அரச உத்தியோகத்தருக்கு கௌரவமளித்தல்

29.05.2009
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி.

அன்புடையீர்,

அரச உத்தியோகத்தருக்கு கௌரவமளித்தல்

இதுதொடர்பாக தங்களுக்கு கடந்த 05.05.2009 திகதிய கடிதம் மூலம் குறிப்பிட்டிருக்கிறேன். அதை விட பல தடவை வலியுறுத்தியும் வந்துள்ளேன். சாதாரண அரச ஊழியர் தொடக்கம் அரச உயர்மட்ட அதிகாரிகள் வரை பலர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அவர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படாமல் சாதாரண எடுபிடியைப் போல் நடத்தப்பட்டனர்.

எவ்வாறாயினும் அவர்கள் தங்கள் மான நட்டங்களை பொருட்படுத்தாமல், அரசின் சிவில் நிர்வாகம் அங்கு நடைபெற உதவியவர்கள், அவர்கள் தமது மானத்தை இழந்தும், அரச சிவில் நிர்வாகம் நடைபெறுகிறது என்ற அரசின் வெளி உலக பிரச்சாரத்துக்கு உதவியவர்கள். இன்று மானமும் இழந்து உடமைகளும் இழந்து உதவியையும் இழந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு அரசின் அடிமை சேவகர் போல் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் அரச நிர்வாக உயர்தர உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர். நான் மிகவும் முக்கியமாக குறிப்பிடும் இருவரையும் இங்கு உதாரணமாக காட்ட விரும்புகிறேன். ஒன்று புதுக்குடியிருப்பில் மிக இறுக்கமான அரச சேவையினை நடைமுறைப் படுத்திய உதவி அரச அதிபர் செல்லையா தயானந்தா ஆகிய இவர் நிருவாக சேவை(எஸ்.எல்.எ.எஸ்) தரம் 01 அதிகாரி, மற்றவர் கந்தசாமி பார்த்தீபன். இவர் முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக இறுதிவரை நின்று பணியாற்றியவர். இவர்களின் நிலையே இவ்வாறாக இருக்கும் போது ஏனையவர்கள் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

இதிலே குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான வேடிக்கையான விடையம் என்னவென்றால், புதுக்குடியிருப்பு பிரதேசசபையினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறும் ஈ.பி.டி.பி வடக்கு செயலணியையும் வைத்துக்கொண்டு, சுமார் 1½ லட்சத்துக்கு மேல் உள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உதவி அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச சபை செயலாளர் தொடர்பாக எதுவித செய்தியும் தங்களுக்கு தரவில்லை என்பதனையும் மிக வருத்தத்துடன் அறியத்தருகிறேன்.

எனவே இவர்கள் தொடர்பாக இவர்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தினை வழங்குவதுடன் அவர்கள் மூலம் அவ்வவ் மாவட்டங்களில் அரச நிர்வாகத்தினை மீள்கட்டமைத்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள


வீ.ஆனந்தசங்கரி
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி.