இடம் பெயர்ந்து முள்ளிவாய்காலில் அவதியுறும் மக்களின் சார்பில் விடப்படும் அபயக்குரல்.
யுத்த பாதுகாப்பு வலயம் என வர்ணிக்கப்படும் இடத்தில் வாழும் மக்கள் சார்பில் அவர்களை காப்பாற்றுங்கள் என என்னால் விடப்படும் இக் கோரிக்கையை இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அங்கே சிவில் நிர்வாகம் முற்றாக நின்றுவிட்டது(முறிந்து விட்டது). வைத்திய அதிகாரிகளும் தமது சேவையில் இருந்து விலகிவிட்டனர். அங்கு மனிதாபிமான பணிகளை ஒழுங்கு படுத்தி செயற்படுத்த யாரும் இல்லை. இதில் உணவு, வைத்திய வசதிகளும் அடங்கும். நூற்றுக்கணக்காணவர்கள், ஏன் ஆயிரக்கணக்கானவர்கள் கூட இருக்கலாம், விதீகளிலும், பதுங்கு குழிகளிலும் பராமரிப்பின்றி இறக்கவிடப்பட்டுள்ளனர். அங்கே உணவோ குடி நீரோ இன்றி மக்கள் இறக்கின்றனர்.
மிகவும் மன்றாட்டமாக இலங்கை அரசம், சர்வதேச சமூகமும் எனது இந்த மனிதாபிமான கோரிக்கையை மிக அக்கறையுடன் செவிமடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய வசதியையும் உணவுப் பொட்டலங்களும் உடன் கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்பதே. இதன் மூலம் பல உயிர்களை வைத்தியத்தின் மூலமும் பட்டினிச்சாவில் இருந்தும் காப்பாற்ற முடியும். அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தால் இலங்கை அரசோ வேறு நட்பு நாடோ இந்திய அரசை நாடி இவ் அப்பாவி மக்களுக்கு உணவும், வைத்திய உதவிகளையும் விரைந்து அனுப்பி அவர்களை காப்பாற்ற நடவெடிக்கை எடுக்க வேண்டும். இவ் வேண்டுகோள் புத்தி சுவாதீனம் அற்ற ஒருவரிடம் இருந்து வரவில்லை என்பதை வலுவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
வீ. ஆனந்தசங்கரி,
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி.