்றி கடமைபுரிய வேண்டிய கடமைப்பாடு காவல்துறை அதிகாரிகளுக்குண்டு. சமாதானத்தை நிலைநாட்டும் அதிகாரிகளாகிய காவற்துறையினர் அனைவரையும் சமமாகவும் அனைவரையும் அக்கறையுடனும் கண்ணியமாகவும் நடத்தவேண்டிய பொறுப்பு உடையவர்களாவர். அவர்கள் சில சந்தர்ப்பங்களில் எதிர்நோக்கும் உயிர் ஆபத்தைப்பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் சங்கடமான நிலைமைகள் பற்றியும் நாம் அறியாததல்ல. அண்மையில் கிடைத்த ஓர் இந்திய செய்திப்படி ஏதோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சில வழக்கறிஞர்கள் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரை தாக்கியும் ஒரு சவர அலகால் பல இடங்களில் காயமும் ஏற்படுத்தியதால் ஏற்பட்ட சங்கட நிலையையும் அவமானத்தையும் தாங்கமுடியாது தீக்குளித்துள்ளா
ஒருவர் எவ்வளவு மோசமான குற்றவாளியாக இருந்தாலும்கூட திரு. வித்தியாதரனுக்கு ஏற்பட்டதுபோன்ற நிலைமை இனிமேல் வேறு ஒருவருக்கு ஏற்படக்கூடாது திரு. வித்தியாதரன் ஓர் கணவான் மட்டுமல்ல ஓர் தேசிய தமிழ் தினசரியின் பிரதம ஆசிரியரும்கூட. அவர் தான் கைது செய்யப்படுவதை வலிந்து தடுத்திருந்தாலோ அல்லது தப்பிச்செல்ல முயற்சித்திருந்தாலோ சிறிதளவு பலாத்காரம் உபயோகித்திருக்கலாம் என்று கூட கூறலாம் ஆனால் இச்சந்தர்ப்பத்தில் திரு வித்தியாதரன் தன் காரியாலயத்தில் பெருமளவு நேரத்தை செலவிடுபவர். ஓர் தொலைபேசி அழைப்பு மூலம் அவரை வரவழைத்திருந்தால் அவர் அழைப்பிற்கமைய செயற்பட்டிருப்பார். அந்த அசிங்கமான முறையில் நடத்தப்பட்டது வெட்கப்படவேண்டிய விடயமாகும். எமது நாட்டு காவல் துறையினர் ஓர் பத்திரிக்கை ஆசிரியரை இம்முறையில் நடத்தியிருப்பார்கள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. இலங்கை காவல் துறையினருக்கு இந்தளவு ஓர் அவமானத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்கமுடியாது. சம்மந்தப்பட்டவர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வதிகாரிகளுக்கு அவர் தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த வேளை இவ்வாறு நடந்திருந்தால் இத்தகைய கைதை அவரால் நியாயப்படுத்தவேமுடியாது. தனது இறுதி யாத்திரைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவிற்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகவே அவரின் உறவினர்கள் கருதுகின்றார்கள். அது நியாயமானதாகவே எனக்கும் தோன்றுகின்றது.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- தமிழர் விடுதலைக் கூட்டணி