என்ன விலை கொடுத்தேனும் முள்ளிவாய்க்கால் மக்களை காப்பாற்ற வேண்டும்

14-05-2009
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு - 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

என்ன விலை கொடுத்தேனும் முள்ளிவாய்க்கால் மக்களை காப்பாற்ற வேண்டும்.

முக்கிய விடயத்துக்கு வருமுன்பு இந்நாட்டில் எனக்குள்ள பற்றும் அபிமானமும் வேறு ஒரு இலங்கையருக்கு இருப்பதிலும் பார்க்க எவ்வகையிலும் குறைந்ததல்ல என்பதை மீண்டும் வலியுறுத்தி கூற விரும்புகின்றேன். தன் நாட்டை மட்டும் நேசிப்பவன் நாட்டுப்பற்றாளனாகிவிட முடியாது. நாட்டையும் அந்நாட்டு மக்களையும் அதாவது சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் அல்லது வேறு இனத்தவர் என்ற பாகுபாடு காட்டாத ஒருவர்தான் தேசபக்தனாவார். இந்த யுத்தத்தை வென்றெடுக்க அரசு பெரும் விலை கொடுத்தது. ஏற்பட்ட பொருள் நஷ்டத்துக்கு மேலாக நம் நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் நாம் இழந்த பெறுமதிமிக்க பல உயிர்கள், தாங்க முடியாத மக்கள் அனுபவித்த மனித உபாதைகள், ஆகியவற்றின் பெறுமதியை கணக்கிட முடியாது.

இரு முழு மாவட்டங்கள், மூன்று மாவட்டங்களின் பகுதிகள் ஆகியவற்றில் வாழ்ந்த மக்கள் தம் உடமைகள் அத்தனையும் முற்றாக இழந்து விட்டனர். அநேகர் தமது ஆடம்பர வாழ்க்கையை இழந்துள்ளனர். சொந்த வியாபாரம், கைத்தொழில், வாழ பெரு மாளிகைகளை ஒத்த வீடுகள், மேலும் தமக்கு விரும்பியவற்றையும் வேண்டிய வளங்களையும் பெற்றிருந்தனர். இன்று அவர்கள் அனைவரும் ஓட்டாண்டிகளாகி விட்டனர். அவர்கள் பட்டினியும் போடப்பட்டுள்ளனர். வன்னியில் அவர்கள் நீண்டநேரம் கியூ வரிசையில் தம் பாத்திரத்தில் கொஞ்சம் கஞ்சி ஊற்றப்படும் வரை காவல் நிற்கின்றனர். மொத்தத்தில் அவர்கள் நீராகாரத்துடன் வாழ்க்கையை நடத்துகின்றனர். முதியவர்கள் சிலரின் பிரேத பரிசோதனையில் அவர்களின் மரணத்துக்குரிய காரணம் பட்டினிச்சாவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தமிழர்களுக்கென அனைவரும் ஒரே தரத்தில் வாழக்கூடிய வர்க்க பேதமற்றதான சமூகமொன்று உருவாகியுள்ளது.

தற்போதைய முள்ளிவாய்க்கால் வாழ்க்கை மிகக் கொடூரமானது. புதிதாக ஓர் சூனியப் பிரதேசம் உருவாக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகள் அதற்குள் புகுந்து மக்களுடன் கலந்து நிற்பதை யாராலும் தடுத்துவிட முடியாது. நான் அறியும் செய்திகளை உண்மையென நம்பினால் மட்டுமே அவற்றை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டிய கடமை எனக்குண்டு. இம் மாதம் 12-05-2009 அன்று முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் செல் வீழ்ந்து சிதறியதால் 36 நோயாளிகளுக்கு மேல் கொல்லப்பட்டும் பலர் காயமும் அடைந்துள்ளனர். மீண்டும் 13-05-2009 அன்று அதே வைத்தியசாலையில் செல் வீழ்ந்து வெடித்ததில் 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இவர்கள் இரு நாட்களாக நெருக்கடி காரணமாக சிகிச்சையளிக்க யாரும் இல்லாது துன்பப்பட்டுக் கொண்டிருந்த பெருந் தொகையினரில் ஒரு பகுதியினராவர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். இந்த வேதனையோடு பட்டினியையும் அனுபவிக்கின்றனர். இந்த நிலை தொடராது உடன் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு உடன் நிவாரணம் கிடைக்கக்கூடிய ஒரு விடயம் தங்கள் கையில் உண்டு. உடனடியாக அரச அதிகாரிகளால் தரப்பட்டிருக்கின்ற புள்ளி விபர அடிப்படையில் தேவையான உணவு வகைகளை கொண்ட கப்பல் வன்னிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மக்களை அரசு பட்டினி போடுகிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. விடுதலைப் புலிகளின் அழுத்தத்தால் தயாரிக்கப்பட்ட புள்ளி விபர அடிப்படையில் கால் நூற்றாண்டுக்கு மேல் வன்னிக்கு உணவு அனுப்பி வந்த அரசுக்கு எஞ்சியுள்ள ஒன்றரை இலட்சம் மக்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கினால் அரசு வங்குரோத்து நிலையை அடைந்து விடாது. இந்த நிலை இன்னும் சில காலத்திற்கே. அது சில நாட்களாகவோ, அல்லது மாதங்களாகவோ இருக்கலாம். வன்னி வாழ் மக்கள் நடக்கும் சக்தியை இழந்து விட்டனர். குழந்தைகள் பாலின்றி பட்டினி கிடக்கின்றனர். வன்னிக்கு அரசு அனுப்பும் உணவு பண்டங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் அறியாததல்ல. அந்த விடயத்தை புறந்தள்ளி விட்டு எடுப்பவர்கள் தம் தேவைக்கு எடுத்ததன் பின் எஞ்சியவை அங்கே வாழும் மக்களுடைய வயிற்றை நிரப்பும் அளவுக்கு போதியதாக இருக்க வேண்டும். இந்நிலை யுத்தம் முடியும் வரை தொடர வேண்டும்.

அரச படைத்தரப்பினரும், அரசும் பல இழப்புக்களின் மத்தியில் சம்பாதித்த நற்பெயரை காற்றுடன் பறக்க விடக்கூடாது. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பெருந்தொகையான உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந் நிலை யாரால் ஏற்பட்டது என்பதல்ல முக்கியம் “இது ஏன் நடந்தது, எப்படி நடந்தது” என்று எதிர்கால சந்ததி மீண்டும் மீண்டும் குரலெழுப்ப இடமளிக்க கூடாது. தயவு செய்து சம்பந்தப்பட்டவர்களில் ஒரு உயிர் தன்னும் இந்த மீட்பு பணியால் இழக்கப்படக் கூடாதென கண்டிப்பானதொரு உத்தரவை பிறப்பிக்கவும். தாங்கள் அண்மையில் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் ஓர் உயிர்தன்னும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பறிக்கப்படக்கூடாதென குறிப்பிட்டமைக்கு அமைவாகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

தங்களால் மேற்கொள்ளப்படும் சகல நல்ல நடவடிக்கைகள் அனைத்துக்கும் எனது குறைவற்ற ஆதரவு கிடைக்குமென உறுதியளித்து எவ்விதத்திலேனும் தேவையான உணவை பசியால் வாடும் முள்ளிவாய்க்கால் மக்களுக்கு உடன் அனுப்பி வைப்பதோடு சகல விதமான ஆயுத தாக்குதல்கள் மக்கள் மீது தொடராது அவர்களை காப்பாற்றும்படி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி


வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ