முள்ளிவாய்காலுக்கு உணவும், மருந்தும் விரைந்து அனுப்புங்கள்.

முள்ளிவாய்காலுக்கு உணவும், மருந்தும் விரைந்து அனுப்புங்கள்.

பயங்கரவாதம் என்ற சாபக்கேடு இலங்கையை இறுகப்பிடித்திருந்து இன்று விடுவிக்கப்பட்ட பின்பு அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டிய விடயந்தான். ஆணால் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள வடுக்கள் மாற பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம்.

இன்று நாட்டுமக்கள் இவ் வெற்றியை கொண்டாட அழைக்கப்பட்டுள்ள வேளை, முள்ளிவாய்காலில் விட்டுவிட்டு வந்த தமது உறவினர்களை அரசு பாதுகாப்பாக வவுணியாவிற்கு கொண்டுவரும் என எதிர்பாத்திருந்த உறவினர்கள், அவர்களுக்கு என்ன நடந்ததென தெரியாது கண்ணீர் விடுகின்றனர். நேரம் போகப் போக அவர்களின் பதகளிப்பு முகாம்களில் கூடுகிறது. தமது உறவினர்களுக்கு என்ன நடந்ததென அறிய ஆவலாய் உள்ளனர்.

முள்ளிவாய்காலில் இருந்து தினம் வரும் செய்திகள் துக்க கரமானதே. ஒரு கட்டத்தில் சிவில் நிர்வாகம் முற்றாக முறிந்து விட்டது. தொடர்ந்து மேற்கௌளப்படும் எறிகனைத் தாக்குதலுக்கு பயந்து வைத்திய அதிகாரிகளும் தமது சேவையை நிறுத்திக்கொண்டனர். அதே காரணத்திற்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் தமது சேவையை நிறுத்திக்கொண்டது. அத்தியா அவசிய சேவைகள் ஆணையாளர் கப்பலில் நிறைய உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட நிலையிலும், வழித்துனை தர சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுப்பதனால் கப்பலை அங்கு அனுப்ப முடியவில்லை என கூறுகிறார். விமான மூலம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டதாக அறிகுறிகளும் இல்லை. பல காயமுற்றோர் வைத்திய உதவி நாடி வைத்தியசாலையில் காவல் இருப்பதாக தெரிகின்றது. ஆனால் முதல் உதவியை வழங்கக் கூட அங்கே யாரும் இல்லை.

இது அங்கே இன்னமும் மக்களும், பல காயமுற்றோரும் இருக்கின்றார்கள் என்பதை புலப்படுத்துகின்றது. அங்கே உணவோ வைத்திய வசதியோ இல்லை. நான் அரசை மிகவும் வற்புறுத்தி கோருவது, உடனடியாக விமான மூலம் உணவும், ஒரு மருத்துவக் குழுவையும் அனுப்புமாறே. அங்கே அகப்பட்டு கொண்டவர்கள், காயமுற்றோர் இறந்து கொண்டிருப்போர் ஆகியவர்களுக்கு உதவ எனது மனிதாபிமான வேண்டுகோளை புறந்தள்ளாது உடன் செயற்படுத்துமாறு வேண்டுகின்றேன்.


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி.